சித்தனுக்காக வாசலுக்கே வந்த அரங்கன்


சட்டைமுனி
ஊர் ஊராய்
உலா வந்த போது
ஒரு நாள்...

தூரத்தில்
ஒரு கோபுரம்
கண்ணில் பட்டது.

அது 
ஸ்ரீரங்கம்
அரங்கநாதர் ஆலயம்
என்பது
சட்டைமுனியின்
மனத்திற்குப் புரிந்தது.

இரவுக்குள்
சன்னதியை அடைந்து
இறைவனின் 
தாள் பணிந்திட
வேண்டுமென
வேகமாய்
நடை போட்டார்.

வயது 
மிகுந்திருந்ததால்
அவரது
ஓட்டத்தை விட
கால ஓட்டம்
அதிகமானது.

அதனால்
சட்டைமுனி
போய்ச்
சேர்ந்த போது
கோயில் நடையைச்
சாத்தி விட்டார்கள்.

சோர்வு  
உடலில் தானே தவிர 
மனதில் இல்லையே..!

"அரங்கா...!
அரங்கா.....!
அரங்கா......!"

கதறினார்
சட்டைமுனி.

அவர் குரல்
அரங்கனை
எட்ட...
ஓர்
அற்புதம் நிகழ்ந்தது.

கோயிலின் 
இசைக் கருவிகள் 
தானாய்
முழங்கின....

மேள தாளங்கள்
வரவேற்பு
பாடின....

கோயில் மணிகள்
ஓங்கி ஒலித்தன....

கதவுகள்
ஓசைபட
முழுதாய்த்
திறந்தன.

அரங்கன்
புன்னகை தவழ
வைர வைடூரிய
ஆபரணங்கள்
தகதகவென
ஜொலிக்க
பிரத்யேக
அருட் காட்சி
தந்தார்.

"அரங்கா...
அரங்கா..."
எனக்
கூவியவாறே
அருகே ஓடி
அரங்கன்
திருவடி தேடினார்
சட்டைமுனி சித்தர்.

அச்சமயம்
அவ்வழி 
வந்தவர்க்கு
திறந்திருந்த 
கோயில் கதவுகள்
பீதியைக் கிளப்ப
திருடன் திருடன்
எனத்
திரண்டது
கூட்டம்.

உள்ளே
வந்தவர்
உதிரம்
கொதித்தது....

காரணம்.?

இருந்தது..!

அரங்க நாதரின்
அத்தனை நகைகளும்
சட்டை நாதரை
அலங்கரித்துக்
கொண்டிருந்தன.

தெய்வீகக் கோலம்..!

திரண்டிருந்தோர்
பார்வையிலோ...

'சகிக்க முடியாத
அலங்கோலம்.'

"ஆசையைப் பாரு...
அரங்கன் நகைகள்
அற்பனுக்கா..."

கூட்டத்தின்
ஒரு பாதி
நகைகளைப்
பறித்தது.

சட்டைமுனியைச்
சாபங்களால்
அர்ச்சித்தபடியே
நகைகளைச்
சுத்தம் செய்து
அப்போதே
அரங்கனுக்குச்
சாத்தியது
இன்னொரு பாதி.

'சாமி குத்தம்'
என ஓலமிட்டது
கோயிலைச் சேர்ந்த
வேதியர் கூட்டம்.

பிடித்து இழுத்து
நையப் புடைத்து
அரசன் முன் 
நிறுத்தியது
இன்னொரு
முரட்டுக் கூட்டம்.

"என்ன நடந்தது.?"

அரண்மனை
அதிரக் கேட்டான் 
அரசாளும் மன்னன்.
அக்குரல்
அந்தப்புரம் வரை
கேட்டது.

"எனக்கெதுவும்
தெரியாது....மன்னா..
இது
மாயவனின்
திருவிளையாட்டு..."
மென்மையாய்
சொன்னார்
மெய்ஞானி.

"திருட்டு விளையாட்டை
துணிந்து
செய்துவிட்டு
திருவிளையாடல்
என்று
திருமால் மீதே
சாட்டுகிறாயே..

"என்ன கதையா...
நடந்தது என்ன..?"

மீண்டும் கேட்டான்
மீளா சினத்துடன்

நடந்தது அனைத்தையும்
மெலிதாய் சொன்னார்
மெய்ஞான சித்தர்.

.'உண்மையாய்
இருக்குமோ'

மன்னன் மனத்தில்
மின்னலொன்று
அடித்தது.

'பார்த்து விடலாம்..'

மனது 
கட்டளை இட்டது.
மன்னன்
வழிமொழிந்தான்
அரச கட்டளையாக..!

"கோயிலுக்கு
கூட்டிச் செல்லுங்கள்....

இவர்
அழைத்தால்
நம் பெருமான்
வருவாரா
எனப் பார்த்து
விடலாம்.."

ஓங்கி
உலகளக்கும்
உத்தமன்
கோயில் சாத்தப்பட்டது.

வாசலுக்கு வெளியே
மீண்டும்
சித்த பெருமான்.

இம்முறையும்
சட்டை முனிவரின்
குரல்
விண்ணைப்
பிளந்தது...
மூன்று முறை.

"அரங்கா...!
அரங்கா....!!
அரங்கா...!!!."

அரசனும்
மக்களும்
ஒருகால்
அரங்கன் வந்தால்
இந்த சாமியாரின்
தயவால்
அவனை
தரிசித்து
'வைகுண்ட
பாக்கியம்'
அடையலாமே
எனக்
கணக்குப்
போட்டபடி
 காத்திருந்தனர்.

என்னே அதிசயம்..?!

அரங்கன் வந்தான்.....!

முன்பு போலவே
மேளங்கள்
மணிகள்
முரசுகள்
முழங்க....

'தட் ....தடார்...'
என
ஆனை போல்
பிளிறி
இரு கதவுகளும்
மெல்லத் திறந்தன...

விண்ணுக்கும்
மண்ணுக்குமாய்
வேங்கடன்
வெளிப்பட்டான்.

அட...

அரங்கன்
அணிந்திருந்த 
ஆபரணங்கள்
அவன்
திருமேனியிலிருந்து
தாமாகக் கழன்று
சட்டை முனியின்
மேனியில்...
சிரசில்.....
கரங்களில்....
சூடிக் கொண்டு
பேரொளி பரப்பின.

அரங்கனைப்
போலவே
சட்டைமுனியும்
ஜொலித்தார்.

அரசனும்
அருகிருந்தோரும்
அதிர்ந்து நின்றனர்.
கொஞ்சம்
பயந்து நெளிந்து
வணங்கினர்.

அரங்கனும்
அவனது
அன்பனும்
ஒன்றே என
இறைவன்
உலகுக்கு
உணர்த்திய
நிகழ்வே
இதுவென
அனைவரும்
போற்றித் தொழுதனர்.

 தொடர்ந்து
'அரங்கா...
அரங்கா...
அரங்கா....."
என
சட்டைமுனி
உருகிக் குரலிட...

அத்தனை பேரும்
யாருக்கும் கிட்டாத
பிறவிப் பயன்'
என
வைணவம் மெச்சும்
 விஸ்வரூப தரிசனம்
கண்ட  பரவசத்தில்
'அரங்கா.. அரங்கா..'
என
மெய் சிலிர்த்தனர்.

அப்போது
அங்கோர்
அற்புதம்...
இனிது
நிகழ்ந்தது.

அகிலம் வணங்கும்
அரங்கனின்
திரு உருவோடு...

திருவோடோடு
வாழ்க்கையைத்
துவக்கி
அன்று
அரங்கனின்
ஆபரணங்களோடு
ஒளிர்ந்து கொண்டிருந்த
சட்டை முனி சித்தர்
ஒளியாய் எழும்பி
பேரொளி வீசிய
பெருமானோடு
இரண்டறக் கலந்தார்.

கண்ணுற்ற
மக்கள்
இறைமுழக்கம்
செய்யச்...செய்ய
இறைவனும்
சித்தனும்
மறைந்து போயினர்.

மெய்சிலிர்க்கும்
இப்புராண வரலாறு
'சட்டைமுனி
வைணவர்'
என்போரின்
வரலாற்றுப்
பதிவாய் உள்ளது.

அதற்கு
சாட்சியாக
ஸ்ரீரங்கத்தில்
சட்டைமுனியின்
ஜீவ சமாதி
உள்ளது.

- 'மாரி மைந்தன்' சிவராமன்
 



Leave a Comment