தமிழகத்தில் இராமதேவர், மெக்காவில் யாகோபு
- "மாரி மைந்தன்" சிவராமன்
சித்தர்கள்
இனம், மொழி,
நாடு, நிறம்,
சமயம், சாதி கடந்தவர்கள்.
சமரச சன்மார்க்கமே அவர்கள் சமயம்.
சித்தர் தத்துவமே
அவர்கள் மதம்.
சாதிகளைக் கடந்து சாதித்தவர்கள் அவர்கள்.
மதங்களைக் கடந்து போதித்தவர்கள் அவர்கள்.
ஞானமடைதல் மதங்களுக்கு அப்பாற்பட்டது
என உணர்த்தியவர்கள்.
மதமாற்றம் என்னும் சொல் புழக்கத்தில் இல்லாத காலத்திலேயே
மதம் மாறி
மக்கள் நலம் பேணியவர்கள் சித்தர்கள்.
இராமதேவர்
என்னும்
சித்தர் பிரானே
மதமாற்றம் கண்ட
முதல் சித்தர்.
கூடு விட்டு கூடு பாயும் சித்தர்கள் மத்தியில்
நாடு விட்டு நாடு சென்ற நன்மகான் அவர்.
அரபு தேசத்தில் அரேபியர்களின் மனங்களை வென்றவர்.
மருத்துவத் துறையில் அவர் பிதாமகர்.
சித்த மருத்துவத்தின் சிகரம் தொட்டவர்.
யுனானி மருத்துவத்திற்கு வழிகாட்டியவர்.
யுனானியிலும்
சித்த மருத்துவத்திலும் வல்லவரான
இராமதேவர்
தமிழிலும் அரபியிலும் வித்தகர்.
இஸ்லாமிய சூபிகளின் இதயத்தை வென்றவர்.
நபிகள் நாயகம் எனும்
இணையற்ற தீர்க்கதரிசியின் இதயத்தில் நின்றவர்.
அவர் புகழ்கொடி
பாரத தேசத்தில் சதுரகிரியிலும்
அரபு நாட்டில்
மெக்காவிலும்
பட்டொளி வீசிப்
பறந்தபடியே இருக்கும்.
அவர் பெயர்
தமிழ்நாட்டில்
இராமதேவர்.
அரபு தேசத்தில்
யாகோபு நாதர்.
அவர் சரிதம்
ஒரு திவ்ய சரித்திரம்.
நாகப்பட்டினம்.
இராமதேவர் பிறப்பால் புனிதம் பெற்ற ஊர்.
சின்ன வயதில் இருந்தே இராமதேவருக்கு
ஆன்மீகம்
அருகில் இருந்தது.
அது உள்மனதில் ஆழ்ந்திருந்தது.
அமைதியாக இருப்பார் அதிகம் பேச்சு இருக்காது.
கண்களில் ஏனோ
நீர் வடிந்தபடி இருக்கும்.
ஏனென்று கேட்டால்
பதில் இருக்காது.
உள்ளத்தில் மட்டும் எப்போதும்
ஓர் ஆனந்த அலை அடித்துக் கொண்டிருக்கும்.
அவர் ஓர் அம்பிகை பக்தர்.
அன்னையைத் தியானித்தபடியே எப்போதும் இருப்பார்.
அம்பாள் சிந்தனையே பேச்சாய் மூச்சாய் இருந்ததாலோ என்னவோ
பல நேரம் அவரிடம் பேச்சும் இருக்காது
மூச்சும் இருக்காது.
இந்த அபூர்வ நிலையில்
அவர் பாட்டுக்கு நடந்து கொண்டிருப்பார்.
அம்மன் பக்தி மட்டும் ஆரவாரமாய்
அவரை அங்குமிங்கும் அலையச் செய்யும்.
அப்படித்தான் காசிக்குச் சென்று
அன்னை அன்னபூரணியைத் தரிசிக்க
ஆர்வம் கொண்டார்.
நடந்தார்... நடந்தார்…
பேச்சின்றி
உணவின்றி
கால்கடுக்க
கண்ணீர் மல்க
நடந்தார்.
நாடி ஓடியதோ இல்லையோ
அவர் நாடிய
காசி வந்தது.
அவருக்குப் பிடித்தமான அகிலாண்ட ஈஸ்வரி
அன்னபூரணியை தரிசித்தார்.
ஆலகால விஷம் உண்ட விஸ்வநாதரையும் விழுந்து வணங்கினார்.
"சுவாமி....
நீங்கள் நாகப்பட்டினத்திற்கு வந்து என் மக்களுக்கு அருள வேண்டும் "
மனம் உருகி நின்றார்.
காசியில் நீராடும்போது ஒரு லிங்கம்
அவர் கைகளில் அகப்பட்டது.
அவர் மனம்
மகிழ்ச்சியில் துள்ளியது.
நாகப்பட்டினம் திரும்பி அந்த லிங்கத்தை பிரதிஷ்டை செய்து
வழிபட ஆரம்பித்தார்.
அதன் பயனாக
சித்தர் பாதை
சித்தியாகத் தொடங்கியது.
இராமதேவருக்கு எப்போதுமே
ஒரு ராசி உண்டு.
போகுமிடம் தோறும் உத்தமர்கள், சாதுக்கள், ஞானிகள் தரிசனம் கிடைக்கும்.
உபதேசங்கள் கிடைக்கும்.
அருளாசிகள்
நிரம்ப கிடைக்கும்.
ஞானம் கூடும்.
சித்திகள் கைகூடும்.
ஒருமுறை
ஓர் ஞான சித்தரைத் தரிசித்தார்.
*மெக்கா நகருக்கு செல்....
எக்கச்சக்க மூலிகைகளின் சுவர்க்கம் அது.
உனது எண்ணத்திற்கு உதவும்."
மெலிதாய் சொன்னார் அந்த மெளனி.
ஆனால்
அது வலுவாய் அமர்ந்தது
இராமதேவர் சிந்தையில்.
நாகப்பட்டினம் துறைமுகம் அக்காலத்தில்
கப்பல் கூடும்
வணிகத் தளம்.
ஒருநாள்
கப்பலொன்று
அவர் விரும்பிய மெக்காவுக்கு பயணமானது.
நம் தேவர்
அதில் பயணமானார்.
மெக்காவில் இஸ்லாமியர்கள் இராமதேவரை ஏற்கவில்லை.
'நீ யார்.... ?
எதற்கு வந்தாய்... ? '
என குடைந்து எடுத்தார்கள்.
இக்கவலை ஒருபுறம் இருந்தாலும்
இன்னொரு புறம்
மெக்கா நகரின்
ஜீவ வளம் அவருக்கு எல்லையில்லா
மகிழ்வைத் தந்தது.
யாருக்கும் புலப்படாத மூலிகைகள் -
கற்ப மூலிகைகள்
அவர் கண்களுக்கு தெரிந்தன.
அவை
'வா வா ' என
அழைத்து மகிழ்ந்தன.
'போ போ ' என துரத்திய இஸ்லாமியரிடையே
எவ்வளவோ பேசிப் பார்த்தார்.
மெக்கா மக்களின் மேம்பாடு தான்
தனது நோக்கம் என கூறி கெஞ்சிப் பார்த்தார்.
"நான் ஒரு சித்தன். மூலிகை பலனை உலகிற்கு அளிப்பதே எனது பிறப்பின் ரகசியம்."
என நல்லவிதமாகச் சொல்லிப் பார்த்தார்.
இறைவன் அருளால் அவர்கள்
மனம் கொஞ்சம் இளகியது.
ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பாடானது.
அதன்படி
அதன் முதல்படியாக
இராமதேவர்
இஸ்லாம் மதத்திற்கு
மனம் மாறினார்.
மதம் மாறினார்.
யாக்கோபு
என்னும் பெயர் சூட்டப்பட்டது.
சுன்னத் செய்யப்பட்டது...
குர்ஆன் ஓதப்பட்டது.....
இராமதேவர்
யாக்கோபு ஆனார்.
காயகல்ப மூலிகை ஆய்வும்
ஓய்வில்லா தியானமுமே அவரின்
அரபு வாழ்க்கையானது.
மூலிகை பலன்கள் முஸ்லிம் மக்களுக்கு முழுதாய் கிட்ட
முயன்றார் யாக்கோபு.
விரைவில் வெற்றிக்கனி பறித்தார்.
பறித்த வண்ணம் இருந்தார்.
நவரத்தின மயமான நபிகள் நாயகத்தின் ஜீவசமாதியிலேயே
நேரம் காலம் பார்க்காது ஒருங்கிணைந்திருந்தார்.
ஒருநாள்
மெக்கா நகரமே மெய்சிலிர்க்கும் வண்ணம்
வான் மேகம் திரண்டது... நெருப்பு மின்னலடித்தது...
காற்று குளிர் பரப்பியது...
நீர் மழை பொழிந்தது.....
பூமி நர்த்தனம் ஆடியது...
ஆம்... பஞ்சபூதங்களும் வெண்சாமரம் வீசின.
பரவசத்தோடு வரவேற்கத் துடித்தன.
தேவதூதன் வருகைக்காக வழிமேல் விழி வைத்து காத்திருந்தார்
யாகோபு நாதர்.
இன்ஷா அல்லாஹ்..!
எல்லாம் வல்ல
ஓரிறைவன் அல்லாவின் தூதர் நபிகள் நாயகம்
சமாதி முன்
தியானத்தில் இருந்த யாக்கோபு முன்பு பேரொளியாய்
பெருமான்
நபிகள் நாயகம் தோன்றினார்.
மாஷா அல்லாஹ் !!!
பிறர் கண்களுக்குப் புலப்படாத
யாருக்கும் கிட்டாத
அரிய காட்சி.
அருள்நிறை காட்சி.
யாகோபு நாதருக்கும்
நபிகள் பிரானுக்கும்
நடந்த உரையாடல் தேவரகசியம்.
பல உபதேசங்களை ஆன்மீக ரகசியங்களை இறைதூதர்
நபிகள் உபதேசித்தார்.
யாக்கோபும்
சித்த மருத்துவ மகிமையை,
யுனானி தொடர்பை
தான் மேற்கொண்டு வரும் முயற்சிகளை
முகமது நபிக்கு
எடுத்துச் சொன்னார்.
நபிகள் தேவரை ஆரத் தழுவிக் கொண்டார்.
மதங்களுக்கு அப்பாற்பட்ட
ஞானம் பரிமாற்றமானது.
இஸ்லாமிய முறைப்படி வணங்கி தொழுது
ஆசி பெற்றார்.
'அரபுக்கு கிடைத்த
அற்புத மகான்'
என்று ஆசி தந்து மகிழ்ந்தபடி மறைந்தார் நபிகள் நாயகம்.
உத்தமர்களை
சித்தர்களை, தெய்வங்களை
தீர்க்கதரிசிகளை
அருளாளர்களை
தரிசிப்பது யாகோபு உருவிலிருக்கும் இராமதேவர்
ராசி ஆயிற்றே!!!
அதனால்தான் இணையற்ற இறைதூதர் காட்சியும் அருளும் தந்திருக்கிறார்.
அதன்பின் பிறவிப் பயனை அடைந்த மகிழ்வில்
அங்கேயே யோகநிலையில் ஆழ்ந்தார்.
எல்லாம் வல்ல அல்லாஹ் என்னும் இறையருளால் ஞானத்தின்
அழகிய முன்மாதிரி
என விளிக்கப்பட்டார்.
முகமது நபி பிரானின் அருளாசிக்குப்
பின்னர் சீடர் கூட்டம்
யாகோபுவின் மொழிக்கும்
காட்டும் வழிக்கும் காத்திருந்தது.
'நபி யாகோபு'
எனும் இணையற்ற
புனிதப் பெயர்
தேடி வந்தது.
அவரின் புகழ்
அரபு தேசத்தில்
ஓங்கி வளர்ந்தது.
தான் கற்றவற்றை
பற்பல சித்த புருஷர்களிடம் பெற்றவற்றை வைத்து
பதினான்கு நூல்களை அரபு மொழியில்
படைத்தார் யாகோபு.
அது சமயம் தான்
போகர் பிரான்
தான் படைத்த
அற்புத வான் ரதத்தில்
சீன தேசத்து
அன்பர் படைசூழ
மெக்கா வந்தார்.
போகரைக் கண்ட மாத்திரத்தில்
யாக்கோபு ஆன இராமதேவரின் மனதில்
அன்புப் பெருக்கு
அலை போல் எழுந்தது.
போகர் சீரடி தொழுதார்.
பீறிட்டு எழுந்த கண்ணீரால்
போகரின்
திருவடி கழுவினார்.
"சுவாமி....
என்ன புண்ணியம் செய்தேனோ....!!
உங்களை தரிசிக்கும் அரிய வாய்ப்பு எனக்கு....!!
கொஞ்ச நாள் முன்பு தான்
பேராற்றல் பெருமகனார்
நபிகளைத் தரிசித்தேன்..!!!
சுவாமி....அற்புதம்... அற்புதம்.."
நெகிழ்ந்துருகினார்
யாகோபு சித்தர்.
"இராமதேவனே....
உன்னை நினைத்து
உன் தொண்டை நினைத்து மகிழ்கிறேன்.
நானும்
பேரொளி பரப்பும் நபிகளைத் தரிசித்தேன்.
உன்னை மெச்சி
நபிகள் நாயகம்
என்னிடம் சொன்னது
தேவ வசனங்கள்.
உன் குரு
புலத்தியன் கேட்டால் உன்னை
உச்சி முகர்ந்து புளகாங்கிதம் கொள்வான்.
உன் பணி சிறக்கட்டும்...
தொடரட்டும்...
இன்னும் நிறைய செய்...
அதன்பின்
சமாதி செல்.....
வாழ்த்துக்கள்... வருகிறேன்."
போகரின் வார்த்தைகளை முழுதாய்
புரிந்து பூரித்திருந்த
யாகோபுவை
கைகளில் ஏந்தி உச்சிமுகர்ந்து
முதுகு தடவி
மெளனமாய் சொன்னார்.
"நீ இங்கு யாகோபு..
தமிழ்நாட்டில் இராமதேவர்..
மறந்துவிடாதே..!"
போகரின்
மெளன மொழிக்கு
ஆயிரம் அர்த்தங்கள்!!!
யாகோபுவுக்குத்
தெளிவு பிறந்தது.
ஆயிரம் பணிகள் காத்திருக்கும்போது யாகோபு நாதரால்
அங்கேயே ஓய்ந்திருக்க முடியுமா?
இல்லை....
சமாதி நிலையில் ஒளிந்து இருக்க முடியுமா?
முப்பது ஆண்டுகள்
சமாதி நிலையில் இருக்கப் போவதாக சீடர்களிடம் சொன்னார்.
துயர் கொண்ட சீடர்கள் 'மீண்டும் காண்பது எப்போது? '
என விசனித்து வினவினர்.
"வருவேன்...
அப்போது
பல அற்புதங்கள் நிகழும்.
தேன் மாரி பொழியும்.
நூறு மலர்கள் பூத்துக்குலுங்கி
அரபு நாடே மணம் கமழும்.
விலங்குகள் ஞானம் பேசும்.
இவையே
நான் பிரசன்னமாவதன் அறிகுறி"
என புன்னகைத்தார்.
அரபு தேசத்தில்
சமாதி நிலையில்...
அதே சமயம்
யாகோபுவின்
விண்னொளி ததும்பும் விண்வெளிப் பயணம்
பாரத தேசத்தை
நோக்கி இருந்தது.
பாரதம் வந்தவர்
பலருக்கும் உபதேசித்தார்.
தேடி வந்தவர்களுக்கெல்லாம் நல்லன செய்தார்.
நோய் நொடி என வந்தவருக்கெல்லாம்
நோய் தீர்த்து வைத்தார்.
சதுரகிரியில்
தவம் கொண்டார்.
சித்தர் பிரான்களின்
உறைவிடமான
சதுரகிரி மலை
அவருக்கு மிகவும்
பிடித்துப் போனது.
அங்கேயே தங்கி
மக்களைப் பீடிக்கும்
நோய் நொடிகளுக்கு மருந்து காணும் பதினான்கு
நூல்களைப் படைத்தார்.
அவர் மெக்காவில் படைத்த பதினான்கு நூல்களின்
தமிழ்மொழி ஆக்கமே
அந்த வைத்திய நூல்கள்.
சதுரகிரியில்
காலாங்கி நாதரின்
ஜீவ சமாதிக்கு அருகில் வாழ்ந்து மகிழ்ந்து
அவரின் அருளோடு
தனது
ஞான அனுபவத்தைப் பிழிந்து
சில படைப்புகளைத்
தமிழில் தந்தார்.
இராமதேவர்
சதுரகிரியில்
தவமிருந்த இடம்
இன்றும்
'இராமதேவர் வனம்'
என சித்த மகிமையோடு தவமிருப்போருக்கு அருள்பாலித்து வருகிறது.
அவ்வனம்
'யாகோபு நாதர் மலை'
என
வணங்கப்பட்டும் வருகிறது.
வற்றாத தாமிரபரணியும் வாடாத தென்றலும்
அகத்தியர் அருளினால் உற்பத்தியாகும்
பொதிகை மலை உச்சியில்
யாகோபு தவமிருந்த மலை
அருளாற்றல் கொண்டதாய் இன்றும்
அருள்பாலித்து கொண்டிருக்கிறது.
அதற்கு
'துலுக்க மொட்டை'
என்ற பெயர் இருக்கிறது.
அந்த அடர் காட்டில் இஸ்லாமியர்கள்
இன்றும் வசிக்கிறார்கள்.
சதுரகிரி வாழ்வின்
நிறைவில்
சில காலம்
சமாதி நிலைக்கு செல்வதாக கூறிவிட்டுச் சென்றார் இராமதேவர்.
அதன்பின் அவரை
யாரும் சதுரகிரியில் தரிசிக்க முடியவில்லை.
அடிக்கடி சமாதி
நிலைக்குச் செல்வது
அவர் வழக்கமாயிற்றே!
ஆனால்
இம்முறை
மெக்கா சென்று
சமாதி ஆனவர்
மீண்டும்
சீடர்கள் அறிய வெளிப்படவில்லை.
அதுவே
அவரது ஜீவசமாதி ஆனது.
இறை நேசர்
நபிகள் போற்றிய
யாகோபுவின்
ஜீவசமாதி மெக்காவில்...
அது
'ஏக இறைவன் அல்லா' என
இறைவனைத் தொழும் இஸ்லாமியர் பெற்ற பெரும் பாக்கியம்.
பின்னாளில்
மெக்காவில் இருந்து தமிழகம் வந்தபோது சித்தர்களுக்குப் பிடித்த
சதுரகிரி மலையில் லயமானார் இராமதேவர்.
தமிழகத்தில்
இன்னொரு மலையிலும்
இறையோடு இறையாக இரண்டறக் கலந்தார்.
அந்த இடம்
அழகர்மலை.
இராமதேவர் என்கிற
யாகோபு பற்றிய இன்னொரு
சுவாரஸ்ய தகவல்.
அவர் பிறந்தது
வைணவ குலத்தில். அய்யங்கார் பிரிவில்.
அவர் மறவர்
என்பாரும் உண்டு.
சாதியும் மதமும் அற்றவர்கள் சித்தர்கள்
என்பதற்குச் சான்றே இராமதேவர்
என்கிற
யாகோபு நாதர்.
Leave a Comment