சிறுதுளி அருள் வெள்ளம்
- 'மாரி மைந்தன்' சிவராமன்
அந்த தவஞானி ஒரு கணங்க மரத்தின்கீழ் சிவமோனத்தில் ஆழ்ந்திருந்தார்.
ஆழ்ந்தவர் பிரம்ம நிலையில் அமிழ்ந்து போனார்.
காலம் கடந்தது.
அவ்விடம் காடாய் அடர்ந்தது.
ஒருசமயம் அவ்வழி வந்த சிங்க ஜோடி ஒன்று அங்கேயே தங்கி வாழத் தொடங்கின.
அருகிலிருக்கும் ஞானி பன்னெடுங்கால தவம் காரணமாக சிலைபோல் இருக்கவே ஏதோ கற்சிலை என விட்டுவிட்டன.
காலம் வேகமாக சுழன்றது.
சிங்கத்தின் குடும்பம் பெரிதானது. அவ்விடம் சிங்க கூட்டத்தின் வாழ்விடமானது.
காட்டு விலங்குகளை வேட்டையாடிக் கொண்டு வந்து உண்ணும் இடமும் அதுதான். நேரம் காலமின்றி கலவி புரியும் காம புரியும் அதுதான்.
ஒருநாள் ஆண்சிங்கம் கற்சிலை மடியில் ஆனந்தமாய் அனந்தசயனம் கொண்டது.
வழக்கம்போல் நாவால் உடல் மேவிய சிங்கம் சிலைபோல் இருந்த தவஞானியையும் இதமாய் நக்கத் தொடங்கியது.
ஞானியிடம் எச்சலனமுமில்லை. கற்சிலை தோற்கும் மோனநிலை.
ஆனால் கண்களில் மட்டும் கண்ணீர்.
அது கன்னத்தில் வழிந்து மார்பில் ஓடி சிங்கத்தின் வாயில் பட்டது.
அத்துளி ஓர் அதிர்வை உண்டுபண்ணியது.
துள்ளி எழுந்தது சிங்கம்.
நாவை நனைத்த அச்சிறு துளி பெரும் ஞானத்தைத் தந்து நிறைத்தது.
"ஐயகோ.... இது கற்சிலை அல்ல..... சிலை வடிவில் ஒரு மகானின் சிலை..."
புத்தியில் உறைத்தது.
" ஐயோ... இவரின் இந்த புனித தலத்தை இத்தனை காலம் மாசுபடித்து விட்டோமே" சட்டென சிந்தனை எழுந்தது.
தனது கூட்டத்தை அழைத்து விஷயத்தைச் சொன்னது சிங்கராஜா.
சிங்க பரிவாரங்கள் நாற்புறம் சிதறி ஓடி நீர் கொண்டு வந்து சுத்தம் செய்து, மலர் கொண்டு வந்து மங்கலபுரி ஆக்கின.
அவரைக் கடவுள் எனத் தொழ தொடங்கின..
ஞானம் விரிந்தது.
சிங்கக் கூட்டத்தின் தலைவன் ஒரு நாள் சொன்னான் " புலால் தவிர்ப்போம்.. கொலை புலை வேண்டாம்".
" உணவுக்கு....?" கேட்டது ஒரு இளஞ்சிங்கம்.
"காய்கறி போதும்." கர்ஜிக்காமல் கனிவாய் சொன்னது சிங்கராஜா.
" வேட்டைக்கு பதில் என்ன செய்வது ?",புதிய தலைமுறை தர்க்கத்திற்குத் தயாராகி முறைத்தது.
" சிவ சிந்தனை போதும்.. இந்த இறை வேட்டையில் இறைவனே சிக்குவார்" ஞானம் சொன்னது சிங்கத்தலைமை..புதிய வேதம் சொன்னது.
சிங்கக் கூட்டம் சைவக்கூட்டமாகி வேட்டை விட்டு சிவயோக வேட்டையில் சிறக்கத் தொடங்கின.
பல காலம் கழித்து ஒரு நாள் தவராஜா தவம் கலைந்தார்.
எதிரில் சைவப் பழமாய் திகழ்ந்த சிங்க ராஜாவை யார் என கேட்டார்.
நடந்ததைச் சொன்னது சிங்கராஜா. நெகிழ்ந்து போனார் தவராஜா.
ஞானத்தந்தை அப்படியே ஆரத் தழுவினார் ஞானவிலங்கை.அவர் அருள் அப்படியே சிங்கத்தின் உள் பாய்ந்தது.
அதன்பின் உலகே வியக்கும் அற்புதம் நிகழ்ந்தது.
சிங்கராஜா ஓர் அரச குடும்பத்தில் அருந்தவ குழந்தையாய் அவதாரம் எடுத்தார்.
உரிய பருவத்தில் அரசராகப் பொறுப்பேற்று மக்களும் விலங்கினங்களும் போற்ற அரசாண்டார்.
ஒரு சிறு கண்ணீர்த் துளியை உண்ட சிங்கம் ஞானம் பெற்று நானிலம் போற்றும் அரசனானது அந்த ஞானியின் பேரருள்.
தவ ஆற்றலும் அருளாற்றலும் மிக்க அந்தஞானி போகர்.
போகர் பிரான்...
சித்தர் போகர் பிரான்.
Leave a Comment