ஏறின எடை குறையும் அதிசய கருடாழ்வார்....


இந்து மதம் , பல ஆழ்ந்த வாழ்க்கை தத்துவங்களையும் , ஆச்சர்யமான பல நுட்பமான அதிசயங்களையும் தன்னுள் கொண்டுள்ளது . கோயில் , கோயில் கோபுரம் , பிரகாரம் , கொடி மரம் , பலி பீடம் , சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ள விதம் என ஒவ்வொரு படைப்பிலும் நம் முன்னோர்கள் காட்டிய நுட்பங்கள் , இன்றைய நவீன தொழில் நுட்பம் வளர்ச்சிக்கு சவால் விடுபவையே. இன்றைக்கும் எந்த நவீன தொழில் நுட்பமும் இன்னொரு தஞ்சை பெரிய கோயிலை கட்ட முடியாது என்பதே உண்மை.
நம் நாட்டில் ஒவ்வொரு கோயிலும் ஒரு பேரதிசயமே. உள்ளத்தை கொள்ளை கொள்ளும் கட்டடக்கலை , இதைத் தாண்டி சூட்சுமமான பல அரிய பொக்கிஷங்கள் நம் கோயில்களில் மறைந்து கிடக்கின்றது. இங்கு சில ஆன்மிக அதிசயங்களை உணர்வோம்.

ஸ்கேன் கருவிக்கு முன்பே கருவில் உள்ள குழந்தையின் வளர்ச்சியை சிற்பமாக்கிய அதிசயம்

திருப்பூரில் உள்ள குண்டடம் வடுக நாத பைரவர் கோவிலில் ஒரு குழந்தை தாயின் வயிற்றில் இருக்கும் பொழுது, அந்தந்த மாதக்கணக்கில் எந்த வடிவத்தில் , என்ன நிலையில் இருக்கும் என்பதை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சிற்பங்களாக கல்லில் வடித்து வைத்துள்ள நம் முன்னோர்களின் திறன் வியக்க வைக்கிறது . தொடர்ந்து வந்த பல அன்னியர் படை எடுப்பின் பொழுது கூட இந்த அதிசய சிற்பங்கள் சிதையாமல் கம்பீரமாக நிற்பதை பார்க்க முடிகிறது . காலங்களை முன் கூட்டி உணர்வதில் அறிவியலுக்கு அப்பாற்பட்ட அறிவை கொண்டவர்கள் நம் மூதாதையர் என்பதற்கு நிலைத்திருக்கும் சாட்சியாக நிற்கிறது இந்த சிற்ப காட்சிகள்.


சிங்கத்தின் வாயில் வழியே குளித்தவர்கள்

வாசல் வழிக்கு தமிழில் வாயில் என்றொரு சொல் உண்டு. சிங்கத்தின் வாயில் வழியே குளித்திருக்கிறார்கள் நம் முன்னோர். ஜெயங்கொண்டத்தில் உள்ள கங்கை கொண்ட சோழபுரம் கோவில் கிணறு தான் இந்த வரலாற்று அதிசயத்தின் சாட்சி. கங்கை கொண்ட சோழபுரம் கோவிலில் உள்ள கிணற்றிற்கு அருகில் ஒரு சிங்கத்தின் சிற்பம் இருக்கும். சிங்கத்தின் வாயில் தென்படும் ஒரு கதவின் மூலம் கீழே இறங்கினால் அந்த கிணற்றில் குளிக்கலாம். ஆனால் மேலேயிருந்து பார்ப்பவர்க்கு நாம் குளிப்பது தெரியாது. இது அன்றைய ராணிகள் பாதுகாப்பாக நீராட கட்டப்பட்ட கிணறு. அக்கோவிலில் உள்ள கருவறையில் சுவர்கள் மரகதகற்கள் பதிக்கப்பட்டவை . இதன் சிறப்பம்சமே வெளியே வெயில் அடித்தால் உள்ளே குளிரும். அதே போல வெளியே மழை பெய்தால் உள்ளே கதகதப்பாக இருக்கும். இது மட்டுமில்லாமல் கோவில் மேற்கூரையில் ஒரு ஆள் பதுங்கும் உயரத்தில் பாதுகாப்பு பெட்டகம் உள்ளது. போர் காலத்தில் ஆயுதங்களும் படைவீரர்களும் பதுங்கும் வகையில் கட்டியுள்ளார் சோழக் குலத் திலகம் ராஜேந்திர சோழர். கங்கை கொண்ட சோழ பெருமக்கள் புகழ் போற்றுவோம்.

ஏறின எடை குறையும் அதிசயம்

கும்பகோணம் அருகே , உள்ள நாச்சியார் கோவில் கருட சேவை மிகவும் பிரசித்தி வாய்ந்தது . இங்குள்ள கல் கருடாழ்வாரின் எடை அதிகமாகிக்கொண்டே போவது இன்று வரை அனைவருக்கும் வியப்பை அளிக்கக் கூடியது . காரணம் பெருமாள் புறப்பாட்டின் போது , சன்னதியிலிருந்து வெளியே வரும் வேளையில் கருடன் நான்கு பேர் தூக்கி வரும் அளவிற்கு தான் கனம் இருக்கும் . ஆனால் அதுவே பிரகாரத்தை சுற்றி வரும்போது எட்டு பேர் வேண்டும், அடுத்து பதினாறு பேர், பின்னர் வெளியே வரும் போது முப்பத்திரெண்டு பேர் , வெளியே வந்தவுடன் அறுபத்து நான்கு பேர் என எடை கூடி , தூக்கி வரும் ஆட்களின் எண்ணிக்கை அதிகமாகிகொண்டே போகும் . இதுவே , வெளியே இருந்து பிரகாரங்கள் சுற்றி சன்னதிக்கு உள்ளே திரும்பி வரும் போது ஏறின விகிதத்திலேயே எடை குறைந்து வரும் . காலங்களை கடந்து தொடர்ந்து வரும் இந்த அதிசயத்தின் காரணம் மிகவும் சுவாரசியமானது .

பெருமாள் மேதாவி முனிவருக்கு கொடுத்த வரத்தின் படி , தாயார் அன்ன வாகனத்தில் எழுந்தருளுகின்றாள் . பெருமாளோ கருடனில் எழுந்தருளுகின்றார். அன்னத்தை ஒப்பிடும் போது கருடன் பலம் மிகுந்தவர் , வேகமாக செல்லக்கூடிய பறவை. எனவே தான் கல் கருடனின் எடை கூடிக்கொண்டே செல்வதாக புராணம் கூறுகிறது . அதனால் இத் திருகோவிலில் இப்போதும் தாயாருக்கு தான் முதலிடம் .
பெருமாளை தாங்கி உலா வருவதால் கல் கருடன் முகத்தில் வியர்வை வரும் காட்சி பார்க்கும் பக்தர்களுக்கு எல்லாம் மெய் சிலிர்க்க செய்யும் .
ஆன்மீக அதிசயங்கள் வளரும் .



Leave a Comment