சித்தர்கள் யார்?
‘சித்தர்கள்’ என்றால் மகாசக்தி படைத்த மனிதர்கள் என்பதுதான் பொதுவான எண்ணம். உண்மையில் யார் சித்தர்கள்? இன்றும் சித்தர்கள் இருக்கிறார்களா? ஆம் என்றால் எங்கு இருக்கிறார்கள்? அவர்களை நாம் பார்க்க முடியுமா? முடியும் என்றால் எப்படி பார்ப்பது? இப்படி அடுக்கடுக்காய் பல கேள்விகள் எழுகின்றன.
முதலில் சித்தர்கள் என்ற சொல்லுக்கான பொருளைத் தெரிந்துகொள்வோம். மெய்ஞ்ஞானத்தை உண்மையிலேயே தேடுகிற அனைவரையும் இந்தச் சொல் குறிக்கிறது எனலாம். இருந்தாலும், வைத்தியம், வான சாஸ்திரம், மாந்திரீகம், இரசவாதம், சூத்திர சாஸ்திரம், யோகம் போன்ற நுட்பமான விஷயங்கள் பற்றிய நூல்களை இயற்றியவர்கள் சித்தர்கள் எனப்படுகிறார்கள். சித்தர்கள் என்பவர்கள் தெய்வமரபைச் சார்ந்தவர்கள். அவர்கள் தூய்மையின் சிகரமாகவும் தெய்வீகத்தன்மையும் கொண்டவர்கள்.
சித்தன் என்பவன் மூன்று விதமான கட்டுப்பாடுகளை தன்னுள் கடைப்பிடித்துக் கொண்டு அதன்படி வாழ்தலில் வெற்றிகண்டு சமத்துவத்தையும் சமநிலையையும் ஏற்படுத்திக் கொள்பவன் ஆவான். மூச்சை அடக்குதல் (பிராணாயாமம்), விந்துவை வெளியிடாது அடக்கிக் காமத்தை வென்று எந்தவித ஆசைகளும் இல்லாத நிலையை அடைதல், இறுதியாக மனதை அடக்குதல் என்பவையே அந்த மூவகைக் கட்டுப்பாடுகள். சித்தர்கள் எங்கிருந்து எதை உண்டாலும் எப்படித் தோற்றமளித்து எதைச் செய்தாலும் உலகியல் கூட்டத்தோடு கூட்டமாகக் கலந்திருந்தாலும் அவர்களுடைய சிந்தனை ‘சிவம்’ ஆகிய பரம்பொருளோடு ஒன்றாயிருக்கும். இல்லற வாழ்வெனும் உலகியலில் இருந்தாலும் ஆசைகள் அவர்களைப் பாதிப்பதில்லை. அவர்கள் புளியம்பழமும் ஓடும் போல் ஒட்டாமல் இருப்பர். எனவே, சித்தர் நிலையைத் தொட்டவர்கள் காட்டிலோ குகையிலோ வாழ வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. “கடவுளைக்காண முயல்பவர்கள் பக்தர்கள். தெளிந்தவர்கள் சித்தர்கள்.”
மனிதர்களிடத்தே நிலவும் சாதிவேற்றுமைகளையும் ஏற்றதாழ்வுகளையும் கடுமையாகச் சாடிப் புரட்சி செய்தவர்கள் சித்தர்கள். சித்தத்தில் சிவனைக்காணும் வரை உடலைக் காக்கும் பொருட்டு திட ஆரோக்கியத்துடன் வைத்திருக்கக் காயகல்பம் உண்டவர்கள். மேலும், ஏழைகளின் நோய்களைத் தீர்ப்பதற்கு சித்தர்கள் எளிய மருந்துகளைக் கண்டறிந்து அவர்களின் துன்பம் தீர்த்தனர். சித்தர்களில் பலர் யோகப்பயிற்சியாலும் சிலர் ஞானயோகப் பயிற்சியாலும் சித்த ஒழுக்கம் கண்டு சிவநிலை அடைந்தவர்கள். இவர்கள் மனோ சக்தியால் நினைத்ததை சாதித்தவர்கள். அகண்ட அண்ட சராசர ரகசியங்களையும் அறிந்து அவற்றை வெளி உலகிற்கு அளித்தவர்கள்.
சித்தர்கள் யோகசாதனத்தால் பெற்ற பயன்களை மக்கள் நன்மைக்காக பயன்படுத்தினார்களே ஒழிய, தங்களுக்காக எதுவும் செய்து கொண்டதாக தெரியவில்லை. பதினெண் சித்தர்களுக்கு முன்னே நவநாத சித்தர்கள் என்ற ஆதி தமிழ்ச்சித்தர்கள் இருந்ததாக வரலாறு கூறுகிறது. சித்தர்கள் தாங்கள் கண்ட அனுபவங்களை மக்கள் பயன்படுத்தும்வகையில் மிக மிக, எளிமையான இலக்கண நடையில் பாமரரும் புரிந்து கொள்ளும் வண்ணம் ஓலைச்சுவடிகளில் நூல்களாக எழுதியுள்ளார்கள்.
எண்ணற்ற சித்தர்கள் தமிழகத்தில் வாழ்ந்ததாகப் பல வரலாற்று நூல்கள் எடுத்துரைத்துள்ளன. அகத்தியர் என்ற பெயரில் மட்டும் 37 பேர்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. அவர்களில் நம் தமிழ் மரபைப் சேர்ந்த அகத்தியர் திருக்குற்றால மலையில் சிவபெருமானை எண்ணிக் கடும் தவமிருந்து அங்கு ஆலயம் அமைத்து வழிபட்டவர். இவரது காலம் கி பி. 13 ஆம் நூற்றாண்டாகும். அகத்தியர் தமிழ்மொழி, தமிழ் இலக்கணங்களைப் பரமசிவனிடத்தில் இருந்தும், முருகப் பெருமானிடத்திலிருந்தும் கற்றுத்தமிழ் மொழியைத் தமிழ் நாட்டில் நன்கு வளர்த்தார். இவர் மார்கழி மாதம் ஆயில்ய நட்சத்திரம் 3ம் மாதத்தில் பிறந்ததாகப் போகர் தமது 7000ஆம் நூலில் கூறுகிறார். அகத்தியர், திருமூலர், போகர் என பல சித்தர்கள் இந்த மண்ணில் வாழ்ந்து மக்களுக்கு நல்வழிகாட்டியிருக்கிறார்கள்.
அடுத்தடுத்த கட்டுரைகளில் இவர்கள் ஒவ்வொருவரைப் பற்றியும், அவர்கள் செய்த அற்புதங்கள் பற்றியும் விரிவாகப் பார்க்கலாம்..
- தொடரும்
Leave a Comment