தன்னைக் காண அடியவருக்கு உதவிய ஸ்ரீ சமர்த்த சாயி
காகாஜி வைத்யா என்பவர் நாசிக் ஜில்லாவைச் சார்ந்த வணியில் வாழ்ந்து வந்தார். அவர் ஒரு சப்தஷ்ரிங்கிதேவி உபாசகர். சில காலமாக பல்வேறு மனவருத்தத்தினால் அவர் பெருமளவு மன அமைதியை இழந்து சலனமுற்று இருந்தார். மன அமைதி இழந்திருந்த அவர், ஒருநாள் மாலை தேவியின் கோவிலுக்குச் சென்று தம் கவலைகளை தீர்க்குமாறு,மனமுருகிப் பிரார்த்தனை செய்தார். தேவியும் அவர் மேல் கருணைக் கொண்டு,இரவு கனவில் தோன்றி அவரிடம், "பாபாவிடம் நீ செல்வாயாக, பின் உன் மனம் அமைதியடையும்"என்றாள். இந்த பாபா யார் என்று அவளிடம் கேட்க காகாஜி முற்படும் போது தூக்கம் கலைந்து எழுந்துவிட்டார். தேவி, தன்னைக் காணுமாறு பணித்த இந்த பாபா யாராக இருக்கக்கூடும் என்று எண்ணத் தொடங்கினார்.
சிறிது எண்ணத்திற்குப்பின் அவராகவே இந்த பாபா த்ரயம்பகேஸ்வராக (சிவனாக) இருக்கவேண்டும் என முடிவுக்கு வந்தார். எனவே அவர் நாசிக் ஜில்லாவிலுள்ள த்ரயம்பத்திற்குச் சென்றார். அங்கு பத்து நாட்கள் தங்கி, தினந்தோறும் அதிகாலை குளித்து, 'ஸ்ரீருத்ரம்' ஓதி, அபிஷேகம் மற்றபிற சமய சம்பிரதாயங்களை செய்தும் சலனமுற்றவராகவே இருந்தார். தமது இருப்பிடத்திற்குச் மீண்டும் சென்ற அவர், தேவியிடம் மீண்டும் மன்றாடினார். அன்றிரவு தேவி மீண்டும் அவர் கனவில் தோன்றி, "நீ ஏன் த்ரயம்பகேஸ்வரத்திற்குச் சென்றாய்? நான் பாபா என்று கூறியது ஷீர்டியைச் சேர்ந்த ஸ்ரீ சமர்த்த சாயியை" என்றாள்.
அடுத்து தான் எப்போது ஷீர்டிக்குப் போவது, எப்படி பாபாவைப் பார்ப்பது என்பதே காகாஜியின் கவலையாக மாறியது. ஒரு ஞானியைத் தரிசிக்க ஒருவன் உண்மையான ஆர்வமுள்ளவனாக இருப்பின், ஞானி மாத்திரமல்ல, கடவுளும் அவனது வேண்டுகோளை நிறைவேற்றுகிறார் என்பது காகாஜியின் விஷயத்தில் நிரூபணமானது. காகாஜிக்கு உதவிட பாபா தனது அடியவரான ஷாமாவையே அனுப்பி வைத்தார். அதன் பின்னணி சுவாரசியமானதும், ஆச்சரியப்படுத்துவதும் ஆகும். ஷாமா தமது இளம்வயதில் தீவிரமாக நோய்வாய்ப்பட்டார். அவரது தாயார் அவர்களின் குலதெய்வமான வணியில் உள்ள சப்தஷ்ரிங்கிதேவியிடம் தன் மகன் குணமடைந்தால் அழைத்து வந்து அவள் பாதத்தில் சமர்ப்பிப்பதாக வேண்டிக்கொண்டாள்.
தாயாரோ சில ஆண்டுகளுக்குப் பிறகு தனது ஸ்தனங்களில் ஒருவிதத் தோல் வியாதியால் அவதியுற்றாள். அத்தருணத்தில் தனது தெய்வமான தேவியிடம் மீண்டும் ஒரு வேண்டுதலைச் செய்தாள். இந்த இரண்டு வேண்டுதல்களும் நிறைவேற்றப்படாமலே இருந்தன. அவளது மரணப் படுக்கையில் தனது மகன் ஷாமாவைத் தன் அருகே அழைத்து வேண்டுதல்களைக் குறித்து அவரது கவனத்தை ஈர்ந்து அவற்றை நிறைவேற்றுவதாக சத்தியம் வாங்கிய பின்பு உயிர் நீத்தாள்.
சிலநாட்களுக்குப் பின்னர் ஷாமா இவ்வேண்டுதல்களைக் குறித்து மறந்துவிட்டார். இவ்வாறாக முப்பது ஆண்டுகள் கடந்த நிலையில் ,ஒரு புகழ்பெற்ற ஜோதிடர் ஷீர்டிக்கு வந்து அங்கு ஒரு மாதம் தங்கியிருந்தார். ஸ்ரீமான் பூட்டியையும், மற்றவர்களையும் குறித்து அவர் கூறிய முன்னோடிச் செய்திகள் யாவும் உண்மையாயின. அனைவரும் மகிழ்ந்தனர்.
ஷாமாவின் தம்பியான பாபாஜியும் ஜோதிடரைக் கலந்து ஆலோசித்தார். அப்போது அவரது தாயாரின் வேண்டுதல்களை அவரின் அண்ணன் அவளின் மரணப்படுக்கையில் நிறைவேற்றுவதாக வாக்களித்து இன்னும் நிறைவேற்றப்படவில்லை. எனவே கடவுள் அவர்கள்மீது மகிழ்வுறாமல் அவர்களுக்குத் துன்பங்களை அளித்துக்கொண்டிருக்கிறார் என்று கூறினார். பாபாஜி இதைத் தன் அண்ணனிடம் கூறவும் அவர் நிறைவேற்றப்படாத வேண்டுதல்களை நினைவுகூர்ந்தார். ஷாமாவும் மேற்கொண்டு எவ்விதத் தாமதமும் செய்யாமல்,ஒரு பொற்கொல்லனை அழைத்து ஒரு ஜதை வெள்ளி ஸ்தனங்களைத் தயாரிக்கச் சொன்னார்.
பின்னர் அவர் மசூதிக்குச் சென்று பாபாவின் முன்னால் வீழ்ந்துபணிந்து வேண்டிக்கொண்டார். சப்தஷ்ரிங்கி கோவிலுக்கு அவரையே போகும்படியும், அவற்றைத் தேவியின் பாதங்களில் அவரையே சமர்ப்பிக்கும்படியும் பாபா வற்புறுத்தினார். பாபாவின் அனுமதியையும், உதியையும் பெற்றபின் ஷாமா வணிக்குப் புறப்பட்டார். அங்கு அவர் பூசாரியைத் தேடிக்கொண்டு காகாஜியின் வீட்டை வந்தடைந்தார். காகாஜி அப்போதுதான் பாபாவைப் பார்க்க மிக்க கவலையுள்ளவராக இருந்தார். அத்தருணத்தில் ஷாமாவும் அங்கு வந்தடைந்தார். இது தான் சாயின் லீலை.
தேவி சொன்னது போலவே , பாபாவைப் பார்த்தவுடன் அவர் மனம் சலனங்களை இழந்து அமைதியாயும், அடக்கமாகவும் ஆயிற்று. பாபாவிடம் முழுமையாகச் சரணடைந்து தம் கவலைகளையும், கஷ்டங்களையும் மறந்தார்.
தன் பார்வை மற்றும் தரிசனத்தினால் மட்டுமே கூட பாபா தன் அடியவர்களுக்கு பேரானந்தத்தையும், நிம்மதியையும் தர முடியும் என்பதற்கு காகாஜியின் சம்பவமே ஒரு உதாரணம் .
ஜெய் ஜெய் சாய் ராம் .....
Leave a Comment