யாகமா ? தவமா ?
- "மாரி மைந்தன்" சிவராமன்
பொதுவாக சித்தர்கள்
அம்மன் பக்தர்களாய் இருப்பர்.
சித்தி பெறுவதற்கு அடிப்படைத் தகுதியே
அம்மன் பக்தியே.
அந்தவகையில் சித்தர்களில்
சிறந்தவரான கொங்கணர்
ஓர்
அம்மன் பக்தர்.
அம்மன் வழிபாடு அவருக்கு அனைத்துமாய் இருந்தது.
குறிப்பாக கொங்கணர் மாரியம்மன் பக்தர்.
மாரி மைந்தன்.
இரும்பை உருக்கி கலங்கள் தயாரித்து சிவன் கோயிலில் விற்பது
அவர் பெற்றோர் மேற்கொண்டிருந்த குலத்தொழில்.
அழகிய சிறுவனாய் கொங்கணர் சிரித்து மகிழ்ந்து விளையாடிய போதும்
அவர் சிந்தையில் எப்போதும் அம்பிகை இருந்தாள்.
வாலிபராய்
வலம் வந்தபோதும் அம்மனே
அவர் கனவிலும் நினைவிலும் அன்னையாய் கலந்திருந்தாள்.
முக்தி
என்பாளுடன் திருமணம் நடந்தது.
மனைவியுடன் மகிழ்ந்திருந்த
போதும் கூட மாரியம்மனே மனதில் நிறைந்து இருந்தாள்.
இந்நிலையில் அடிக்கடி
அவர் பாதை வேறென்ன
ஓர் எண்ணம் எழுந்து
உள்ளத்தை உசுப்பியது.
வாய்த்த மனைவி பேராசைக்காரி. பணம் பணம் என்பதே அவளது நிரந்தர பல்லவி.
'செல்வமே சக்தி ' என்பது
முக்தியின் வேதம்.
'சம்பாதிப்பவனே சிறந்த மனிதன்.. மற்றவர்களெல்லாம் பேடி 'என பரிகசிப்பாள் அவள்.
கொங்கணர்
அவள் நச்சரிப்பால் தொழிலில் கவனம் அதிகம் கொண்டார்.
நல்ல வருமானம் நாளும் பெருகியது.
ஆனால் அவர் மனதின் ஓரத்தில் ஏதோ உறுத்தியது. அவர் மனம் ஆன்மீகம் தேடியது.
மனைவி பெயரில் தான் முக்தி.. கொங்கணர்
நாடிய சக்தியை
முக்தியை
அவள் தரவில்லை.
அதனால்
விரக்தியே மிச்சமாய்
விஞ்சி நின்றது.
வேதியரை ஞானியரை சாதுக்களைக் கண்டால் போதும் ஓடியோடி
அவரடி தொழுவது கொங்கணர்
வழக்கம்.
அவர்களுக்குப் பசும்பால் தந்து உபசரிப்பார்.
வந்தவர்கள் பதிலுக்கு
ஞானப் பாலை அவருக்கு அளிப்பர்.
'இருப்பினும் இன்னும் சம்பாதிக்க
வேண்டும்..
சொத்து சுகம் பெருக்க வேண்டும் ' என்ற தலையணை மந்திரம்
பெரிதாய் கொங்கணரிடம் வேலை செய்தது.
நிறைய சக்திகள் பெற வேண்டும். சித்திகள் கற்று உயர்நிலை
அடைய வேண்டும்.
இரும்பைத் தங்கமாக்கி
புகழ் , பொருள் பெறவேண்டும்.
இம்சை அரசி இல்லாளிடம் நற்பெயர்
பெற வேண்டும்.
அதற்கு
முனிவர்
சித்தர்
யாரிடமாவது கற்றுணர வேண்டும்.
என்றெல்லாம் அடிக்கடி
அசைபோட்டார்.
ஆசை
அதற்கோர்
நாள் பார்த்தது.
எளிமைக்கு இலக்கணமாய் சித்தர்கள் திகழ்வர். இதற்கு முற்றிலும் மாறுபட்டவராய் கொங்கணர் இருந்தார்.
ஆசை
செல்வம்
படோபடம்
கோபம்
அலட்சியம்
வேகம்
மனைவி சொல்லே வேதம்
என பலப்பல பன்முக குணாதிசியங்கள் அவரிடம்
அதிகம் இருந்தன.
அத்தனைக்கும் பின்னால்
அவரை மணந்தவள் இருந்தாள்.
மனையாட்டி ஆட்டியபடி
ஆடியது மணி.
சப்தமும் எழுந்தது.
ஆனால் அது வெளிக்கு !
உள்ளே
அவர் நிலை தேடல்களாய் நிரம்பியிருந்தது
இரண்டு நிலைகளால் இருண்ட குழப்பமே நிதமும் தொடர்ந்தது.
காடு மலை குகை சென்று வந்தால் குருவைக் காணலாம்
அவர் சொல்படி நடந்தால்
அம்பிகையை அடையலாம்
என மனக்குரல் தினம் தினம் சொல்லச் சொல்ல அவர் யாரிடமும் சொல்லாமல்
ஊரிடமும் சொல்லாமல் கானகம் செல்ல விருப்பப்பட்டார்.
அதற்கெனத் திட்டமிட்டார்.
அது சமயம்
ஒரு சித்தர் திருவாடுதுறை
வந்திருப்பதாக காற்றுவாக்கில்
ஒரு சேதி வந்தது.
காற்றை விட வேகமாக ஆடுதுறைக்கு ஓடினார்.
அவரைத் தேடி அலைந்து திரிந்தார்.
ஒருநாள் அவருக்கு திருநாளாய் அமைந்தது.
அடர்ந்த மரத்தடியில் ஓர் ஒளி சிந்தும் சித்தரைத் தரிசித்தார்.
அவர் போகர்.
ஆச்சரியத்தோடு 'அடைக்கலம் ' என்றபடி
அவர்
பாத மலர்களைப் பற்றினார்.
கண்களால் ஒற்றினார்.
நெற்றியால் வருடினார்.
ஸ்பரிசம் பட்டதும் தவத்திலிருந்த
போகர் விழித்தெழுந்தார்.
பார்த்த மாத்திரத்தில் கொங்கணரைப் பிடித்துப் போயிற்று போகருக்கு.
கொங்கணர்
சிங்கமென சிலிர்த்து தங்கமென
ஒளிரப் போவது அவருக்குத் தெரிந்து போயிற்று.
"யாரப்பா நீ...?"
"அடியேன் தேவிதாசன். அம்பாள் பக்தன். அவளடி வாழ்பவன்.
அவளை அடைய வழி தேடி வந்தேன்.
நீங்கள் போதிக்க வேண்டும்"
ஒரே மூச்சில் சொல்லி முடித்தார்.
"உன் பெயர் ?
பதில் இல்லை.
"எங்கிருந்து வருகிறாய்...?"
"கொங்கண தேசத்திலிருந்து..." தன் முன்கதைச்
சுருக்கம் தந்தார்.
"ஓ ...கொங்கண நாட்டுக்காரனா ? உன்னை கொங்கணர்
என்றே அழைக்கிறேன்".
அந்த திருநாமமே நிலைத்துப் போனது.
போகர் சூட்டிய பெயர்
கார் உள்ளளவும் கடல் உள்ளளவும் நிலைத்து நிற்குமன்றோ ?
நின்றது...!
நிற்கிறது.!!
கொங்கண சித்தர் கொங்கண முனிவர் கொங்கண நாதர் கொங்கண நாயகர் என அப்பெயரே விரிந்தும் திரிந்தும் சிறந்தும் வியாபித்தது.
அதன் பின் -
பிடித்துப்போன
கொங்கணருக்கு அம்பிகையை
அவள் திருவடிகளை இறுகப் பிடித்துக் கொள்ள மந்திரத்தை வழிபாட்டைப் போதித்தார்.
''கொங்கணா.…
உன் முயற்சி பலிக்கட்டும்.
மனிதர் தொல்லையில்லா இடம் சேர்.
தவம் செய்
எல்லாம்
செயல் கூடும்."
ஆசீர்வதித்தார்.
விடைகொடுத்தார்.
காடேகும்
காலம் வந்த மகிழ்வில் கொங்கணர்
காடு புகுந்தார்.
காட்டில்
அவரின் தேடலில் அற்புத மலையொன்று அவரை அழைத்தது.
மேலேறினார். தவத்தில் ஆழ்ந்தார்.
ஓங்காரியிடம் ஒன்றிப் போனார்.
தவத்தில் இருந்தபோது 'யாகம் செய்..
அதில்தான் நிறைந்த பலன்கள் விரைவில் கிடைக்கும்'
என
அசரீரி கேட்டது.
கொங்கணர்
தவம் விழித்தார்.
தவமா யாகமா
மனதில் போராட்டம்.
எதுவாயினும் விரைந்து கிடைக்க வேண்டுமென்பதில் அவருக்கு
ஆர்வம் இருந்தது.
சீக்கிரமே எதையும் அடைந்துவிட வேண்டும் என்னும் பேராசை இருந்தது.
மனைவியிடம் நற்சான்றிதழ்
பெற வேண்டும் என்ற ஏக்கம் இருந்தது.
எனவே
போகர் சொல்லிய தவத்தை விட்டு யாகப் பாதைதான் யோகப் பாதை
என களத்தில் இறங்கினார்.
அபூர்வ சக்திகள் அவரை அடைந்தன.
சித்திகள் சிலவும் சித்தி ஆயின.
சக்தி மிக்கவராய் தன்னை உணர்ந்தவர் தலைக் கனமாய் காட்டில் நடந்தார்.
வழியில்
ஒரு சமாதி தெரிந்தது.
அருகில் சென்றார்.
அகல விரிந்த சமாதியிலிருந்து சித்தர் ஒருவர் எழுந்து வந்தார்.
ஒளி...!
பேரொளி..!! கொங்கணரின் கண்கள்
ஒளி வெள்ளத்தில் சுருங்கிப் போயின.
வந்தவர்
கௌதம மகரிஷி.
எடுத்தவுடன் கேட்டார்
"ஏனப்பா தவம் நிறுத்தினாய்.... யாகம் வேண்டாம்..".
தவத்தைச் செய்து சிவத்தை அடைவது சித்தர் பாரம்பரியம்.
உன் செயல் தவறு.
சித்திகள் எல்லாம் தெய்வ சத்துக்கள் கொண்டவை தான். இருப்பினும்
அவை
வீணானானவை. வெத்து வேட்டுகள்"
எச்சரித்தார்.
அவர் சொல்வது புரிவது போலிருந்தாலும் புரியாதது போலவும் இருந்தது.
கௌதமர் எச்சரிக்கையை விட மன நச்சரிப்பும் மனையாள் நினைப்பும் வெற்றிகொண்டன.
மீண்டும் யாகம் தொடங்கினார்.
துவக்க நேரத்தில் மீண்டும் வந்தார் கௌதம மகரிஷி.
"சொன்னால் கேள் ...
பின்னால்
வருந்த நேரிடும்.
கடவுள் கூட
உன்னைப் போன்றோருக்கு சில சித்திகள் தருவார்.
அதிலிருந்து
மீள வேண்டும்.
அதற்கு
அடுத்த படிகள்
ஏற வேண்டும் .
மீளாதவர் அச்சித்துகளைக் கொண்டு
சித்தாடி விட்டு ஒருநாள் போவார் செத்து.
அவர் நிலை
சிவம் ஆகாது.
அழுகும் சவமாகும்.
சாகா நிலை
என்னும்
சிவம் எய்ய
தவம் கொள்... அதுவே நல்லது.!"
கௌதமரின் குரல் கொங்கணரின் சிந்தையில் ஏறவில்லை.
யாகம் தொடர்ந்தார். இன்னும் பல சித்திகள் கூடின.
பற்பல குளிகைகள் செய்தார். அவற்றின் பலனால் அற்புதங்கள் நிகழ்த்தினார்.
உலகம் மெச்சியது. சந்தித்த முனிவர்களிடம் சாதிக்க பலவற்றைக் கேட்டுக் கற்றார்.
ஒருநாள் திருமழிசை ஆழ்வாரைத் தரிசிக்க நேர்ந்தது.
அவரிடம் தன்னிடமிருக்கும் செம்பை பொன்னாக்கும்
குளிகையைக் காட்டி பெருமிதமாய் கர்வம் கொப்பளிக்கப் பார்த்தார்.
கொங்கணர்
யாக பலனாய் பெற்ற குளிகையைத் திருமாளிகைத் தேவர்
அதிசய படாமல் நோக்கிவிட்டு
தன்
உடல் அழுக்கைத் திரட்டி
அந்த உருண்டையைக் காட்டி
'இது
அதை விட சாதிக்கும்.'
என்றார்.
அரைநொடி அழுக்கில்
திரட்டித் தந்து கூறிய வார்த்தை கொங்கணர் செவிகளில் தேளாய் கொட்டியது.
"அப்பனே....
சித்திகளில் மகிழாதே. விளம்பரம் தேடாதே. விபரீதமாய் போகும்.
உன் எல்லை
அவைதான் என இறைவன் அறிந்தால்
உன் நிலை
மேலேறாது. அப்படியே
நின்று விடும்.
ஏற்ற வேண்டியது
குண்டலினி.
இதெல்லாம் இடையில் கிடைக்கும்
அருள் தீனி அவ்வளவே.
வெறும்
நொறுக்குத் தீனி பசியாற்றாது.
பரமன் பதம் சேராது.
இறை பற்றாது. கரை சேர்க்காது.
தவமே சத்தியம். தவம்...
ஆழ் தவம்... பெருந்தவம்....
நீள் தவம்...
அத்தவம் கொள்."
தேவர் சொல்லிவிட்டு மறைந்தார்.
போகர் கற்பித்தது.. கௌதமர் எச்சரித்தது... இப்போது
மாளிகைத் தேவர் வலியுறுத்தியது.... தவமே.
கொங்கணர் மனம் கொஞ்சம் மாறியது.
'தவத்தைப் பார்க்கலாம் '
என முடிவு செய்தார். ஆழ் தவத்தில் ஆழ்ந்து போனார்.
யாகத்திற்கும் தவத்திற்கும் இருக்கும்
மலை நிகர் பேதம் புரிந்த நிலையில் அகம் விழித்தது.
அக்கணமே அவருக்கு கிடைத்திருந்த
'பூரண சித்தி ' ஏவலுக்கு காத்திருந்தது.
அந்த சக்தி
அந்த சித்தி
ரசவாத வித்தை.
இம்முறை கொங்கணரின் மனம் கூத்தாடவில்லை.
அவ்வித்தை அற்புதம் தான்.
ஆனால்
அம்மாபெரும் சொத்தை
அவர் விரும்பவில்லை.
சிவம் தேடுவோருக்கு
அது அவஸ்தை
என நினைத்தார்.
அது வெறும் சொத்தை
என தெளிந்தார்.
எளிமையே ஆபரணம்
என உணர்ந்தார்.
பக்குவ நிலைக்கு பாய் விரித்து
சேய் போல் மெய்யாய்
கலந்து ஒளிர்ந்தார்.
Leave a Comment