எத்தனை கோடி வயது வைத்தாய்... இறைவா..!


- "மாரி மைந்தன்" சிவராமன்

அது ஓர்
அழகிய வனம். 

வனத்தில் ஒரு குகை. 
மனத்தை அடக்கும் தவக் குகை.

குகையில் இருவர்.

ஒருவர் வயது முதிர்ந்தவர்.
முனிவர் போல் இருக்கிறார்.

நீண்டகாலத்
தவ ஞானியாக இருக்கும்.

இன்னொருவர்
கம்பீரத் தோற்றம்.
உருவமோ கனகச்சிதம்.
ராஜ களையும் கொஞ்சம் கவலையும் தெரிவிக்கும் முகம்.
ஓர் அரசன் போல் இருக்கிறார்.

அருகிலிருக்கும் நாட்டின்
மன்னனாக இருக்கும்.

"முனிவரே ....
எத்தனை நாட்கள் தாங்கள் இங்கு இருக்கிறீர்கள் ?" 
ஆர்வமுடன் கேட்டான் மன்னன் போலிருந்தவன்.

முனிவர் முகத்தில் சிறுநகை.

"நான் சொல்லப்போவது புரிகிறதா பார்...."
என்கிற மாதிரியான பார்வை.

"மன்னா..
மனிதருக்கு
ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு
ஒரு நாள்.

இதன்படி பார்த்தால்
மனிதர்களுக்கு
375 வருடம் என்பது தேவர்களுக்கு
ஒரு வருடம்.

4800 தேவ வருடங்கள் சேர்ந்தது ஒரு யுகம்.

3600 தேவ வருடங்கள் திரேதா யுகம்.

2400 தேவ வருடங்கள் சேர்ந்தது துவாபர யுகம்.

1200 வருடங்கள்
ஒரு கலியுகம்.

இவற்றை கூட்டினால் 12 ஆயிரம்
தேவ வருடங்கள் வரும்.

இந்த 12 ஆயிரம்
தேவ வருடங்கள் பிரமனைப் பொருத்தமட்டில்...."

முனிவர் கூறியபடியே மன்னனை நோக்கினார்.

அவன் ஆழ்ந்து கவனிக்கிறானா என்பதைக்
கவனிக்கிற மாதிரி இருந்தது
முனிவரின் பார்வை.

மன்னன் உற்றுநோக்க பற்றற்ற முனிவர் தொடர்ந்தார்.

"மன்னா....
12 ஆயிரம்
தேவ வருடங்கள்
பிரமனுக்கு
ஒரு பகல் மட்டுமே.

24 ஆயிரம்
தேவ வருடங்களே பிரம்மனுக்கு ஒரு நாள்.

என்ன....
தலை சுற்றுகிறதா.? இது இறைவன் அருளிய கணக்கு.

சரி,
விஷயத்துக்கு வருவோம்.

நான் இங்கு வந்து எத்தனை நாட்கள் ஆகிறது
என்று தானே கேட்டாய் ?

அப்பனே...
70 பிரம்மதேவன் ஆண்டுகள் ஆகின்றன..."

கிஞ்சிற்றும்
குழப்பமின்றி
முனிவர்
சொல்லி முடித்தார்.

'வருவதற்கு முன்பு எங்கே இருந்தார்? எப்போது பிறந்தார்?? 
இனி எங்கு செல்வார்???
எத்தனை ஆண்டுகள் வாழ்வார்????'

கேட்க நினைத்தான் மன்னன்.

சித்த புருஷர்கள்
பல ஆண்டுகள் வாழ்வார்கள்
என மட்டும் அறிந்திருந்த மன்னனுக்கு 
முனிவரின் வயது பிரமிப்பூட்டியது.

அப்படியே நெடுஞ்சாண்கிடையாக
முனிவர் பாதம் பணிந்தான்.
முனிவர் புன்னகைத்தார்.

புன்னகைத்த
மாமுனி  தான்
உரோம ரிஷி.

பாதம் பணிந்த மன்னன் தொண்டமான். 
காஞ்சியை ஆண்டுவந்த மன்னன்.

அண்மைக்காலமாக அவனுக்கு ஒரு தோல்வி.
அதனால்
இனம் புரியாத ஒரு கவலை.

அரசனல்லவா...?
கால் போன பக்கம் போக வழி இல்லை. 
எனவே யாரிடமும் சொல்லாமல்
குதிரை போன பக்கம் போனான்.

மனத்தைப் போலவே குதிரையையும்
அவன் அடக்கவில்லை.

காட்டில்
நுழைந்த குதிரை
இரவு வந்ததும் முனிவரின்
குடில் முன் நின்றது.

ஞான குதிரை
போல் இருக்கிறது.

அன்று பௌர்ணமி... நிலவொளியில்
காடு ஜொலித்துக் கொண்டிருந்தது.

குதிரையில் இருந்து இறங்கிய மன்னனின் கண்களில்
குகையும்
குகைக்குள்
முனிவரும் தென்பட்டனர்.

முனிவர் என்பதெல்லாம் உரையாடிய பின்னர் உணர்ந்த விஷயம்.

முதன் முதலில் பார்த்தபோது
குகையில் இருந்த மனித உருவைக் கண்டு
பயந்து போனான்,
பல போர்கள்
கண்ட மன்னன்.

ஆம்....
முதிர்ந்த உருவம்.
நெற்றியில் திருநீறு. கையில் ஜபமாலை. 
கழுத்தில் ருத்ராட்சம்.

அருகில் கமண்டலம். அடியில் புலித்தோல்.

உடம்பு முழுக்க  
பொசு பொசுவென்று முடி.
ஆங்காங்கே
சுருள்முடி முடிச்சுகள்.

திருநீறும் கமண்டலமும் இல்லாதிருந்தால் 
ஏதோ விலங்கு என விலகி ஓடி இருப்பான்.

திரும்பத் தான் நினைத்தான்.
ஆனால்
உருவம் அழைத்தது.

அப்படி
ஓர் இனிமையான அன்பான குரலை 
இதுவரை அவன் கேட்டதில்லை.

"தொண்டமானே....!
மன்னர் மனதில்
பயம் இருக்கக்கூடாது.. 
பயப்படாதே.... வா... அருகில் வா..."

மந்திரத்துக்கு கட்டுப்பட்டவன் போல் 
முனிவர் முன் நெருங்கி நின்றான்.

"சுவாமி....
என் பெயர் உங்களுக்கு
எப்படி தெரியும்? நீங்கள்...."
பயந்து இருந்தாலும் வியந்து கேட்டான்.

"மன்னா...
என்னை  
உரோமசன்
என்று அழைப்பர்.

திருவருள் குருவருள் நிரம்பப் பெற்ற
பேறு பெற்றவன்.

உடல் முழுவதும் இருக்கும் உரோமம் காரணமாக
உரோமசன் என பெயர் பெற்றவன்.

முக்காலம் உணரும் ஞானம் பெற்றவன்.

பற்றற்றவன் எனினும் இறைப்பற்று மிக்கவன்.
தவப் பற்றுக் கொண்டவன்.

இறையே
இன்று
உன்னை
இங்கு அழைத்து வந்திருக்கிறது.

மனக்கவலை விடு. மனம் சலனமடைந்தால்
மதி கலங்கும்.
கவலை விடு.
இறையே வழி
என வாழ்"
 
என்ன ஆச்சரியம்..!

மன்னன் மனத்தில் தெளிவு முளைவிட்டது

முனிவர் பேசப்பேச அது
பூவாகி, பிஞ்சாகி, காயாகி, 
பழமாகி, கனியாகிக் கொண்டிருந்தது.

பல காலம்
பழகிய உறவு மாதிரியான ஒரு சூழல்.

இச்சூழலில்தான் மன்னன் கேட்டான் 
முனிவர் அக்குகையில் வாழும் காலம் குறித்து.

பிரம்மதேவ
வருடக் கணக்கை
மன்னன் வாய்பிளக்க கேட்டதை ரசித்த உரோமரிஷி,

"இன்னும் சொல்லவா... வயது ரகசியம்... 
வாழ்க்கை ரகசியம்... இங்கிருக்கும் ரகசியம்... 
அனைத்திற்கும் மேலாய்
சித்தர் ரகசியம்...."

முனிவர்
இவ்விதம்
கேட்க கேட்க
அவரது முடி நிறைந்த புருவம்
வில்லாய் வளைந்து கேள்விக்குறி போல் வித்தை காட்டியது.

"மன்னா....
மீண்டும் சொல்கிறேன்..
கவலை மற..

உன் முன்வினை தீவினை கொண்டது.
உன் நாட்டு மக்களின் வினையும்
சேர்ந்து கொண்டது.
அதனால்தான்
யுத்தம் நிகழ்ந்தது. அதில் உனக்கு தோல்வி வந்தது.
வீரர் பலர் உருண்டு மாய்ந்தனர்.

கவலையோடு
நீ இங்கு ஓடி வரக் காரணமும் அதுவே.

மன்னனது வாழ்வின் ரகசிய முடிச்சுகளை அவிழ்த்தார்
குகை முனி.

பின்னர்
இனி கவலை இல்லை என்பதுபோல் 
கரங்களை உயர்த்தி ஆசீர்வதித்தார்.

முனிவர்
ஆசீர்வதிக்கும் போது அவரது
அருட் கரங்களை நோக்கினான் மன்னன்.

சற்றே நோக்கியவன் திகைத்து
உற்று நோக்கினான்.

அது
இன்னொரு ஆச்சரியம்.

முனிவரின் முன்கையில் உரோமங்கள் இல்லை.

மன்னன் பயப்படுவதை
முனிவர் கவனித்தார், "மன்னா...
நீ பயந்து வியந்து கேட்க விரும்புவது புரிகிறது.

வேறொன்றுமில்லை.

பிரமனின் ஆயுள் மூன்றரை கோடி வருடங்கள் என்று
சற்று முன்பு சொன்னேன் அல்லவா?

ஒரு பிரம்மன் இறக்கும்போது
என் முன்கை முடி ஒன்று உதிரும்.

இப்படி உதிர்ந்த கணக்கே எத்தனை
பிரமன்கள் பிறந்து வாழ்ந்து 
இறந்து போயிருக்கிறார்கள் என தெரியவரும் 
தெய்வக் கணக்கு.

இன்னொரு தொடர்பையும் இறைவன் வகுத்துள்ளான்.

அஷ்டவக்ரர்
என்றொரு
முனிவர் உள்ளார்.

அவருக்கு உடம்பு
எட்டு கோணலாய் திரும்பி இருக்கும்.

ஓர் உரோமரிஷி இறந்தால்
ஒரு கோணல்
சரியாகும்.

என்னைப்
போலிருந்த
உரோமரிஷிகள்
சிலர் இறந்திருக்கிறார்கள்.

இப்போது கணக்கிட்டுக் கொள்...
இறைவன் வகுத்த வயது கணக்கை.." 
மன்னனுக்கு முனிவர் சொன்னார்.

நூறு வயதுக்குள் மானிடப்பிறவி
ஆடும் ஆட்டமும் போடும் கொட்டமும்
நானே பெரியவன் எனக்கு எல்லாம் தெரியும்
என ஆணவம் அகங்காரம்
இவை எல்லாம்
ஒரு தடவை
மன்னன் மனக்கண்ணில்
ஆடி மறைந்தது.

மூவாயிரம் ஆண்டுகள் பூமியில் இருந்து 
ஆண்டுக்கு ஒன்றாய் மூவாயிரம் பாடல்கள் படைத்த சித்தர்
திருமூலரைப் பற்றி மட்டும்
அறிந்திருந்த அரசனுக்கு பல்லாயிரம்
கோடி ஆண்டுகள் வாழும் முனிவரை பார்த்தது
தன் அற்ப வாழ்வில் கிடைத்த அற்புதம்
என புளகாங்கிதம் உற்றான்.

உரோமரிஷி
பயம் தெளிந்திருந்த மன்னனைக் 
கருணையோடு பார்த்துச் சொன்னார்.
"மன்னா .....
இந்த இடம்
பெருமைமிக்கது.
இறைத் தன்மை
கொண்டது.

என்னை
என்றோ ஈர்த்தது.

உன்னை
இன்று ஈர்த்துள்ளது."

"கேட்க நினைத்தேன்...
சொல்கிறீர்கள்...
சுவாமி....தாங்கள்
இத்தனை காலம்
இங்கு இருப்பதன்
ரகசியம்..."

மன்னன்
நெகிழ்ந்துருகிக்
கேட்டான்.

"சொல்கிறேன் கேள்....
இங்கு உனக்கும்
வேலை இருக்கிறது.
அதுவே
உன்னை அழைத்து
வந்திருக்கிறது."

பதிலளித்த
உரோம முனி தொடர்ந்தார்.

"இது
பிரம்ம தேவன்
ஒருவன் இருந்த இடம்.

அவன்
சிவ சிந்தனையோடு
தவமிருந்தான்.

அவனது ஆன்மா
சிவனோடு
நெருங்கிய வேளையில்
மூலக்கனல் எழுந்தது.

ஒருநாள்
அவ்விதம் எழுந்த
மூல அக்னியின் மத்தியில்
இறைவன் சதுரமான
சித்திரப் பலகை
வடிவில்
பிரசன்னமானார்.
பிரமனை ஆட்கொண்டார்.

அதுமுதல் சிவனுக்குப்
பலகைநாதர்
என்ற பெயர் வந்தது.

ஒருமுறை பிரளயம் ஒன்று எழுந்தது.
உலகம் அழிந்தது.

பின்
இவ்விடத்தில் மீண்டும் தோன்றியது.

அதனால் இவ்வூர்
ஆதிபுரி ஆனது.

அஷ்ட நாகங்களில்
ஒன்று வாசுகி.

அது
இங்கு வந்து
வழிபட்டு தவமிருந்து
இறைவனோடு
இரண்டறக் கலந்தது.

அதன் அடையாளமாக
அடிக்கடி
பலகை நாதரின்
திருமேனியில்
பாம்புச்சட்டை
மாலை போல்
காணப்பட்டது.

வாசுகி
சித்தியானதைத் தொடர்ந்து
படம்பக்கநாதர்
என்ற பெயர்
சிவபிரானுக்கு அமைந்தது.

ஒருமுறை இங்கே
பெரும் வெள்ளம்.

சர்வமும் நாசம்
என
எண்ணியிருந்த வேளையில்
சர்வேஸ்வரன்
"வெள்ளமே ஒற்றிப்போ"
என்றாரே பார்க்கலாம் !

வெள்ளம் விலகியது.

அது முதல் இவ்விடத்திற்கு
ஒற்றியூர்
என்ற
திருப்பெயர்
ஏறி அமர்ந்தது.

இந்த இடம் அளவிற்கதிக
ஆன்மீக அருள்
நிறைந்த இடம்.

எனவேதான்
வந்த நாள் முதல்
வேறிடம் செல்ல
என் மனம் ஒப்பவில்லை.

நாள்தோறும்
அற்புதம் காண்கிறேன்.
அதில் லயிக்கிறேன்.
நீயும்
இங்கேயே வந்து விடு.

உனக்கு
வேண்டுவனவற்றை
உபதேசிக்கிறேன்.

நீ தியானம் கொள்.
நான் தரும்
மந்திர உபதேசம்
மனதில் கொள்"

தலையாட்டிய
தொண்டமான்
உரோம ரிஷியிடம்
உபதேசம் பெற்றான்.

இடையில்
நாட்டுக்குத் திரும்பி
கடமையை முடித்து
குகைக்குத் திரும்பினான்.

தியானம்...
தியானம்....
தியானம்....
தொடர்ந்து
தவம்...
கடும் தவம்....
அருட்தவம்.

ஆன்மிக
உயர்நிலையை
அடைந்த மன்னன்
உரோம ரிஷியின்
உறுதுணையோடு
கோயில் அமைத்தான்.

அக்னியால் உருவான
பலகை நாதரின்
உக்கிரம்
தாக்காமலிருக்க
மந்திரங்கள் அடங்கிய
வட்டப் பாறையை
உரோமமுனி
தவநிலையில்
அருளினார்.

கோயில் பணி
நிறைவடைந்த
திருநாளில்
சித்தர் உரோம ரிஷியின்
ஆசிகளோடு
மன்னன் தொண்டமான்
இறையோடு இறையாய்
சித்தியானான்.

தேடி வருவோருக்கும்
இக்கோயில் பணி
செய்வோருக்கும்
அமர்ந்து ஆழ்ந்து
தியானிப்போருக்கும்
உரிய புண்ணியத்தை
உன்னத நிலையைத்
தரவல்லது ஒற்றியூர்.

சித்த புருஷர்
உரோம ரிஷியின்
குருவருள்
பலகைநாதரின்
திருவருளோடு
சிறக்கிறது.

ஒற்றியூர் தலத்தின்
ஆன்மீக பலம்
அபரிமிதமானது.

மாணிக்கவாசகரும்
பட்டினத்தாரும்
பாடித் தவமிருந்து
பக்தி பரவசமும்
ஞானத் தெளிவும்
பெற்ற
திருவூரே
திருவொற்றியூர்.

வள்ளல் பெருமான்
விரும்பி
நடையாய் நடந்து
நாள்தோறும்
நாடித் தவமிருந்து
அழுதபடி
அமுதத்
தமிழ் விருந்தாய்
திருவருட்பாவை
அருளிய
திருப்பதியே
திருவொற்றியூர்.

அனைத்துக்கும் மேலாய்
சித்தர் பிரான் உரோமரிஷி
அருவுருவாய் அருள்பாலித்து 
அருளாற்றல் பொழிவித்து 
பெருமைபடச் செய்யும்
பெருங்கோயில் இருப்பிடமே
திருவொற்றியூர்.



Leave a Comment