சிவ சிந்தனையோடு இருந்தால் மட்டுமே பேரின்பம்
- "மாரி மைந்தன்" சிவராமன்
திருமந்திரம்
எளிய விளக்க உரை- 7
மாரி மைந்தன் சிவராமன்
மனையுள் இருந்தவர் மாதவர் ஒப்பர்
நினைவுள் இருந்தவர் நேசத்துள் நிற்பர்
பனையுள் இருந்த பருந்து போல்
நினையாத வர்க்கில்லை நின் இன்பம்தானே.
இல்லறத்தில் இருந்தவாறே ஈசனை உள்ளத்தில் நினைத்துக்கொண்டு வணங்கி வாழ்பவர் பெருந் தவம் செய்பவர்களுக்கு சமமாக கருதப்படுவர்.
எப்போதும் ஈசனை அகத்துள் நிறுத்திக் கொண்டு தவம் செய்து வருபவர் அவனது நேசத்துள் என்றென்றும் நிலைத்து நிற்பர்.
இதை பின்வருமாறும் சொல்லலாம்.
ஈசனை அன்பு பிடிக்குள் வைத்திருப்போரை அவன் அன்பே சிவம் எனக் காட்டி அருகிருந்து அருள்வான்.
இதுபோல் ஈசனின் அன்பை அறியாதவர்கள் பனைமரத்தில் அமர்ந்தும் பனம்பழத்து அருமை அறியாமல் சிறிது நேரம் இளைப்பாறிவிட்டு பழத்தை உண்ணாமல் பறந்துவிடும் பருந்துக்கு சமமானவர்களே.
இவ்வுலகிற்கு வந்து இறைவனை நினையாமல் இருந்துவிட்டு ஈசனின் அன்பை உணராமல் வாழ்ந்து வருபவர்கள் கடைசியில் காலன் கையில் அகப்பட்டுக் காலமாகி விடுவர்.
சுருக்கமாக சொன்னால், இல்லற வாழ்க்கையில் இருப்போர் சிவ சிந்தனையோடு இருந்தால் மட்டுமே பேரின்பம் வற்றாதிருக்கும். இறவாப் பேரின்பம் சித்தியாகும்.
Leave a Comment