"என் அடியவர்களுக்கு நன்மை செய்வதைத் தவிர எனக்கு வேறென்ன வேலை?" – சீரடி சாயி


 

பூர்வ ஜென்மப் பாவ புண்ணியங்களில் நம் எல்லோருக்கும் நிறைய நம்பிக்கை இருக்கிறது  .  நல்லது நடந்தால் போன ஜென்மத்தில் செய்த புண்ணியம் என்றும் , விரும்பத்தகாதது நடத்தால் பாவத்தின் பலன் என்றும் நம்மை நாம் தேற்றிக் கொள்கிறோம் . சாதாரண லௌகீக வாழ்க்கையிலேயே  பாவ புண்ணிய பலன்களின் ஆதிக்கம் அதிகம் இருக்க முடியும் என்கிறபோது சுவர்க்க லோக  வாழ்க்கைக்கு சொல்லவா வேண்டும் .மண்ணில் பிறந்த எல்லோருக்கும் பாபாவைச் சரணடையும் பாக்கியம் அவ்வளவு எளிதில் கிடைத்து விடுவதில்லை.

 

 சத்குருவின் பெயர் நம் காதுகளில் விழவும் , அவரின் திரு உருவத்தை  நம் கண்கள் தரிசிக்கவும் , அவரின்  அமுதமொழிகளை கேட்கவும் நாம் கடுகளவாவது புண்ணியம் செய்திருக்க வேண்டும்.  பாபாவின் பெருங்கருணை நம் மீது விழுந்தால் மட்டும்  இந்தப் பிறவியில் இதெல்லாம் நமக்கு சாத்தியம். அவரை நினைப்பதற்கே அவரின் கருணை வேண்டும் என்னும் போது அந்த சீரடி வாசன் வாழ்ந்த புண்ணிய தலமான சீரடி மண்ணை மிதிக்க  அவரின் அனுமதி வேண்டாமா ? அந்த மகானின் அருளும் , அனுமதியும் இன்றி அங்கு யாரால் தான் செல்லமுடியும். அது மட்டும் இல்லாமல் அங்கே எத்தனை நாள் நாம் தங்க வேண்டும் என்பது பாபாவின் விருப்பமோ  ,அத்தனை நாள் மட்டுமே தங்க முடியும் என்பதும் இன்றளவும் சத்தியம். 

 

 

காகா மகாஜனி என்ற  பாபாவின் தீவிர அன்பர் , கண்ணனின் அவதார தினத்தை ஒட்டி சீரடியில்  கோலாகலமாக கொண்டாட்டப் படும் கிருஷ்ண ஜெயந்தி விழாவில் பங்கேற்க  மும்பையில் இருந்து சீரடி செல்ல விரும்பினார் .  ஒருவாரம் அங்கே  தங்கி இருந்து கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டங்களை அனுபவிக்க  முடிவுசெய்த அவர், தம் முதலாளியிடம் ஒருவாரம் விடுப்பு எடுத்துக்கொண்டு , அலுவலகத்தில், இருந்தஇன்னொருவரிடம் தாம் பார்த்துக்கொண்டிருந்த வேலைகளை ஒப்படைத்து விட்டு புறப்பட்டார். அவர்  விருப்பப்படி சீரடி செல்லலாம், ஆனால் பாபா எத்தனை நாள் விரும்புகிறாரோ அத்தனை நாள் தானே அங்கு தங்க முடியும்? அவராக சீரடியில் ஒருவாரம் தங்க வேண்டும் என்று எப்படி முடிவு செய்யலாம்?

 

பாபாவை அவர் தரிசித்த மறுகணமே, பாபா அவரிடம், அதுசரி. நீ எப்போது மும்பை திரும்பப் போகிறாய்? என்று விசாரித்தார்! பாபாவின் இந்த கேள்வியால் சற்று ஏமாற்றம் அடைந்த காகா , மறுத்து எதுவும் பேசாமல் பணிவோடு, தாம் ஒருவாரம் சீரடியில் தங்கும் உத்தேசத்தில் வந்ததாகவும், ஆனால் பாபா எத்தனை நாள் தங்க உத்தரவு கொடுக்கிறாரோ அத்தனை நாள் மட்டுமே தங்க முடிவு செய்திருப்பதாகவும் கூறினார். காகாவின்  இந்த பணிவான பதிலால் பாபாவின் மனம் நிறைவடைந்தது. திரிகாலமும் உணர்ந்த பாபா  , “நீ ஒரே ஒருநாள் இங்கு தங்கினால் போதும். நாளையே புறப்பட்டு பம்பாய் போ. நாளையே மறக்காமல் அலுவலகத்திற்கும் போய்விடு! ” என்று உத்தரவிட்டார் . ஏன் இந்த உத்தரவு என்றறியாமல் வியப்பும் வருத்தமும் அடைந்தார் காகா மகாஜனி. மனிதனல்லவா .....அந்த தெய்வத்தின் மனதில் என்ன இருக்கிறது என்று புரிந்துக் கொள்ள முடியவில்லை . ஆனாலும்  மறுபேச்சுப் பேசாமல் அவரது உத்தரவுக்குக் கீழ்படிந்தார். மறுநாளே மும்பை சென்றார். பாபாவின் கட்டளைப்படி அன்றே அலுவலகத்திற்கும் சென்றார்.

 

அங்கே அவரது முதலாளி கவலையோடு, அவரை எதிர்பார்த்துக் காத்திருந்தார். காகாவைப் பார்த்ததும் , அவருக்காகவே காத்திருந்தவர் போல  ஓடி வந்து கட்டியணைத்துக் கொண்டார். “என் கடிதம் கிடைத்ததா? ”என்று கேட்டார். “எந்தக் கடிதமும் கிடைக்கவில்லையே! ”என்றார் காகா. “உன்னை எதிர்பார்த்துத் தான் காத்திருக்கிறேன்! ”என்று நெகிழ்ச்சியுடன் சொன்னார் முதலாளி. அலுவலகத்தின் மானேஜர் திடீரென நோய்வாய்ப்பட்டு விட்டதால் ,  மானேஜர் செய்து வந்த வேலைகளை எப்படி நிர்வகிப்பதென யாருக்கும் தெரியவில்லை. மானேஜர் பொறுப்பு, உடனடியாக காகாவிடம் தற்காலிகமாக ஒப்படைக்கப்பட்டது. இடைக்கால மானேஜர் பொறுப்பைச் செம்மையாக நிறைவேற்றினார் காகா. அவசர காலத்தில் கைகொடுத்தமைக்காக அவருக்கு விரைவிலேயே பதவி உயர்வும் தரப்பட்டது. இப்போது தான் அந்த நடமாடும் தெய்வத்தின்  எண்ணம் புரிந்தது காகா மகாஜனிக்கு . பாபாவின் அருளால் தான்  இந்த பதவி உயர்வு கிட்டியது  என நெகிழ்ந்தார் .

 

பதவி உயர்வு கிடைத்த பின், காகா சீரடி வந்து, பாபாவின் தாமரைப் பாதங்களைக் தனது ஆனந்த கண்ணீரால் கழுவினார். பாபா சிரித்துக் கொண்டே அவரது தெய்வீக கரத்தால் கன்னங்களைத் துடைத்து விட்டார். அடியவர்களுக்கு நன்மை செய்வதைத் தவிர எனக்கு வேறென்ன வேலை? என்று பரிவோடு கேட்காமல் கேட்தது போல் இருந்தது  பாபாவின் அருள்பொங்கும் விழிகள். நாளெல்லாம் பொழுதெல்லாம் நம்மை வழி நடத்தும் பாபாவின் கருணையை போற்றுவோம்.

 

ஓம் சாய் ராம் . சாய் சரிதம் தொடரும்…..

 



Leave a Comment