“என் குழந்தைகளைத் தந்தையான நான் காப்பாற்றாமல் வேறு யார் காப்பாற்றுவார்!”- சத்குரு சாயி


 

கடவுளை நம்பினோர் கை விடப்படார் என்பதற்கு நம் கலியுகக் கடவுளான சாயி ஒரு மிகச் சிறந்த உதாரணம் . ஒவ்வொரு நாளும் தன்னை சரணடைந்த அடியவர்களுக்கு தான் இருந்த இடத்தில் இருந்தே தன்னுடைய வரம் நல்கும் கரத்தை கொண்டு ஆசீர்வதிக்கும் கல்பக விருக்ஷம் அவர் . அந்த சீரடி மகானின் கருணையை தங்கள் வாழ்நாளில் தினம் தினம் உணரக் கூடிய பேறு பெற்றவர்கள் புண்ணியம் செய்தவர்கள் . நிறைய அடியவர்கள் தங்கள் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள பாபாவின் படத்தின் மூலமே அவரின் அற்புதங்களை கண்கூடாகப் பார்த்திருக்கிறார்கள் .  தன்  அடியவர்கள் தன்னை நினைக்கும்  நேரம் , நினைக்கும் தருணம்  எதிரே வந்து ஆட்கொள்ளும்  தயாளன் சீரடி சாயி .

 

சீரடியை அடுத்து இருந்த ஒரு ஊரிலும் பாபாவுக்கு ஒரு அடியவர் இருந்தார் . அவர் வாழ்வில் பாபா நிகழ்த்திய ஒரு அற்புதத்தைப் பார்க்கலாம் .  ஒரு சிறிய பள்ளிக்கூடம் ஒன்றில் பணியாற்றி வந்த மாதவராவ் மல்வந்த் தேஷ் பாண்டே பரம ஏழை . ஆனாலும் தன்னுடைய பூர்வ புண்ணிய பலனில் பணக்காரரான அந்த மனிதர் பாபாவின் பரம பக்தர் . பாபாவை தன்னுடைய  கண்கண்ட தெய்வமாகக் கருதி பூஜித்து வந்தார் . முழு முதற் கடவுளான தன்னுடைய சாயி , தன்னை எந்த தீங்கில் இருந்ததும் காப்பாற்றுவார் என்று அசைக்கமுடியாத நம்பிக்கை வைத்திருந்தார் . தான் சந்திக்கும் அன்றாட பிரச்சனைகளை சாயின் மூலம் தீர்வுக் கண்டு , அதற்கு அவருக்கு நன்றியும் செலுத்தி வந்தார் . தன்னுடைய பணிகளுக்கு இடையே , முடியும் போதெல்லாம் சீரடி சென்று பாபாவை தரிசனம் செய்து , அவரது அமுத மொழிகளை கேட்பதில் ஆனந்தம் அடைந்தார் .

 

ஒருநாள் மசூதிக்கு பாபாவை தரிசிக்கும் பொருட்டு , அவர் நாமத்தை ஸ்மரணம் செய்துக்கொண்டு சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தார் அப்போது திடீரென்று சாலையின் குறுக்காக ஊர்ந்து வந்த ஒரு கருநாகம்! அவரை  எதிர்பாராதவிதமாக  தீண்டி விட்டு விறுவிறுவென மறைந்துவிட்டது. கொடிய அந்த நாகப் பாம்பின் விஷம் அவரது உடலெங்கும் கிடுகிடுவெனப் பரவத் தொடங்கியது. .  கண் மூடி திறக்கும் நேரத்தில் இவை அனைத்தும் ஒரு கணத்தில் நடந்து விட்டது . அவர் மேனி நீலமாக மாறத் தொடங்கியது .  

 

வாயில் நுரை தள்ள  மாதவராவுக்கு  என்ன நடந்தது என்பது  அப்போது தான் சுதாரித்துக்கொண்டார் .  சாலையில் நடந்து கொண்டிருந்தவர்கள் அவர் நிலையைப் பார்த்து உதவ ஓடோடி வந்தார்கள். ஆனால் யாருக்கும் என்ன செய்வதெனத் தெரியவில்லை. அந்தக் கொடிய விஷத்தினால் அவர் முடிவு நெருங்கி விட்டதை உணர்ந்தார்கள் .  மற்றவர்கள் பதறினாலும் பாபாவின் மேல் உறுதியான நம்பிக்கை கொண்ட மாதவராவ் தன்னை தன் தெய்வம் காப்பாற்றும் என்று உறுதியாக நம்பினார் .  இதுவரை தன் வாழ்வின் எல்லா சோதனைகளிலும் உடனிருந்த சாயி இப்போது மட்டும் தன்னை விடடு விடுவாரா என்ன என்று பாபாவிடம் சரணடைந்தார் .   

 

அதற்குப் பிறகு   ஒருகணம் கூடத் தாமதிக்காமல் உடனடியாக பாபா தங்கியிருந்த மசூதிக்கு வாயில் நுரை தள்ளத் தள்ள ஓடி வந்தார். அவருடன் மற்றவர்களும் கவலையோடு அவரைப் பின்தொடர்ந்து வந்தார்கள் .  “ என்னைக் காப்பாற்றுங்கள் பாபா. என்னைக் காப்பாற்றுங்கள்! உங்களையே சரணடைந்திருக்கும் என்னைக் கைவிட்டு விடாதீர்கள்!” என்று கதறியவாறே மாதவராவ் மசூதிப் படிகளில் அந்த நிலைமையிலும்  தன்னால் இயன்றவரை வேகமாக ஏறினார் .  

 

கொட்டிய கருநாகத்தின் விஷத்தில் இருந்து பாபா எப்படி இவரைக் காப்பாற்ற போகிறாரோ என்று சந்தேகத்துடன் சிலரும் , பாபா நினைத்தால் எத்தகைய அற்புதத்தையும் செய்து விட முடியும் என்ற நம்பிக்கையுடன் சிலரும்  மக்கள் அவரை பின் தொடர்தார்கள் . தன்னிடம் முழு சரணாகதி  அடைந்து தன்னை நோக்கி மசூதி  படிமேல் ஏறிக் கொண்டிருந்தவரை  தன்னுடைய தீட்சணியமான கண்களால் பார்த்தார் பாபா. வாயில் நுரை தள்ளத் தள்ளப் படிகளில் மேலேறி வரும் தன் அடியவனைப் கொடிய பாம்பு கடித்திருக்கிறது என்பதை அந்த தெய்வம் புரிந்துக் கொண்டது .  

 

அடுத்த கணம் தன்னையே நம்பி வந்த அந்த அடியவரைப் பார்த்து, ஏறாதே! நான் கட்டளையிடுகிறேன். ஏறாதே! நில்! இறங்கு! உடனடியாகக் கீழே இறங்கு! என்று பாபா ஆக்ரோஷமாகக் கூச்சலிட்டார். அவரது உரத்த கூச்சல் அனைவரையும் திடுக்கிட வைத்தது .  கேட்ட மக்கள் அனைவரும் வெலவெலத்தார்கள். அந்த அடியவரோ தான் எந்தத் தவறும் செய்யவில்லையே! பாபா தன்னைக் காப்பாற்றுவார் என்றல்லவோ தேடிவந்தோம்,  ஆனாலும் பாபா ஏன் நம்மிடம் இப்படி நடந்துக் கொள்கிறார் என்று அப்படியே படிகளில் மேலே ஏறாது நின்றார். அவரது கண்களிலிருந்து கண்ணீர் பெருக  கூப்பியக் கரத்தோடு பாபாவையே பார்த்துக் கொண்டிருந்தார் . கூட்டத்தினரும்  பாபாவின் இந்த செய்கைக்கு காரணம் புரியாமல்  விக்கித்து நின்றனர்.

 

ஆனால், அடுத்த கணம் அங்கு கூடியிருந்த அனைவருக்கும் பாபா சொன்ன வார்த்தைகளின் பொருள் புரியத் தொடங்கியது. பாபா ஏறாதே! இறங்கு! என்று ஆணையிட்டது மாதவராவுக்கல்ல! மாதவராவின் உடலில் கிடுகிடுவென ஏறிக் கொண்டிருந்த கடுமையான விஷத்திற்கு! தான் என்பதை புரிந்துக் கொண்டனர் . இந்த உலகை சூழ்ந்துள்ள  பஞ்ச பூதங்களுமே பாபாவின் சொல்லுக்குக் கட்டுப்படும்  போது விஷமா அவரின் ஆணைக்கு அடங்காது ?  பாபாவின் ஆணைக்குப் பணிந்து, அடுத்த கணமே மாதவராவின் உடலில் இருந்து  விஷம் இறங்கத் தொடங்கியது. கொட்டுவாயின் வழியாக விஷம் வெளியேறியதையும், மாதவராவ் உடல் நீல நிறம் மாறிப் பழைய நிறம் பெறத் தொடங்கியதையும் பார்த்துப் பொதுமக்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள். தன் நிலைக்கு திரும்பிய மாதவராவ் படிகளில் தடதடவென மேலே ஏறிச்சென்று என்னைக் காப்பாற்றிய தெய்வமே! என்று பாபாவின் பாதங்களில் பணிந்தார்.

 

தன்னை நாடிவரும் அடியவர்களுக்கு என்றுமே  அரணாக நிற்கும் அந்தத் தாமரைப்பூம் பாதங்களை நன்றிப் பெருக்கோடு  தன்னுடைய  கண்ணீரால் கழுவினார். அவரை அள்ளியெடுத்த பாபா, “என் குழந்தைகளைத் தந்தையான நான் காப்பாற்றாமல் வேறு யார் காப்பாற்றுவார்!” என்றவாறே மாதவராவின் விழிகளில் வழிந்த கண்ணீரைத் தம் விரல்களால் துடைத்து விட்டார்.

கருணையே மனித உருவெடுத்து வந்ததைப் போன்ற பாபாவின்  வாயில் இருந்து வந்த இந்த வார்த்தைகளைக் கேட்ட பக்தர்கள் நெகிழ்ந்தார்கள். ஆள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரமாக தனது பக்தர்களுக்கு தனது கருணை ஊற்றை குறைவின்றி அளித்து வரும்  சாய் மகராஜின்  பாதம் பணிவோம் .

 

சாயி சரிதம் தொடரும் ...



Leave a Comment