காஞ்சி மஹா பெரியவர் அருளியது...
எத்தனை ஜன்மம் வந்தால் தான் என்ன கஷ்டம்?
“புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா உன்னடி
என்மனத்தே வழுவாதிருக்க வரந்தரல்
வேண்டும் இவ் வையகத்தே”
என்று நாயன்மார்களுள் ஒருவரான திருநாவுக்கரசர் திருப்பாதிரிப்புலியூர் ஈசுவரனை நோக்கிப் பிரார்த்தனை செய்துகொள்கிறார். நாவுக்கு அரசர் அவர். அவர் மெய்மறந்து ஸ்தோத்திரம் பண்ணுகிறபோது ஆசாரிய சுவாமிகள் கருத்தை அனுசரித்தே சொன்னார்.
நிஷித்தமான எந்த ஜன்மம் வந்தாலும் சரி, உடல் அழுக்காய் இருந்தால் என்ன? உள்ளம் சதா சுத்தமாக ஆனந்தமாக இருக்க வேண்டும். உள்ளம் சுத்தமாக ஆனந்தமாக இருந்துவிட்டால் உடம்பு எவ்வளவு விகாரமாக இருந்தாலும் பரவாயில்லை. உடல் அழகாக இருந்து, உள்ளம் எப்போது பார்த்தாலும் விகாரமாக துக்கப்பட்டுக் கொண்டே இருக்கும்படியான ஒரு ஜன்மம் என்றால், எத்தனை அலங்காரமாக இருந்தாலும் அது வேண்டவே வேண்டாம். அதனால் பிரயோஜனம் இல்லை.
எந்தத் துக்கமும் இல்லாமல் எப்போதும் ஹ்ருதயம் ஆனந்தத்தோடு இருந்துவிட்டால், திரும்பியும் எத்தனை ஜன்மம் வந்தால்தான் என்ன கஷ்டம்? ஆகவே, “சதா ஈசுவரனுடைய சரணாரவிந்தங்களிலேயே லயப்பட்டு ஆனந்தத்தோடு இருக்கும்படியான ஜன்மமாக இருந்தால், எத்தனை ஹீனமான ஜன்மமாக இருந்தாலும் வரட்டும்’ என்று ஆசாரிய சுவாமிகள் ஸ்தோத்திரம் செய்கிறார்கள்.
Leave a Comment