“அடியவர்களின் நலன்களை கவனிப்பதே என் வேலை” - சீரடி சாயி


 

“என்னுடைய மசூதி என் பக்தர்களுக்கு அநேக ஆசிர்வாதங்களையும், புத்திமதிகளையும் கொடுக்கும்   என்பது  பாபாவின் வாக்கு . அந்த வாக்கை தனது சமாதி நிலையிலும் பாபா இன்று வரை காத்து வருகிறார் . அதை அவரின்  பக்தர்கள் இன்றளவும்  உணர்ந்து வருகிறார்கள் . எப்போதும் தன்னுடைய கையை உயர்த்தி ஆசி வழங்கும் நிலையிலேயே காணப்படும் சாயி , நான் எப்போதும் உன்னுடன் தானே இருக்கிறேன் என்று தன்னை நாடி வருபவர்களுக்கு சொல்லாமல் சொல்லி வருகிறார் .  உயர்த்திய அவருடைய கரங்கள் ஆசி வழங்குவது மட்டுமின்றி தீராத வியாதி மற்றும் கவலைகளால் பீடிக்கப்பட்டு தன்னிடம் அடைக்கலமாக வருபவர்களை அரவணைத்து தேற்றவும் செய்கிறது .

ஏனைய  துறவிகளைப் போல ஊர்ஊராய்ச் சுற்றும் வழக்கம் இல்லாத பாபா தன் வாழ் நாளில் ஷிர்டியை விட்டு எந்த ஊருக்கும்  சென்றதில்லை என்றால்  மற்றவர்களுக்கு நம்ப கஷ்டமாகத்தான் இருக்கும் ,   ஆனால் அது தான் உண்மை . பாபா தான் இருந்த சீரடியில் இருந்துக் கொண்டே  எல்லா இடங்களிலும் உள்ள தன் பக்தர்களுக்கு  காட்சி தரவும்  செய்தார் . அவர் எங்கும் நிறை பரப்பிரம்மம் . பாபாவின் இருப்பே சீரடியின் புனிதத் தன்மையை   மென்மேலும் உயரச் செய்தது .

 

அடியவர்களின்  வாழ்க்கையை  இனிப்பாக மாற்றும் சீரடி மகான்

 

ஒரு முறை சீரடியில்  இருந்த  இரண்டு கிணறுகளில்  ஒன்றில் தண்ணீர் வற்றி விட்டது. அதுதான்  மக்களுக்கு அதுவரை நல்ல தண்ணீர் தந்த கிணறு. இருந்த இன்னொரு கிணற்று நீரோ கடல் நீருக்கு சவால் விடும் அளவிற்கு   உப்பு கரித்தது. இது பற்றி பாபாவிடம்  சொல்ல சில பெண்மணிகள்  சென்றார்கள் . பஞ்ச பூதங்களையும் தம் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பாபாவிற்கு இது எம்மாத்திரம் ?.  ஆனாலும்  தன் குழந்தைகள் தங்களுக்கு வேண்டியதை  தன்னிடம் வாய் விட்டு கேட்டுப் பெற்றுக்கொள்ள வேண்டும்  என்பது தான்  அந்த தாயின்  அவா .

 

 தம்மை முற்றிலும் சரணடைந்த  அந்தப் பெண்மணிகளின் மேல் பாபாவுக்கு கருணை பொங்கியது.  “பல மூட்டை உப்பை அள்ளி யாரோ கிணற்று நீரில் கலந்ததுபோல் நீர் உப்பு கரிக்கிறதே பாபா? நீங்கள் ஏதாவது செய்யதகூடாதா? ” என்று  வாஞ்சையுடன் அவர்கள்  கேட்க , அவர்களின் அன்பான வேண்டுகோளை பாபா ஏற்றார்.  மசூதிக்கு அருகே உள்ள நந்தவனத்தில்இருந்து கொஞ்சம் மலர்களைப் பறித்துவரச் சொன்னார். மலர்களை தன் கையில் வைத்து கொண்டு கண்மூடிச் சற்றுநேரம் பிரார்த்தனை செய்தார். வாருங்கள்! என்று அவர்களை அழைத்துக்கொண்டு உப்பு கிணற்றை நோக்கிப் புறப்பட்டார். கையிலுள்ள மலர்களை கிணற்று நீரில் அர்ச்சிப்பது போல் தூவினார். இந்த கிணற்று நீரை நன்னீராக மாற்று என்ற பாபாவின்  கட்டளையை  ஏற்ற வருண பகவானும் தன்னுடைய நறுமணத்தை  தண்ணீரில்  பரவ விட்டார் . பாபாவின் கட்டளைக்கு பணியாத பஞ்ச பூதம் ஏது ? பெண்களும்  கண்மூடிப் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார்கள்.

 

கண்களை திறந்து  பார்த்த பெண்கள் , எதிரே நகைத்தவாறு நிற்கும்  பாபாவை பார்த்து ஆச்சரியத்தோடு கிணற்று நீரை குடங்களில் எடுத்தார்கள். நீரை கொஞ்சமாக  வாயில் விட்டு பார்த்தார்கள். என்ன  ஆச்சரியம் ...!!! உப்பு நீர் ,இப்போது பாபாவின்  கருணையால்  கல்கண்டை போல் இனித்தது .  ஜெய் சாயிநாத்! என்றவாறே பெண்மணிகள் பாபாவை வணங்கினார்கள். பாபா புன்முறுவல் பூத்தவாறே ,“என் பக்தர்களது இல்லங்களில் உணவு உடை இவற்றிற்கு எந்த வித குறைவும் வராது. உங்கள் மனத்தை என்னிடமே எப்போதும் செலுத்துங்கள். அடியவர்களின் நலன்களை கவனிப்பதே என் வேலை. கீதையில் கிருஷ்ணரும் இதைத் தானே சொல்கிறார்! ”என்று கூறி தாம் தங்கியிருந்த மசூதி நோக்கி நடந்தார் பாபா. அந்தப் பெண்மணிகள் நன்றிப் பெருக்கில் கண்கள் பணிக்க தண்ணீர் குடத்தைத் தூக்கிக் கொண்டு திரும்பித் திரும்பி பாபாவைப் பார்த்தவாறே இல்லம் நோக்கி நடந்தார்கள். இவ்விவரம் கிராமம் முழுவதும் பரவி . அக்கம் பக்கத்து கிராமங்களிலும் கூட இந்தச் செய்தி பரவலாயிற்று.

 

பாபாவை தியானிக்கும் அவரின் அடியவர்களின்  வாழ்க்கையும் கூட அவரது அருட்கருணையால் என்றென்றும்  தித்திக்கும்  என்பதில் ஐயம் ஏதும் இருக்க முடியுமோ  ? 

 

சாய்ராம் சரிதம் தொடரும் – படிக்கப் படிக்க நம் வாழ்வின் இருள் அகலும்…..

 

 



Leave a Comment