பஞ்சம் போக்கிய பெருஞ் சித்தர்
- "மாரி மைந்தன்" சிவராமன்
ஆடு மேய்த்த படி
மன விசாரணையில் ஆழ்ந்திருந்தார்
அந்த சித்தர்..
சில காலமாக இப்படித்தான்
அவர் எப்போதும் ஏதோ சிந்தித்துக் கொண்டிருந்தார்.
அவரை பித்தர் என்றே பெரும்பாலானோர் அழைத்தனர்.
ஒருசிலர் சித்தர் என வணங்கவும் செய்தனர்.
' இதென்ன அநியாயம்...?
மனித உறவு என்பதே உதட்டளவில் அருகி வருகிறதே...?
உள்ளங்கள் கலப்பது
வெறும் பேச்சளவாய் குறுகி வருகிறதே...?
குணம் கெட்ட உறவால் குற்றங்கள் மிகுகிறதே.!
பக்தி வேசமாகி
போலிகள் ஆட்டம் அதிகரித்து ஆர்ப்பரிக்கிறதே ..!
நம்பிக்கை துரோகம்
நயவஞ்சகம்
நாகரிகம் போல்
நர்த்தனம் ஆடுகிறதே.....?
கலங்கினார் சித்தர் பிரான்.
இதன் விளைவு,
எதில் முடியும் ?
மக்கள் மனம்
பாழானால்
மழை நிற்கும்.
வானம் விசனப்பட்டு தன்னிலை மறக்கும்.
இடி,மின்னல், மழை மறக்கும்.
பஞ்சமே பஞ்சமின்றி
தஞ்சம் புகும் .
சித்தர் கலக்கம் கொண்டார்.
முன்னொரு நாளில்
மகா புருஷர் ஒருவர் கற்றுத்தந்த ஜோதிடக்கலை
நினைவுக்கு வந்தது.
கட்டமிட்டார்.
கவலை மிகக் கொண்டார்.
'12 ஆண்டுகள்
கடும் பஞ்சம்'
கணிப்பு கதறியது.
சித்தர் மனம் பதறியது.
'பெருமானே......
ஆடுகள் என்ன செய்யும்
மாடுகள் என்ன செய்யும் மக்கள் என்ன செய்வார்' துடித்தார்.
துவண்டார்.
துடிதுடித்தார்.
விடிவெள்ளியாய்
அக்னி குஞ்சொன்று அகத்தில் உதித்தது.
அடுத்த கணமே
செயலில் இறங்கினார்.
ஆடுகளுக்கு எருக்கஞ்செடிகளை உணவாக கொடுத்து
பழக செய்தார்.
ஆங்காங்கே
சுவர் எழுப்பி
வரகு அரிசி நிரப்பி
சேறு கொண்டு பூசிவைத்தார்.
காலம் நகர்ந்தது. கணித்தபடி பஞ்சம் வந்தது.
மரம் செடி கொடிகள் மட்டுமல்ல மக்களும் மடியத் தொடங்கினர்.
உயிர்களும் பயிர்களும்
கருகிச் சாய்ந்தன.
சித்தர் மட்டும்
பஞ்ச பாதிப்பு
ஏதுமின்றி
காலம் தள்ளினார்.
எப்படித் தெரியுமா ...?
பஞ்ச காலத்திலும்
காட்டில்
எருக்கஞ்செடிகளுக்குக் குறைவிருக்காது.
அவை பூத்துக் குலுங்கும்.
அவற்றை உண்டு
பழக்கப் பட்டிருந்த ஆவினங்கள் பசியாறின.
எருக்கம்பூ உடம்பை அரிக்குமே ....?
ஆடுகளும் மாடுகளும் அரிப்பு நீங்க சுவற்றில் உரசி உரசி சுகம் கண்டன.
அவற்றின் உரசல்கள் சுவற்றின் உள்ளே இருந்த வரகரிசியை
வெளிக் கொணர்ந்தன.
வரகரியை எடுத்து
சித்தர் அமுது
ஆக்கினார்.
ஆட்டுப் பாலில்
கலந்து குடித்து பசியாற்றினார்.
சித்தரின் இந்த யுத்தி அக்கம்பக்கம் பரவியபோது பிறரால் போற்ற முடிந்ததே தவிர அவர்தம்
பசியாற்ற
முடியவில்லை .
ஒரு காலத்தில் பைத்தியம் என பரிகசித்தவர்கள்,
வரகரிசியோடு கலந்து சுவர் எழுப்பிய போது 'எடக்கு மடக்கு' என
கேலி பேசியவர்களில் செத்தவர் போக
மீதம் இருந்தவர்கள் ஓடிவந்தனர் சித்தரிடம் .
"சாமி.... பஞ்சத்தால்
சாவது ஒருபுறம். ... தாகத்திற்கு தண்ணீர் கூட இல்லை எங்களுக்கு .
எங்களின் சாவு நிச்சயம். சாகிற வரை குடிக்க நீராவது கொடுத்து உதவுங்கள்"
காலைப் பிடித்தனர்.
ஞானி கனிந்துருகினார்.
முதலில் பசி ஆற்றினார்.
பின்
" வாருங்கள்...."
என்று அவர்களை அழைத்துச் சென்றார்.
ஓர் இடத்தில்
குழி ஒன்றைப்
பறிக்கச் சொன்னார் .
வந்தது பாரு ஊற்றென... தரை பிளந்து நீர் பீறிட்டது.
திரண்ட மக்கள்
தாகம் நீங்கி
மனம் ஒப்ப .
வாழ்த்தி வணங்கினர்.
*சுவாமி ....
நீங்கள்...
எங்கள் குலசாமி" விண்ணதிரக் கூக்குரலிட்டனர்.
ஊர்க்காரர்கள் வாழ்த்தொலிகள்
மேலுலகிலும் எதிரொலித்தது.
அது
நவகிரக நாயகர்கள் கூட்டத்தில்
விவாதம் ஆனது.
" பஞ்சத்தை
ஏற்படுத்தியது நாம்.
மக்களின்
பாவச் செயல்களால் தீர்மானிக்கப்படுவது பஞ்சம்.
அதை மாற்ற இவர் யார் ? கோபப்பட்டனர்
கிரக நாயகர்கள்.
"அவர்
மகத்துவமிக்க
மகா புருஷர் ஒருவரால் ஞானம் பெற்ற
ஞான புருஷர்,"
என்றார் சூரியனார்.
"அவர் திருமாலின் அவதாரம் என்றொரு பேச்சு இருக்கிறது"
என்று ஒரு மெல்லிய
குரல் எழுந்தது.
அது சந்திரனின் குரல்.
*அவருக்கு
ஞானம் தந்த
மகாபுருஷர் யார் தெரியுமா..?
..... போகர்"
ஒலித்தது ஓர் ஓங்கிய குரல். ஆணித்தரமான அக்குரலுக்குச் சொந்தக்காரர் குருபகவான்.
"அந்த மகானை நாம் பார்க்கலாம்...
நியாயம் கேட்கலாம்..."
இது சனி பகவான்.
புத்தி நாயகன் புதனும்
சுக நாயகன் சுக்கிரனும் வெற்றி நாயகன் செவ்வாயும்
தங்கள் அபிப்பிராயத்தை ஆழமாய் சொன்னார்கள்.
'கேட்போம் நியாயம்'
கூட்டம் ஏகமனதாகத் தீர்மானித்தது.
பூமிக்கு
உடனே விஜயம் செய்தது.
"வாருங்கள்.…. நவநாயகர்களே....." வரவேற்றார் சித்தர் பிரான்.
சூரியன் சந்திரன் செவ்வாய் குரு புதன் சுக்கிரன் சனி ராகு கேது எனும் ஒன்பது நீதிமான்களும் புன்னகைத்து அமர்ந்தனர்.
அவரவர் அமைப்பில்.
கிரக அமைப்பு எந்த நிலையிலும் எப்போதும்
மாறக் கூடாதல்லவா ?!!
எனவே அவ்விதம் அமர்ந்தனர்.
"மகானே..
எங்கள் சந்தேகம்
நீக்கப் பெற
இங்கு வந்துள்ளோம்...."
சூரியன் ஆரம்பித்தார் .
"எங்கள் சக்தியை
தாங்கள் மீறி விட்டீர்கள்" சுக்கிரன் குற்றம் சாட்டினார் .
"பஞ்சம் என்பது
நாங்கள் நிர்ணயித்தது.... அதை நீங்கள்
நீக்கி விட்டீர்கள்...." செவ்வாய் சினந்தார்.
"ஈசனே ஒருமுறை
எங்கள் அனுமதியின்றி செயல்பட்டதால்
அவனே இயங்காமல் போய்விட்டான்.. தெரியுமா ?
ராதுவும் கேதுவும்
கோபமாய் வெடித்தனர்.
"சர்வசக்தி படைத்த எங்களை மீறி
ஏன் இப்படி நடந்து கொண்டீர்கள்..."
சந்திரன்
அமைதியாகக் கேட்டார்.
கேட்பார்களே தவிர மகாபுருஷரிடம்
கொஞ்சம் பயம் இருந்தது. எனவே பேச்சில்
பணிவிருந்தது.
சித்தர் பிரான்
கருணையோடு ஒவ்வொருவரையும்
உச்சி முதல் உள்ளங்கால் வரைபார்த்து விட்டு 'பதிலுக்கு முன்னர் உபசரிப்பு' என்றார்
மறுக்க முடியாத அன்போடு.
வரகரிசி
ஆட்டுப்பால் விருந்து.
உண்டனர் நவநாயகர்கள்.
உண்ட களைப்போ சித்தரின் சித்தாடல்
உருவாக்கிய களைப்போ
சில நொடிகளில்
உறங்கி போனார்கள்.
சித்தர் பிரான்
அவர்கள் தூங்கும்
அழகை ரசித்தபடி
ஜோதிடக் கலையின் ரகசியத்தை ருசித்தபடி அவர்களை மெலிதாய் தூக்கி நகர்த்தி
கிரக நாயகர்களின்
இடத்தையே
மாற்றி வைத்தார்.
'இனி பிரச்சனை-இல்லை.. பஞ்சம் வராது....'
அதற்கேற்ற
கிரக அமைப்புகளை
சரிசெய்த திருப்தியுடன் நவநாயகர்கள் விழித்தெழக் காத்திருந்தார் .
சித்தரின் சாதுர்யத்தால் வெளியே
மழை.. மழை... மழை....
மாமழையாய்
பொழியத் தொடங்கியது.
மழை தந்த இளம் குளிரும் ஈரம் தந்த மண் வாசனையும்
நவகிரக நாயகர்களின் தூக்கத்தைக் கலைத்தன.
விழித்த நாயகர்கள் முதலில்
உறங்கிய ரகசியம் புரிபடாமல் திகைத்தனர்.
அமைதியின் திருவுருவாய் சித்தர் பிரான்
அமர்ந்திருக்க
ஆனந்தம் தாண்டவமாடியது
அக் குடிலில்.
மகா புருஷரின் மகாத்மியம்
ஒரு நொடியில்
கிரக நாயகர்களுக்குப் புரிந்தது.
வெளியே மழை
வெறித்தனமாய் பெய்துகொண்டிருந்தது. உலகம் கண்டிராத பேய்மழை.
"மன்னிக்கவேண்டும்.... நாயகர்களே...!
மக்கள் துயர் கண்டு
மனம் பொறுக்காமல் உங்கள் இடங்களை மாற்றிவிட்டேன்.
பஞ்சம் தவிர்த்துவிட்டேன்.
"அபசாரம்.... ஐயனே..!
முக்காலம் உணர்ந்த ஞானியே.!
உங்கள் குணமறியாது உங்களைப் போன்ற சித்தர்களின் செயல் அறியாது
பிறவியின் நோக்கம் புரியாது
நாங்கள் தான் தவறு செய்து விட்டோம். ஆசீர்வதியுங்கள்.
உயிரினங்களின் மீது தாங்கள் காட்டும்
அன்பும் பரிவும் வழிபடத்தக்கது."
சித்தர் பெருமானின்
அருளாசி
கிடைத்த பேரானந்தத்துடன்
நவகிரக நாயகர்கள்
வணங்கியபடி
வாழ்த்திய படி விண்ணுலகம் பயணித்தார்கள்.
மழை
கொட்டோ கொட்டென்று கொட்டிக் கொண்டிருந்தது.
அந்த மழைச் சித்தர்
ஒரு மலைச்சித்தரும் கூட. திருவண்ணாமலையில்
திருவருள் பொழியும் சித்தர் அவரே.
அவர் மாற்றி
அமைத்துத் தந்த
கிரக நிலைகளே இன்றளவும்
ஜாதக கணிப்பிற்கு அடிப்படை.
அந்த சித்தர்
இடைக்காடர் .
Leave a Comment