ரசவாத சித்தர் காலாங்கி நாதர்
- "மாரி மைந்தன்" சிவராமன்
அன்றொருநாள்...
பாரத தேசத்தில்
ஒரு பெரும் பிரளயம் நிகழ்ந்தது.
மழை..
அடர் மழை..
தொடர் மழை...
நாடே வெள்ளக்காடாகக் காட்சியளித்தது.
பேய் மழை
தொடர்ந்து பெய்து பூமியை நிரப்பிய வண்ணமிருந்தது.
நீர்மட்டம் உயர உயர
மக்கள் தவித்தனர். மாண்டனர் பல பேர்.
உயரே செல்வதே
உயிர் தப்பிக்க
ஒரே வழி..
உன்னத வழி.
மலை மீது ஏறினர் மக்களில் சிலபேர்.
அவர்களில் ஒருவர்
ஒரு மலை மீது கிடுகிடுவென
ஏறிக் கொண்டிருந்தார்.
அருகில் சென்று பார்த்தால்
அவர்
சாதாரண மனிதர் அல்ல
என்பது மட்டும் தெளிவாய் தெரிந்தது.
கூர்ந்து நோக்கினால் ஒரு மகான் போல் இருந்தார்
அவரின் பார்வையில் பிரகாசம் ஒளிர்ந்தது.
தேகம் கூட
பேரொளி வீசிக்கொண்டிருந்தது.
அவர் யாராயிருக்கும் ?
மேலே
மலைமேலே
அவரைப் போலவே பலரும்
வந்து சேர்ந்து இருந்தனர்.
எல்லோருக்கும்
ஓர் ஒற்றுமை.
அவர்கள்
அத்தனை பேரும்
ஒரு சித்தரைப் போல ஓர் ஞானியைப் போல ஒரு பித்தனைப் போல வித்தியாசமாய் இருந்தனர்.
புதிதாய் வந்தவரைப் பார்த்ததும்
அவர்கள் மகிழ, பார்த்தவர்களைப் பார்த்து
வந்தவர் மகிழ அறிமுகப்படலம் ஆரவாரமாய் ஆரம்பித்தது.
" நான் காலாங்கி.." என்றார் வந்தவர்.
இருந்தவர் யாவரும் சமகால சித்தர்கள்.. தவஞானிகள்... சித்துக்கள் பல
அறிந்தவர்கள்.
சித்தாடல்கள்
புரிந்த வித்தகர்கள் .
அன்பு விரிந்தது.
புதிய நட்பு பூத்தது.
ஆனந்தம் அருகில் . தாண்டவமாடியது.
தான் கற்றதையும் பெற்றதையும்
பிற சித்தர்களுக்குக் கற்பித்தார் காலாங்கிநாதர்.
பதிலுக்கு தாங்கள் கற்றதை
காலாங்கிக்குச்
சொல்லித் தந்தனர் அம்மலை வாழ் சித்தர்கள்.
காயகல்ப முறைகளும் ரசவாத வித்தைகளும் பிரதானமாக இருந்தன அவர்களின்
அக்குருகுலத்தில்.
இப்படிச்
சில காலம்
பயனுற அமைந்ததால் காலங்கிநாதர் பேரானந்தம் அடைந்தார்.
பெருமிதம் கொண்டார்.
அந்த மலை
இந்த சித்தருக்கு பிடித்துப்போனது. அங்கேயே
தங்கிவிட
முடிவு செய்தார்.
அவருக்குப் பிடித்த
அந்த மலை சதுரகிரி.
எவருக்கும் பிடிக்கும் சதுரகிரி மலை.
அன்றும் இன்றும்
என்றும்
அருவாய் உருவாய் அருவுருவாய் எண்ணிலா கோடி
சித்தர் பெருமக்கள் அருள்பாலிக்கும் மலையே சதுரகிரி.
பதினெண் சித்தர்களின் பார்வையும் பாதங்களும்
ஆழப் பதிந்த இடமே சதுரகிரி.
ஒருநாள் காலாங்கிநாதர் சதுரகிரி மலையில்
ஒரு தடாகம் கண்டார்.
தடாகத்திற்கு
அருகில் ஒரு புலி
கம்பீரம் பீறிடப்
படுத்திருந்தது.
அந்தப் புலி
இந்த அருள்தவழும் சித்தரைக் கண்டு உறுமவில்லை.. பாயவில்லை... அமர்க்களமாய் ரசித்தபடி இருந்தது.
சித்தருக்குத் தெரியாதது
எது உள்ளது உலகில் ?!
அது புலி அல்ல...
ஓர் ஞான புலி...
புவி போற்றும்
பேரொளி !
எனப் புரிந்தார்.
புலி
வடிவத்திலிருக்கும் சித்தர் அருகில் காலாங்கி வந்தார். காலடி தொழுதார்.
மக்கள் தொந்தரவு தவிர்க்க -
தவத் தனிமை கெடாதிருக்க
இப்படி ஏதேனும்
வடிவம் எடுப்பது சித்தர்கள் வழக்கம்.
திடீரென
புலிச் சித்தர் உருமாறினார்.
தெய்வச் சித்தராய் காட்சியளித்தார்.
நிறைய
உபதேசங்கள்
செய்தார்.
காலாங்கி நாதருக்கு சதுரகிரித் தாய்
ஆதி மனோன்மணி அருளிருப்பதாய் அகமகிழ்ந்து வாழ்த்தினார்.
மனம் நிறைந்து மறைந்தார்.
அதன்பின்
காலங்கி சித்தர்
மகா சித்தரானார்.
இப்படித்தான்
ஒரு நாள்
ஓர் ஆமையைக் கண்டார்.
அது ஆமை அல்ல.. அதுவும் சித்தர்
என அறிந்து
தாள் பணிந்தார்.
அச் சித்தரின் கருணையையும் அருளையும்
காலாங்கி பெற்றார்.
பிறிதொரு நாள்
வராக வடிவில்
வாராது வந்த மாமணியாய்
வராகி சித்தர்....
யாருமே
யூகித்தறிய முடியாத அவரைக் கண்டுணர்ந்து வணங்கியதால் யாருமே பெற முடியாத ஞான உபதேசங்கள்
அவரிடம் பெற்றார்.
யார் கண்களுக்கும் புலப்படாத -
புனிதர் கண்களுக்கு மட்டும் தென்படும் வராக சித்தர் காலாங்கி நாதருக்கு நேரில் ஆசி தந்தது
குருவருள் திருவருள் அன்றி
வேறெது இருக்கும் ?
இப்படி
சிங்க சித்தர்
வாமன சித்தர்
பரசுராம சித்தர்
ராம சித்தர்
பலராம சித்தர்
கிருஷ்ண சித்தர் குதம்பைச் சித்தர் பாம்பாட்டிச் சித்தர் வேதாந்த சித்தர் போகர் சித்தர் ஞானசித்தர்
கஞ்சிமுகிச் சித்தர்
என
வாழையடி வாழையென
வந்த சித்தர் திருக்கூட்டத்தை சதுரகிரியில் கண்டார்.
பெறற்கரிய
ஞானக் கல்வி பெற்றார்.
ஆதி சித்தரை
நவநாத சித்தர்களை
பதினெண் சித்தர்களைப்
பார்த்து மகிழ்ந்தார்.
அவர்களுடன்
ஒன்றி மலர்ந்தார்.
சதுரகிரி உச்சியில்
சித்த அனுபவ உச்சத்தில்
உலவி வந்தார்.
சதுரகிரியும்
காலாங்கி நாதரும்
மிச்சம் மீதம் இல்லாத ஆன்மீக உச்சத்தைத் தொடத் தொடங்கினர்.
ஒருமுறை
சதுரகிரியில்
காலாங்கிநாதர்
தவத்தில்
இருந்த சமயம்..
வணிகர் ஒருவர் அவரைத்
தரிசித்து நின்றார்..
'என்னப்பா '
என்றார் சித்தர்.
"சிவ ஆலயம்
ஒன்றினைக்
கட்ட ஆரம்பித்தேன்.
கட்டத்
தொடங்கியது
முதல்
என் கட்டம்
சரியில்லை.
சொத்து பத்து அத்தனையும்
மிச்சம் மீதமின்றி கொட்டியும்
பாதி கூட முடியவில்லை.
என்னால் எதுவும்
செய்ய முடியவில்லை.
ஜோதியாய் தெரிகிறீர்கள்...
உதவுங்கள்.. சுவாமி "
கெஞ்சினார்.
கதறினார்.
காலைப் பற்றினார்.
எத்தனை சொல்லியும் பற்றியதை
விட்டாரில்லை.
பற்றிலா
சித்தர் மனம்
ஏனோ ஒப்பவில்லை. மௌனமாய் இருந்தார்.
விடாக்கண்டரான வணிகர் விடவில்லை.
அவருடனேயே தங்கி பணிவிடைகள் செய்தார்.
அவரது
மன உறுதியையும்
சிவ பற்றையும் போற்றிய
மாமுனி அவருக்கு
உதவ முடிவெடுத்தார்.
சதுரகிரி மலையில் இல்லாதது இல்லை...! சித்த ரகசியங்கள் ஆயிரமாயிரம்...! மூலிகைகள் பல்லாயிரம்....! பலாபலன்கள் பலகோடி பல்லாயிரம்!
வணிகர் வந்தது
சதுரகிரிக்கு ! சரணடைந்தது
முக்காலமறிந்த காலங்கிநாதரிடம் !! பலன்இல்லாமலா போகும் ?
சதுரகிரி மலையில் விரவியிருந்த
அரிய மூலிகைகளைப் பறித்து வந்து
தைலம் ஒன்றைத்
தயாரித்த
காலாங்கி சித்தர்
அத்தைலத்தைக் கொண்டு
தங்கம் தயாரித்தார்.
அடடே ...
கோடிச் சூரிய ஒளி தோற்கும் பொன்னிறம். தகதகவென
ஓங்கி ஒளிர
சதுரகிரியே
திணறித் தான் போனது.
"வேண்டிய மட்டும் எடுத்துச் செல்...
கோயில் லட்சியம் நிறைவேற சிவன் அருள் புரிவார்"
வாழ்த்தி அனுப்பினார்
வகாரத் தைலமெனும் பொன்னை உருவாக்கும்
சித்தத் தைலம் கண்ட காலாங்கி நாதமுனி.
வணிகர்
எடுத்துச் சென்றது போக
மீதமிருந்தது தைலம்.
'அது
கெட்டவர் கைகளுக்கும் பேராசை மனிதருக்கும் போய்ச் சேர்ந்தால்
தீயது மிகுமே ' எனக்கருதிய காலாங்கிநாதர் அருகிலிருந்த கிணற்றில்
அதைக் கொட்டி பாறையை மூடினார்.
நான்கு திசைகளிலும் நான்கு தெய்வங்களை காவலுக்கு நியமித்தார்.
இன்றும்
சதுரகிரி செல்வோர்
மூலிகை கிணற்றையும்
மூடிய பாறையையும்
வராகி, காளி, பேச்சியம்மன், கருப்பண்ணன்
எனும் காவல் தெய்வங்களையும் கண்ணுற்று வணங்கலாம்.
தனித்திருப்பதும்
தவம் இருப்பதும் சித்தர்களின்
ஏகாந்த நிலை.
காலாங்கி நாதரும் சதுரகிரியிலேயே
நீண்ட தவம் இருக்க அமர்ந்துவிட்டார்.
ஒரு நாள்...
தன்னிலை மறந்த அவரைத்
தட்டி எழுப்பியது
ஒரு கருணைக் கரம்.
அக் கரம்
குரு திருமூலநாதர் திருக்கரம்
"காலங்கி...
சித்தர் மரபு
உன்னோடு
முடிந்து விடக்கூடாது.
வளர வேண்டும்... ஆல்போல் தழைக்க வேண்டும்...
நீ என்னிடம் உரிமையோடு கற்றதை
நன்கு ஆய்ந்து தேர்ந்தெடுத்து சீடர்களுக்கு வழங்கு.
உபதேசி.. நல்லவர்களை உருவாக்கு...
நாடு பேதம் வேண்டாம்.
சீனாவிற்குச் செல்.. அங்கு பணியாற்று... உன் கடமையைச் செய்...."
உபதேசித்து மறைந்தார்
உன்னத குரு திருமூலநாதர்.
அதன்பின்னர் காலாங்கிநாதர்
சீனா போனார்.
சீன மக்கள் மேம்பட உபதேசம் தந்தார். மாண்புற
மருந்துகள் தந்தார்.
கால் என்றால் காற்று. அங்கி என்பது உடை. காற்றை அங்கியாக அணிந்தவரே காலாங்கிநாதர்.
மானிடர்
உடலைப் போல் தசைகளால்
ஆனது அல்ல
அவர் உடல்.
அது
காற்றணுக்களால் ஆனது,
உணரலாம்.
தொட முடியாது.
இஃதோர் உயர்நிலை. நிறை சித்தர் நிலை.
ஒருகட்டத்தில் மூவாயிரம் வருடம் சமாதி நிலையில் இருக்க
ஆசை கொண்டார் காலங்கிநாதர்.
உடனே
தனது சீடர் போகரை
சீனாவுக்கு அழைத்து அவரை
தன் பணி தொடரக் கூறினார்.
போகர் சீனா
வந்த பின்னரே
குரு காலாங்கி
சமாதி கொண்டார்.
சீனாவில் காலாங்கிநாதர்
ஜீவசமாதியான
முக்காதக் கோட்டைக்கு அடிக்கடி செல்வது போகரின் வழக்கம்.
போகர்
செல்லும் போதெல்லாம்
சமாதி இருக்கும் இடத்தின் கதவு
தானாகத் திறக்க வாத்தியங்கள் இன்னிசை எழுப்ப காலாங்கிநாதர் ஒளிமயமாய் தகதகவென பொன்னிறமாய் ஆயிரம் கோடிச் சூரியப் பிரகாசமாய்
காட்சி அளிப்பது வழக்கமாம்.
உலகப்புகழ் பெற்ற தத்துவஞானி கன்பூசியஸ் நீண்டகாலம் வாழ்ந்திட காலாங்கி நாதரே காரணம்
என்று
கூறுவோர் உண்டு.
காலாங்கிநாதர் தான் கன்பூசியஸ்
என்ற உறுதியான நம்பிக்கையும்
சித்தர் உலகில் உண்டு.
காலங்கிநாதர்
சித்தி அடைந்தது சீனநாட்டில் என்றும் தமிழ்நாட்டில் காஞ்சிபுரத்தில் என்றும்
போகர் பிரான்
இரண்டு இடங்களைக் குறிப்பிடுகிறார்.
சேலம் அருகில் இளம்பிள்ளை கிராமத்தில்
அமாவாசைக் கோயிலில் காலங்கிநாதர் ஜீவசமாதி உள்ளது.
சித்தர்களை
மயக்கும் மலையான
சதுரகிரி குறித்து காலாங்கிநாதர்
பாடல் ஒன்று உண்டு.
" பாரப்பா...
அக் குகையின் உள்ளே செல்லப்
பாம்பாட்டிச் சித்தரும் தங்கியிருப்பார்.
தேரப்பா நீ வணங்கி அதன் மேற்காக திரும்பவே அத்திரியின்
குகைதானுண்டு.
பாதை வழி நேராய் நாதாந்த சித்தர் பதியான குகை தெரியும்.
பார்த்துக்கொண்டு வேதை நீ அடையாமல் உள்ளே சென்றால் வேதாந்த சித்தருடன் குதம்பைச் சித்தர்.. போதை உள்ள ஞானசித்தர் அடிவணங்கி...'
இப்படிப் போகும்
அந்தப் பாடல்.
சதுரகிரியின்
சித்தர் இருப்பை
இப்படி அடி அடியாய்
எடுத்து வைத்து
நமது சித்தத்தை துடிக்க வைக்கிறார் காலாங்கி நாதர்.
காலாங்கி நாதருக்கு கஞ்சமலை சித்தர் என்ற பெயர் உண்டு.
சேலம்
இளம்பிள்ளை மலையே
கஞ்சமலை.
Leave a Comment