சித்தர்களின் கோபமும் சாபமும்


- "மாரி மைந்தன்" சிவராமன்

பொதுவாக 
சித்தர்கள் கோபக்காரர்கள். சாபக்காரர்கள் கூட.

சட்டென கோபம் வரும். பட்டென சாபமிடுவார்கள்.

புலத்தியரும் அகத்தியரும் கருவூராரும் கோபப்படுவதிலும் 
சாபம் விடுவதிலும் மற்ற சித்தர்களை விஞ்சியவர்.

அவர்கள் சாபம் குடும்பத்தாரை மட்டுமல்ல ...
தெய்வத்தைக் கூட விட்டுவைப்பதில்லை.

இம்மூன்று
கோபக்கார சித்தர்களையும் அவர்கள் சாபக்காரர்களாக இருந்ததையும் 
சாபம் பலித்த நிகழ்வுகளையும் கொஞ்சம் 
தரிசிப்போமா ?

முதலில் புலத்தியர். 

சித்தர் புலத்தியர் 
பற்றி 
ஒரு சிறு அறிமுகம்.

அகத்தியர் பெருமானின் 
அகம் நிறை சீடர் புலத்தியர்.

உலகம் சமநிலை அடைய 
அகத்தியர் 
தென்னாடு வருகையில் 
அவரோடு 
உடன் வந்தவர் புலத்தியர்.

அகத்தியர் பெருமானுக்கு 
மச்சான் கூட,

ஆம்...

புலத்தியரின் தங்கை உலோபமுத்திரையைத் தான் 
மணந்தார் அகத்தியர்.

திரணபந்து 
என்றொரு 
அறம் செறிந்த மன்னன்.

அவனது 
தவச் சாலையில் 
தங்கி 
புலத்தியர் தவம் இருந்து வந்தார்.

அரண்மனைப் பெண்கள் 
அங்கு அடிக்கடி வந்து ஆடியும் பாடியும் அமைதி கலைத்தனர்.

நீர் விளையாடி கேலியும் கிண்டலுமாய் தவச் சூழலை சிதைத்தனர்.

இதுவே நாளும் தொடர்ந்தது.

தவத்திற்கு எழும் தடையால்  எரிச்சலுற்றார் புலத்தியர் பெருமான்.

கோபமுடன் 
சாபமும் தந்தார்.

"இனி என் எதிரில் எவரேனும் பெண்கள் வந்தால் அவர்கள் கர்ப்பம் அடைவார்கள்"

கடுமையான சாபம்தான்.

என்ன செய்வது.,?

இடுபவர் 
சித்தர் பிரான் ஆயிற்றே.....!

ஒருநாள்....
சாபம் குறித்தோ தவமிருக்கும் புலத்தியர் பற்றியோ ஏதுமறியாத 
திரணபந்துவின் 
அழகு மகள் 
ஆவிர்ப்பு.
அங்கு வந்தாள்.

புலத்தியர் சாபம் கணப்பொழுதில் பலித்தது.

அரண்மனைப் பெண்டிரோ
அரசரின் மகளோ 
என வித்தியாசம் பார்க்குமா முனிவரின் சாபம் ?

ஆவிர்ப்பு கர்ப்பமுற்றாள்.

கண் கலங்கி
அவள் துடிக்க....
கருவுற்ற செய்தி மன்னனுக்குப் போய்ச்சேர 
அவனும் துடிதுடித்தான்.

புலத்தியரிடம் ஓடிவந்தான் புவியரசன்.

கெஞ்சினான்.
நியாயம் கேட்டான். குமுறினான். கதறினான.

முடிவாக 
தனது மகளை
மணம் செய்து 
கொள்ள வேண்டி நின்றான்.

ஒரே வழி 
திருமணம் தான் 
என்று இறைஞ்சினான்.

மண்டியிட்ட மன்னனின் 
தங்க மகளை மாலையிட்டு மணமுடித்தார் புலத்தியர்.

இல்லறம் எனும் நல்லறம் 
இரு மகன்களைத் தந்தது.

அதில் ஒருவன் விசிவரசு.

விசிவரசு வளர்ந்தான். அரசனானான். குடும்பம் வளர்த்தான். தந்தை ஆனான்.

அவன் 
குழந்தைச் செல்வங்கள்
யார் என அறிந்தால் வியந்துபோவீர்கள்..!

அவர்கள்
யார் தெரியுமா...?

அவர்கள்தான்... ராவணன் கும்பகர்ணன் விபீஷணன் சூர்ப்பனகை.

அவர்களின்
தாத்தாவே 
புலத்தியர்
என்கிறது இந்நிகழ்வை சிலாகிக்கும் 
ஒரு புராணம்.

இன்னொரு நிகழ்வு.

ஒருநாள் 
தாயார் சரஸ்வதியைப் பார்க்கப் போனார்.

முப்பெரும் தேவியரில் ஒருவரான சாட்சாத்
சரஸ்வதி தேவி தான் 

மகனை ஆசையோடும் வாஞ்சையோடும் இல்லாமல் 
ஏனோ தானோ 
என்று வரவேற்றாள் கலைமகள்.

சித்தருக்கு
கோபம் வந்தது. சாபமும் வந்தது.

" நீ நதியாகி ஓடு...."

தாய் சரஸ்வதிக்கே சாபம்.....!

குட்டி 
பல அடி பாய்ந்தால் தாய் சில அடியாவது சீறாதா..?

"நீ அரக்கன்
விபீஷணனாகப் பிறப்பெடுப்பாய்..."

'இந்தா பிடி...'
என தாய் விட்ட 
சாபம் பலித்தது.

அரக்க வம்சத்தில் விபீஷணனாய்
உருக் கொண்டது.

மகன் இட்ட சாபமே சரஸ்வதி நதியாய் புண்ணிய நதியாய்  ஓடிக் கொண்டிருக்கிறாள்
கலைமகள்.

சீடர் புலத்தியரை விட
குரு அகத்தியர்
கோபத்திலும் சாபத்திலும் 
பெயர் பெற்றவர்..

குரு அல்லவா ?

அகத்தியர் பிறப்பே அலாதியானது. 
சாபம் தொடர்புடையது.

ஆம்...
சாபத்தின் விளைவால் உதித்தவர் தான் அகத்தியர்.

தாரகன் என்று
ஓர் அரக்கன்.

அவனை அழிக்க இந்திரன் 
வாயு 
அக்னி
மூவரும் 
பூமிக்கு வந்தனர்.

தாரகனும்
அரக்கர் கூட்டமும் கடலினுள் ஓடி ஒளிந்தனர்.

'கடலை வற்றச் செய்.. அரக்கர்களை 
அழித்து விடலாம்....' அக்னிக்கு ஆணையிட்டான் இந்திரன்.

' கடலை 
வற்றச் செய்தால்
வளங்கள் அனைத்தும் அழிந்துவிடும் அது வேண்டாம்'
என சூழல் விஞ்ஞானத்தை மெய்ஞானம் கலந்து மறுத்தார் அக்னி.

அன்று 
அரக்கர் கூட்டம் தப்பித்தது.

ஆனால் அதன்பிறகும் அவர்தம் அட்டகாசம் அதிகரித்தது.

இம்முறை 
இந்திரனின் கட்டளை கண்டிப்பாக இருந்தது. 

" அக்னி....
 நீ வாயுவுடன் கூடி பூமிக்குச் சென்று கும்பத்தில் பிறந்து கடல் நீரைக் குடிக்கக் கடவாய்......" 

பூமியில் இருவரும் மித்திரர் 
வருணர்
என பிறப்பெடுத்தனர்.

அவர்கள் இளைஞராய் விளைந்திருந்த நேரத்தில் 
தேவேந்திரனின் சாபத்தால் ஊர்வசி பூமிக்கு வந்தாள்.
புவனத்தைக் கவரும் கட்டழகியாய் 
வலம் வந்தாள்.

இந்திரன் சாபத்தால் பூமிக்கு வந்த மூவருக்குள்ளும் 
ஓர் ஓட்டம்.
அது காம ஆட்டம்.

காம மிகுதியால் ஒருவர் தன் வீரியத்தை குடத்திலிட்டார்.

இன்னொருவர் தண்ணீரில் விட்டார்.

குடத்திலிட்டதன் பலன் அகத்தியராக...
தண்ணீரில் விட்டதன் பலன் விசுவாமித்திரராக  தோற்றம் கண்டது.

ஆக 
அகத்தியர் பிறப்பே அலாதியானது.
சாபம் தொடர்புடையது.

இன்னொரு நிகழ்வு.

கைலையில் நடந்த 
சிவ பார்வதி  திருமணத்தின் போது  உலகைச் சமன்படுத்த இறைவன் ஆணைப்படி தென்திசை பயணமானார் அகத்தியர்.

வழியில் வந்தது
விந்திய மலை.

விந்திய மலை சாதாரண மலையல்ல.

சூரிய சந்திரர்களையே மேற்கொண்டு செல்லாமல் 
தடுத்த மலை.

அகத்தியரின் 
கோபமும் சாபமும் விந்திய மலைக்கு தெரிந்திருந்ததால் 
வேறு வழியின்றி அகத்தியரைக் கண்டதும் மெல்ல பணிந்தது விந்தியமலை.

தாழ்ந்து 
வழியும் விட்டது.

பணிந்து இருந்த போதும்
மலையைப் பார்த்து 
சாபம் விட்டார் அகத்தியர் கோபமாக.

பல முறை சூரியனையும் சந்திரனையும் தடுத்ததால் 
அந்த சாபம்.

" நான் தென்திசை சென்று 
திரும்பும் வரையில் இவ்விதம் பணிந்து இருப்பாயாக"
என்று கூறிச் சென்றார்.

பின் 
அகத்தியர் முனி மீண்டும் வடதிசை திரும்பவும் இல்லை.
விந்தியமலை உயரவும் இல்லை என்பது வரலாறு.

அகத்தியரின் சாபம் அவருடைய உத்தம மனைவி உலோபமுத்திரையை யும் 
சீரிய சீடன் தொல்காப்பியரையும் கூட விட்டுவைக்கவில்லை.

அவர்கள் இருவர் மீதும் சந்தேகம் கொண்டு இருவருக்கும் சொர்க்கம் இல்லை என சாபம் தந்தார்.

கோபம் கொண்ட தொல்காப்பியர் அகத்தியருக்கும் சொர்க்கம் இல்லை என்று சாபம் விட்டது சுவாரசியமானது.

அடுத்து கருவூரார்.

கருவூராரை
கோபக்கார சித்தர் என்று 
தைரியமாக அழைக்கலாம்.

அவர் கோபமும் சாபமும் சித்தர் உலகில் பிரசித்தி பெற்றவை.

கருவூரார் 
தேச சஞ்சாரத்தின் போது  திருக்குருகூர் சென்றார்.

திருக்குருகூர் இன்றைய திருநெல்வேலி.

நெல்லையப்பர் ஆலயத்திற்கு சென்றார் கருவூரார்.

வாசலில் நின்றபடி
" நெல்லையப்பா ... நெல்லையப்பா...."
என உரத்து அழைத்தார்..

பதில் வரவில்லை.. மீண்டும் இறைவனை அழைத்தார்...

இது இரண்டாவது முறை....

மீண்டும் ஒரு முறை அழைத்துப் பார்த்தார்... இது மூன்றாவது முறை.

கருவூராரின் குரல்தான் எதிரொலித்தது.
பதில் இல்லை.

கோபம் வந்தது சித்தருக்கு.
கூடவே வேகமாய் சாபமும் வந்தது.

"ப்ச் ...
இங்கு இறைவன் இல்லை போலிருக்கிறது. அதனால்தான் பதில் வரவில்லை.

நெல்லையப்பா....
நீ இல்லையப்பா....

கோயில் இல்லாத ஊரில் யாரும் குடியிருக்கக் கூடாது.

இறைவன் இல்லாத இடத்தில் 
எருக்கஞ்செடி முளைக்கட்டும்" என்றவாறு வெளியேறினார்.

அவர் 
திரும்பி நடப்பதற்குள் ஊரெங்கும் எருக்கஞ்செடி நிறைந்திருந்தன.

அடுத்து மானூர் போனார்.

அங்கேயும் ஒரு குழப்பம்.
அந்த ஊர் வேதியர் கருவூராரை ஆச்சாரமற்றவர் என இகழ்ந்தனர்.

வந்ததே கோபம் கருவூராருக்கு..!

ஏற்கனவே நெல்லையப்பர் கோயிலில் 
இறைவன் 
பதில் அளிக்காத 
கோபத்தில் இருந்த கருவூரார்
கோபத்தின் 
உச்சிக்கே போனார்.

 'ஊரில் 
வீடு இல்லாமல் போகட்டும் ' சாபமிட்டார்.

வீடுகளற்ற
ஊர் களையிழந்தது.

இதற்குள் 
மானூருக்கு நேரடியாகவே
வந்து விட்டார்
நெல்லையப்பர்.

"ஏனப்பா....
நைவேத்திய நேரத்தில் 
அழைத்தால்
எப்படி என்னால் பதில் சொல்ல முடியும் ? யோசித்துப்பார்....

திரும்ப திருநெல்வேலிக்கு வா" இறைவனே இறைஞ்சினார்.

தெய்வமே தேடிவந்த தெய்வீக சித்தர் மறுமொழி இன்றி திருநெல்வேலி திரும்பினார்.

சித்தரின்
ஒவ்வொரு காலடிக்கும்
ஒரு பொற்காசு  தோன்ற வைத்து கருவூராரை சிறப்பித்தார் நெல்லையப்பர்.

சித்தர் மனம் குளிர்ந்தது.
மறைந்து போயின எருக்கஞ் செடிகள்.

திருவிடைமருதூரில் நடந்த ஒரு நிகழ்வு.

அங்கு இறைவனை அழைத்து கருவூரார் குரல் கொடுத்தார்.

நல்லவேளை நெல்லையப்பர் போல நைவேத்தியத்தில் இறைவன் இருக்கவில்லை.

அதனால் 
இறைவன் தலையைச் சிறிது சாய்த்து
பதில் கொடுத்தார்.

இன்றும் அங்கு நாதனான நாறும்பூநாதர் 
தலை சாய்த்தபடி இருப்பதைக் காணலாம். வணங்கலாம்.

சித்தர்களுக்கெல்லாம் இப்படி
கோபமும் சாபமும் துடுக்கென வருவது ஏன் 
என்று யோசித்துப் பார்த்தால்
ஓர் உண்மை புலப்படும்.

சித்தர் குலத்தின் தலைவர்
ஆதி சித்தர்
சிவபெருமானுக்கு வராத கோபமா...
கொடுக்காத சாபமா..?

சிவனை ஒத்தவர்கள் சித்தர் பிரான்கள் அல்லவா....!

அதனால் தான் சித்தர்களுக்கும் அவ்வளவு கோபம். அத்தனை சாபம்.
 



Leave a Comment