ஜீவகாருண்ய சாயி
உலகில் உள்ள எல்லா ஜீவராசிகளிலும் பாபாவே குடிகொண்டிருக்கிறார் . பார்க்கும் இடமெல்லாம் நீக்கமற நிறைந்து இருக்கும் அந்த கருணாமூர்த்தி , மக்களிடம் காட்டியதைப் போலவே மாக்களிடமும் கருணை மழை பொழிந்தார்.
பாபாவின் பார்வையில் அனைத்து உயிரினமும் ஒன்றே என்று நிலைநாட்டியதன் நோக்கம் , நாம் இவ்வுலகில் காணப்படும் உயிர் அனைத்திடமும் கருணையுடன் நடந்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே . பிற உயிரிடத்தில் நாம் காட்டும் அன்பே பாபாவிற்கு செய்யும் சேவை என்பதை தனது பக்தர் மூலம் மக்களுக்கு உணர்த்திய சம்பவத்தைப் பார்ப்போம் .
சீரடியில் பாபாவின் தீவிர பக்தையான திருமதி தர்கட், ஒருமுறை, மதிய உணவு தயார் செய்துகொண்டிருந்தார். மும்முரமாக சமையல் செயத்துக்கொண்டிருந்த வேளையில் மிகுந்த பசியுள்ள நாய் ஒன்று அவர் வீட்டு வாசலில் விடாமல் குரைக்கத் தொடங்கியது. நாய் பசியால் தான் குரைக்கிறது என்பதை உணர்ந்த தர்கட்டின் மனம் உருகியது. தன் கையில் கிடைத்த ரொட்டித் துண்டை எடுத்துக் கொண்டு வாசலுக்கு வந்தார்.
காய்ந்த ரொட்டித் துண்டைப் மிகுந்த பரிவோடு நாயின் முன் வீசினார். வாலைக் குழைத்து ஓடிவந்த அந்த நாய், ரொட்டித் துண்டை வாயால் கவ்விக் கொண்டது. தன் பசி தீர அதை ஆவலுடன் உண்ணத் தொடங்கியது. தர்கட்டை நன்றியோடு பார்த்து வாலை ஆட்டியது . சந்தோஷத்தில் அதன் கண்கள் பளபளவென மின்னிக்கொண்டிருந்தன. நாய் உண்பதைப் பார்த்து நிறைவடைந்த தர்கட், சமையலறை நோக்கிச் சென்றார். சமையல் முடித்துச் சாப்பிட்டுவிட்டு, பாபாவை தரிசிக்க மசூதிக்குச் சென்றார்.
தர்கட்டை அன்போடு பார்த்த பாபா பேசலானார்.அம்மா! நான் மிகுந்த பசியோடு இருந்தேன். நீ கொடுத்த உணவால் பசியாறினேன். என் வயிறு நிறைந்தது. எப்போதும், இன்று நீ நடந்து கொண்ட விதத்தை நினைவில் கொள்.இப்படியே தொடர்ந்து நடப்பாயாக. என் பசிக்கு உணவிட மறந்துவிடாதே! தர்கட்டுக்கு ஒன்றும் புரியவில்லை. பாபாவுக்கு அவள் இன்று உணவிடவே இல்லையே? அவள் தயக்கத்தோடு பாபாவிடம் விளக்கம் கேட்டாள்: சுவாமி! நான் இன்று உங்களுக்கு உணவு வழங்கவே இல்லையே?
நீ அன்போடு அளித்த மொறுமொறுப்பான காய்ந்த ரொட்டியை நான் தானே அம்மா சாப்பிட்டேன்? நீ என் பசியைக் கண்டு இரக்கத்தோடு அதை எனக்கு வீசிப் போட்டாயே? அதற்குள்ளாகவா மறந்து போனாய்? எல்லா உயிரினங்களிலும் நான் தானே இருக்கிறேன்? எல்லாமாகவும் நான் தானே உலவிக் கொண்டிருக்கிறேன்?பசிக்கும் ஜீவன் எதற்கு உணவளித்தாலும், அது என்னையே வந்து சேரும். நீ அளித்த ரொட்டி என்னை வந்து சேர்ந்துவிட்டது! இதைக் கேட்ட திருமதி தர்கட் மெய் சிலிர்த்தார். பாபா எங்கும் நிறை ஞானப் பிரம்மம் என்பதை திருமதி தர்கட்டும் , அங்கிருந்த பக்தர்களும் உணர்ந்து கொண்டனர்.
உயிரினங்கள் மட்டுமின்றி பாபாவின் சொல்லுக்கு பஞ்ச பூதங்களும் கட்டப்பட்டன என்பதை குறிக்கும் சம்பவங்களை இப்போது பார்க்கலாம் . இருள் கவியத் தொடங்கியிருந்த ஒருநாள் மாலை நேரத்தில் , திடீரெனக் கடும் புயலும் பெருமழையும் சீரடியை தாக்கியது . அரைமணிநேரத்தில் தெருவெல்லாம் வெள்ளக் காடானது . தாழ்வான பகுதிகளில்இருந்த வீடுகளுக்குள்ளே வெள்ளம் வேகமாய்ப் புகுந்தது.
மக்கள் வீட்டுக்குள் வைத்திருந்த கோதுமை மாவும் பிற உணவுப் பொருட்களும் நீரில் கரைந்து ஓடின. கூரைகள் புயலின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் பிய்த்துக் கொண்டு காற்றில்பறந்தன. மக்கள் செய்வதறியாது பரிதவிப்போடு தங்கள் இல்லங்களை விட்டு வெளியே வந்து நின்றார்கள். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என கும்பல் கும்பலாகக் கொட்டும் மழையில் நனைந்து நின்றார்கள்.
இப்போது என்ன செய்யப் போகிறோம் , இந்தப் புயலிலிருந்தும் மழையிலிருந்தும் எப்படித் தப்பிப்பது? என்று சீரடி மக்கள் கலங்கி நின்றார்கள் . ஆடுமாடுகளோ கூட்டம் கூட்டமாக தங்கள் நாயகன் பாபாவின் மசூதி நோக்கி ஓடோடிச் சென்றன. அவை மசூதி வாயிலில் பாபாவின் கருணை வேண்டி நின்ற அற்புதக் காட்சியைப் பார்த்த மக்களுக்கு அப்போது தான் புத்தி எட்டியது . என்ன தான் இருந்தாலும் ஆறறிவு இல்லையா ? .
அந்த பசுக்கூட்டங்களுக்கு இருந்த தற்காப்பு உணர்வும் , தங்களைக் காக்க பாபா இருக்கிறார் என்ற எண்ணமும் இல்லாதது நினைத்து வருந்தினர் . ஆடு மாடுகளைப் பின்பற்றி தாங்களும் மசூதி நோக்கி ஓடலானார்கள். எல்லோரும் கூக்குரல் இட்டு பாபா! எங்களைக் காப்பாற்றுங்கள்! என்று அவரிடம் தஞ்சம் புகுந்தார்கள். தன்னிடம் சரண் புகுந்த மக்களையும், ஆடுமாடுகளையும் பரிவோடு பார்த்தார் பாபா . பின் திடீரெனச் சீற்றத்தோடு எழுந்து மசூதிக்கு வெளியே வந்து ஆகாயத்தை உற்றுப் பார்த்தார்.
இடியும் மின்னலும் பேய்க்காற்றும் சீரடியையே புரட்டிப் போட்டுக்கொண்டிருந்தன . அவரது விழிகள் கோவைப் பழமாய்ச் சிவந்தன. நிறுத்து! போதும் உன் சீற்றம்! என்று வானை நோக்கி உறுமினார் பாபா . எங்கு வந்து யாரிடம்ஆட்டம் போடுகிறாய்? சீரடியில் உள்ள ஆடுமாடுகள்,தாவரங்கள் உள்படஇங்கிருப்பவர்கள் எல்லோரும், என் பாதுகாப்பில் உள்ளது உனக்குத் தெரியாதா?ஜாக்கிரதை என்ற பாபாவின் முழக்கத்தைக் கேட்ட மக்கள் அச்சத்தோடு வியந்து, வாய்பொத்தி நின்றார்கள். இடி சத்தத்தையும் மீறி ஒலித்தது பாபாவின் குரல் .
அடுத்த கணம் ஆகாயத்தில் பெருத்த மாற்றம் தோன்றியது . சட்டென்று மழை நின்றது. புயல் குளிர்ந்த தென்றலாய் மாறியது , தான் செய்த தவறுக்கு மன்னிப்புக் கேட்பது போல் இருந்தது . மக்கள் பரவசத்தோடு பாபாவைக் கும்பிட்டார்கள். பின் மெல்லமெல்லக் கலைந்து தங்கள் இல்லம் சென்றார்கள்.
தன்னை சுற்றி நின்ற ஆடுமாடுகளைத் ஆதுரியத்துடன் தடவிக் கொடுத்தார் பாபா. பிரிந்துசெல்ல மனமே இல்லாமல் தயங்கித் தயங்கி நடந்துசென்ற மக்களையும் , ஆடு மாடுகளையும் , இல்லம்திரும்பும் வரை கருணையோடு பார்த்தவாறே மசூதி வாயிலில் நின்று கொண்டிருந்தார் பாபா. வானத்தில் தோன்றிய முழு நிலவு அந்த சூழலை மட்டும் இன்றி மக்களின் உள்ளங்களையும் குளிர்வித்தது .
மழையை மட்டுமல்ல,நெருப்பையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார் பாபா. ஒருநாள் மசூதியில் மக்கள் கூடியிருந்த நேரம் . மசூதியில் எப்போதும் துனி என்ற நெருப்பு எரிந்து கொண்டிருக்கும் . திடீரென அந்த நெருப்பு ஓங்கி எரியலாயிற்று. சடசடவெனப் பற்றிய நெருப்பு, மசூதியின் மேற்பகுதியைத் தொட்டுவிட்டது. இந்த நெருப்பு இப்போது எல்லா இடங்களிலும் பரவும்போல் தோன்ற மக்கள் பதைபதைத்தார்கள்.
பாபா, தம் கையில் எப்போதும் பயன்படுத்தும்சட்கா என்ற கம்பை எடுத்து , அருகே இருந்த தூணின் மீது ஓங்கி அடித்தார் . ம்! நெருப்பே! இறங்கு கீழே! எதற்கிந்த ஆவேசம்? நான் கட்டளையிடுகிறேன். உடனடியாய்க் கீழே இறங்கிவிடு! என்று உரக்க முழங்கினார். தூணில் அவர் அடித்த ஒவ்வோர் அடிக்கும் துனியில் எரிந்த அக்கினி ஜ்வாலை, கட்டுப்பட்டுப் படிப்படியாய்க் கீழே இறங்கியது. பின் எந்த ஆவேசமும் இல்லாமல்,சாதாரணமாய் எரியத் தொடங்கியது. அதுவரை பீதியில் உறைந்து நின்ற அடியவர்கள் பிரமித்தார்கள். பஞ்ச பூதங்களையும் பாபா தம் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டிருக்கிறார் என்று உணர்ந்து பணிவோடு அவரை வணங்கினார்கள்.
தன்னை சரணடைந்த சீரடி மக்களுக்காக புயலையும் மழையையும் கட்டுப்படுத்திய நம் சாயி , இப்போது மழையில்லாமல் தண்ணீருக்காக தவிக்கும் தன் பக்தர்களுக்காக கருணை காட்டாமல் போய் விடுவாரா என்ன ? தன் குழந்தைகளின் தாகம் தீர்க்க தன் கருணை மழையோடு அந்த வான் மழையை நமக்கு தந்தருள மாட்டாரா ? நாம் அனைவரும் அவர் பாத கமலங்களை சரண் புகுந்து வான் மழைக்கு பிராத்திப்போம். பாபா மனம் இறங்கினால் அந்த வான் இறங்கும் . வறட்சி நீங்கி பசுமை பூக்கட்டும் .
ஸ்ரீ சச்சிதானந்த சத் குரு சாய்நாத் மகாராஜ் கி ஜெய் .....
சாயி சரிதம் தொடரும்
Leave a Comment