ஆன்ம குருவும் ஞான குருவும்


- "மாரி மைந்தன்" சிவராமன்

திருமந்திரம் எளிய விளக்க உரை- 8

பிதற்றுகின்றேன் என்றும் பேர் நந்தி தன்னை 

இயற்றுவன் நெஞ்சத் திரவும் பகலும் 

முயற்றுவன் ஓங்கொளி வண்ணன் எம்மானை

இயற்றிகழ் சோதி இறைவனுமாமே.

( திருமந்திரம் -  திருமூலர் வரலாறு )

விளக்கவுரை:

எப்போதும் 
என் குருவான 
எம் பெருமான் 
நந்தி பிரானின் 
திருப் பெயரை 
என் நாவினில்
வைத்து 
திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருப்பேன்.

அந்த ஆதி சித்தனின்
அற்புதங்களைப் பித்தனைப் போல் பிதற்றிக் கொண்டிருப்பேன்.

அவனையே 
என் நெஞ்சத்தில் வைத்து 
இரவும் பகலும் இடையறாது 
தவம் நோற்பேன்.

யாராலும் 
தூண்ட முடியாத சுயமாக ஒளிர்ந்து இயல்பாகத் திகழும் ஜோதியே அவன்.

அந்த 
பெரும் 
ஜோதியனை 
பொன் மயமானவனை என்  மன்னவனை அடைவதற்கு முயல்வேன்.

இப்படி 
பற்றியும்
இயற்றியும்
முயன்றும் 
நான் கண்ட 
நந்தீசப் பெருமானை எல்லோரும் கண்டுணர்ந்து மெய்யின்பம் 
பெற வேண்டும்.

இத் திருமந்திரத்தின் வாயிலாக
மறை பொருள் ஒன்றையும் உணர்த்துகிறார் 
மூலர் பெருமான். 

நம் அகத்தே இருப்பது ஒரு குரு. 
அவர் ஆன்ம குரு.

புறத்தே இருக்கும் குரு ஞானகுரு.

அகத்தே இருக்கும் 
குரு தான் 
நமக்குப்
புறத்தே இருக்கும்
ஞானகுருவை அடையாளம் காட்டுவார்.

ஞான குருவின் துணையோடு நாம் முயன்றால் 
அகத்தே இயல்பாய் ஒளியாய் இருக்கும் ஆதி குருவை உணரலாம்.

திருமூலர்  நந்தீஸ்வரரை
ஞான குருவாகவும் அகத்தில் இருக்கும் அருட்பெரும்ஜோதியை 
ஆன்ம குருவாகவும் உணர்ந்து கொண்டவர்.

திருமூலர் 
தனது குருவாக நந்தீஸ்வரரைக் குறிப்பிடுகிறார்.

எல்லோரும் ஞானகுருவாக நந்தீஸ்வரரைக் கொள்ள வேண்டும் என்பதல்ல பொருள்.

ஒவ்வொருவரும் தங்கள் குருவை தாங்களே  
அக குருமூலம் 
அடையாளம் 
கொள்ள வேண்டும் என்பதே 
இம்மந்திரத்தின் நுட்பமான
மறைபொருள்.



Leave a Comment