சீன தேசத்தை உய்வித்த சித்தர் பிரான்கள்


- "மாரி மைந்தன்" சிவராமன்

பாரத தேசத்தில் அவதரித்து
சீன தேசத்திற்குப் பயணித்து இறைத்தன்மையால்
சீன நாட்டை 
ஆன்மீக பூமியாகிய பெருமை  சித்தர்களுக்கு உண்டு.

காலாங்கி நாதர்
போகர் 
புலிப்பாணி சித்தர் 
போதிதர்மர்
முதலானோர்
சீனம் வணங்கித் தொழும் 
சித்தர் பிரான்கள்.

சீன தேசத்தில்
பலகாலம் தங்கியிருந்த காலாங்கி நாதருக்கு
'ஒருநாள் போதும் இவ்வுலகம்'
என சலிப்பு வந்தது.

ஆழ்ந்து 
மூவாயிரம் வருடம் சமாதியில் இருக்க விருப்பம் கொண்டார்.

விடைபெறலாம்
என எண்ணியபோது
சீடர் போகரின் நினைவு
நெஞ்சை நிறைத்தது.

சீடனை அழைத்து  கற்றதைக் கற்பித்து 
பெற்றதை எல்லாம் சமர்ப்பித்து
தனக்குப் பின்னரும் பணிகள் தொடர விரும்பினார்
காலாங்கிநாதர்.

அவர் மனத்தில் நினைத்தது போகரின்
மனத்திரையில் காட்சியாய் தெரிந்தது.

இன்றைய டெலிபதிக்கு அன்றே சித்தர்கள் அதிபதி. 
குருவின் அழைப்பை ஏற்றார் போகர்.

ஒளியின் வேகமும் ஒலியின் ஓங்காரமும் தோற்கும் வகையில் உடனடியாக
சீனாவில் இருந்தார் போகர்.

எதையும் துறப்பதும் எங்கும் பறப்பதும்  நினைக்கும் இடத்தை கணத்தில் சேர்வதும் சித்தர்களுக்கு எளிது.

பொதிகையிலிருந்த போகர் பெருமான்
ஆகாய மார்க்கமாக சீனாவில் இருக்கும் காலாங்கிநாதரை அடைந்து 
அடி பணிந்து வணங்கினார்.

குரு காலாங்கிக்கு
ஏக மகிழ்ச்சி.
போகருக்கும்
ஏக சந்தோஷம்.

பிரிந்தவர் கூடும்போது பிறக்கும் மகிழ்வை புரிந்தவர் அறிவர்.

சூடம் என பற்றி ஜோதியாய் ஒளிர்ந்த போகரிடம்,
தான் சமாதி நிலைக்கு செல்வதாகவும்
தனக்குப் பின்னர்
சீன மக்களுக்கு
தன்னைப் போல தொண்டாற்ற
வேண்டுமெனவும் வேண்டுகோள் வைத்தார் காலாங்கி நாதர்
அன்புக் கட்டளையாக.

பின்
"நான் செல்லவா"
என கேட்டார் குருநாதர்.
"சரி" என்றார் சீடர் போகர்.

அடுத்த கணத்தில் 
அந்த அதிசயம் நடந்தது.

அங்கு ஓங்கி எழுந்த பெரும் ஜோதியில் 
ஜோதியாய் கலந்தார் காலாங்கி நாதர்.

இறையோடு இறையாய் இரண்டறக் கலப்பதும் ஒளியோடு ஒளியாய் ஒளிர்ந்து மறைவதும் 
சித்தர்களுக்கான நிறைநிலைகள் அல்லவா ?

அதன்பின்னர்
குரு சொன்ன வார்த்தைகளை மெய்ப்பிக்க 
சீனாவிலேயே 
தங்கினார்
போகர் பிரான்.

கற்றதை 
குருவிடம் பெற்றதை
வாரி வழங்கி 
வள்ளலாய்
வலம்வந்தார்.

இங்கு ஒரு சிக்கல் இயற்கையாய் எழுந்தது.

அவர் விரித்த கடையில் கொள்வாரில்லை.

காரணம் ....?

அந்நியன் என 
அவர் உருவமும் 
நிறமும் மொழியும் 
அடித்துச் சொன்னதால் 
பல அடி தூரம் 
விலகிச் சென்றனர் 
சீன மக்கள்.

'சிவனே ...... 
குருவின் எண்ணத்தை எளிதாய் நிறைவேற்ற முடியவில்லையே....'

போகரின் உள்ளம் 
கவலையில் துடித்தது.

என்ன செய்யலாம் என யோசித்த வேளையில் அங்கு யாசித்து வந்த 
ஒரு வயோதிகர் 
கண்ணில் பட்டார்.

இன்றோ நாளையோ என தள்ளாடும் வயது. 
மூப்பும் ஒரு முடிவு எடுத்திருந்தது.
இக்கணமோ மறுகணமோ என காலக்கெடு விதித்துக் காத்திருந்தது.

அதுவும் நடந்தது.

அந்த தாத்தா காலமானார் 

போகருக்கு ஒரு 
யோசனை வந்தது.

'அந்த முதியவரின்
உடலில் புகுந்து கொண்டால் 
சீனர் என 
மக்கள் நம்பி 
நாடி வருவார்களே'
என நினைத்தார்.

பிறகென்ன ?

அஷ்ட சித்திகளில் ஒன்றான 
பரகாயப் பிரவேசம் செய்தார்.

ஆம்....
கூடு விட்டுக் 
கூடு பாய்ந்தார்.

அந்த சீன தாத்தாவின் உடலினுள் புகுந்தார் புனிதர் போகர்.

தள்ளாத வயது
தாத்தா ஆனார்.

குரு சொன்னபடி
தன் பணி தொடர்ந்தார்.

நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாய்
கூட்டம் கூட்டமாய்
ஊரே திரண்டு
போகர் பிரானைக் கொண்டாடி மகிழ்ந்தது.

எத்தனை காலம் 
இந்த முதிய உடலில் ?

காயகற்பம் புரிந்தவர் கட்டிளம் காளையாய் துள்ளிக் குதிக்க வேண்டாமா ?

யோசித்த போகர்
தவத்தில் அமர்ந்து
குண்டலினியை
சஹஸ்ர பீடத்தில்
ஏற்றி எழுப்பினார்.

பெண் சக்தியான குண்டலினி 
ஆண் காளையான சகஸ்ர தளத்தில் இணைந்தால்
ஆனந்தம் கூத்தாடும். பேரானந்தம் அலைமோதும்.
சிவசித்தம் பூரணமாகும்.

ஆனந்த பேரானந்த நிலையில் 
ஆண்களும் வியக்கும் அழகர் ஆனார்.
இளைஞர் ஆனார்
போகர் தாத்தா.

சீன மண்
அவரை வணங்கி நின்றது.
பணிகள் தொடர்ந்தன.

போகர் என்ற
பாரதப் பெயரையும் 
சீன மொழிக்கு
மாற்றம் செய்தார்.

'போ யாங்'
என்பதே அவரது
சீனப் பெயர்.
அதற்கு அர்த்தம்
போகர் மார்க்கம்.

'சிபு' போ - யாங் 
போதனைகள்
சீன மக்களை
ஈர்த்தன.
சிபு என்றால் குரு
என்று பொருள்.

எக்கச்சக்க சீடர்கள் வாழ்வின் 
நிறைவைக் காண
மெய்ஞான சித்தரிடம் எப்போது மொய்த்தனர்.

நெருங்கிய சீடர்கள் அவரைத் தொழுதனர்
அவரே உலகம் என ஆராதித்து மகிழ்ந்தனர்.

அன்புடன் அவரை லாவோட்சூ  (LAU - TSU)
என அழைத்தனர் சீனர்.

சீன வரலாற்றில் 
போகரே 
லாவோட்சூ.

அவர் சொன்னதே 
வாழும் கலையை உலகுக்குச் சொன்ன தாவோயிசம் (Taoism).

லாவோட்சூ காலத்தில்தான் அவரால்தான் 
சீனாவில் ரசவாதம் என்னும் அதிசயம் நடந்தது.

இளமையும் ஆரோக்கியமும் மரணமிலா 
பெருவாழ்வும் தரும்
காயகல்பம் 
உலகின்கண்
உலா வந்தது.

சீன மருத்துவம் மூலிகைகளால் நிறைந்தது.
சீன கலாசாரம்
புது உருக்கொண்டது.

சீன மக்கள் லாவோட்சூவை கடவுளாகவே பார்த்தனர்.

ஒருமுறை அவர்
தத்துவ ஞானி கன்பூசியசை
சந்தித்துக் 
கருத்துப் பரிமாற்றம் கொண்டது
ஒரு வரலாற்றுப் பதிவு.

கன்பூசியஸ் 
லாவோட்சூவை
'பறக்கும் சர்ப்பம்' (Dragon)
என போற்றிப் புகழ்ந்தது இன்னுமோர் பதிவு .

சீன பாம்பு... சீறும் பாம்பு ஆம்.... டிராகன்... நெளியும்
ஆன்மீகமாய்...
விரியும்...விரியும்.

 இன்னும் சிந்தித்தால் ஆயிரம் அர்த்தங்கள் அணிவகுத்தல்லவா வரும் ?.

காலாங்கி நாதரே கன்பியூசியஸ் என்பதும்  ஆய்வுக் களத்தில் உள்ள ஓர் அதிசய ஆய்வு.

சில வருடங்களுக்குப் பின்னர்
இளமை தந்து 
மரணமிலா பெருவாழ்வை அளிக்கவல்ல
காயகற்பம் தயாரித்து 
தானே உட்கொண்டு 
இறை அம்சமாய்
சீன தேசத்தில் இளைஞராய்
பவனி வந்தார்.

முதலில் 
காயகற்பத்தை 
விரும்பி வளர்த்த
நாய்க்கு கொடுத்தார். 
அது செத்து விழுந்தது.

விசுவாச சீடன் 
யூ வுக்குத் தந்தார்.
அவனும் 
செத்து விழுந்தான்.

பார்த்திருந்த 
பிற சீடர்கள்
சிதறி ஓட 
சிரித்தபடி 
நாயையும் 
அந்த
நல்ல சீடனையும் உயிர்ப்பித்தார்.

அந்த சீடன் தான்
அந்த யூ தான் 
புவி வணங்கும் புலிப்பாணி
என்பது சித்தர்
வரலாற்றுச் செய்தி.

சீன மக்களை 
உய்விக்க 
சீன அரசிலும் 
அங்கம்  வகித்தார் 
லாவோட்சூ உருவில் இருந்த போகர் பிரான்.

அப்போதைய 
மன்னர் காலத்தில் 
ஆவணக் களஞ்சியத்தின் காப்பாளர் பணியை அலங்கரித்திருந்தார்.

தவோ தி சிங்
(Tao-te -Ching)
என்ற நூல் 
அவர் யாத்ததே.

காலப்போக்கில் மன்னராட்சியில்
மனம் வெறுத்த
லாவோட்சூ
ஒருநாள் 
அரண்மனையை விட்டு சொல்லிக் கொள்ளாமல் கிளம்பி விட்டார்.

அவரை அடையாளம்
கண்ட காவலாளி 
அவரைத் தடுத்து வணங்கி,
"எனக்கு ஏதேனும்  உபதேசம் தாருங்கள்"
என மன்றாடினான்.

அதுபோது
லாவோட்சூ வழங்கியது தான் 
தவோ- தி - சிங்கின் 
ஒரு சிறுபகுதி.

தவோ- தி - சிங்கை 
சீன நாட்டின் 
திருக்குறள் என்பர் 
உலகில் சிறந்த
பன்மொழி வித்தகர்கள்.

எக்கச்சக்க சீடர்களை உருவாக்கிய பின்னர் 
குரு எதிர்பார்த்த 
உன்னத நிலையை சீனாவும் சீனர்களும் அடைந்திருப்பதாகத் திருப்தி கண்ட 
லாவோட்சூ
நான்காயிரம் வருட 
சீன ஞான வாழ்க்கைக்குப் பின்னர் 
போகராக
தாய்த் திருநாடு
திரும்பச் சித்தமானார்.

இமயமலை மார்க்கமாக பாரத தேசத்திற்கு வந்தார்.

சீன தேசம் 
அவர் சொர்க்கத்திற்குச் 
சென்று விட்டதாகக்
குறிப்பு எழுதித் தொழுதது.

உண்மைதானே...?

இந்தியா என்கிற 
ஆன்மீக 
சொர்க்கத்திற்குத் தான்
போகர் திரும்பி வந்தார்.



Leave a Comment