தானே சிவமான திருமாளிகைத் தேவர்


- 'மாரி மைந்தன்' சிவராமன்


சித்தர் பெருமான்களில்
அழகு நிறைந்தவர் திருமாளிகைத் தேவர்.

 அழகு என்றால் அப்படி ஒரு அழகு...
ஆண்களுக்குரிய அத்தனை புருஷ லட்சணங்களும் அமையப் பெற்றவர்.

 தவத்தில்...
சிவத்தில்...
காயசித்தியில்... நிறைந்தவர் என்பதால்
பொன்னிறம் போர்த்திய உடம்பு.... ஒளிவீசும் முகம்...

ஒளி பரப்பும் அகம்.
ஆண் பெண் பேதமின்றி எவரையும் ஈர்க்கும் தெய்வீகம்.

 வேதியர் குலம் என்பதால் இறை பணி... மீதி நேரம் அவர் ஒரு தவமணி.
திருவாடுதுறை பெண்களுக்கு திருமாளிகைத் தேவர் மீது ஆழ்ந்த பக்தி உண்டு.

கூடவே கண்கவர் தேவரை மனம் கவர் மன்னனாக நாள் முழுக்க மனதில் நிறைப்பதும் உண்டு.
அப்பெண்கள் மத்தியில் ஒரு ரகசிய விமர்சனமும் உண்டு....
'மன்மதன் தோற்றுவிடுவான் இவரிடம்....... ரதியும் மதிமயங்கி விடுவாள் இவரிடம்.......'
அதன் விளைவு...?

 அப்பெண்டிருக்குப் பிறக்கும் குழந்தைகள் யாவும் தேவர் சாயலில் இருந்தன.
தேவர் மகன்கள்...! திருமாளிகைத்
திருமகள்கள்.....!!

வேதம் கற்ற ஆண்களுக்கு கோபமும் சந்தேகமும் கூடின. குலப் பெருமையையும் வம்சவிருத்தியையும் எண்ணியெண்ணி மனம் கலங்கினர்.
நரசிங்கன் என்பான் அப்போதைய மன்னன்.

 ஒரு சமயம் அவன் படை சூழ திருவாடுதுறை அருகே (இப்போதைய நரசிங்க பேட்டை) முகாமிட்டு இருந்தான்.
மன்னனிடம் அழுதபடி புகார் சொன்னார்கள் வேதியர்.

 "ஏதோ மாயம் மந்திரம் செய்து எம்குலப் பெண்களை மயக்கி கர்ப்பம் ஆக்கி விடுகிறான் அரசே....
நீங்கள் தான் எங்கள் குலத்தைக் காப்பாற்ற வேண்டும்"
மன்னனின் மீசை துடித்தது. கோபம் கொப்பளித்தது.
வீரர்களை அழைத்தான்.

 "இவர்கள் சொல்லும் தீயவனை -  காமுகனைக் கட்டி இழுத்து வாருங்கள்" உத்தரவிட்டான்.
விரைந்தோடிய வீரர்கள் திருமாளிகைத் தேவரைக் கண்டனர்.
அரசன் உத்தரவை அமல்படுத்த இருப்பதாகச் சொன்னார்கள்.

"அப்படியே ஆகட்டும்... என்னை கட்டிச் செல்லுங்கள்.." புன்னகை மாறாமல் சொன்னார்.
தேவபிரான் உதிர்த்த வார்த்தைகள் சித்தன் உத்தரவாய்
மன்னன் உத்தரவை முழுதாய் மாற வைத்தன.

வீரர்கள் கயிற்றால் கட்டப்பட்ட நிலையில் அரசன் நரசிங்கன் முன் நின்றனர்.
அரசனின் கோபம் அதிகரித்தது. சீற்றமுடன் சேனாதிபதியை
அழைத்தான்.

 வீரர்களின் சிந்தையை மயக்கிய மந்திரவாதியா அவன் ...
என்னிடமே விளையாடுகிறானா ?
மாய மந்திரம் இந்த மன்னனிடம் பலிக்காது.
அத்தீயவன் உயிருடன் இருப்பதே தப்பு" என சீறினான்.

 சேனாதிபதி ஒருபடி மேலே போய் "அரசே....அவன் தலையுடன் வருகிறேன்"
வீரவசனம் பேசிவிட்டு விரைந்தான்.
அதே இடம்...அதே புன்னகை....

திருமாளிகைத்தேவர் 'சிவனே' என்று  ஆழ்ந்திருந்தார்.
சேனாதிபதி உரத்த குரலில் தலை கொய்ய வந்திருப்பதாகக் கொக்கரித்தான்.
அவன் உருவிய வாள் தேவரின் கழுத்தை
குறிபார்த்துக் கொண்டிருந்தது.

 "ம்.... தலையை வெட்டி செல்லுங்கள்" தேவர் சம்மதம் சொன்னார்.
அடுத்த கணம்....
வீரர்களும் சேனாதிபதியும் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர்.
முடிவில் .... ஒவ்வொருவர் கைகளிலும் இன்னொருவர் தலை.... தரையில் பல தலைகள் ...

தப்பித்த வீரர் சிலர் மன்னனிடம் சென்று நடந்த கதையை நடந்தபடி சொன்னார்கள்.
உச்சந்தலைக்கு உஷ்ணம் ஏறி உயரக் குதித்தது மன்னனின் கோபம்.
"நானே செல்கிறேன்....
உடன் வரட்டும் நம் படை.... பார்த்துவிடலாம்"
கர்ஜித்த மன்னன்,

போர் எனும் அளவில் முழக்கமிட்டான், புறப்பட்டான்.
ஒற்றை மனிதரைப் பிடிக்க உருவிய வாள்களுடன் பெரும் படை. தலைமை மன்னன் நரசிங்கன்.
செய்தி கேட்டு புன்னகைத்தார்
திருமாளிகைத்தேவர். அப்போதும் அதே புன்னகை.

 திருவாடுதுறை மாசிலாமணி ஈசன் கோயிலின் மதில் சுவர்கள் மனம் மயக்கும் உயர் சுவர்கள்.
அச்சுவர்களின் நாற்புறமும் காவலுக்குக் கம்பீர காளை சிலைகள் கண்கவரும்.
மன்னனின் படைகள்
மாளிகைத்தேவரை
நெருங்கும்போது மதிற்சுவர் சிலைகள்  உயிர் பெற்றன.

 கோயிலில் வீற்றிருக்கும் நந்தியின் உடலில் புகுந்தன. பூத கணங்களாக வெளிப்பட்டன.
சில நொடிகள் தாம். அதைப் போர் என்று சொன்னால் பிறந்த குழந்தையே பரிகசிக்கும்.
மன்னரும் மந்திரியும் வீரர்களும் கட்டப்பட்டு தேவர் முன் நிறுத்தப்பட்டனர்.
அடுத்த நொடியே பூதகணங்கள், மதிற்சுவர் காளைகள் மாயமாய் மறைந்து போயின.

இதையெல்லாம் கண்ணுற்ற மன்னன் கதிகலங்கிப் போனான். உடம்பும் உள்ளமும் நடுங்கியது. உண்மை உணரத் தலைப்பட்டான்.
"சுவாமி.....தங்களை ஏதோ மந்திரவாதி என நினைத்து தவறிழைத்து விட்டேன். தங்கள் தெய்வீகம் புரியாமல் கோபம் தலைக்கேறி பாவம் செய்துவிட்டேன் "
கதறித் துடித்தான்

 "மன்னா.....
நீ அரசன். நீதி காக்க வேண்டியவன்.
அவசரத்தனம் அரசருக்கு ஆகாது. ஆராய்ந்து முடிவு எடுக்க வேண்டும் அல்லவா?
வேதியர் சொன்னதைக் கேட்டாய்...
அவர்கள் வாதி.....
பிரதிவாதி நான்.

என் தரப்பை விசாரித்திருந்தால் இத்தனை தொல்லைகள் இருந்திருக்காது.
இனி இப்படித் தவறுகள் செய்யாதே !
மன்னா...
எந்த சிந்தனையில் சதா சர்வகாலமும் இருக்கிறோமோ, அதுவாகவே ஆவதே இயற்கை நீதி.

நான் சிவனே என்று இருக்கிறேன் அதனால் தான் சிவமயமாய் உணர்கிறேன்.
அப்பெண்கள் என் நினைவாக இருந்ததால் எனைப் போல் பிள்ளை பெற்றார்கள்.
இது பிழையல்ல. இயற்கை நியதி. இதுவே இறைநீதி.

வேதியர்கள் கவலைப்படத் தேவையில்லை.
சந்தேகம் சத்ரு. கேடு தரும்."
மென்மையாய் சொன்னார்
திருமாளிகைத்தேவர்.

 புரிந்த மன்னன் வணங்கி நின்றான்.
இன்றும் திருவாடுதுறை ஈஸ்வரன் கோயிலில்
மதில் சுவர் மேல்
ரிஷப காளைகளின் சிலைகள் இல்லாதிருப்பதைக் காணலாம்.

 திருமாளிகைத்தேவர் மகத்துவம் உணரலாம். மனமுருகி லயிக்கலாம்.



Leave a Comment