கொங்கணருக்கு பெயர் சூட்டிய சித்தர் பிரான்
- 'மாரி மைந்தன்' சிவராமன்
சித்தர்களில் சிறந்தவர் கொங்கணர்.
அகத்தியர்
திருமூலர்
போகர்
கௌதம மகரிஷி
திருமழிசை ஆழ்வார்
திருமாளிகைத்தேவர்
என மூத்த சித்தர்களின் குருவருள் பெற்றவர்.
ஈடுஇணையற்ற திருமாளிகைத் தேவரிடம்
தீட்சை பெற்று நிறைவடைந்தவர்.
கொங்கணருக்கு அப்பெயர் வந்த வரலாறு சுவாரசியமானது. தெய்வீகமானது.
அடிப்படையில் அம்மன் பக்தர். அம்மன் வழிபாடே அவருக்கு அனைத்துமாய் திகழ்ந்தது.
பொதுவாக 'சக்தியே' தாயே அன்னையே என சித்தர் பாடல்களில் அம்மன் வழிபாடு அதிகமாக இருக்கும்.
கொங்கணர்
மாரி அம்மனின் பக்தர்.
மாரி மைந்தன்.
இரும்பை உருக்கி கலங்கள் தயாரித்து
சிவன் கோயிலில் விற்பது கொங்கணரின்
பெற்றோர் மேற்கொண்டிருந்த குலத்தொழில்.
அழகிய சிறுவனாய் கொங்கணர்
சிரித்து மகிழ்ந்து விளையாடிய போதும்
அவர் சிந்தையில் எப்போதும் அம்பிகை இருந்தாள்.
இளைஞராய்
வாலிபராய்
வலம் வந்த போதும் அம்மனே அவர்
கனவிலும் நினைவிலும் அன்னையாய் கலந்திருந்தாள்.
முக்தி என்பாளுடன் திருமணம் நடந்தது.
மனைவியுடன் மகிழ்ந்து இருந்தபோதும் கூட
மாரி அம்மனே மனதில் நிறைந்து இருந்தாள்.
இந்நிலையில்
அடிக்கடி அவர் பாதை வேறு என
ஓர் எண்ணம் எழுந்து உள்ளத்தை உசுப்பியது.
வாய்த்த மனைவி பேராசைக்காரி.
பணம் பணம் என்பதே அவளது நிரந்தர பல்லவி.
செல்வமே சக்தி என்பது மனையாள் முக்தியின் வேதம்.
சம்பாதிப்பவரே சிறந்த மனிதன் மற்றவரெல்லாம்
பேடி என பரிகசிப்பாள் அவள்.
கொங்கணர் அவள் நச்சரிப்பால் தொழிலில் கவனம் அதிகம் கொண்டார்.
நல்ல வருமானம் நாளும் பெருகியது.
ஆனால் அவர் மனதின் ஓரத்தில் ஏதோ உறுத்தியது.
அவர் மனம் ஆன்மீகம் தேடியது.
மனைவி பெயரில் தான் முக்தி.
கொங்கணர் நாடிய முக்தியை சக்தியை அவள் தரவில்லை.
விரக்தியே மிச்சமாய் விஞ்சி நின்றது.
வேதியரை ஞானியரை சாதுக்களைக் கண்டால் போதும்
ஓடி ஓடி அவரடி தொழுவது கொங்கணரின் வழக்கம்.
அவர்களுக்குப் பசும்பால் தந்து உபசரிப்பார்.
வந்தவர் பதிலுக்கு ஞானப்பாலை அவருக்கு அளிப்பர்.
இருப்பினும்
'இன்னும் சம்பாதிக்க வேண்டும் சொத்து சுகம் பெருக்க வேண்டும்' என்ற தலையணை மந்திரம் பெரிதாய் கொங்கணரிடம் வேலை செய்தது.
நிறைய சக்திகள் பெற வேண்டும்.
உயர் சித்திகள் கற்று உயர்நிலை அடைய வேண்டும் .
இரும்பை தங்கமாக்கி
புகழ் பொருள்
பெற வேண்டும்.
இம்சை அரசி
இல்லாளிடம்
நற்பெயர் பெற வேண்டும்.'
அதற்கு தவசி, முனிவர், யோகி சித்தர் என யாரிடமாவது கற்றுணர வேண்டும்.'
என்றெல்லாம் அடிக்கடி அசை போட்டார்.
ஆசை அதற்கோர் நாள் பார்த்தது.
எளிமைக்கு இலக்கணமாய் சித்தர்கள் திகழ்வர்.
இதற்கு முற்றிலும் மாறுபட்டவராய் கொங்கணர் இருந்தார்.
ஆசை, செல்வம், பயம், படோபடம், கோபம், அலட்சியம், வேகம், மனைவி சொல்லே வேதம் என பலப்பல பன்முக குணாதிசயங்கள் அவரிடம் அதிகம் இருந்தன.
அத்தனைக்கும் பின்னால் அவரை மணந்தவள் இருந்தாள்.
மணவாட்டி ஆட்டியபடி வாழ்க்கை மணி ஆடியது.
சத்தமும் எழுந்தது. ஆனால் அது புறத்தில்.
அகத்தே அவர் நிலை தேடல்களால் நிரம்பி இருந்தது.
இரண்டு நிலைகளால் இருண்ட குழப்பமே
நிதமும் தொடர்ந்தது.
காடு, மலை, குகை சென்று தேடினால் குருவைக் காணலாம்.
அவர் சொல்வழி நடந்தால் அம்பிகையை அடையலாம்,'
என மனக்குரல் தினம்தினம் சொல்லச் சொல்ல,
அவர் யாரிடமும் சொல்லாமல் - குறிப்பாய்
வாய்த்த குணவதியிடம் சொல்லாமல்
கானகம் செல்ல விருப்பப்பட்டார்.
அதற்கென திட்டமிட்டார்.
அதுசமயம் -
ஒரு சித்தர் திருவாடுதுறை வந்திருப்பதாக காற்று வாக்கில் சேதி வந்தது.
காற்றை விட வேகமாக ஆடுதுறைக்கு புயல்போல் ஓடினார்.
அவரைத் தேடி அலைந்தார். திரிந்தார்.
ஒருநாள் அவருக்கு திருநாளாய் அமைந்தது.
அடர்ந்த மரத்தடியில்
ஓர் ஒளி சிந்தும் சித்தரைத் தரிசித்தார்.
அவர் போகர்.
ஆச்சரியத்தோடு, "அடைக்கலம்", என்றபடி அவர் பாதங்களைப் பற்றி கண்களால் ஒற்றினார். நெற்றியால் வருடினார்.
ஸ்பரிசம் பட்டதும் தவத்தில் இருந்த போகர் சட்டென விழித்தெழுந்தார்.
பார்த்த மாத்திரத்தில் அவரைப் பிடித்துப் போயிற்று போகருக்கு.
அவர் சிங்கமென சிலிர்த்து தங்கமென ஒளிரப்போவது
அப்போதே போகருக்குத் தெரிந்து போயிற்று.
"யாரப்பா நீ...?"
"அடியேன்
அம்பாள் பக்தன்.
அவளடி வாழ்பவன். அவளை அடைய வழி தேடி வந்தேன்.
நீங்கள் வழிகாட்ட வேண்டும்.
அடியேனுக்கு அனைத்தையும் போதிக்க வேண்டும்."
ஒரே மூச்சில் சொல்லி முடித்தார் .
"உன் பெயர் ?"
பதில் இல்லை.
"எங்கிருந்து வருகிறாய் ?"
" கொங்கண தேசத்தில் இருந்து"
தன் முன்கதைச் சுருக்கம் தந்தார்.
"ஓ... கொங்கண நாட்டுக்காரனா....?
.... உன்னை
'கொங்கணர்'
என்றே இனி அழைக்கிறேன்.
நீ நீடு புகழ் பெறுவாய். உலகம் உனைத் தொழும்
கொங்கணா... உன் விருப்பம் நிறைவேறும்"
அந்த திருநாமமே நிலைத்துப் போனது.
போகர் சூட்டிய பெயர்
கார் உள்ளளவும்,
கடல் உள்ளளவும் நிலைத்து நிற்கும் அன்றோ?
நின்றது.
நிற்கிறது.
கொங்கண சித்தர்
கொங்கண முனிவர்
கொங்கண நாதர்
கொங்கண நாயகர்
என அப்பெயரே விரிந்தும் சிறந்தும் ஒளிர்ந்தும் வியாபித்துள்ளது.
Leave a Comment