பத்து இடங்களில் லயமான பதஞ்சலி முனிவர்


- "மாரி மைந்தன்" சிவராமன்

பத்து தலங்களில் சமாதியானவர் பதஞ்சலி முனிவர் என்கின்றன
வடநாட்டு 
யோக நூல்கள்.

இது சாத்தியமா என்போருக்கு 
சத்தியம் என்கின்றன சித்தர் நூல்கள்.

சித்தர் பெருமான்களுக்கு எல்லாமே சாத்தியம்.

வியக்கத்தகு சக்திகள் போற்றத்தகு முத்திகள் 
வணங்கத்தகு சித்திகள் 
சாத்தியமே.

இறைநிலை அடைந்தவர்கள்.,. இறையாய் இருப்பவர்கள்.,. சித்தர்கள்.
அவர்கட்கு 
எதுவுமே சாத்தியம்.

அப்படி ஓர்
அசாத்திய சித்தரே  யோக - ஞான முனிவர் பதஞ்சலி முனிவர்.

அத்திரி மகரிஷிக்கும் அனுசுயா தேவிக்கும் பிறந்த 
அருந்தவப் புதல்வனே பதஞ்சலி மகரிஷி.

ஆதிசேஷனின் அவதாரம் 
பதஞ்சலி 
என புராணம் 
புகழும்... வணங்கும்.

ஒரு சமயம் 
தாருகாவனத்தில் சிவபெருமான் 
ஆனந்த தாண்டவம் ஆடிக் கொண்டிருப்பதை ஆதிசேஷனைப் படுக்கையாகக் கொண்டு 
ஏகாந்தத்தில் இருந்த விஷ்ணு பிரான்
கண்டு களித்தார்.

அக்களிப்பு 
ஆனந்தக் களிப்பு பரமானந்த களிப்பு.

பள்ளி கொண்டிருந்த ஸ்ரீமன் நாராயணன் துள்ளித் துள்ளி ரசித்தார்.

அவர்
அனந்தசயனம் கொள்ளும்
ஆனந்த படுக்கையாயிருந்த ஆதிசேஷன் 
ஆட்டம் தாங்காமல் தவித்தார். தத்தளித்தார்.

விஷ்ணு பிரானிடம் மெதுவாக கேட்டார்.

"ஏன்' இந்த துள்ளல்.. என்ன கண்டீர் சுவாமி ?"

விஷ்ணு பிரான்
சிவ தாண்டவத்தின் சிலிர்ப்பை விவரிக்க நெகிழ்ந்து போனார் ஆதிசேஷன்.

சிவதாண்டவம் பார்ப்பது என்பது எவருக்கும் எளிதில் கிட்டாத பேறு.

தன் பிறவிப்பயன் 
சிவ நடனம் காண்பதாக இருக்கட்டும் என அப்போதே
உறுதி பூண்டார் ஆதிசேஷன்.

இறைவனைக் காண எளிய வழி தவம்.

அவன் திருநடனம் காணவும் அதுவே வழி.
சிவ விதி.

கயிலாயத்திலேயே நீண்ட நெடிய தவம்.

ஆதிசேஷன் முன்பு பரமன் தோன்றினார்.

" அப்பனே...
திருநடனம் காண தில்லைக்குப்  போ..

உன்னோடு வியாக்ரமரும் உடனிருக்க 
களிநடனம் காண்... களிப்புறு ...."

அப்பன்  சொல்லி  மறைந்தார்.

அதன் பின்னே ஆதிசேஷனான பதஞ்சலி
தில்லை வந்தார்.

அங்கு 
மூல நாதரின்
பக்தராய் வலம் 
வந்து கொண்டிருந்த வியாக்ரபாதருடன் சிவதாண்டவம் 
கண்டு மகிழ்ந்தார். பிறவிப்பயன் எய்தி
மிக மகிழ்ந்தார்.

திருமூலரும் இவ்விருவருடன் திருநடனம் கண்டதாக குறிப்பொன்று இருக்கிறது.

பரமனின் பரிந்துரையால்
தில்லை வந்த பதஞ்சலியாருக்கு தில்லையம்பதி பிடித்துப்போயிற்று.

தில்லையின் 
மகிமை அது.

இறையே விரும்பும் திருத்தலம் அல்லவா தில்லை ?

வாழ்வில் தொல்லை மிகுந்தோருக்கு இல்லை இனி கவலை என அடைக்கலம் தரும் ஆடவல்லானின் அருள்நிறை உறைவிடம் அல்லவா தில்லை. !

பதஞ்சலி முனிவர் அருளிய
'பதஞ்சலி யோகம்' ஈடுஇணையற்ற ஞானப் பொக்கிஷம், யோக சூத்திரங்கள் நிரம்பிய 
அட்சய பாத்திரம், அபூர்வ களஞ்சியம் என
அகிலம் போற்றும்.

அந்நூலை சிதம்பரத்தில் இருக்கும்போதுதான் படைத்தார்
பதஞ்சலி முனிவர்.

'பதஞ்சலி யோகம் ' என்னும் 
அந்த பொக்கிஷம்
உருவான 
நிகழ்வு
உணர்ச்சிமிக்கது.

 தில்லையம்பலத்தில்
 மொத்தம்
 ஐந்து சபைகள்.

அதில் 
ஒன்று 
ரஜித சபை.

ஆயிரம் தூண்கள் 
கொண்ட மண்டபம்
அதன் சிறப்பு.

தில்லைக்கு வந்து 
தில்லைக்காரராகவே
மாறிப்போன
பதஞ்சலி முனிவருக்கு 
நாளுக்கு நாள்
சீடர்கள் பெருகினர்.

அவர்தம் 
உபதேசங்களுக்கு 
அவர்கள் ஏங்கினர்.

பதஞ்சலி முனிவருக்கும்
தான் உணர்ந்ததை 
எளிமையாய் 
சீடர்களுக்குத் தர 
ஆசைதான்.

ஆனால் 
அதில் ஒரு
பிரச்சனை இருந்தது.

ஆதிசேஷனான 
பதஞ்சலியின் 
மூச்சுக் காற்று 
பட்டாலே 
எதிரில் உள்ளோர் 
விஷம் தீண்டியவராய் 
மரணித்துப் போவர்.

அவர் என்ன 
சாதாரண பாம்பா ?

ஆதிசேஷன் 
என்ற 
விசேஷ பாம்பு !
விஷம் வீசும் பாம்பு !!

 யோசித்தார்.

 "இடையில் 
ஓர் 
இரும்புத்திரை
இட்டால் ! "

பிரச்சினை 
தீர்ந்தது.

ஆயிரங்கால்
மண்டபத்தில் 
ஒருபுறம் 
அமர்ந்து 
இடையே
இரும்புத்திரை
இட்டு 
மறுபுறம் 
மாணாக்கர்களை 
அமரச்செய்து
தான் 
ஏற்கனவே 
எழுதி இருந்த
'வியாக்கரண 
குத்திரத்தை '
உபதேசிக்க 
ஆரம்பித்தார்.

கற்க வந்த
சீடர்களுக்கு 
ஓர் உபதேசம்
கண்டிப்பாய்
இருந்தது.

யாரும்
திரை விலக்கி
குருவைப்
பார்க்க 
முயற்சிக்க கூடாது .

அதே சமயத்தில்
யாரும் 
ஒரு நாள் கூட
வகுப்புக்கு வராமல்
இருந்து விடக் கூடாது  
- இது 
 உப உபதேசம்.

பதஞ்சலியின் 
வகுப்பு 
சீரோடும்
சிறப்போடும் 
உபதேச மொழிகளால் 
பேரோடும் 
புகழோடும் 
தவழ்ந்து கொண்டிருந்தது.

பார்க்கத் தடை
என்கிற போது 
பார்க்க வேண்டும் 
என்கிற 
துடிப்பு 
இயல்புதானே ?

அத்துடிப்பு 
பல சீடர்களுக்கு 
இருந்தது நிஜம்.

புஜங்கள் துடிக்க
பொறுத்திருந்தனர். கண்கள் வியக்க காத்திருந்தனர்.

எப்படியாவது 
என்றாவது 
திரை விலக்கி 
குருவைத் 
தரிசிக்க 
காத்திருந்தனர்.

 பாவம் ....
அவர்களுக்குத்
தெரியாது..!

திரை விலகினால் 
குருவான 
ஆதிசேஷனின்
அனல்மிகு
மூச்சுக்காற்று
விஷ மிகுதியால் 
சீடர்களை 
வதைத்து விடும்..
சிதைத்துவிடும் ...
எரித்து
சாம்பலாக்கி 
விடும் என்பது .

சீடர்களில் 
ஒருவன் 
துடிப்புமிக்கவன்.

 ஒரு நாள் -
அன்று வகுப்பில்
ஆயிரம் சீடர் 
அமர்ந்திருந்தனர்.

உரத்தகுரலில் 
உபதேசம்
உள்ளிருந்து வந்து 
கொண்டிருந்தது.

ஆர்வமிகுதியால்
ஒரு சீடன்
இரும்புத்திரையை 
இழுத்தான்.

உள்ளே 
பாம்பு ரூபமாய்
விஸ்வரூபமாய் 
ஆதிசேஷனாய்
ஆயிரம் தலைகளோடு 
காட்சியளித்தார் 
குரு பதஞ்சலியார் .

அடுத்த நொடியே 
விஷக்காற்று 
விரைந்து 
விரவி.....
அத்தனை சீடர்களும்
கணப்பொழுதில் 
மாண்டனர் 

ஆயிரம் கால் 
மண்டபத்தில்
ஆயிரம் பிணங்கள்.

அதிர்ச்சியில் இருந்து 
மீளாமல் 
ஆதிசேஷனான
பதஞ்சலி மகரிஷி 
பரிதவித்தார்.

கெளட பாதர்
என்ற சீடர்
மட்டும்
அன்று 
வகுப்புக்கு 
மட்டம் 
போட்டுவிட்டு 
வெளியே 
சென்றிருந்ததால் 
உயிர்
தப்பினார்.

கற்கும் காலத்தில்
பயில
வராமல் 
வேறெங்கும் 
போகக் கூடாது 
என 
கட்டாய விதி இருந்தும் 
விதி வசத்தால் 
வெளியே 
இருந்ததால் 
மாய்ந்து போகாமல்
தப்பித்தார்
கௌடபாதர்.

பதஞ்சலியின் 
கோபம் 
அவர் மீது 
பாயவில்லை.

ஒரு சீடனாவது 
உயிர் பிழைத்து 
இருக்கிறாரே
என
மகிழ்வு கொண்டார்.

" உன் மீது 
கோபப்பட மாட்டேன்" 
என கௌடபாதரை 
அழைத்து 
சகல யோக கலைகளையும் அனைத்து ஞானங்களையும்
உபதேசித்தார்.

தான் கற்றிருந்த 
கைமண்ணளவை
தவ ஆற்றலால் 
உலகளவாக்கி 
உபதேசித்தார்.

மாணவருக்குப் 
பதஞ்சலி சித்தர்
விளக்கமாய் 
உபதேசித்த 
'வியாக்கரண சூத்திரமே '
பதஞ்சலி யோகம் 
என்னும் 
ஒப்பற்ற 
யோக நூல்.

கௌடபாதரின் 
சீடரே 
கோவிந்த பகவத் 
பாதாள்.

பலரும் 
கேட்டிராத 
இப்பெயர் 
சாதாரணமான ஒருவருடையது
அல்ல.

ஒப்புயர்வற்ற
ஞானாசிரியர் 
ஆதிசங்கரரின்
குருவே 
கோவிந்த பகவத் 
பாதாள். 

என்ன பேறு !
எவருக்கு கிடைக்கும் 
இந்த ஞானச் சீரு !!

கவனியுங்கள்...

ஆதி சித்தர் சிவபெருமானின் சீடர் தட்சணாமூர்த்தி.
அவரின் சீடர் நந்திஸ்வரர்.

நந்தீஸ்வரரின் சீடர் பதஞ்சலி முனிவர்.
அவரின் சீடர் கௌடபாதர்.

கெளட பாதரின் சீடர் கோவிந்த பகவத் பாதாள்.
அவன் சீடர் 
அகிலம் வணங்கும்
ஆதிசங்கரர்.

என்னே 
குரு வர்க்கம்...!!!

வடநாட்டவர்
என கருதப்படும் பதஞ்சலியார்
நீண்ட காலம் வாழ்ந்ததும்
நிறைவடைந்ததும் தமிழ்நாட்டில் தான்.

பதஞ்சலியார் ராமேஸ்வரத்தில் ராமநாத சுவாமி ஆலயத்தில்
லயமாகி இன்றும் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார்.

திருப்பட்டூரில் பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் 
சமாதி நிலையில் இருந்தபடி
அங்கு அமர்ந்து
தியானிப்போரை அருள் வெள்ளத்தில்
திக்குமுக்காட வைக்கிறார்.



Leave a Comment