சாயி சீரடி சேர்ந்த கதை
குருவின் குருவானவர் கோபால்ராவ் தேஷ்முக்
குரு இல்லாத ஆன்மீக தேடல் என்றுமே நிறைவு பெற்றது இல்லை . இந்த உலகத்தில் தாய் தந்தையருக்கு அடுத்த ஸ்தானத்தில் இருப்பவர் குரு . மாதா, பிதா , குரு தெய்வம் என கடவுளுக்கும் முன்பே குருவுக்கு மரியாதை கொடுத்து வரும் நம் பாரத தேசத்தில் குருவுக்கு என்றுமே ஒரு மகத்தான இடம் உண்டு . குரு அடி பற்றி தன் வாழ்க்கையை நடத்துபவர்களுக்கு என்றுமே சோதனைகள் வந்ததில்லை . அஞ்ஞானம் நீங்கி ஞானம் பெற குருவின் திருவடிகளை தொழுதலை சாலச்சிறந்தது . சீரடி சாய் பாபாவும் சத்குரு சாயி என்றே தனது சீடர்களால் அழைக்கப்பட்டார் . அத்தகைய மஹா குருவின் ஆன்மீக குருநாதராக அறியப்பட்டவர் கோபால்ராவ் தேஷ்முக் என்ற ஞானி .
திருப்பதி வெங்கடாசலபதியாக காட்சியளித்த பால சாயி
சிறுவயதில் சீரடிக்கு வருவதற்கு முன்பு பாபா , முகம்மதியப் பெரியவர் ஒருவரிடம் வளர்ந்து வந்தார். தன் கண்ணுக்குள் வைத்து பாபாவை அந்தப் பெரியவர் காத்து வந்தார் . சிறிது நேரம் கூட பாபாவை பிரிந்து இருக்க முடியாத அளவிற்கு அவர் மீது அளவு கடந்த அன்பு வைத்து இருந்தார் . திடீரென்று ஒருநாள் அந்த முதியவர் இறந்து விட்ட நிலையில் பாபாவை அந்த ஊர் பெரியவர் ஒருவர் அழைத்துச் சென்று கோபால்ராவ் தேஷ்முக் என்பவரிடம் ஒப்படைத்து, இச்சிறுவனைக் கவனித்துக் கொள்ளுங்கள். இவனுக்கென்று யாரும் இல்லை என்று கூறி ஒப்படைத்தார் . தீவிர திருப்பதி வெங்கடாசலபதி பக்தரான கோபால்ராவ் தேஷ்முக்கை மக்கள், மகா ஞானியாகவே போற்றி வந்தனர். கோபால்ராவ் தேஷ்முக்கின் கண்களுக்கு, சாட்சாத் வெங்கடாசலபதியே நேரில் வந்து நிற்பது போன்ற உணர்வை அந்த பிஞ்சு குழந்தையின் முகம் ஏற்படுத்தியது . தனது குழந்தையைப் போலவே வளர்த்து வந்த கோபால்ராவ் தேஷ்முக்கை தமது ஞானகுருவாக எண்ணி அவரிடம் வளர்ந்து வந்தார் சீரடி மகான் .
பசுவின் மலடை நீக்கிய குரு
குருவும் சீடனும் மிகவும் அன்புடனும் மதிப்புடனும் மரியாதையுடனும் மக்களிடையே பேரும் புகழுடனும் இருந்தது அங்குள்ள சிலருக்குப்
பொறாமையை ஏற்படுத்தியது .ஒரு சமயம் குருவும் சீடனும் தனிமையில் இருக்கும்போது பொறாமை கொண்ட ஒருவன் கல்லால் அடித்தான். அந்தக் கல் பாபாவின் தலையில் பட்டது. தலையில் அடிபட்டவுடன் ரத்தம் கொட்டத் தொடங்கியது. அந்தக் கொடியவன் அத்தோடு நிற்காமல் மறுபடியும் ஒரு கல்லை எடுத்து அடித்தான்.
இதைக்கண்ட கோபால்ராவ் தேஷ்முக் எங்கே மறுபடியும் கல் , பாபாவின் மீது பட்டுவிடுமோ என்று அஞ்சி, பாபாவை மறைத்து முன்னால் வந்து நின்றார். அந்தக் கல் தேஷ்முக் மீது பட்டு ரத்தம் கொட்டத் தொடங்கியது. “என்னால் தானே உங்களுக்குத் தொந்தரவு உண்டாகிறது. அதனால் என்னை தனியே செல்ல அனுமதி கொடுங்கள்” என்று குருவிடம் பாபா கேட்டார்.
இதைக் கேட்ட குரு மிகவும் மனம் கலங்கி ,“பாபா மனம் வருத்தப்படாதே! உன்னால் உலகத்திற்கு பல நன்மைகள் உண்டாகப் போகிறது. நானோ விரைவில் இந்தப் பூமியை விட்டு நீங்கிச் செல்லப்போகிறவன். அதனால் இறையருளால் எனக்குக் கிடைத்த சகல வரங்களையும் சக்திகளையும் உனக்கு தாரை வார்த்துத் தரப்போகிறேன்” என்று கூறினார்.
அவர் அதோடு நிற்காமல், உடனே அதை நிறைவேற்றும் பொருட்டு, அருகே இருந்த பசுவிடம் பாலைக் கறந்து வரும்படி கூறினார். குருவின் கட்டளையைக் கேட்ட பாபா, பசுவிடம் பாலைக் கறந்து தரும்படி பசுவின் சொந்தக்காரனைக் கேட்டார். “ஐயா, இந்தப் பசு மலட்டுப்பசு. இதுவரை கன்று ஈனவே இல்லை.
ஆனபடியால் இது பால் கறக்காது” என்று சொன்னான் பசுவுக்குச் சொந்தக்காரன். இதைக் கேட்ட பாபா அவனையும் அவனது பசுவையும் குருவிடம் அழைத்துச் சென்றார். குரு பசுவின் மடியில் கைவைத்து தடவிக் கொடுத்தார். என்ன ஆச்சரியம்! மடியில் கைவைத்தவுடன் பால் அதிக அளவில் சுரந்து வந்தது.
பாபா பாலைக் கொண்டு வந்து குருவிடம் கொடுத்தார். பாலைப் பெற்றுக் கொண்ட குரு, “இன்று முதல், இந்த நொடி முதலே எமது எல்லா சக்திகளும் குரு கிருபையும் பரிபூரண மனநிறைவுடன் பாபாவிடம் கொடுக்கிறேன்” என்று கூறி பாபாவிடம் பாலைக் கொடுத்தார். அதே சமயம் பாபாவை கல்லால் அடித்த கயவன் தரையில் வீழ்ந்து இறந்தான்.
இதைக் கண்ட அவனது தோழர்கள் குருவின் கால்களில் விழுந்து, அவனை மன்னித்து உயிர்ப்பிச்சை அளிக்கும்படி வேண்டினார்கள். இதைக் கேட்ட குரு இவ்வாறு சொன்னார். “இனி எந்தச் சக்தியும் என்னிடம் இல்லை. எது ஆனாலும் பாபாவை வேண்டிக் கேட்டுக் கொள்ளுங்கள்” என்றார். அவர்களும் பாபாவை வேண்டி வணங்கி நின்றனர்.
பாபாவும் அவர்களைக் கனிவுடன் பார்த்தார். கருணா மூர்த்தியான பாபா தனது குருநாதரின் காலடிபட்ட மண்ணை எடுத்து பிணமாகக் கிடந்தவன் மேல் தூவினார். என்னே அதிசயம்! இறந்து கிடந்த அவன் உயிர் பெற்று எழுந்தான். எழுந்தவன் அப்படியே நெடுஞ்சாண் கிடையாக பாபாவின் கால்களில் விழுந்து தன்னை மன்னித்தருளும்படி வேண்டினான்.
கோபால் ராவ்தேஷ்முக் தமது உயிர் பிரிவதற்கு முன்பாக பாபாவை மேற்குத் திசையில் தேச சஞ்சாரம் செய்ய வேண்டினார். தமது குருவின் கட்டளைப்படி மேற்கு நோக்கி வந்து கொண்டு இருந்த பாபா இப்படி தான் சீரடி கிராமத்தை வந்தடைந்தார். சீரடி மக்களின் வாழ்வோடு ஒன்று கலந்தார் .
Leave a Comment