உலகின் மிகப்பெரிய ஆலயம் - 15
அடர்ந்த காட்டுக்குள் சென்று கொண்டிருந்தோம். அரை மயக்கத்தில் இருந்தேன் நான். செல்லத் தூக்கம் கலைந்தபோது, வாகனத்தின் இருபுறமும் அகழி தென்பட்டது. ஒரு பக்கம் அசுரர்களும் மறுபக்கம் தேவர்களும் வாசுகிப் பாம்பைப் பிடித்துப் பாற்கடலைக் கடையும் சிற்பம் என்பது பார்த்த மாத்திரத்திலேயே தெரிந்தது. காலம் இந்தச் சிற்பங்களை சின்னாபின்னப்படுத்தி வைத்திருக்கிறது. ஆனாலும் என்ன, இன்னும் அதன் அழகு மிச்சமிருக்கிறது.
அடர்ந்த காட்டுக்குள் பசுமையும் நீர்மையும் சூழ்ந்திருக்க, இலேசான தூறலுக்கு இடையே அந்தச் சிற்பங்களைக் கண்ணாடி வழியே பார்ப்பது கனவு போலிருந்தது. இறங்கிப் பார்க்க நேரப் பற்றாக்குறை இடங்கொடுக்கவில்லை. அது என்னவென்று தெரியாமலேயே அதை முன்பு படங்களில் பார்த்திருக்கிறேன். அருகில் வரும்போது அதை நிறுத்தி நிதானமாய்ப் பார்க்க வாய்ப்பு இல்லாமற் போனது வருத்தம்தான்.
பிதுங்கிய விழிகளும் கீழ்நோக்கி வளைந்த வாய்களுமாக அசுரர்கள் வரிசையாக நின்றிருந்தனர். சலனமற்ற முகம் அமைதியில் ஆழ்ந்திருக்க, ஏகாக்கிரஹ சிந்தையோடு தென்பட்டனர் தேவர்கள். நாம் சிறுவயதில் படித்த கேலிச் சித்திரக் கதைகளில் வரும் சித்திரக் குள்ளர்களைப் போல அசுரர்கள் என் கண்களுக்குத் தென்பட்டனர்.
பாம்பு வடம் இடையிடையே உடைந்து தொடர்பு விட்டுப்போயிருந்தது. சாலையிலிருந்து பார்க்கும்போது பின்னணியில் வெள்ளக்காடும் காடும் மட்டும்தான் தெரிகிறது. எவ்வித மின்சாரக் கம்பங்களோ தொலைத் தொடர்புக் கோபுரங்களோ தெரியவில்லை. சற்றுத் தொலைவில் மழை பெய்து கொண்டிருந்தது புகைமூட்டம் போலிருந்தது. ஆகவே, அதன் பழமையை நன்கு அனுபவிக்க முடிந்தது எங்களால். அசுரர்களின் முகபாவம் எப்போது வேண்டுமானாலும் எங்கள் பக்கம் திரும்புவோம் என்பது போலிருந்தது.
பாலம் போன்ற அந்த இடத்துக்கு நாக பாலம் என்றே பெயராம். அதைக் கடந்து வந்து வாகனத்தை நிறுத்தினார் ஓட்டுநர். இறங்கியதும் எங்கள் எதிரே தோன்றியது பாயோன் ஆலயம். என் இதயம் ஒரு கணம் நின்று துடித்தது என்று சொன்னால், இதுவரை இந்தக் கட்டுரைத் தொடரைப் படித்து வருபவர்கள் நம்புவீர்கள் என நம்புகிறேன். இதுவரை நாம் பார்த்தறியாத ஓர் உலகம் கண்முன் எழுந்து நின்றால் எப்படியிருக்கும் ?
இந்தியக் கலைமனம் இதுவரை கற்பனை செய்து பார்த்திராத ஒரு வடிவத்தில் இருந்தது பாயோன் ஆலயம். நாங்கள் சென்ற நேரம் மழை பெய்திருந்தது. கோயிலுக்கு முன்னால் தேங்கிக் கிடந்த தண்ணீரில் இன்னுமொரு பாயோன் கோயில் கண்ணாடிப் பிரதிபலிப்பாய்த் தெரிந்தது. கற்பாளங்கள் மழையில் நனைந்து வெயிலில் காய்ந்து, கல்லில் படிந்த பாசி பூத்து, வெளுத்து, அப்படியே படை படையாய்ப் படர்ந்திருந்தது. புதிதாய் முளைத்துவரும் பாசி, மெல்லிய பச்சைப் போர்வை போல் சில இடங்களைப் போர்த்தியிருந்தது.
இந்தக் கோயிலுக்கு, அங்கோர் வாட்டைப் போல் பெரிய மதில் சுவர் ஏதுமில்லை. ஏனென்றால், இது ஒரு மாபெரும் நகரின் நடுவில் உள்ள ஆலயம். நகருக்கான சுற்றுச்சுவரும் அகழியும் இருந்ததால், இதற்கெனத் தனியே சுற்றுச் சுவரும் அகழியும் இல்லை என்கிறது குறிப்பு. நாம் முதலில் கடந்து வந்த நாக பாலம், நகருக்கான அகழியைக் கடக்க உதவிய பாலமாக இருந்திருக்கலாம். அங்கோர் வாட் ஆலயத்தை அடர்நீல வெல்வெட் பெட்டிக்குள் வைத்த வைரம் என்று சொல்லலாம். முதலில் அது, நீண்ட பீடிகையோடு தன்னுடைய அழகை ஆராதிக்கத் தேவையான மனநிலைக்கு நம்மைக் கொண்டுவந்த பிறகுதான் தன்னுடைய முழு அழகை வெளிக்காட்டுகிறது.
ஆனால் பாயோன் அப்படியல்ல. அது சூரிய வெளிச்சத்தில் திறந்து வைக்கப்பட்ட வைரம். பட்டை தீட்டப்பட்ட கரிய (பசும் ?) வைரம்.. ஆலயம், எந்த வடிவத்திலும் சேர்த்தியில்லாத ஒரு வடிவத்தில் தெரிகிறது தொலைவிலிருந்து பார்க்கும்போது. சதுரமா, செவ்வகமா, வட்டமா, கோளமா என்றால் எல்லாமும்தான் என்று சொல்லலாம். இந்தக் கோயில் முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டதா என்பதே சந்தேகம்தான் என்கின்றனர் தொல்லியல் அறிஞர்கள். கோயிலைச் சுற்றிலும் கற்கள், கற்கள், கற்கள் எண்ணற்ற கற்கள்.
இப்போதுள்ள கோயிலைச் சுற்றி வேறு பெரிய கட்டுமானங்கள் இருந்தனவா.. இல்லை இதே கோயிலின் சில பகுதிகள் நிலநடுக்கம், புயல் போன்ற இயற்கைச் சீற்றங்களால் சிதைந்து விழுந்தனவா தெரியவில்லை. ஒவ்வொரு திசைக்கும் மூன்று வாயில்கள் இருந்தன. நடுவில் இருந்தது முக்கிய நுழைவாயில். எஞ்சியவை சிறிய பக்க வாயில்கள். ஒவ்வொரு வாயிலுக்கும் மேல் கோபுரம் போன்ற அமைப்பு. அதன் நாலுபக்கமும் நான்கு முகங்கள். அவலோகிதேஸ்வரர் முகங்கள்.
பௌத்த நம்பிக்கையின்படி, கருணைக்கான போதிச்சத்துவர் இந்த அவலோகிதேஸ்வரர் என்கிறது விக்கிப்பீடியா. அவலோகிதேஸ்வரர் என்ற சொல்லுக்கு, ஜெயமோகன் அவ்வண்ணமே வந்தவர் என்று பொருள் தருகிறார். சொல்லை வெல்ல உதவுபவர் அவலோகிதேஸ்வரர் என்பது பௌத்த நம்பிக்கை என்கிறார் ஜெமோ. சமஸ்கிருதத்தில், கீழ்நோக்கிப் பார்க்கும் இறைவன் என்று பொருளாம். அதற்கு ஏற்றாற்போல் மேலிருந்து நாலாபக்கமும் கீழே பார்க்கும்படியாகத்தான் முகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கருணையின் வடிவம்தான் இந்த அவலோகிதேஸ்வரர் என்பதை ஏற்கும்படியாகத்தான் சிலைகளின் முகபாவமும் அமைந்துள்ளது. அரைக் கண் மூடிய தியான நிலை. இதழ்க் கடையோரம் விரியும் இலேசான புன்னகை.. கம்போடியர்களுக்கு உரித்தான தடித்த உதடுகள். அகண்ட தட்டையான நாசி.. வடிந்த காதுகள். மூக்கில் வளையம் மாட்டுவதற்கான துளைகள் தெரிகின்றன. சில முகங்களில் இரண்டு துளைகள் உள்ளன. சிலவற்றில் ஒன்றுதான் தெளிவாகத் தெரிகிறது. தலையில் கிரீடம் தெரிகிறது. அடுக்கடுக்காக நான்கு கிரீடங்களும் இணையும் இடம் தாமரை மலரின் மடல்களோடு சேர்ந்து கொள்கிறது. முகங்களுக்கு மேல் உச்சியில் பெரிய தாமரைப் பூவின் மடல்கள் விரிந்த தோற்றம்.
இந்த முகங்களுக்கு, “தென்கிழக்காசியாவின் மோனலிசா” என்ற பட்டப் பெயரும் உண்டு. தஞ்சாவூரிலிருந்து கும்பகோணம் செல்லும் வழியில்,அய்யம்பேட்டைக்கு முன்னால், பசுபதிகோயில் என்று ஓர் ஊர் வரும். அதற்குச் சற்று முன்னால், இடப்பக்கம் திரும்பி வயல்களின் ஊடாகச் சென்றால் ஓரிரு கிலோமீட்டர் தொலைவில் திருப்புள்ளமங்கை என்னும் வயல்சூழ் கிராமம் வரும். அங்குள்ள முற்காலச் சோழர் கோயிலின் கருவறைக்குப் பின்னே இலிங்கோத்பவருக்குப் பக்கவாட்டில் பிரம்மனின் சிற்பம் ஒன்று இருக்கும். அதுவும் இப்படித்தான் மிக இலேசாக நம்மைப் பார்த்துப் புன்னகைக்கும்.
பிரம்மனின் நாசியும் கொழுமிய கன்னங்களும், தலை அலங்காரமும் நாள் பூராவும் நம்மைப் பார்த்துக் கொண்டே இருக்கச் சொல்லும். “இவன் பிரம்மனா மன்மதனா? இப்படி மயக்குகிறானே” எனத் தோன்றும். சோழர் காலச் சிற்பங்களில் ஆகச் சிறந்த பத்தில் ஒன்றாக நான் அதைப் பட்டியலிடுவேன். சரி.. பசுபதிகோயிலில் இருந்து பாயோனுக்கு வருவோம்.
12-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி அல்லது 13-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்தக் கோயில் கட்டப்பட்டிருக்கலாம் என்பது ஆய்வாளர்களின் நம்பிக்கை. மஹாயான பௌத்தத்தைக் கடைப்பிடித்த மன்னன் ஏழாம் ஜெயவர்மன் கட்டிய கோயில் இது. தனது புதிய தலைநகர் அங்கோர் தாமில், அந்த மன்னன் நிறுவிய அதிகாரபூர்வ ஆலயம் பாயோன். அவலோகிதேஸ்வரரின் முகங்கள், உண்மையில் ஏழாம் ஜெயவர்மனின் முகம்தான் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. அரசனை ஆண்டவனாகக் கருதிய காலம் அது. ஏழாம் ஜெயவர்மன் சிலையில் உள்ள முகமும், பாயோன் ஆலய முகமும் பெரிதும் ஒத்துப் போவதை அதற்கான ஆதாரமாகக் காட்டுகின்றனர் ஒருசாரார்.
கம்போடியத் தலைநகர் புனோம் பென் தேசிய அரும்பொருளகத்திலுள்ள ஒரு சிலை, ஏழாம் ஜெயவர்மனின் சிலை என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர். அதன் முகச் சாயலும், பாயோன் கல்முகங்களின் சாயலும் பெரிதும் ஒத்துப் போகின்றன.
கடவுளின் அம்சமாகத் தன்னை முன்னிறுத்தினால்தான் குடிகளைத் தன்பிடியில் வைத்திருக்க முடியும் என்று மன்னர்கள் நம்பியிருக்கலாம். தாய்லந்தில், இன்னமும் மன்னரை இராமரின் அவதாரமாகவே கருதுகின்றனர் மக்கள். அண்மையில் மறைந்த மன்னர் பூமிபோன் அதுல்யதேயை ராமா ராமா என்றுதான் அழைக்கின்றனர் மக்கள்.
கெமர் காலத்தில் கட்டப்பட்ட ஏராளமான ஆலயங்களில் இருந்து பாயோனை வேறுபடுத்திக் காட்டும் மிக முக்கிய அம்சம் ஜீவகளை ததும்பும் இந்தக் கல்முகங்கள். பாயோன் ஆலயத்தில் இப்போது எஞ்சியுள்ள சுமார் 50 கோபுரங்களிலும் சேர்த்து இருநூற்றுக்கும் மேற்பட்ட முகங்கள் புன்னகையில் உறைந்துள்ளன. எல்லாத் திக்குகளையும் அந்த முகங்கள் பார்ப்பது போல் மன்னன் ஜெயவர்மனின் அரசு எல்லாத் திசைகளையும் தன் குடைக்கீழ் கொண்டுவந்து நிர்வகித்தது என்பதன் அடையாளமாகவும் இந்த முகங்கள் கருதப்படுகின்றன.
உண்மையோ பொய்யோ !.. இந்தத் தகவலும் இந்த முகங்களுக்குப் பொருத்தமாகத்தான் இருக்கிறது. ஏனென்றால், கெமர் பேரரசின் பொற்காலங்களில் ஒன்றின்போது கட்டப்பட்ட ஆலயம் இது. கெமர் பேரரசின் வரலாற்றில் அதிக வலிமை மிக்க மன்னர்களில் ஒருவர், ஏழாம் ஜெயவர்மன். அவரது ஆட்சிக் காலம் கி.பி. 1181 - 1218.
அங்கோர் வாட், பாயோன் உள்ளிட்ட இவ்வளவு பெரிய, கலைநயமிக்க ஆலயங்களைக் கட்ட வேண்டுமானால், பெரும் பொருள் வசதி வேண்டும். போர் அச்சுறுத்தல் இல்லாத அமைதி நிலவ வேண்டும் உள்நாட்டில். எதிரிகளின் படையெடுப்பு அச்சுறுத்தல் உள்ள நாட்டில் இத்தனை பிரமாண்டமான பேராலயங்கள் எழுவது சாத்தியமல்ல.
பாயோன் ஆலயம் மஹாயான பௌத்த ஆலயமாகக் கட்டப்பட்டாலும், ஏழாம் ஜெயவர்மனின் மறைவுக்குப் பிறகு ஏற்பட்ட ஆட்சி மாற்றம் அங்கு இந்து சமய அம்சங்களையும், தேரவாத பௌத்த அம்சங்களையும் இணைத்தது. அதனால்தான் இது ஒரு கலவையான தோற்றத்தில் இருப்பதாக நினைக்கிறேன். 13-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், எட்டாம் ஜெயவர்மன் இந்து சமயத்துக்கு மாற, அதற்கேற்ப பாயோன் மாற்றமடைந்துள்ளது. அடுத்த சில நூற்றாண்டுகளில் தேரவாத பௌத்தம் செல்வாக்குப்பெற, அதற்கேற்பவும் ஆலயம் மாற்றப்பட்டது. நாளடைவில், காட்டுக்குள் ஆலயம் கைவிடப்படுகிறது. எப்போது, யாரால் ஆலயம் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது என்பது பற்றிச் சரியான தகவல் இல்லை. 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான் இந்த ஆலயத்தைச் சீரமைக்கும் பணி தொடங்கியது.
பாயோன் ஆலயம், அங்கோர் வாட்டைப் போல இருந்தாலும், அங்கோர் வாட்டைப் போல இல்லை. முற்றிலும் மாறுபட்ட கலைநயம் தெரிகிறது இந்தக் கோயிலில். அங்கோர் வாட்டில் கட்டடக் கட்டுமானத்தில் ஒரு லயம் இருந்தது. ஆனால், இதில் அப்படி இல்லை. ஓர் ஒழுங்கற்றதன்மை உள்ளது இதில். அங்கோர் வாட், தோட்டத்தில் நட்டு வளர்த்து நறுக்கி விட்ட செடியைப் போன்ற ஓர் ஒழுங்கில் இருக்கிறது என்றால், பாயோன் கட்டற்று வளர்ந்து பெருகிக் காட்டை நிறைக்கும் மரம் போல ஒரு கவர்ச்சியோடு ஒளிர்கிறது. பிரமாண்டத்தை நான் சொல்லவில்லை. ஆலயத்தின் கட்டட அமைதியைச் சொல்கிறேன்.
அங்கோர் வாட் உருவாக்கப்பட்டு சுமார் 100 ஆண்டுகள் கழித்து உருவான கோயில் இது. இந்தக் கோயில் எங்களுக்கு பிரமாண்டமான ஒன்றாகத் தென்படவில்லை. சிக்கலான கட்டட அமைப்பைக் காட்டி எங்களை மீண்டும் மீண்டும் வியக்க வைத்தது இது. இதன் கட்டுமான முறையை சிந்திக்க சிந்திக்க, எனக்கு வெறுமைதான் மிஞ்சியது.
நிர்மலமான வானில், தெளிவாகத் தெரியும் நட்சத்திரங்களைப் பார்க்க நேர்கையில், வானியல் பற்றி நான் யோசிப்பதுண்டு. இப்போது நாம் பார்க்கும் நட்சத்திரப் பிரகாசமே ஏழெட்டு ஒளி ஆண்டுகளுக்கு முன் அங்கிருந்து புறப்பட்ட வெளிச்சமாம். காற்றில் ஒளியின் வேகம் ஒரு விநாடிக்கு சுமார் 3 இலட்சம் கிலோமீட்டர். ஓர் ஒளி ஆண்டு என்பது ஒன்பது டிரில்லியன் கிலோமீட்டர். அதை எட்டால் பெருக்கினால் எத்தனை பூச்சியம் வருமென நீங்களே கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள். நான் கணக்கில் புலியல்ல, பூனை... பூமி, சந்திரன், சூரிய மண்டலம், நட்சத்திரங்கள், கிரஹங்கள், துணைக் கிரஹங்கள், நிலாக்கள், பால்வெளி, பிரபஞ்சம், கருந்துளை என்று கன்னாபின்னாவென யோசித்து அதற்கும் அப்பால்.. அதற்கும் அப்பால்.. என்று யோசித்து யோசித்து முடியாமல் களைத்துப் போய்க் கண்ணயர்ந்து விடுவேன்.
அதுபோல் இந்தக் கோயிலின் நடுப்பகுதியில் நின்று அண்ணாந்து பார்க்கும்போது அதன் கட்டுமானம் என்னைத் தலைசுற்றிப் போக வைத்தது. எத்தனை கூரைகள் ? எத்தனை முகங்கள் ? எத்தனை பலகணிகள் ? எத்தனை நிலைவாசல்கள் ? எண்ண எண்ண வியப்பின் எல்லை விரிந்து கொண்டே போகிறது.
அங்கோர் வாட்டாவது பெரிய அகழி, மதில் சுவர் என்று ஏக ஜபர்தஸ்துகளோடு நிற்கிறது. ஆனால் பாயோன் அடர்ந்த காட்டுக்குள் அம்மணமாய் நிற்கிறது. கோயிலின் எந்தப் பக்கம் போனாலும் மரக் கூட்டத்துக்குள் கொண்டுபோய் விடுகிறது பாதை. மரகதப் பொதிக்குள் கிடக்கிறது இந்த வைரக்கல்.
மலைத்துப் போய் நின்றால் கதைக்கு ஆகுமா ? உள்ளே போவோம். நாங்கள் போய் இறங்கியது தெற்கத்தி வாசல். அங்கிருந்து வலப்பக்கமாகத் திரும்பி நடக்கத் தொடங்கினோம். அங்கோர் வாட்டைப் போல் பாயோனும் மூன்று நிலைக் கட்டுமானம். முதலிரண்டும் சதுர வடிவங்கள். கருவறை போன்ற நடுப்பகுதியோ, வட்ட வடிவத்திலானது. முதல் சுற்றுத் தாழ்வாரத்தில் நடக்கத் தொடங்கியதுமே எங்களுக்கு இடப்பக்கமாக புடைப்புச் சிற்பங்கள் வரத் தொடங்கின.
அங்கோர் வாட் புடைப்புச் சிற்பங்கள், கூரையிட்ட தாழ்வாரத்தில் இருக்கும். ஆனால், இங்கே மேலே இருந்த கூரை இப்போது இல்லை. சிதைந்து போனதற்கான தடயங்கள் தென்படுகின்றன. ஒருவேளை இந்த முதல் சுற்றுத் தாழ்வாரத்தில் மரக்கூரை வேயப்பட்டிருக்கலாம் என்கிறது கம்போடிய சுற்றுலாத் துறைக் குறிப்பு. இந்த முதல் தாழ்வாரத்தில் போர்க்களக் காட்சிகளும், அன்றாட வாழ்க்கைக் காட்சிகளும் சித்திரிக்கப்பட்டுள்ளன. போர்க் காட்சிகளில், மாபெரும் படகுகளில் சென்று போரிடும் காட்சி மிக நீளமானது. இது கம்போடியர்களும் சாம் வீரர்களும் போரிடும் காட்சி. இன்றைய வியட்நாம்தான் அன்றைய சாம் அல்லது சம்ப்பா தேசம். பெரிய சுவர் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு மேல்புறத்திலும் நடுவிலும் அடுத்தடுத்துப் படகுகளும் மீன்களும் வருகின்றன. கீழ்ப்புறத்தில் அன்றாட வாழ்க்கை... சந்தையில் பொருள் வாங்கும் காட்சி ஓரிடத்தில் தெரிகிறது.
ஏதோ ஒன்றைத் தராசில் நிறுத்துத் தரும் காட்சி வருகிறது. அருகே வெட்டப்பட்ட மீன் தலை உள்ளது. மீன் அங்காடியாக இருக்கலாம். அருகிலுள்ள ஓரிரு உருவங்களில் சீனக் களை தெரிகிறது. அங்கோர் வாட்டைக் கட்டிய மன்னன் இரண்டாம் சூரியவர்மன், சீனாவோடு அதிகாரபூர்வ அரசதந்திர உறவு கொண்டிருந்ததற்குக் குறிப்புகள் உள்ளன.
கெமர் பேரரசில் சீனப் பிரதிநிதிகள் இருந்ததை, 13-ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சீனக் குறிப்புகள் காட்டுகின்றன. கெமர் பிரதிநிதிகள் சீனப் பேரரசரைச் சந்தித்துப் பேசியதன் பதிவுகள் உள்ளன. இருநாட்டு வர்த்தகத்தில் நிலவிய பிரச்சினைகள் களையப்பட்டதாக அதில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆகவே, பாயோன் ஆலயப் புடைப்புச் சிற்பங்களில் சீன முகங்கள் தென்படுவதில் வியப்பில்லை.
தெற்குத் தாழ்வாரப் புடைப்புச் சிற்பங்களில், அதிர்வு தாங்கிகளுடன் கூடிய மாட்டு வண்டி தெரிகிறது. யானை மேல் பெரிய ஓலைக் கூடைகளை வைத்து அவற்றுள் செவ்வக வடிவில் ஏதோ ஒன்றை விற்கும் காட்சி உள்ளது. தென்னை மரத்தில் காய்த்துள்ள தேங்காயை நோக்கி இரண்டு விலங்குகள் போவது ஓரிடத்தில் உள்ளது. பன்றி காணப்படுகிறது. ஆமையைப் பிடித்தவாறு சந்தையில் ஒருவன் நிற்கிறான். தோளில் பிள்ளையைத் தூக்கிச் சுமக்கும் தாய். முதலை, மான், குரங்கு, அன்னம், இன்னும் என்னென்னவோ..
எனக்கு அங்கோர் வாட்டில் படம் எடுத்து எடுத்துக் கண்கள் களைத்துவிட்டன. ஒரு கண்ணைச் சுருக்கி மறு கண்ணால் லென்ஸ் வழியாகக் காட்சிகளைப் பார்த்துப் படம் பிடித்து கண் தசைகள் வலிக்கத் தொடங்கிவிட்டன. ஆகவே, பாயோன் ஆலயத்துக்குச் செல்லும்போது அதிகமான படங்களை எடுக்க முடியவில்லை. இணையத்தில் ஏராளமான படங்கள் கிடைக்கின்றன. ஆர்வமுள்ளவர்கள் தேடிப் பாருங்கள். அசந்து போவீர்கள்.. அங்கோர் வாட்டைப் போல் இதை ஒவ்வொரு தாழ்வாரமாகச் சுற்றிப் பார்க்க எங்களுக்கு நேரமில்லை. பாயோனுக்கு வந்து சேரும்போதே மாலை மணி ஐந்தை நெருங்கிவிட்டது. இருட்டுவதற்குள் இங்கிருந்து கிளம்ப வேண்டும். மழை வேறு இருட்டிக் கொண்டு வந்தது. ஆகவே, சற்று அவசர அவசரமாகத்தான் பாயோனைப் பார்த்தோம். அது மாபெரும் தவறு. என்னைப் பொறுத்தவரையில், அங்கோர் வாட்டுக்கு எந்த வகையிலும் சளைத்ததில்லை பாயோன்.
சொல்லப் போனால் அங்கோர் வாட்டை விட ஒருபடி மேல் பாயோன். மிக நுணுக்கமான சிற்ப வேலைப்பாடும் கட்டுமானப் பொறியியல் கவர்ச்சியும் இங்குதான் அதிகம் என்பேன். ஒரு மாயலோகத்தினுள் நுழைந்தாற் போன்ற உணர்வு இங்கு வந்தது. இந்த வருணனையை இந்தத் தொடரில் நான் அடிக்கடி பயன்படுத்துகிறேன் என எனக்கே நன்றாகத் தெரிகிறது. ஆனால், அதுதான் உண்மை. ஆகவே மீண்டும் மீண்டும் அந்த ஒப்புமையைப் பயன்படுத்தத் தயக்கமில்லை எனக்கு. அங்கோர் வாட் அப்சரஸ்களைக் காட்டிலும் பாயோன் அப்சரஸ்கள் அழகோ அழகு. ஒற்றை அப்சரஸ், இரட்டை அப்சரஸ், மூன்று அப்சரஸ் எனத் தூண்களெங்கும் அப்சரஸ் மயம்தான் பாயோனில். மலர்ந்த தாமரை மலர் மீது நடமிடும் அப்ரசஸ்கள்.
தென்புற வாயிலில் நுழைந்து வலப்பக்கமாகத் திரும்பிப் பின் இடப்பக்கமாக தாழ்வாரத்தைக் கடந்து கிழக்கு வாயில் வழியாக அடுத்தடுத்த தளங்களை அடைந்தோம். இரண்டாம் தளத்திலும் புடைப்புச் சிற்பங்கள் இருப்பதாக வழிகாட்டி சொன்னார். எங்களுக்கு நேரமில்லை. கடந்து நடந்தோம்.
மிக ஒடுக்கமான தாழ்வாரங்கள் பாயோனில். இருவர் நெருங்கி நடக்கலாம். அவ்வளவுதான். வேகமாய் நடந்தால், பக்கவாட்டுக் கற்சுவரில் உடலை உரசிக் கொள்ள வேண்டி வரலாம். தாழ்வாரங்களை இணைக்கும் சந்திப்புகள் அங்கோர் வாட்டைப் போலவே கூட்டல் குறிபோல் இருந்தன. கூரை முகடும் வளைவான அங்கோர் வாட் பாணி முகடுதான். எந்த இணைப்புச் சாந்தும் இங்கேயும் கிடையாது. எல்லாம் கற்களை முட்டுக் கொடுத்து உருவாக்கிய கட்டுமானம்தான்.
வலுவான லேட்டரைட் எனப்படும் செம்பூரான் கற்களுக்கு மேல் சிலை வடிக்கத் தோதான மணற்கல்லை ஒட்டிச் சிற்பங்களை வடித்திருக்கிறார்கள் இங்கும். சின்னச் சின்னக் கற்பாளங்களை எப்படி இணைத்து ஓர் உருவத்தை அதில் உருவாக்கினார்கள் என்பது அதிசயம்தான். பெரிய பாளங்களில் அது எளிது. பாயோன் முகங்களைக் கணினியில் பெரிதுபடுத்திப் பார்த்தீர்களென்றால் அதிலுள்ள இணைப்புகள் தெளிவாகத் தெரியும். ஆனால் தொலைவிலிருந்து பார்த்தால் வழுவழுப்பான முகம் மட்டும்தான் கண்ணுக்குத் தெரியும்.
அழகியல் அறுவை சிகிச்சையின்போது (பிளாஸ்டிக் சர்ஜரி), உடலின் இயற்கையான மடிப்புக்குள் அறுவைச் சிகிச்சைத் தழும்புகள் மறைந்து போவதுபோல் மருத்துவர்கள் சிகிச்சை செய்வார்களாம். அதுபோல் இயல்பான முகவாட்டத்தோடு பொருந்திப் போவதுபோல் கற்களை அடுக்கி முகங்களை உருவாக்கியிருக்கிறார்கள் இங்கே. ஜிக்சா புதிர்க் கற்களைப் போலக் கலைத்துப் போட்டால் எடுத்து, கொஞ்சம் யோசித்தால் எளிதில் அடுக்கிவிடலாம் போலிருந்தன முக இணைப்புகள்.
மூன்றாம் தளத்துக்கு ஏறி வந்தபோது, கல்முகங்களை நேருக்குநேர் சந்தித்தோம். தொட்டுத் தடவிப் பார்க்கும் தொலைவில்... அருப்புக்கோட்டைக்குப் பக்கத்தில் திருச்சுழி என்ற ஒரு சிற்றூர் உள்ளது. அங்கு என் அப்பா துணைத் தாசில்தாராக வேலை பார்த்தார். பகவான் ரமண மகரிஷி பிறந்த ஊர் அது. ரமணர் பிறந்த வீட்டுக்கு அடுத்த வீட்டில்தான் நாங்கள் குடியிருந்தோம். என்னுடைய இரண்டாம், மூன்றாம் வகுப்புகள் அங்குதான் படித்தேன். ஷத்ரிய இந்து வித்தியாசாலா என் பள்ளியின் பெயர் என்று நினைக்கிறேன். அந்த ஊரில் தேவாரப் பாடல் பெற்ற சிவன் கோயில் ஒன்றுண்டு. பூமிநாதர் கோயில் என்று பெயர். யாரோ பாண்டிய மன்னன் எடுத்த கோயில்.
சிறு வயதில் மிகப் பெரிய ஆலயமாகத் தென்பட்டது. ஆனால், வளர்ந்து பெரிய ஆளான பிறகு ஒருமுறை போயிருந்தபோது அது நடுத்தரக் கோயிலாகத்தான் இருந்தது. அந்தக் கோயிலுக்குள் சென்று வௌவால் புழுக்கை நாற்றமடிக்கும் பிரகாரங்களுக்குள் விளையாடுவது அப்போது எங்களுக்குப் பொழுதுபோக்கு. அங்கே சுவாமி வீதியுலாவிற்கான வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். ஒட்டடை படிந்த மயில், ஆட்டுக்கிடா, ரிஷபம் போன்றவற்றோடு பூதகணமும் இருக்கும்.
என் பால்யத்தில் பதிந்து போன முகம் அந்த பூதகணம். மரச் சிற்பம்தான். அவ்வளவு நேர்த்தியாகச் செதுக்கப்பட்டிருக்கும். மனித உடலும் பூத முகமும்... இரண்டு கைகளையும் ஏந்தியவாறு ஒரு காலை மடித்து நிலத்தில் ஊன்றி மறுகால் முழங்கால் போட்டு நிற்கும் தோற்றம். விழிகள் பிதுங்கித் தெறித்து விழுந்துவிடும்போல் இருக்கும். ஆஜானுபாகுவான ஒரு ஆள் நிஜத்தில் எதிரே கால்மடித்து எழத் தயாராய் இருப்பது போல இருக்கும்.
பிற்காலத்தில் விஷ்ணு ஆலயங்களில், கருட வாகனமும் அதே கோலத்தில் இருப்பதைப் பார்த்திருக்கிறேன். ஆனாலும் என் திருச்சுழி பூதகணத்துக்கு உறைபோடக் காணாது அவையெல்லாம், அந்த பூதகணத்தைப் பார்த்த நினைவு மின்னலடித்தது எனக்கு பாயோன் ஆலயக் கல்முகங்களைப் பக்கத்தில் பார்த்தபோது... என் கண்களை நேரடியாகப் பார்க்கவில்லை என்றாலும் கூட என்னை ஊடுருவிப் பார்ப்பது போல்பட்டது எனக்கு. எத்தனை நூற்றாண்டுப் பார்வை அது ?....
- பொன். மகாலிங்கம்
பொன். மகாலிங்கம் - சிங்கப்பூர் தொலைக்காட்சியில் பணியாற்றும் மூத்த இதழியலாளர். சென்னையின் முன்னணி ஊடகத்தில் முக்கியப் பொறுப்பில் இருந்தவர். சகமனிதர்கள் மீது அளவற்ற அன்பும், பாசமும் கொண்ட பண்பாளர். தமிழ் மீதும், பயணங்களின் மீதும் உள்ள அலாதியான ஆர்வம் காரணமாக அடிக்கடி எங்காவது புராதன இடங்களை தேடிச் சென்று அவற்றை தமது அழகு தமிழால் கட்டுரைகளாக்கி, வரும் தலைமுறைக்கு தகவல் பொக்கிஷங்களை சேர்ப்பதில் நாட்டம் கொண்டவர். அவரை தொடர்புகொள்ள - ponmaha2000@yahoo.com
Leave a Comment