எங்கும் நிறை பேரறிவான சத்குரு சாய்
எங்கும் நிறை பேரறிவான சத்குரு சாய்பாபா , தான் படைத்த அனைத்து ஜீவராசிகளிலும் தன்னை காண முடியும் என்பதை அவ்வப்போது உணர்த்திக் கொண்டே தான் இருக்கிறார் . மக்கள் சேவையே மகேசன் சேவை என்பார்கள் . அதேப்போல் தன அடியவர்களுக்கு செய்யும் தொண்டு தன்னை வந்தடையும் என்பதையும் பாபா பல தருணங்களில் நிரூபித்து இருக்கிறார் . அப்படியான ஒரு அற்புதத்தை இப்பதிவில் பார்ப்போம் .
ரத்தன்ஜி ஷாபூர்ஜி வாடியா என்பவர் நாந்தேட் கிராமத்தில் வசித்தது வந்த பார்சி மில் காண்டிராக்டர் . இறைவன் அளவற்ற எல்லாச் செல்வங்களுடன் அவரை ஆசீர்வதித்து இருந்தாலும் , ஒரு செல்வத்தைத் மட்டும் அவருக்கு அருளவில்லை . மக்கட் செல்வம் தானே அனைத்திலும் சிறந்தது . வாடியாவிற்கும் தன் பேர் சொல்ல ஒரு பிள்ளை இல்லையே என்ற குறை அவர் மனத்தை வாட்டி வதைத்தது. அவர் கிராமத்தில் வசித்து வந்த மக்கள் அவரை பெரிதும் மதித்தனர். தர்மசீலரான அவர் ஏழை எளியவர்களுக்கு தன்னால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்து வந்தார். நாட்கள் செல்லச் செல்ல தனக்கு ஒரு குழந்தை இல்லையே என்ற ஏக்கம் அவரை கொஞ்சம் கொஞ்சமாக துன்புறுத்தியது. ஒரு சமயம் அவரின் துன்பத்தைக் கண்ட அவரது நெருங்கிய நண்பரான தாஸ்கணு,கவலைக்கான காரணத்தைக் கேட்டார் .
உற்ற நண்பரான தாஸ் கணுவிடம் எதையும் மறைக்காமல் , வாடியா தனக்கு ஒரு குழந்தை செல்வம் இல்லாத குறையை வெளிப்படுத்தினார் . பாபாவின் தீவிர பக்தரான தாஸ்கணு,தன் தெய்வம் பாபா நினைத்தால் எந்த அற்புதங்களையும் செய்வார் என்ற நம்பிக்கையுடன் , அவர் வாடியாவை பாபாவிடம் செல்லுமாறு கூறி தேற்றினார் . பாபாவிடம் வேண்டினால், கட்டாயம் குழந்தைப் பேறு கிட்டும் என்று வாடியாவிற்கு நம்பிக்கையூட்டினார் தாஸ்கணு. அலைக்கடலில் சிக்கித் தத்தளித்தவனுக்கு ஒரு பெரிய மரக்கலன் கிடைத்தது போன்று இருந்தது வாடியாவிற்கு . ஷிர்டி செல்ல முடிவெடுத்த அவர் , சில நாள்களிலேயே பழங்களையும் பூமாலையையும் வாங்கிக் கொண்டு, பாபாவுக்கு தட்சிணையாக ஐந்து ரூபாயையும் எடுத்துக்கொண்டு புறப்பட்டார். பாபாவைப் பார்த்த மறுகணமே அந்தக் கருணை நிறைந்த வடிவம் வாடியாவின் மனத்தைக் கரைத்தது. பரவசத்தோடு பூமாலையை பாபா கழுத்தில் அணிவித்து, பழக்கூடையை சமர்ப்பித்தார். பின் அவரது தாமரைப் பாதங்களைக் கீழே விழுந்து நமஸ்கரித்தார். மெல்ல எழுந்து அவர் அருகில் அமர்ந்து கொண்ட வாடியா . ஏராளமான அடியவர்கள் பாபாவைத் தேடி வருவதையும் அவரது பாதங்களில் சரணடைவதையும் பார்த்து வியந்தார்.
பாபாவை சரணடைந்த அந்த கணமே , தம் பிரார்த்தனை கட்டாயம் பலிக்கும் என்ற பூரண நம்பிக்கையோடு குழந்தைப்பேறு வேண்டி மனப்பூர்வமாகப் பிரார்த்திக்கலானார். திடீரென வாடியாவின் பக்கம் திரும்பிய பாபாவின் பார்வை. “எனக்கு ஐந்து ரூபாய் காணிக்கைப் பணம் கொண்டு வந்திருக்கிறாயே? எடு!” என்றார் உரிமையுடன். தாம் ஐந்து ரூபாய் எடுத்துவந்த விஷயம் இவருக்கு எப்படித் தெரியும் என வியந்தவாறே ரூபாயை எடுத்தார் வாடியா. அப்போது , “அந்த ஐந்து ரூபாயில் ஏற்கனவே மூன்று ரூபாய் பதினான்கு அணா நான் வாங்கிக் கொண்டுவிட்டேன். மீதியை எடு!”என்றார் பாபா சற்றே அதட்டலுடன். தாம் ஷிர்டிக்கு வருவதே முதல்முறையாக இப்போதுதான். அப்படியிருக்க இந்த மூன்று ரூபாய் பதினான்கு அணா விஷயம் என்னவென்று தெரியவில்லையே? என்று வாடியாவுக்கு ஒன்றும் புரியவில்லை.ஆனால், பாபா எதுசொன்னாலும் அதில் ஒரு காரணம் இருக்கும் ஆதலால் , அவர் சொன்னபடி எந்தப் பிசகும் இல்லாமல் அப்படியே செய்ய வேண்டும் என ஏற்கனவே அவருக்கு தாஸ்கணு அறிவுறுத்தியிருந்தார் . ஆகையால், மறுபேச்சுப் பேசாமல், மீதி ஒரு ரூபாய் இரண்டணா காணிக்கையை பாபாவின் பாதத்தில் சமர்ப்பித்தார். தமக்குக் குழந்தைப் பேறு கிட்ட அருளவேண்டும் என பாபாவிடம் விண்ணப்பித்தார். அவரது தலையை அன்போடு வருடிய பாபா, அவரின் கஷ்ட காலமெல்லாம் நீங்கிவிட்டதென்று ஆறுதல் கூறினார். மகிழ்ச்சியோடு ஷிர்டியிலிருந்து மீண்டும் நாந்தேட் கிராமத்திற்கு வந்தார் வாடியா.
நண்பர் தாஸ்கணுவிடம் சீரடியில் நடந்த அனைத்தையும் ஒரு வரிவிடாமல் சொன்னார். மூன்று ரூபாய் பதினான்கு அணா விஷயம் மட்டும் புரியவில்லை என்றும் அதன் பின்னணிச் சூட்சுமம் என்னவாக இருக்குமென்றும் கேட்டார். தாஸ்கணுவின் மனம் சிந்தனையில் ஆழ்ந்தது. திடீரென்று அவர் மனத்தில் மின்னல் வெட்டியது. “சில நாட்கள் முன்னால், மவுலா சாஹேப் என்ற இஸ்லாமிய அன்பரை வரவேற்றோமே? அவருக்கு நீங்கள்தானே வரவேற்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்தீர்கள்? அதற்கான செலவுக் கணக்கைக் கொண்டு வாருங்கள்! ”என்றார் தாஸ்கணு. வாடியாவுக்கும் சடாரென்று அது நினைவு வந்தது. அந்த இஸ்லாமிய அன்பர், வாடியா ஷிர்டி செல்ல நினைத்துக் கொண்டிருக்கும்போது வருகை புரிந்தவர். சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை செய்து, பின் ஆன்மிக நாட்டம் கொண்டு துறவியானவர். அவரின் வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஆன செலவைத் தனியாக ஒரு நோட்டுப் புத்தகத்தில் குறித்து வைத்திருந்தார் வாடியா. ஓடிப்போய் அந்த நோட்டுப் புத்தகத்தை எடுத்துவந்து செலவுக் கணக்கைக் கூட்டிப் பார்த்தபோது என்ன ஆச்சரியம்! அது மிகச் சரியாக மூன்று ரூபாய் பதினான்கு அணா இருந்தது! ஓர் அணா கூடக் குறையவுமில்லை. கூடவுமில்லை! மவுலா சாஹேப் என்ற அந்த அன்பருக்கு செய்த உபசாரமெல்லாம் தமக்குச் செய்த மாதிரிதான் என்பதை பாபா அழகாக அறிவித்துவிட்டார் .
வாடியாவின் கரங்களும் தாஸ்கணுவின் கரங்களும் பக்திப் பெருக்கால் பாபாவை நினைத்துக் குவிந்தன. பின் உரிய காலத்தில் வாடியாவுக்கு ஆண் குழந்தை பிறந்தபோது அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
பாபாவின் பாதங்களை உண்மையில் நம்பிக்கையுடன் சரணடைந்தவர்களுக்கு குறையொன்றும் இல்லை .
சாய் சரிதம் தொடரும் ...
Leave a Comment