திருமூலர் பாடிய நடராசரின் ஆனந்த தாண்டவம்!


‘தமிழ்ச் சாத்திரம்’ என்று போற்றப்படுவது திருமூலர் அருளிய திருமந்திரம். பன்னிரு திருமுறைகளில் 10-ம் திருமுறையாகத் திகழ்கிறது. ஒன்பது ஆகமங்களைத் தமிழில் சொல்லும் ஞானப் பொக்கிஷம். 3000 ஆண்டுகள் தவத்திலிருந்து, திருமூலர் ஆண்டுக்கு ஒரு பாடலாக உபதேசித்தது. மாடு மேய்க்கும் பாமரனும் முயன்றால் தெய்வ நிலையைப் பெறலாம் என்பதை உலகுக்கு உணர்த்தவே, மூலன் எனும் பாமரனின் மேனியில்  சுந்தரநாத யோகி புகுந்து, திருமந்திரம் பாடவைத்தார்.

ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் (திருமந்திரம் 2104). ஆன்மிகத்தின் உச்சநிலையில் இருப்பது உருவமற்ற ஒரே கடவுள். மலையின் அடிப் பகுதியில் ஆயிரம் வழிகள். அதன் உச்சத்தைத் தொடும்போது சிகரம் ஒன்றுதான். நம் எல்லோராலும் எவரெஸ்ட் சிகரத்தை எட்டிப்பிடித்துவிட முடியாது. ஆகவே, கிடைக்கும் வழிகளைப் பிடித்துக்கொண்டு ஏறலாம்.  சிகரத்தை எட்டிவிட்டால், ஞானியாக ஆகலாம். இயலாதவர்கள், வழிபட்டு மேன்மை அடையவே நடராசரை நம்முன் நிறுத்துகிறார் திருமூலர்.

9-ம் தந்திரம் 8-ம் தலைப்பு ‘திருக் கூத்து தரிசனம்’. இதில் சிவானந்தக் கூத்து, சுந்தரக் கூத்து, பொற்பதிக் கூத்து, பொன்தில்லைக் கூத்து, அற்புதக் கூத்து ஆகிய தலைப்புகளில் - 82  பாடல்களில் நடராசரின் ஆனந்த தாண்டவத்தை பாடியுள்ளார் திருமூலர். இதை முழுதும் படிப்பவருக்கு நடராசர் பேரருள் நிச்சயம் வந்து சேரும்.
அவற்றில் சில பாடல்கள் இங்கே... 

விழித்திரை மூடினால்..!

`ஆதி நடம் செய்தான் என்பார்கள் ஆதர்கள்
ஆதி நடம் செய்கை யாரும் அறிகிலர்’
- திருமந்திரம் (2787)

ஆதிபகவன் சிவன். அவரே ஆதாரமான தெய்வம். பிரபஞ்சத்தைப் படைத்து, காத்து, அழித்து, மறைத்து, அருளி ஐந்தொழில்களையும் ஆடல் மூலமாகவே செய்து கொண்டிருக்கிறார்.

64 மகேசுவர வடிவங்களில் பிரதானமானவர் நடராசர். மனம் ஒன்றி, நடராசரை தரிசிக்க வேண்டும். பிறகு மனதுக்குள் அவர் நடனத்தைக் கொண்டு வந்து, கண்களை மூடி தியானிக்க வேண்டும். மூடிய திரைகள் முன் நடராசர் நடனம் தவத்தில் தெரியும். தியானத்தில் - விழித்திரைக்குள் நடன தரிசனம் காணும் முறையை அற்புதமாகப் பாடுகிறார் திருமூலர்.

நெற்றிக்கு நேரே புருவத்து இடைவெளி
உற்று உற்றுப் பார்க்க ஒளிவிடு மந்திரம்
பற்றுக்குப் பற்றாய் பரமன் இருந்த இடம்
சிற்றம்பலம் என்று சேர்ந்துகொண்டேன் (தி.மந்.-2770)

பொதுவாக மேடைகளில் திரை விலகினால் நடனம் தெரியும். சிவ தியானத்திலோ, விழித்திரை கள் மூடினால் புருவ நடுவே சிவப் பேரொளி தோன்றும்; சிவானந்த தாண்டவம் தெரியும்.

பாதச் சிலம்பொலி கேட்கும்!

பரமனின் பரமானந்தத் திருநடனம் புலப்படுவது மட்டுமா? பரமனின் பாதச் சிலம்போசையும் நம் காதுகளில் கேட்குமாம்!

ஆடிய காலும் அதில் சிலம்பு ஓசையும்
பாடிய பாட்டும் பலவான நட்டமும்
கூடிய கோலம் குருபரன் கொண்டாடத்
தேடி உளே கண்டு தீர்ந்தது அற்றவாறே

நடராசரின் நடனச் சிலம்போசையைத் தினமும் கேட்டவர் சேரமான் பெருமாள் நாயனார். அப்படியான பாக்கியம் நமக்கும் வாய்க்கும் என்று இந்தப் பாடல் மூலம் சொல்கிறார் திருமூலர்.

மரணத்தை வென்ற ரகசியம்!

ஒருமுறை அந்த ஆனந்த தரிசனத்தைப் பெற்றவர், எப்போதும் அதை மறக்கமாட்டார். நடன தரிசனம் கண்டவர்கள், அதையே நினைத்து நினைத்து ஆனந்தப் பரவசத்தில் களித்திருப்பார்களாம்.

புளிக் கண்டவர்க்குப் புனல் ஊறுமாப்போல்
களிக்கும் திருக்கூத்துக் கண்டவர்க்கு எல்லாம்
அளிக்கும் அருள்கண்ணீர் சோர் நெஞ்சு உருக்கும்
ஒளிக்குள் ஆனந்தத்து அமுது ஊறும் உள்ளத்தே
- திருமந்திரம் 2778

அதாவது, புளியங்காயைத் தின்றால் புளிக்கும். மறுமுறை அதைப் பார்க்கும்போதெல்லாம் அந்தச் சுவை மனதில் எழும். தானாகவே, வாயில் உமிழ் நீர் சுரக்கும். அதேபோல், நடராசப் பெருமானின் தாண்டவத்தைக் கண்டவருக்கு, அதை நினைக்கும்போ தெல்லாம் ஆனந்தக் கண்ணீர் பொங்கிப் பெருகுமாம். சரி, இதனால் என்ன பயன்?

மரணத்தையே வெல்லலாம் என்கிறார் திருமூலர்.

தப்பிலா மன்றில் தனிக்கூத்துக் கண்டபின்
ஒப்பில் எழுகோடி யுகம் இருந்தேனே - திருமந்திரம் 74

ஆம்! திருமூலர் தனது 3000 வயது மர்மத்தை இங்கே விடுவிக்கிறார்!

மறைப்பொருள் தத்துவம்

யோக நிலைக்குச் சென்ற ஞானிகள் பேசமாட்டார்கள். ஞானம் என்பதை, ஒளவையார் கொன்றைவேந்தனில் ‘மோனம் என்பது ஞான வரம்பு’ என்று பாடியிருக்கிறார்.

தான் பெருமுயற்சியால் பெற்ற ஞானத்தை மோனத்தால் மறைத்து, தனக்குள் வைத்துக்கொள்பவர் சுயநலவாதி. ஆனால் நமக்காகத் திருமூலர் தன் மோனத்தை கலைத்து, ஞானத்தை ‘திரு மந்திரத்தில்’ உபதேசித்த பொதுநலவாதி.

யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்
வான் பற்றி நின்ற ‘மறைப்பொருள்’ சொல்லிடின்
ஊன் பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்
தான் பற்றப் பற்றத் தலைப்படும் தானே
- திருமந்திரம் 85

 அணுவுக்கு அணுவாக நின்று ஆடும் நடராசரை மனதுக்குள் தியானித்து அருள் பெறுவோம்!



Leave a Comment