உயிர் பெற்ற கல் யானை உயிர் தந்த சுந்தரானந்தர்
- 'மாரி மைந்தன்' சிவராமன்
அழகில் சிறந்த
அற்புதச் சித்தர்
சுந்தரானந்தர்.
சித்தர்களில் அவர் ஓரு சக்கரவர்த்தி.
சுந்தரானந்தரின் சித்து விளையாட்டு பாண்டிய நாடு எங்கும் மெல்ல மெல்ல பரவி வந்த காலம்.
அது மன்னன் செவிகளுக்கும் எட்டியது, ஒருநாள்.
அரசன் அபிஷேக பாண்டியன் ஆன்மீக நாட்டம் உடையவன்.
அரசன் என்பதால் அகங்காரமும் அதிகாரத் திமிரும் அவனுக்கு இயல்பாய் இருந்தன.
அரசன் வீரர்களை அழைத்தான்.
" சுந்தரானந்தரை அழைத்து வாருங்கள்.., அவரைக் காண அரசர் ஆவலாய் இருக்கிறார் எனச் சொல்லி அழைத்து வாருங்கள்" என்று உத்தரவிட்டான்.
வீரர்கள் விரைந்தனர் சுந்தரானந்தர் வசிப்பிடத்திற்கு.
"ஐயா , எங்கள் அரசர் உங்களைக் காண காத்திருக்கிறார்..அழைத்து வரச்சொன்னார்.. எங்களோடு வாருங்கள்.." பணிவாகத்தான் சொன்னார்கள் பணியாட்கள்.
தவசீலர் மெலிதாகச் சிரித்தார்.
"என்னப்பா வேடிக்கையாய் இருக்கிறதே !
ஆற்றைக் காண அரசன் விரும்பினால் அவரல்லவா ஆற்றுப்பக்கம் வரவேண்டும்.
ஆற்றை வெட்டி அரண்மனைக்கு அழைத்துச் செல்வீர்களா?
அழைப்பது அரசனாய் இருக்கலாம் ..,. ஆனால் அழைக்கப்படுவது முற்றும் துறந்தவனை .. முக்காலமும் உணர்ந்தவனை...
அரசனைப் பார்த்து எனக்கு ஆவதென்ன ?
ஒன்றுமில்லையே !
' நான் அரசன்' என்னும் மமதையால் மகிழ்ந்து இருப்பவனைக் காண்பதில் என்ன பயன் ?!
அரசனைச் சொல்லிக் குற்றமில்லை.
அவன் உத்தரவிடுபவனாகவே இருக்கிறான்.
பலரும் இப்படித்தான்.
'நான்' இருப்பவர்களிடம் ஞான 'நாண்' இருக்காது. அது சேரும் இடம் போய் சேராது.
சுந்தரானந்தர் கூறியது வீரர்களுக்கு புரியவில்லை.
ஆனால் அதை அப்படியே அரசனிடம் ஒப்பித்தார்கள்.
அவர்கள் சொன்னதைக் கேட்ட அரசன் முதலில் அதிர்ந்தான். வியந்தான். யோசித்தான். உண்மை இருப்பதாய் உணர்ந்தான்.
துறவி உரைத்த ஒவ்வொரு சொல்லிலும் லயித்தான்.
அதன்பின் அவரது வார்த்தைகள் நாள் முழுதும் அசரீரியாய் அவன் உள்ளத்தில் ஒலித்துக் கொண்டே இருந்தன.
பின்னொரு நாள்..
மதுரை ஆலவாய் அழகன் கோயிலில் மன்னனும் சுந்தரானந்தரும் எதிரெதிராக வந்தபோது சந்திக்க நேர்ந்தது.
உள்ளத்தில் அவர் பற்றிய ஓவியம் உயர்வாய் இருந்தாலும் அரசன் என்ற மிடுக்கு அப்போதும் மன்னனுக்கு இருந்தது.
" நீர் தான் மாயங்களை நிகழ்த்தும் மாயாவியா? " திமிர் கொஞ்சம் வார்த்தைகளில் தெறித்தது.
" மன்னா தப்பாக நினைத்து உள்ளீர்கள்.... மாயம் என்பது வேறு.
சித்து என்பது வேறு...
மாயங்கள் அற்பமானவை சித்தர் சாகசங்கள் இறையருள் கொண்டவை.
ஐம்புலன் சுருக்கி உள்ளொளி பெருக்கி பஞ்சபூதங்களை வசமாக்கி பிரபஞ்சம் அறிந்துணர்ந்து செயல்படுவது சித்தாடல்.
அரசே....
சித்து எல்லோருக்கும் கைவரும். அதற்கு பயிற்சி, முயற்சி தேவை.
உமக்கும் வரும் ...இதோ இந்த வீரர்களுக்கும் வரும்."
துறவியின் கணீர் சொற்கள் கோயில் சுவரில் முட்டி மோதி எதிரொலித்தன.
"அப்படியா..... நல்லது... எங்கே உங்கள்
தவசக்தியால் - சித்த சாகசத்தால் இந்த கல் யானையை உயிருள்ள யானையாக உலவச் செய்யுங்கள் பார்க்கலாம்.."
அபிஷேக பாண்டியன் அருகிலிருந்த ஒரு கல்லாலான யானையை சுட்டிக்காட்டி ஆர்வமுடனும் சற்று ஆணவத்துடனும் கேட்டான்.
அரசனை ஒருமுறை பார்த்து சிரித்தபடி கல் யானையின் மீது கண் பதித்தார் சுந்தரானந்தர்.
அடுத்த நொடி கல் யானை உயிர்பெற்றது. மண்டபம் அதிர பிளிறியது.
காதுகளை ஆட்டியபடி காலடி எடுத்து வைத்தது .
பிரமித்துப் போயினர் மன்னரும், அவரது பரிவாரமும் .
பரி வாரத்தில் ஓர் ஏவலாளி.
அவன் கையில் கரும்பு இருந்தது .
கரும்பைக் கண்ணுற்ற கருத்த யானை தும்பிக்கையை நீட்டி அக்கரும்பை பறித்தது சாறு ஒழுக கரும்பை ருசித்து மகிழ்ந்தது.
' பார்ப்பது கனவா' என திகைத்த அபிஷேக பாண்டியனுக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது.
அரசனின் கழுத்தை அலங்கரித்து இருந்த முத்துமாலையை லாவகமாக எட்டிப் பறித்தது விளையாட்டாக.
பதறிப் போனான் பாண்டியன்.
சித்தரின் மகத்துவம் சிந்தையை நிறைத்தது .
கல்யானை
சித்த சாகசத்தை உரைகல்லாக உணர்த்திய பின்னர் வேறுஎன்ன இருக்கு !
அப்படியே சுந்தரானந்தர் திருவடி விழுந்தான். கண்ணீரால் அவர்தம் பாதம் துடைத்தான்.
"சுவாமி ....உள்ளம் தெளிந்தேன் சித்தர் மகத்துவம் அறிந்தேன்..
எனக்கு ஓர் அருள் வரம் நீங்கள் தரவேண்டும்.
எனக்கு பிள்ளைப்பேறு இல்லை. அரச குலத்தில் பிள்ளை இல்லாதது பெரும் தொல்லை .பிள்ளை வரம் தாருங்கள்."
காலில் விழுந்தவன் ஏழாமல் கேட்டான்.
கைப்பிடித்து
எழச்சொன்ன இறைமுனி உறுதி தந்தார்.
"மன்னா.… பிள்ளை பிறப்பான்.. உன் குலம் விளங்கும்... கவலைப்படாதே"
கண்ணீர் துடைத்தார் .
நடந்தவற்றையெல்லாம் ரசித்தபடி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த
நிஜ யானை மன்னர் கழுத்தில் முத்து மாலையைப் போட்டு வாழ்த்தியது .
பின்னர் சித்தரை தாழ்பணிந்து வணங்கியது. மீண்டும்
' கல்' யானையானது.
மன்னனும் பரிவாரமும் கைகூப்பித் தொழ அவர்கள் கண் முன்னேயே ஆலவாயன் சன்னதிக்குள் புகுந்து மறைந்தார் சுந்தரானந்தர்.
இன்றும் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் கல்யானை பார்க்கலாம்.
அருகிருக்கும் சன்னதியில் சித்தர் சுந்தரானந்தரை தரிசிக்கலாம் பேரருள் பெறலாம்.
Leave a Comment