உலகின் மிகப்பெரிய ஆலயம் - 17


புனோம் பென் விடுதியில் தூங்கி எழுந்தோம். நாங்கள் நினைத்ததைக் காட்டிலும் முன்னதாகவே எழுந்துவிட்டோம். எப்படியும் ஒன்பது மணிக்குதான் கண்ணைப் பிட்டுக்கொள்ள முடியும் என்று நினைத்தோம். ஆனால் ஏழு, ஏழரை மணிக்கெல்லாம் எழுந்துவிட்டோம். புறப்பட்டு வெளியே வந்தபோது எட்டரை மணியிருக்கும். தங்கிய ஹோட்டலில் காலை உணவு வசதி இல்லை. அது தங்குமிடம் மட்டும்தான். ஆகவே, வேறுவழியின்றி வெளியே பசியாறப் புறப்பட்டோம்.

ஒவ்வொர் இடமாகப் பார்த்துப் பார்த்துத் தேடினாலும் நாங்கள் நினைப்பது போன்ற எந்தவோர் உணவகமும் கண்ணில் அகப்படவில்லை. எல்லாமே உள்ளூர்க்காரர்களுக்கு ஏற்ற உணவுக் கடைகள்தான். அங்கிருந்து எழும் வாடை எங்களை நெருங்கவே விடவில்லை. அனைவருமே அசைவ உணவு உட்கொள்ளக் கூடியவர்கள்தான் என்றாலும் காலை உணவுக்கு அசைவம் உண்டு பழக்கமில்லை.

சிங்கப்பூரில் ஆங்காங்கே பொது உணவுக் கடைகள் இருக்கும். ஹாக்கர் செண்ட்டர் என்று அழைப்போம். அதில் எல்லாருக்கும் ஏற்ற உணவுத் தெரிவுகள் கிடைக்கும். சீன உணவுக் கடைகள் அதிகமிருக்கும் அங்கு. மலாய், இந்திய இனத்தவருக்கென ஒரு கடையாவது ஒதுக்கப்பட்டிருக்கும். இந்தியக் கடைகளை நடத்துவது பெரும்பாலும் இந்திய முஸ்லிம்களாக இருக்கும். அங்கு பெரும்பாலும் தோசையும் பரோட்டாவும் கிடைக்கும். முன்பு இடியாப்பமும் புட்டும் ஆயத்த உணவாக அங்கு கிடைத்து வந்தன. இப்போது ஏனோ அவை பெரும்பாலும் கிடைப்பதில்லை உணவு அங்காடிகளில்..

அதுதவிர மேற்கத்திய உணவும் அங்கேயே கிடைக்கும். கொஞ்சம் நடந்தால், மெக்டொனால்ட்ஸ், கே.எஃப்.சி, பர்கர் கிங் போன்ற விரைவு உணவுக் கடைகள் தென்படும். ஆனால் புனோம் பென்னில் அப்படி எதையும் எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. உள்ளூர் ஓட்டுநரான ராவும் எங்கள் தேவையை ஊகித்து ஒவ்வொரு கடையாக நிறுத்துவார். உள்ளே போன எங்களில் ஒருவர் வெளியே வரும்போது அவருடைய முகத்தை வைத்தே “எட்ரா வண்டியை” என்று கூவுவோம் எல்லாரும்.

இந்தக் கடை தேடலிலேயே ஒரு மணி நேரத்துக்கும் மேல் வீணாயிற்று. ஒரு வழியாக அரண்மனை உள்ள ராஜ வீதிக்கு அருகே ஒரு கடையைப் பார்த்து உள்ளே நுழைந்தோம். ரொட்டி, ஆம்லெட், காப்பி கிடைக்கும் என்றதும்தான் எங்களுக்கு உயிர்வந்தது. ஒரு ஆளுக்கு பத்து வெள்ளி வரை வரும் என்றாலும் பரவாயில்லை இதுக்குமேல் அலையத் தெம்பில்லை என்று அமர்ந்துவிட்டோம்.

கடைக்காரப் பையன் குறிப்பெடுத்து எங்களுக்கான உணவைத் தயாரித்து எடுத்துவர மேலும் அரைமணி நேரமானது. வெறுத்துவிட்டோம். காத்திருக்கும் நேரத்தில் விளையாடுவதற்கென்று சில சீட்டு விளையாட்டுகளும் வண்ணம் தீட்டும் தாள்களும் அங்கே வைக்கப்பட்டிருந்தன. இலவச இணைய வசதியும் இருந்தது. அதனால் ஓரளவு சமாதானமானோம். பேசாமல் ஒரு ரொட்டி பாக்கெட் வாங்கிக் கடித்துக் கொண்டே பாதி இடம் பார்த்திருக்கலாமே என்று அலுத்துக் கொண்டு சாப்பிட்டு முடித்து வெளியேறினோம்.

அப்போது முடிவெடுத்தோம். இனிமேல் வெளியூரோ வெளிநாடோ தங்குவதற்கு விடுதி பதிவு செய்யும்போது காலை உணவுக்கும் சேர்த்துப் பதிவு செய்ய வேண்டும். கூடிய மட்டும் அந்த வசதியுள்ள விடுதியில்தான் தங்கவேண்டும் என்று. இல்லாவிட்டால் இப்படித்தான் நேரம் விரயமாகும். வெளிநாட்டில் இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் மதிப்புமிக்கது. அங்கு பார்க்க வேண்டியவை ஏராளம் இருக்கும். ஒருவேளை உணவுக்கு இப்படி அலைந்து நேரத்தை வீணடிப்பது அராஜகம்.

பசியாறி முடிக்கும்போது மணி பத்தைத் தாண்டிவிட்டது. மாலை நான்கு மணிக்கு விமான நிலையத்தில் இருக்க வேண்டும். இடையில் இருப்பதோ ஆறு மணி நேரம்தான். மதிய உணவுக்கு எப்படியும் அரை மணி நேரமாவது வேண்டும். தங்கியிருந்த விடுதிக்குப் பக்கத்தில் ஒரு பெரிய சந்தை இருந்தது. கம்போடியா நினைவாகச் சில பொருட்களாவது அங்கே வாங்க வேண்டுமென பரணி ஒரே அடம்.

இந்த லட்சணத்தில் எதைப் பார்ப்பது ? அரண்மனை அருகிலேயே இருந்தது. முதலில் அதைப் பார்த்து முடிப்போம் என்று முடிவெடுத்தோம். நல்லவேளை அரண்மனைக்கான அனுமதிக் கட்டணம் அதிகமில்லை. எங்கள் கையிலிருந்த விட்டமின் ப எல்லாம் கிட்டத்தட்ட காலியாகும் தறுவாயில் இருந்தோம். நாலு வெள்ளியோ ஐந்து வெள்ளியோ கட்டணம். அனுமதிச் சீட்டு வாங்கிக் கொண்டு உள்ளே போனோம். அரண்மனை என்றால் நம்ம ஊர்போல கோட்டை கொத்தளங்களோடு பிரமாண்டமாய்ப் பழமைப் பிசுக்கேறி வெளவால் பறக்கும் இடம் என்று நினைக்க வேண்டாம். 

     

சும்மா துடைத்து வைத்த வெண்கலச் செம்பு மாதிரித் தக தக தக என மின்னியது அரண்மனை. காலை வெயிலில் பொன் போல் சுடர்ந்தது அரண்மனை. முற்பகல் வேளையாக இருந்தாலும்கூடக் கடுமையான வெயில் இல்லை. நிர்வாக வசதிக்காகப் புதிய கட்டடங்கள் கட்டப்பட்டிருந்தாலும் அவை கண்ணை உறுத்தாத வண்ணம் அரண்மனைக் கட்டட வடிவத்தோடு இயைந்து செல்லும் வகையில் கட்டப்பட்டிருந்தன.

அரண்மனை நுழைவாயிலிலேயே அனுமதிச் சீட்டு விற்குமிடம் இருந்தது. இதென்ன பெரிய விஷயமா என்று சிலர் நினைக்கலாம். ஆமாம், பெரிய விஷயம்தான். நீங்கள் மாமல்லபுரம் கடற்கரைக் கோயில் போயிருக்க மாட்டீர்கள். தஞ்சாவூர் அரண்மனைக்குச் சென்றிருக்க மாட்டீர்கள். பூம்புகாரிலுள்ள எழுநிலை மாடத்துக்குப் போயிருக்க மாட்டீர்கள். ஏனென்றால், அங்கெல்லாம் பார்க்க வேண்டிய இடத்திலிருந்து ரொம்ப தூரம் தள்ளித்தான் அனுமதிச் சீட்டு விற்கும் கூடம் இருக்கும்.

அதைத் தெரிவிக்கும் எந்த அறிவிப்பும் இருக்காது. அதைக் கடந்து நுழைவுச் சீட்டுக் கிழிக்கும் இடத்துக்கு அருகே போனபிறகுதான் “அந்தா அங்கண போயி டிக்கெட் வாங்கிட்டு வாங்க” என்று ஒருவர் உங்களை ஆற்றுப்படுத்துவார். வேகாத வெயிலில் வேகு வேகென்று நடந்து போய்ச் சீட்டு வாங்கித் திரும்ப வேண்டும். வேறு வழியில்லை. இது என் அனுபவம். இப்போது மாறியிருக்கலாம். இந்தியாவை விட்டு வெளியே வந்ததுமுதல், ஒவ்வோர் இடத்திலும் மனம் அந்த இடத்தை இந்தியாவோடு ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டே இருக்கிறது.

என் நண்பர்களும் அப்படித்தான். ஏன் நம்மவர்கள் ஒரு சிறிய விஷயத்தில்கூட அக்கறை செலுத்துவதில்லை என்று வியந்துபோகும் எங்கள் மனம். இந்தியாவைவிடப் பொருளாதாரத்தில் பலமடங்கு பின்தங்கியுள்ள கம்போடியாவின் தூய்மை வியக்கத்தக்கது. அரண்மனை அவ்வளவு சுத்தமாகப் பராமரிக்கப்படுகிறது. இந்தியாவில் தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள இடங்கள் அபாரமாகப் பராமரிக்கப்பட்டு வரும். மற்ற இடங்கள் பெரும்பாலும் குப்பைதான்.

தஞ்சாவூர் அரண்மனையிலுள்ள மராட்டா தர்பார் என்னும் கூடம் கவின்மிக்க இடம். வண்ண வண்ணச் சுதைச் சிற்பங்கள் அழகு கொஞ்சும் எழில்மிக்க இடம். பட்டை பட்டையாகத் தூண்களும்.. வளைவுகள் மிகுந்த மேற்கூரையும்... பார்க்கப் பார்க்கத் தெவிட்டாத இடம். கலைடாஸ்கோப்பைத் திருகினால் உருவாகும் வண்ண வண்ண வடிவங்களைப் பார்ப்பது போலிருக்கும் அந்த கம்பீரமான வண்ணக்கூடம். சுமார் 500 ஆண்டுப் பழமை மிக்க இடம். ஆனால் அதற்குச் செல்லும் வழியெல்லாம் இருட்டு, நூலாம்படை, வௌவால் புழுக்கை துர்நாற்றம், தர்பார் தரையெங்கும் புழுதி. எவர் வேண்டுமானாலும் சுவரில் கிறுக்கினால் அதைத் தட்டிக் கேட்க நாதியற்ற தனிமை.

தர்பாரின் நடுநாயகமாக உள்ள அலங்காரக் கூடத்தின் பின்னால் உள்ள சுவரில் அமைச்சர்கள் இருவர் அருகில் நிற்க, இரண்டாம் சிவாஜி மகாராஜாவின் அழகான ஓவியம் ஒன்று தீட்டப்பட்டிருக்கும். இவர் மன்னர் சரஃபோஜியின் மகன். இவர்தான் தஞ்சையை ஆண்ட கடைசி மராட்டிய மன்னர். 1833-1855 இவரது ஆட்சிக் காலம். இவருக்குப் பின் பிரிட்டிஷ் அரசாங்கம் உள்ளே புகுந்துவிட்டது. ஜீவகளை ததும்பும் இந்த சிவாஜி மன்னரின் ஓவியம் மெல்ல மெல்ல அழிந்து வருகிறது. ஓதம் பொங்கும் பழங்காலச் சுவர் காரணமாகத் தரையிலிருந்து நாலு அடி உயரம் வரை அது மொத்தமாக அழிந்தே போனது. மிஞ்சியுள்ள இடத்தில் கையெட்டும் தூரம் வரை கிறுக்கல்கள்.

       (ஓவியத்தில் இருப்பது சரஃபோஜியா சிவாஜியா என்று இப்போதுதான் குடவாயில் பாலு ஐயாவை அழைத்துக் கேட்டேன். அவர்தான் இந்த விவரங்களைச் சொன்னார். மேலும் அவர் மராட்டா தர்பார் என்று அந்தக் கூடத்தை அழைப்பது சரியல்ல என்கிறார் தமது “தஞ்சாவூர் நாயக்கர் வரலாறு” நூலில். நாயக்கர்களால் கட்டப்பெற்ற அந்த கொலு மண்டபத்தின் மூலப் பெயர் லக்ஷ்மி விலாசம். செவ்வப்ப நாயக்கர் இதைக் கட்டியிருக்கலாம். பிற்காலத்தில் மராட்டிய மன்னர்களும் அதை கொலு மண்டபமாகப் பயன்படுத்தி வந்துள்ளனர். சுதைச் சிற்பங்கள் உட்படப் பலவும் பிற்கால மராட்டியர்களின் சேர்க்கை என்பதால் நாயக்க பாணி மறைந்து மராட்டியக் கலை பாணி மேலோங்கிவிட்டது என்று எழுதுகிறார் குடவாயில்.)

இப்படித்தான் ஒருமுறை கிருஷ்ணாபுரம் கோயில் சிற்பங்களைப் பார்க்கக் குடும்பத்தோடு போயிருந்தோம். பல ஆண்டுகளாகப் போக நினைத்த இடம் என்பதால் நின்று நின்று ரசித்து ரசித்து மன்மதனையும் ரதியையும் பார்த்துக் கொண்டிருந்தேன். உள்ளே காமிரா எடுத்துச் செல்லக் கூடாதாம். ஏன் என்றால் பதில் இல்லை. அப்படித்தான் என்றார்கள். சரி தொலைகிறது. சிற்பங்கள் பூராவும் நூலாம்படை படிந்து பராமரிப்பு இல்லாமல் நின்றன.

நூலாம்படையைக் கைகளால் களைந்து கொண்டிருந்தபோது ஊழியர் ஒருவர் வந்து “சார் செலையெல்லாம் தொடக் கூடாது சார்” என்று அதட்டினார். எனக்குக் கோபம் வந்துவிட்டது. “நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் பார்த்தீர்களா?” என்று கடுமையாகக் கேட்டதும் பேசாமல் போய்விட்டார். ஒருக்காலும் இம்மாதிரி ஆட்களிடம் பணிந்து போகாதீர்கள். கருவறை மூர்த்தியைப் படம் எடுக்கக் கூடாது என்பதில் ஒரு தர்க்கம் இருக்கிறது. ஆனால், வெளிப்புற மண்டபத்திலுள்ள சிலைகளைப் படம் எடுக்கக் கூடாது என்பதற்கு என்ன காரணம் இருக்கக் கூடும் ? இன்றுவரை எனக்குப் புரியவில்லை.

கம்போடிய அரண்மனையின் வெளிப்புறத்தில் படம் எடுக்கத் தடையில்லை. 1860களில் கட்டப்பட்ட கம்போடிய அரண்மனை வளாகத்துக்குள் பல்வேறு கட்டடங்கள் உள்ளன. அவற்றுள் எங்கள் கண்ணுக்கு முதலில் தட்டுப்பட்டது கொலு மண்டபம். சரிவான கூரையுடன் கூடிய அழகான கட்டடம். தாய்லந்துக் கட்டட பாணியை ஒத்த கட்டட பாணி.

கரண்ட மகுடம் போல் படிப்படியாகக் குறுகி மேலே ஊசிபோல் முடிகின்றன கட்டடத்திலுள்ள மூன்று கோபுரங்களும். நடுவில் இருக்கும் கோபுரம் பெரியது. அதன் இருபக்கமும் அளவிற்சிறிய கோபுரங்கள். நடுவிலுள்ள கோபுரத்தின் மேலே நான்முகன் முகம் பதிக்கப்பட்டுள்ளது. அதுவும் அப்பட்டமான கம்போடிய முகம். ஊழ்கத்தில் அமைந்த தோற்றத்தில் இல்லாமல் கண்களைப் பளிச்சென வெறித்துப் பார்க்கும் தோற்றம் பிரம்மனுக்கு.

அந்த முகத்துக்கு மகுடம் வைத்தது போல் கோபுரம் சுருங்கி மேலேறுகிறது. கோபுரத்தின் நான்கு மூலைகளிலும் நான்கு கின்னரர்கள் அதைத் தாங்கிப் பிடிப்பது போன்ற அழகிய சிலைகள் உள்ளன. அந்தக் காலத்தில் இங்கேதான் மன்னருக்குப் பட்டாபிஷேகம் நடந்திருக்கும். இன்னமும் இங்கே சில முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றனவாம். முக்கிய விருந்தினர்களை மன்னர் சந்திப்பதும் இங்கேதானாம். வேலைப்பாடு மிக்க சில அரியணைகளோடு வெளிநாட்டுப் பிரதானிகள் அளித்த மதிப்புமிக்க பரிசுப் பொருட்கள் இங்கே கண்ணாடிப் பேழைக்குள் வைக்கப்பட்டுள்ளன. அவற்றை நின்று நிதானமாகப் பார்க்க ஒரு முழுநாள் வேண்டும்.

எங்களுக்கு அதற்கு நேரமில்லை. லேசாகக் கண்களால் மேய்ந்துவிட்டு அடுத்த கட்டடத்திற்குச் சென்றோம். ஒவ்வொரு கட்டடமும் நேர்த்தியாகப் பராமரிக்கப்பட்ட தோட்டத்துக்குள் உட்கார்ந்திருக்கிறது. கொலு மண்டபத்துக்குப் பக்கத்திலேயே இருக்கிறது பௌர்ணமி அரங்கு. இதற்குக் கூரை மட்டும்தான். பக்கவாட்டுச் சுவர்கள் கிடையாது. நல்ல உயரமான தளத்தின் மீது தூண்களோடு உள்ளது அரங்கு. உள்ளே ஒரு மேடை. அதற்கு மட்டும் பக்கச் சுவர்கள் உள்ளன. கலை நிகழ்ச்சிகளைக் கண்டு ரசிக்க இந்த இடம். பௌர்ணமி அன்று ஏகாந்தமாக அமர்ந்து இசை கேட்டு, அப்சரஸ் நடனம் கண்டு ரசிப்பார் மன்னர்.

அதன் அருகிலேயே சில்வர் பகோடா. அதாவது வெள்ளிக் கோபுர அரங்கு. இது மன்னர் குடும்பத்துக்கான பௌத்த ஆலய வளாகம். உள்ளே விதவிதமான புத்தர் சிலைகள் உள்ளன. ஆலயத்துக்கு வெளியே ஒரு தாழ்வாரத்தைத் தாண்டினால் மன்னர் நொரோடம் ஒரு வெள்ளைக் குதிரையில் அமர்ந்தவாறு உள்ள சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அதன் இருபக்கங்களிலும் வெள்ளி மாடங்கள் உள்ளன. அதில் மன்னரின் அஸ்திக் கலசம் வைக்கப்பட்டிருக்கிறதாம். அண்மையில் கட்டப்பட்டதுதான் என்றாலும் மிகுந்த வேலைப்பாடுமிக்க மாடங்கள்.

இந்த இடத்தில் சற்று உயரத்தில் தண்ணீர்த் தொட்டி அமைத்து தாமரைப் பூக்களை மலரச் செய்திருக்கிறார்கள். அந்த மலர்கள் அந்த இடத்தையே அழகாக்கி விட்டன. அதற்குப் பக்கவாட்டில் அங்கோர் வாட்டின் சிறிய மாதிரி ஒன்று செய்து வைத்திருக்கிறார்கள். அந்த மாபெரும் ஆலயத்தை நன்கு புரிந்துகொள்ள இந்த மாதிரி வடிவம் உதவியாக இருக்கும். இந்தச் சிறிய அளவில் பார்க்கும்போதே அந்தப் பேராலயத்தின் பிரமாண்டம் மலைக்க வைக்கிறது.

இதற்குள் வெயில் ஏறிவிட்டது. வியர்த்துக் கொட்டி சட்டையெல்லாம் நனையத் தொடங்கி நிழலுக்கு ஏங்கியது உடல். அரண்மனைக்குள் எங்களைத் தவிர வேறு அதிகமான பயணிகள் யாரும் இல்லை. எல்லா இடங்களும் வெறிச்சோடிக் கிடந்தன. அரண்மனையை ஒரு சுற்றி சுற்றிவிட்டு வெளியே வந்தோம். அடுத்த இலக்கு, கம்போடியாவின் தேசிய அரும்பொருளகம். நேரமிருந்தால் S-21 சிறைச்சாலையைப் பார்க்க நினைத்தோம். ஆனால் அது முடியாது. அதற்கு நேரமில்லை.

புனோம் பென் புறநகர்ப் பகுதியில் இருக்கிறது அந்த உயர்நிலைப் பள்ளி. மிக அண்மையில் நடந்த மாபெரும் இனப் படுகொலையின் சாட்சியாக இன்னும் இருக்கிறது அந்தப் பள்ளி. சுமார் 17-ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள், குழந்தைகள் சிறை வைக்கப்பட்ட இடம் அது. அங்கிருந்து உயிரோடு வெளியேறியவர்கள் ஏழு பேர் மட்டுமே !...

- பொன். மகாலிங்கம்

 

 

பொன். மகாலிங்கம் - சிங்கப்பூர் தொலைக்காட்சியில் பணியாற்றும் மூத்த இதழியலாளர். சென்னையின் முன்னணி ஊடகத்தில் முக்கியப் பொறுப்பில் இருந்தவர். சகமனிதர்கள் மீது அளவற்ற அன்பும், பாசமும் கொண்ட பண்பாளர். தமிழ் மீதும், பயணங்களின் மீதும் உள்ள அலாதியான ஆர்வம் காரணமாக அடிக்கடி எங்காவது புராதன இடங்களை தேடிச் சென்று அவற்றை தமது அழகு தமிழால் கட்டுரைகளாக்கி, வரும் தலைமுறைக்கு தகவல் பொக்கிஷங்களை சேர்ப்பதில் நாட்டம் கொண்டவர். அவரை தொடர்புகொள்ள - ponmaha2000@yahoo.com

 
 



Leave a Comment