“என்னை எவன் அன்புடன் கூப்பிடுகிறானோ அவனிடம் ஓடிச்சென்று நானே வெளிப்படையாகக் கலந்துகொள்கிறேன் ”- சீரடி சாய்பாபா.


 

 "ஆயிரக்கணக்கான மக்களைக் காப்பதற்காக, நான் ஆயிரக்கணக்கான மைல்கள் தூரம் செல்ல வேண்டியவனாக உள்ளேன்.என்னை நினைவில் கொண்டிருப்பவனை நான் எப்போதும் நினைத்துக்கொண்டு இருக்கிறேன்.  எனக்கு எவ்வித வாகனமோ, வண்டியோ, இரயிலோ, அல்லது விமானமோ தேவையில்லை.  என்னை எவன் அன்புடன் கூப்பிடுகிறானோ அவனிடம் ஓடிச்சென்று நானே வெளிப்படையாகக் கலந்துகொள்கிறேன் "- இது பகவான்  சீரடி நாதனின் வாக்கு .

 ஒவ்வொரு  நொடிப்பொழுதும் இதை மெய்ப்பிக்கும் வகையில் தன்னுடைய பக்தர்கள் வாழ்வில் அற்புதங்கள் செய்து வருகிறார் பாபா.

 மனித உருவில் பாபா வாழ்ந்த காலத்தில்  தனது பக்தர் ஒருவர்  வாழ்க்கையில் சாயி செய்த அற்புதத்தை இந்தப் பதிவில் பார்க்கலாம் .

 

சீரடியில், காஷிராம் என்றொரு  அடியவர் இருந்தார் . துணி வியாபாரியான அவர்  பாபாவின் மிகத் தீவிர பக்தர். கண் விழித்த நேரம் முதல் , உண்ணும் போதும், உறங்கும்போதும், கடையில் துணி விற்கும்போதும் எந்த நேரமும் பாபாவின்  நினைவிலேயே  காலம் கழித்து வந்தார் . பாபாவை ஸ்மரித்தார்  என்பதை விட பாபாவை உயிர் மூச்சாகவே சுவாசித்தார் அந்த பக்தர். பாபா மனிதவடிவில் வந்துள்ள தெய்வம் என்பதை முழுமையாக நம்பிய அவர் கிடைத்த நேரத்தில் எல்லாம் பாபாவை  தரிசிப்பதில் சந்தோஷம் அடைந்தார் .

 

அவரைப் பார்க்க செல்லும் போதெல்லாம் , அந்த கடவுளுக்கு நிவேதனப் பொருள் என எதையேனும் பக்தியோடு எடுத்துச்  செல்வது அவரின் வழக்கம் . அப்படித்தான் ஒருமுறை, பாபாவை தரிசிக்க  ஒரு சிறு துணிப்பையில், கொஞ்சம் சர்க்கரையை  எடுத்துக் கொண்டு, புறப்பட்டார்.

 

வழக்கம் போல் பாபாவின்  நினைவையே தனக்கு  துணையாக கொண்டு அவர் நடந்தபோது, அவரை சில திருடர்கள் தொடர்ந்தார்கள் . துணி வியாபாரி என்பதால் அவர் கையில்இருந்த பையை  பார்த்த அவர்கள், அந்தப் பையில் அன்றைய துணி வியாபாரத்தின் மூலம் கிடைத்த பணம் அல்லது  வேறு எதோ விலை உயர்ந்த பொருள் ஒன்றை வைத்திருப்பதாக  நினைத்தார்கள். அந்தப் பையில் இருந்தது வெறும் சர்க்கரைதான் என்பதை  அந்தத் திருடர்கள் அறியவில்லை.

 

வெறும் சர்க்கரைப் பையையா, இப்படி ஒருவன் மார்போடு சேர்த்து இறுகக் கையில் பிடித்துக் கொண்டு நடப்பான்?சந்தேகமில்லாமல் பையில்ஏதோ விலைமதிப்புள்ள பொருள் இருக்கிறது என்று திருடர்கள் தவறாக முடிவு கட்டினார்கள். காஷிராமை முற்றுகையிட்ட அவர்கள்., மிரட்டலுடன் கடுக்கன்களைக் கழற்றித் தரச் சொன்னார்கள்.பயந்துபோன, காஷிராம் உடனே கடுக்கன்களைக் கழற்றிக் கொடுத்து விட்டார். பின்னர்,கழுத்தில் இருந்த தங்கச்சங்கிலியைக் கழற்றித் தரச்சொன்னார்கள். உயிர் பிழைத்தால் போதும் என்று சங்கிலியையும் கொடுத்து விட்டார்.

 

மிச்சம் இருந்த அந்தச் சிறுபையைத் தருமாறு அதட்டினார்கள் . தெய்வத்திற்கான நிவேதனப் பொருளை அவர்களிடம் கொடுக்க மனமில்லை  காஷிராமிற்கு அடுத்த கணம் முற்றிலும் எதிர்பாராத ஒரு  திருப்பம் நிகழ்ந்தது .

 

அதே சமயத்தில்,சீரடி மசூதியில் பாபாவை தரிசித்துக் கொண்டிருந்தவர்களுக்கும் ஒரு   ஆச்சரியம் காத்திருந்தது . அத்தனை நேரம் கருணையே வடிவாக தங்களுடன் அமைந்திருந்த  திடீரென பாபா ஆவேசத்தோடு எழுந்து நின்றது அவர்களை ஆச்சரியப்படுத்தியது .  ஏன்  பாபா இப்படி திடீரென ஆவேசப்படுகிறார் என்று அவரை சுற்றியிருந்த பக்தர்களுக்கு புரியவில்லை. அவர்களின் ஆச்சர்யம் மேலும், அதிகமாகும் வகையில், பாபா தன் கைகளையும், கால்களையும்  காற்றில் யாருடனோ சண்டையிடுவது போல் வீசத்தொடங்கினார். இதெல்லாம் ஏன் , யாருக்காக நடக்கிறது  என்று பக்தர்கள் திகைப்போடு பாபாவையே பார்த்துக் கொண்டு இருந்தார்கள். ஆனால் பாபாவோ மிக கோபத்துடன்  காற்றில் சண்டையிட்டுக் கொண்டிருந்தார். விழிகள் கோபத்தில் செக்கசெவேலன  சிவக்க ,சீற்றத்தில் கொதித்துக் கொண்டிருந்தார் .

 

அதே நேரம்  அங்கே  கத்தியுடன் இருக்கும் திருடர்கள் முன் நின்றுக் கொண்டிருந்த காஷிராமின் உடல் ஒரு கணம் ஆவேசம் வந்தது போல் குலுங்கியது . தன் ஒரு கையில் பற்றிக் கொண்டிருந்த சர்க்கரைப் பையை இன்னும் இறுகப்பிடித்துக் கொண்டு தன் இன்னொரு கை மற்றும்  கால்களாலும் திருடர்களை ஆக்ரோஷமாகத் தாக்கத் தொடங்கினார்.இயல்பிலேயே காஷிராம் ஒற்றைநாடி மனிதர் . அவர் ஒருவரே  பலசாலிகளான . நான்கைந்து திருடர்ககளை புரட்டிப் போட்டதில் திருடர்கள் விக்கித்துப் போனார்கள்.

 

காஷிராமிடம் இருந்து பிடிங்கிய  கடுக்கன், சங்கிலி எல்லாவற்றையும்அங்கேயே போட்டுவிட்டு உயிர் பிழைத்தால் போதும் என்று ஓடலானார்கள்.  அப்படியும் காஷிராம் விடுவதாக இல்லை. மின்னலாக ஓடி, அவர்களை ஒரே  கொத்தாகப் பிடித்துக் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

 

பின் சங்கிலி, கடுக்கன் இவற்றோடு, அவரின் தெய்வத்திற்காக எடுத்துச் சென்ற  நிவேதனச் சர்க்கரையையும் எடுத்துக்கொண்டு மசூதி நோக்கி நடக்கலானார். திருடர்கள் அச்சத்தோடும், காவல்துறையினர் பிரமிப்போடும் அவரைப்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

 

காஷிராம்  மசூதியில் நுழைந்து பாபாவின் பாதங்களில் விழுந்து பணிந்தார். நிவேதனச் சர்க்கரைப் பையை அவரிடம் கொடுத்து,  ஏற்குமாறு வேண்டினார்.அதன் பிறகு  தான் பாபாவின் ஆவேசம் தணிந்து சாந்தியடைந்தார் .

 

 “அன்பனே! திருடர்களைக் காவல் துறையினரிடம் ஒப்படைத்து விட்டாயல்லவா?” என்று அமைதியாக, அவர் கேட்டபோது தான் காஷிராமுக்கே, சண்டையிட்டது தான் அல்ல, பாபா என்பது புரிந்தது. பாபாவின் தாமரைப் பூ பாதங்களை நன்றிப் பெருக்கோடு தன்  கண்ணீரால் கழுவினார் . தம் அடியவர்களைக் காப்பாற்ற பாபா எந்த ரூபத்திலும் எந்த இடத்தில் இருந்தாலும் ஓடி வருவார் என்பதற்கு இதை விட சான்று வேண்டுமா ?

 

 

 

சாய் சரிதம் தொடரும் ....



Leave a Comment