கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா?


கங்கைக் கரையில் வைக்கிறேன் என்று சொல்லி தமிழகத்தில் இருந்து எடுத்துச் சென்று கடைசியில் பூங்காவில் பாலிதீன் கவர் சுற்றிக் கிடக்கும் நமது திருவள்ளுவருக்கும் சித்தர் ஒருவருக்கும் தொடர்பு இருக்கிறது. அந்த சுவாரஸ்ய தொடர்பு பற்றியதுதான் இந்த பதிவு..

தமிழகத்தில் அவதரித்த சித்தர்களில் முக்கியமானவர் கொங்கணவர். இவருக்கு கொங்கணர், கொங்கணச் சித்தர், கொங்கண நாயனார், கொங்கணத்தேவர், கொங்கண நாதர் எனப் பல பெயர்களும் உண்டு. இவர்கள் வெவ்வேறானவர்கள் 
என்று சொல்பவர்களும் உண்டு.

கொங்கணர் திருவள்ளுவரின் சீடர் என்றும் போகரின் சீடர் என்றும் கூறுகின்றனர். இவர் பெயரால் வைத்திய, இரசவாத, யோக நூல்களும் பாடல்களும் இருக்கின்றன. இவர் கி.பி 7ஆம் நூற்றாண்டில் கொங்கு நாட்டில் வாழ்ந்தவர். அதனால் தான் அவருக்கு இந்த பெயர் வந்தது என்றும் சொல்கிறார்கள்.

இவர் பெயரில் வழங்கப்படும் பாடல்களில் "வாலைக் கும்மி" என்பது ஒன்று. வாலை என்றால் சக்தி என்றும், கன்னி என்றும் இரு பொருள் உள்ளது. கன்னிப் பெண்ணை முன்நிறுத்தி கும்மி பாடியுள்ளதால் வாலைக்கும்மி என வழங்குகிறது. இது இவர் பெயரால் வழங்கினாலும் இவரால் பாடப்பட்டது அல்ல. இவர் கருத்துக்களை அமைத்து ஆசிரியர் வீரப் பெருமாளின் மாணாக்கர் ஒருவர் பாடியதாகவும், அவர் வலவேந்திரன் துரைவள்ளல் என்ற சிற்றரசன் காலத்தவர் என்றும் அவன் அஞ்செழுத்துணர்ந்த சைவன் என்றும் வாலைக்கும்மி பாடல் கூறுகின்றது.

சரி, இப்போது கொங்கணர் பற்றிய கதைக்கு வருவோம். கொங்கணர் ஒருமுறை, ஒரு மரத்தின் கீழ் யோகம் செய்து கொண்டிருந்த போது, மரத்தின் மேல் இருந்த கொக்கு அவர்மீது எச்சம் இட்டுவிட்டது. உடனே கொங்கணர் கண்ணை விழித்து அந்த கொக்கை பார்த்தார். உடனே அது எரிந்து சாம்பலாகிவிட்டது. அதன் பிறகு அவர் ஊருக்குள் வந்து திருவள்ளுவர் வீட்டு வாசலில் நின்று பிச்சை கேட்டார். வள்ளுவர் மனைவி வாசுகியார் கணவருக்கு உணவு பரிமாறிக் கொண்டிருந்த நேரம். எனவே அவர் பிச்சை கொண்டுவர கொஞ்சம் தாமதமாகிவிட்டது. நேரங்கடந்து பிச்சை கொண்டுவந்த வாசுகியாரைக் கொங்கணர் சினத்துடன் விழித்து பார்த்தார். உடனை, வாசுகியார் "கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா?" என்று கேட்டாராம். எங்கோ நடந்த விஷயம் வீட்டிற்குள் இருந்த இந்த அம்மாளுக்கு தெரிகிறதென்றால் இவர் எத்தனை பெரிய சித்த ஞானியாக இருப்பார் என்று எண்ணி கொங்கணர் வாசுகியை வணங்கினாராம். பின்னர் திருவள்ளுவர் சீடரானார் என்கிறது அந்த கதை.



Leave a Comment