உலகின் மிகப்பெரிய ஆலயம் - 13
ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்திய உலகம் எப்படி இருந்திருக்கும் என்று நேரில் பார்க்க ஆசையா ? விமானம் ஏறி கம்போடியாவுக்கு வந்துவிடலாம். காலம் உறைந்து போயிருக்கிறது இங்கே. அங்கோர் வாட்டின் உச்சியில் இருந்து பார்த்தாலும்கூட நவநாகரிக உலகின் எந்தச் சுவடும் நம்முடைய கண்ணில் படுவதில்லை. இது ஒரு முக்கியமான அம்சம் எனத் தோன்றியது எனக்கு. ஆலயத்தைச் சுற்றியுள்ள நிலப்பகுதி வானம் பார்க்கக் காடாகப் பரந்து விரிந்து கிடக்கிறது.
நான் இதுவரை பார்த்த வரலாற்றுத் தலங்களில் பெரும்பாலானவை பரபரப்பான ஊருக்குள் இருக்கும். அல்லது அது ஒரு காட்சிப் பொருளாகி விட்டபடியால் அதைச் சுற்றி ஒரு வாழ்க்கை உருவாகி அதன் அங்கமாக நவீன வசதிகளும் உருவாகி விட்டிருக்கும். ஆனால், அங்கோர் வாட் விதிவிலக்கு. மிக நுணுக்கமாகப் பார்த்தால் தவிர மேலோட்டமான பார்வைக்கு வாகனங்களோ மனித சஞ்சாரமோ தெரிவதில்லை.
இது நமக்கு ஒருவிதக் கிளர்ச்சியை ஏற்படுத்தி விடுகிறது மனத்துக்குள். எனக்கு மட்டும்தான் இப்படியா என்று தெரியவில்லை. ஆளில்லாத பழைய ஆலயங்களிலும் கோட்டைகளிலும் கூட இப்படிப்பட்ட உணர்வை அடைந்திருக்கிறேன். ஆக்ரா கோட்டைக்கு ஈராயிரமாம் ஆண்டில் போனபோதும் இப்படித்தான் இருந்தது. மாபெரும் கோட்டை மதில் சுவர்கள் எழுந்து புற உலகைத் துண்டித்து விட்டன. மொகலாய மன்னர்களின் வாழ்க்கையைப் புரிந்து கொள்ள அந்தப் பயணம் உதவியாக இருந்தது.
பிரமாண்டம் என்றால் என்னவென்பதை உணர வைத்த இடங்கள் இவையெல்லாம். வடகிழக்கு மூலையில் படியேறி அங்கோர் வாட்டின் உச்சிப் பகுதிக்கு வந்தபோது கலவையான உணர்வுகள்.
இந்தக் கட்டத்தில் எங்களுக்கு வழிகாட்டி தேவையற்றவராகிப் போயிருந்தார். எங்களை வியக்க வைக்கும் தகவல் எதுவும் அவரிடம் இல்லை. நிலக் காட்சியின் அழகில் நாங்கள் மூழ்கிப் போயிருந்தோம். இவ்வளவு பெரிய வளாகமும் இந்த உச்சிப் பகுதியை நோக்கித்தான்.... இதற்காகத்தான் என்று நினைக்கும்போது பிரமிப்பு ஏற்பட்டது. ஆனால், கருவறை இருக்க வேண்டிய இடத்தில் மொண்ணையான புத்தர் சிலைகளைப் பார்த்தபோது ஏமாற்றமே மிஞ்சியது.
நான்கு பக்கங்களையும் மறித்துச் சுவர் எழுப்பி அவ்வளவு லட்சணமில்லாத புத்தர் சிலைகளை வைத்திருந்தனர். அதிலும் சில புத்தர் சிலைகளின் தலைகள் அறுக்கப்பட்டிருந்தன. தலையற்ற முண்டமாக புத்தரின் சிலையைத் தரிசிக்கவே மனம் நடுங்கியது. நல்லவேளை.. இந்தக் கொடுமையை இரண்டாம் சூரியவர்மன் பார்த்திருக்க வாய்ப்பில்லை.
உண்மையில், அங்கோர் வாட்டைக் கட்டிய மன்னர் இரண்டாம் சூரியவர்மன் இந்த ஆலயத்தின் முதற்கட்டப் பணிகளின்போதே மறைந்துவிட்டிருக்க வேண்டுமென வரலாற்றாய்வாளர்கள் கருதுகின்றனர். சூரியவர்மன் 32 வயது வரையிலும்தான் உயிர் வாழ்ந்திருக்கிறார். அவரது காலம், கி.பி 1113-1145 என்கிறது கம்போடியத் தலைநகர் புனோம் பென் அரும்பொருளகத்தில் நாங்கள் வாங்கிய கையேடு. 32 வயது வரை மட்டுமே வாழ்ந்த ஒரு மனிதனின் சாதனைதான் இந்த ஆலயம்.
மலைப்பாக இருந்தது. தாம் உயிரோடு இருக்கும்போதே ஆலயம் முழுமையும் எப்படி இருக்க வேண்டுமெனத் திட்டமிட்டுக் கட்டத் தொடங்கிய மன்னர் அந்தப் பணிகள் முழுமை பெறும்போது அதைப் பார்க்க உயிரோடு இல்லை. மிகுந்த வேதனை தரக்கூடிய தகவல் இது.
இந்தக் கட்டுரைக்குத் தேவையான தகவல்களைத் தேடிப் படிக்கும்போதுதான் இது எனக்குத் தெரியவந்தது. எகிப்தியப் பேரரசர்கள், அவர்கள் அரியணை ஏறியதுமே அவர்களுக்கான கல்லறைப் பிரமிடுகளைக் கட்டத் தொடங்கிவிடுவார்கள் என்று படித்திருக்கிறேன். அதுபோல், அங்கோர் வாட் சூரியவர்மனின் கல்லறைக் கோயில்தான் என்றால், அவர் அரியணை ஏறியதுமே கட்டட வேலைகள் தொடங்கப்பட்டிருக்க வேண்டும்.
சூரியவர்மன் எத்தனையாவது வயதில் அரியணை ஏறினார் என்று தெரியவில்லை. 20 வயது என்று வைத்துக் கொண்டால்கூட 12 ஆண்டுகள் ஆட்சி புரிந்திருக்கிறார். அதற்குள் பாதி வேலை கூட முடிந்திருக்காது. அப்படியானால், மனக்கண்ணில் மட்டும்தான் மன்னர், முழுமையான ஆலயத்தைப் பார்த்திருக்க முடியும்.
வடகிழக்கில் ஏறி உள்ளே சென்றபோது பரணி மட்டும்தான் என்னோடு இருந்தார். ராஜூ, நவீன், மகாதேவன் மூவரும் பார்த்துவிட்டுக் கீழே இறங்கிப் போய்விட்டார்கள். நாங்கள் இருவரும் படம் எடுத்துக் கொண்டே வந்ததால் பின்தங்கிப் போனோம். மேருவின் கீழிருந்து உள்ளே போய் இடப்பக்கமாகத் திரும்பினால், கருவறையின் வடக்குமுக வாயிலைக் காணமுடியும். அங்கே சயன நிலையில் ஒரு புத்தர் கிடத்தப்பட்டிருந்தார். வாசல் நிலையை அடைத்த மாதிரி நின்ற கோலத்தில் ஒரு புத்தர்.
பெரிய பெரிய கற்பாளங்களை வைத்து வாசலை அடைத்துவிட்டு அதன் மேல் புடைப்புச் சிற்பமாகச் செதுக்கியிருக்கிறார்கள். சயன புத்தருக்கு முன்னால் ஒரு மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டிருந்தது.
கிறிஸ்தவ தேவாலயங்களில் ஏற்றப்படுவதுபோன்ற தடிமனான மெழுகுவர்த்தி. பல மணி நேரத்திற்கு நின்று எரியக்கூடியது. வாழைத் தண்டை வெட்டி அடிப்பகுதியாகக் கொண்ட ஓர் அலங்காரம். மேலே வாழை இலையைக் கூம்பு வடிவத்தில் சுருட்டி, பக்கவாட்டில் கதிர்கள் விரிவது போல் இலைகளைச் சுருட்டி விட்டிருந்தனர்.
அச்சு அசப்பில், அய்யர் வீட்டுத் திருமணங்களில் வைக்கப்படும் பருப்புத் தேங்காயைப் போலவே இருந்தது. பருப்புத் தேங்காய் பெரும்பாலும் மஞ்சள் ஜிகினா தாளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். இது பச்சை வாழை இலை. அவ்வளவுதான் வித்தியாசம். அவை தவிர, வெள்ளை நுரைப்பஞ்சுத் தட்டில் வாழைப் பழங்களும் லைச்சீ பழங்களும் படைக்கப்பட்டிருந்தன. ஒரு பிளாஸ்டிக் போத்தலில் தண்ணீர். அது படைக்கப்பட்ட தீர்த்தமா இல்லை சுற்றுப் பயணிகள் விட்டுச் சென்றதா தெரியவில்லை.
புத்தரின் மேல் போர்த்தப்பட்டிருந்த ஜிகினாத் துணியும் போடப்பட்டிருந்த பிளாஸ்டிக் மாலையும் அந்தப் பழமையான சூழலுக்குப் பொருந்தவே இல்லை. அதன் செயற்கைத் தன்மை துருத்திக் கொண்டு தெரிந்தது. நின்ற கோலத்திலிருந்த புத்தர் மீது ஏதோ ஒருவித மஞ்சள் பூச்சு இலேசாகத் தெரிந்தது. தங்க முலாமா என்று தெரியவில்லை. இருக்க முடியாது. ஆலயம் கைவிடப்பட்ட காலத்தில் கண்டிப்பாக அது சுரண்டப்பட்டு சூறையாடப்பட்டிருக்கும்.
வடக்கு வாயிலைப் பார்த்துவிட்டு இப்போது மேற்குப்புற வாயிலுக்கு வந்தோம். இங்கே குட்டி குட்டியாய்க் கழுத்து அறுக்கப்பட்ட நாலைந்து புத்தர் சிலைகள் அமர்ந்த கோலத்தில் இருந்தன. பின்னால் அதேபோல நின்ற கோலத்தில் பெரிய புத்தர். இங்கும் மெழுகுவர்த்திகள்.
ஆனால் இந்த மெழுகுவர்த்திகள் சின்னவை. வரிசையாக ஒரு வாழை மட்டையில் செருகப்பட்டிருந்தன. இந்த பிரமாண்ட பேராலயத்தின் நடுவே இருக்கக் கொஞ்சமும் தகுதியற்ற உருவச் சிலைகள். கழுத்து அறுபட்ட புத்தர் சிலைகள் என்றால் மிகப் பெரும்பாலும் களையான முகம் கொண்ட பழைய புத்தர் சிலைகளாகத்தான் இருக்க வேண்டும். முகம்தான் இல்லை. மற்ற உடல் பகுதிகளையாவது பார்க்கலாம் என்றால், புத்தரின் வலப்புறத் தோள்பட்டை மட்டும்தான் தெரிகிறது. மற்ற பகுதிகளை வழக்கம்போல ஜிகினாத் துணியால் மூடிவிட்டனர். ஐயோ.. கடவுளே !
இந்த மேற்குப்புற வாயிலுக்கு எதிரில்தான் அங்கோர் வாட் வளாகத்தின் முக்கிய நுழைவாயில் வருகிறது. அது நீண்டு கிடப்பதைப் பார்க்க புத்தருக்கு இப்போது முடியாது. தலை இல்லையே !
கருவறைக்கு முன்னால் உள்ள தாழ்வாரம் 20, 30 அடி நீண்டு பெரிய சுற்றுத் தாழ்வாரத்தோடு இணைந்து கொள்கிறது. ஓங்கி மழை பெய்தால், சாரல் அடிக்கும் அளவுக்கு அகலம் குறைந்த தாழ்வாரம். எந்தத் திக்கில் திரும்பினாலும் பழமை. பசுமை.. நம் வாழ்வில் எளிதில் கிடைக்காத காட்சி இது. வரலாற்றுப் பிரியர்களால் பிரிந்து வர இயலாத இடம்.
சுற்றிலுமுள்ள கற்கள் பேச முடிந்தால் எப்படி இருக்கும் ? என்னென்ன கதை சொல்லும் நம்மிடம் ? காலம் கற்களை மழுங்கச் செய்துவிட்டிருக்கிறது. மழையும் தன்பங்குக்கு மணற்கல் சிற்பங்களைக் கரைத்துவிட்டிருக்கிறது. ஆனாலும் எஞ்சியிருக்கும் சிற்பங்கள் கல்லை விட்டு வெளியே வரத் துடிப்பதைப் போலிருந்தன.
ஒவ்வோர் இடத்தையும் கண்களால் அள்ளி அள்ளி விழுங்கினோம் நானும் பரணியும். இனியொரு முறை இதைக் காணும் வாய்ப்புக் கிடைக்குமோ கிடைக்காதோ என்ற ஏக்கம் எழுந்து கொண்டே வந்தது. “இதுக்கு ஒரு நாள்லாம் பத்தாதுண்ணா” என்று பரணி புலம்பிக் கொண்டே வந்தார். அதிலென்ன சந்தேகம் ? ஒரு மாதம் கூடப் போதாதுதான். படப்போட திங்கிற மாட்டுக்குப் புடுங்கிப் போட்டாக் காணுமா ? ஹும்.
இப்போது நாங்கள் மேற்கிலிருந்து தென்திசை வாயிலுக்கு வந்திருந்தோம். ஆலய முகப்பில் இருந்த விஷ்ணு சிலை இங்கே இருந்தது உண்மையானால், அந்த விஷ்ணுவின் தாழ்ந்த கண்மலர்கள் பல நூற்றாண்டுகளாக இங்கே விரியும் இந்தக் காட்சியைத்தான் கண்டிருக்க வேண்டும். இங்கே ஓர் ஆச்சர்யம் எங்களுக்குக் காத்திருந்தது. இந்தக் கருவறை வாயில் மற்ற வாயில்களைப் போல் மூடப்படாமல் கதவு வைத்து சாத்தப்பட்டிருந்தது. முன்னால் புடைப்புச் சிற்பமாக இல்லாமல் முப்பரிமாணத்தில் புத்தர். நின்றகோலம். அதற்குக் கீழே கழுத்து அறுக்கப்பட்ட அமர்ந்த கோல புத்தர் சிலைகள் சில..
தொல்பொருள் ஆய்வுக்காக இந்த வாயில் உடைத்துத் திறக்கப்பட்டிருக்க வேண்டும். அல்லது இது மட்டும் மூடப்படாமலேயே விடப்பட்டிருக்க வேண்டும். சில பூட்டுகள் தொங்கின கதவுக்கு வெளியே. உள்ளே போய் விளக்கு வைத்து என்ன இருக்கிறது என்று பார்க்க கொள்ளை ஆசையாக இருந்தது. அதற்கு அனுமதி இல்லை. உள்ளே எவ்வளவு ஆழம் இருக்கும் ? சில வெள்ளைக்கார ஆய்வாளர்கள் இதனுள்ளே போய்ப் பார்த்திருப்பதாகக் குறிப்புகள் உள்ளன.
ஒரு பெரிய சதுரத் துளை கீழே வரை செல்வதாக அதில் சொல்லப்பட்டுள்ளது. அதில் என்னென்ன இருந்திருக்கும் ? நமது ஆலயங்களில் கருவறை மூர்த்தங்களுக்குக் கீழே நவமணிகளைப் புதைக்கும் வழக்கம் இருக்கிறதே.. அதுபோல் இங்கும் கண்டிப்பாகப் புதைக்கப்பட்டிருக்கும்.
இது விஷ்ணு ஆலயம்தான் என்பதற்குரிய தெளிவான தடயமொன்றை நிலைவாயிலின் மேலே காணமுடிந்தது. அதை இந்த அத்தியாயம் எழுதும்போதுதான் என்னால் பார்க்க முடிந்தது. ஒவ்வோர் அத்தியாயம் எழுதும்போதும் அதற்குரிய படங்களை முழுமையாகப் பார்த்துவிட்டே எழுதுவேன். அது எழுதுவதற்கான மனநிலையை எனக்குத் தரும். மறந்த பல அம்சங்களைப் படங்கள் எனக்கு நினைவுபடுத்தும்.
அதுபோல, கருவறை புத்தர் சிலைகளைப் பார்த்துக் கொண்டே வந்தபோது வாயில்படி மேலே செதுக்கப்பட்டுள்ள புடைப்புச் சிற்பங்களைக் கணினியில் பெரிதுபடுத்திப் பார்க்கும்போது நேரில் புலப்படாத சில அம்சங்கள் புலப்படுகின்றன. ஒவ்வொரு வாயிலின் மேலும் பிரபாவளியுடன் கூடிய ஒன்பது உருவங்கள் அமர்ந்த கோலத்தில் உள்ளன. நடுவிலுள்ள உருவத்தை நோக்கி இடப்பக்கம் உள்ள நான்கு உருவங்களும் வலப்பக்கமுள்ள நான்கு உருவங்களும் வணங்கும் நிலையில் அவை வடிக்கப்பட்டுள்ளன.
ஆக நடுவிலுள்ள உருவம் ஒரு தெய்வ மூர்த்தமாக இருக்க வேண்டும். பக்கத்துக்கு நாலுபேர் வீதம் அந்த இறையுருவை வணங்குவதுபோல் வடிக்கப்பட்டுள்ளது. தஞ்சைப் பெரிய கோயிலின் விமானத்துக்குக் கீழே, சண்டேஸ்வரர் சந்நிதிக்கு அருகிலுள்ள வடக்கு வாயிலின் நிலை மேலே, அஷ்ட மங்கலச் சின்னங்கள் என்னும் எட்டு மங்கலப் பொருட்கள் பொறிக்கப்பட்டிருக்கும். குத்துவிளக்கு, ஆனை, சிம்மம், கவரி, ரிஷபம், கொடிமரம், சங்கநிதி என எட்டுப் பொருட்கள் புடைப்புச் சிற்பமாகச் செதுக்கப்பட்டிருக்கும். அதுதான் மன்னர் இராஜராஜன் பெருவுடையாரை வணங்க வரும்போது பயன்படுத்தும் நுழைவாயில்.
பெரிய கோயிலுக்கு வடக்கே இப்போதுள்ள சீனிவாசபுரத்தில்தான் இராஜராஜனின் அரண்மனை இருந்திருக்க வேண்டும். அங்கிருந்து மன்னர் வழிபாட்டுக்கு வரும் நுழைவாயிலில் இப்படி மங்கலச் சின்னங்கள் பொறிப்பது வழக்கம் என்று அதைக் காட்டி, குடவாயில் பாலசுப்ரமணியம் ஐயா சொன்னார். இது மன்னர் வழிபட வரும் வாயில் என்பதால் இங்கு மெய்க்காவலர்கள் பலர் நிறுத்தப்பட்டிருந்ததாக சாசனம் ஒன்றில் குறிக்கப்பட்டுள்ளதாகவும் குடவாயில் ஐயா எழுதியிருக்கிறார்.
தஞ்சைக் கோயிலின் வடபுற மதில் சுவரின் வடமேற்கே, இராஜராஜன் வருவதற்கு ஒரு வாயில் இருக்கிறது. அதற்கு அணுக்கன் திருவாயில் என்று பெயர். பிற்காலத்தில் அதன் புழக்கம் நின்றுவிட்டது. அதன் மேல்புத்திலும் மங்கலச் சின்னங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. சங்கநிதி, பதுமநிதி, சாமரம் ஏந்திய பெண்கள், குத்துவிளக்குகள், பூரணகலசம் ஆகியவை அங்கே காட்டப்பட்டுள்ளன.
படம் நன்றி - முனைவர். குடவாயில் பாலசுப்பிரமணியம்
குடவாயில் ஐயா அவற்றைக் காட்டினார். அந்த வாயிலில் துளைகள் காணப்படுகின்றன. அந்தத் துளைகளுக்குள் மரச் சட்டங்களைச் செருகி, அதன் மேல் மர வேலைப்பாடு மிக்க அலங்கார வாயில் அமைந்திருக்க வேண்டும்.
தஞ்சைக் கோயில் உட்புற சுவரோவியங்களில், மாமன்னர் தமது பட்டத்து மகிஷிகளோடு வணங்கும் தில்லை நடராஜர் ஆலய ஓவியத்தில் இதுபோன்ற வாயில்கள் இருந்ததை இன்றும் பார்க்க முடியும். 1980-களின் முற்பகுதியில் என் தந்தை தஞ்சையில் உயர் அதிகாரியாக வேலை பார்த்தபோது அந்த ஓவியங்களைப் பார்க்கும் பேறு எனக்குக் கிடைத்தது. அப்போது அவற்றின் அருமை பெருமை எனக்கு அதிகம் தெரியாது. அதன் பின்னர் பலமுறை முயன்றும் அனுமதி கிடைக்கவில்லை.
படம் நன்றி - தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம்
வடமேற்கில் உள்ளதைப் போல் தெற்கிலும் மேற்கிலும் உள்ள மதில் சுவரில் மேலும் இரண்டு சிறுவாயில்கள் தஞ்சைப் பெரிய கோயிலில் உள்ளன. அவை தமிழக பாணியில் இல்லாமல், சேரநாட்டு அதாவது கேரள பாணியில் உள்ளதைக் கவனிக்க வேண்டுமென்றார் குடவாயில் ஐயா. அவை இரண்டு அல்லது மூன்று அடுக்குகளாக இருந்திருக்க வேண்டும். மரம், காலத்தால் மட்கி அழிந்து விட்டது. அணுக்கன் திருவாயில் இப்போது மரக்கதவுகளால் அடைபட்டுள்ளது. இருந்தாலும் துளைகள் எஞ்சியுள்ளன.
குறுவாள்கள், அங்குசம், கோடரி, சங்கு, உடுக்கை, சூரியன் போன்றவைற்றையும் எட்டு மங்கலச் சின்னங்களாகப் பொறிக்கும் பழக்கம் சோழர் காலக் கோயில்களில் இருந்ததாகக் கல்வெட்டு ஆதாரங்கள் குறிப்பிடுகின்றன. அதுபோல, அங்கோர் வாட் கருவறை திசைவாயில் மேலே பொறிக்கப்பட்டுள்ள சிற்பங்களும் மங்கலச் சின்னங்களாக இருக்கக் கூடுமோ என்று நினைத்தேன். ஆனால் இதில் ஒன்பது சிற்பங்கள் உள்ளன. வடக்கு, மேற்கிலுள்ள உருவங்களைத் தெளிவாகக் காண முடியவில்லை. சில உருவங்கள் நான்முகன் போல் தெரிகின்றன.
வடக்கில், நடுவிலுள்ள ஓர் உருவம், தாமரை மலரைக் கையிலேந்திய அஜந்தா குகை ஓவிய பத்மபாணி போலிருக்கிறது. மேற்கே நடுவிலுள்ள ஓர் உருவம் பத்மாசனத்தில் சின்முத்திரை காட்டுவது போலப் பொறிக்கப்பட்டுள்ளது. ஆனால், தெற்கே நிலைவாயிலின் நடுவே இருப்பது சந்தேகமின்றி, பள்ளிகொண்ட பெருமாள்தான். படத்தில் தெளிவாகத் தெரிகிறது. ஆனால், பெருமாள் கிழக்கே தலை வைத்துப் படுத்திருக்கிறார். தாயார் மேற்கே காலடியில் காட்டப்பட்டிருக்கிறார். உந்திச் சுழியிலிருந்து மேலே உயரும் கொடியில், பத்ம பீடத்தில் நான்முகம் அமர்ந்திருக்கிறார். பிரம்மனைச் சுற்றிலும் திருவாசி இருக்கிறது. பிரம்மன் அமர்ந்திருக்கும் தாமரையைத் தாங்கிய கொடி தவிர மேலும் ஓரிரு கொடிகள் தெரிகின்றன. இடப்பக்கமும் வலப்பக்கமும் வணங்கிய நிலையில் பக்கத்துக்கு நாலு விகிதம் எட்டு உருவங்கள். ஆக, இது மிக முக்கியமான கருவறை நுழைவாயில்.
திருவரங்கம், சிதம்பரம் இரண்டு ஆலயக் கருவறை மூர்த்தங்களும் தென்திசை நோக்கியே அமைக்கப்பட்டுள்ளன. தென்திசை கூற்றுவன் திசை. ஆகவே, பக்தர்களின் எமபயம் போக்கும் நோக்கில் சீரங்கம் இரங்கநாதரும் சிதம்பரம் நடராஜரும் தென்திசை நோக்குவதாக ஐதீகம். அதே நோக்கம்தான் இந்த ஆலயத்திலும் பின்பற்றப்பட்டிருக்க வேண்டும். ஆக, கீழே நாம் பார்த்த விஷ்ணு சிலை இங்கே தெற்கே பார்த்தவாறுதான் நிறுவப்பட்டிருக்கிறது.
அது நான்கு திசையிலும் தெரியும் வகையில்தான் முதலில் கருவறை நிலைவாயில்கள் அமைக்கப்பட்டனவா அல்லது தொடக்கத்திலேயே தென்திசை மட்டும் திறந்திருக்க, மற்ற மூன்று திசை வாயில்களும் மூடப்பட்டிருந்தனவா என்பது எனக்குத் தெரியவில்லை. இப்போதுள்ள மூன்று திசைவாயில்களைப் பார்த்தால், அவசர கோலத்தில் அள்ளித் தெளிக்கப்பட்டதைப் போலத்தான் தோன்றுகிறது. எது எப்படி இருந்தாலும், இது விஷ்ணு ஆலயக் கருவறைதான். அதை உறுதிப்படுத்திக் கொண்டேன்.
சின்னப் புடைப்புச் சிற்பம்தான் என்றாலும் அப்பட்டமான கெமர் பாணியில் அமைந்த அழகிய சிற்பம். திருமகள் அப்சரஸ் போல மூன்று கொண்டை உள்ள தலை அலங்காரத்துடன் சித்திரிக்கப்பட்டுள்ளார். திருமால் ஏன் கிழக்கே தலைவைத்திருக்க வேண்டுமெனப் புரியவில்லை. திருவரங்கத்தில் மேற்கே அல்லவா தலை வைத்திருப்பார் ? அத்துடன் கம்போடிய விஷ்ணு கிடந்த கோலத்திலேயே ஏதோ ஓர் ஆயுதத்தை இடக்கையில் பிடித்து ஓங்கியவாறு காட்டப்பட்டுள்ளார். இது போர்க்களக் காட்சியை நினைவூட்டுகிறது. இதற்கு என்ன காரணமாக இருக்கும் ? நுணுக்கமான சிற்பம். அருகில் சென்று பார்த்தாலோ சக்தி வாய்ந்த கேமராவில் அருகே சென்று படம் எடுத்துப் பெரிதுபடுத்திப் பார்த்தாலோதான் கண்டுபிடிக்க முடியும்.
அடுத்து, நிறைவாகக் கிழக்குப்புற வாயிலைக் காணச் சென்றோம். வழியில் சில புத்தர் சிலைகள் அமர்ந்த கோலத்தில் இருந்தன. அவை அங்கே இருந்த சிலைகளாகத் தெரியவில்லை. வேறு எங்கிருந்தோ எடுத்து வரப்பட்டுத் தாழ்வாரங்களில் வைக்கப்பட்டிருந்தவை போல் தெரிந்தன. வழக்கம்போலப் பல சிலைகளுக்குத் தலை இல்லை. இனிமேல் உலகின் எந்த மூலையில் புத்தர் சிலையைப் பார்த்தாலும் அதற்குத் தலை இருந்தால் நான் ஆச்சர்யப்பட்டுப் போவேன் என்று நினைக்கிறேன்.
கிழக்குப்புற வாயில் மற்ற இரண்டு வாயில்களைப் போல் அடைக்கப்பட்டு அதன் மேல் புடைப்புச் சிற்பமாக புத்தர் நின்றிருந்தார். கீழே அமர்ந்த நிலையில், நாலைந்து புத்தர் சிலைகள். அவற்றுள் சில மரச் சிற்பங்கள். நல்ல களையான முகங்கள். அப்பாடா என்றிருந்தது அந்த முகங்களைப் பார்க்கும்போது. ஆனால் இவை கம்போடிய புத்தர் சிலைகளாகத் தெரியவில்லை. தாய்லந்து புத்தரைப் போல் இருந்தது தலை அலங்காரம்.
கண்கள் மூடி ஊழ்கத்தில் அமர்ந்த கோலத்தில் இல்லை இவை. பத்து வயது பாலகனின் புன்முறுவலோடு அரைக்கண் திறந்து மலர்ச்சியான கோலத்தில் இருந்தன மர புத்தர் சிலைகள். உண்மையில் அந்தச் சிலைகள் எனக்கு இனந்தெரியாத இன்பத்தை அளித்தன என்று சொல்லலாம். பின்னப்பட்டுப் போன சிலைகளும் தூண்களும் பெருகிக் கிடந்த இடத்தில் முழுமையான இந்தச் சிலைகள் ஏதோ ஒரு நம்பிக்கையை அளித்திருக்க வேண்டும்.
அந்த மரச் சிலைகளுக்கு முன்னால், கிடந்த கோலத்தில் ஒரு கல் புத்தர். அதற்கு முன்னாலும் ஊதுபத்திகள், படையல், மெழுகுவர்த்திகள். இந்த வாயிலுடன் ஆலயச் சுற்று முடிவடைகிறது.
இனி கீழே இறங்க வேண்டியதுதான். நியாயப்படி, உலக அதிசயம் அங்கோர் வாட்டைப் பார்த்தாகி விட்டது என்ற நிறைவு இந்த இடத்தில் வர வேண்டும். ஆனால், எங்களுக்கு வரவில்லை.
- பொன். மகாலிங்கம்
பொன். மகாலிங்கம் - சிங்கப்பூர் தொலைக்காட்சியில் பணியாற்றும் மூத்த இதழியலாளர். சென்னையின் முன்னணி ஊடகத்தில் முக்கியப் பொறுப்பில் இருந்தவர். சகமனிதர்கள் மீது அளவற்ற அன்பும், பாசமும் கொண்ட பண்பாளர். தமிழ் மீதும், பயணங்களின் மீதும் உள்ள அலாதியான ஆர்வம் காரணமாக அடிக்கடி எங்காவது புராதன இடங்களை தேடிச் சென்று அவற்றை தமது அழகு தமிழால் கட்டுரைகளாக்கி, வரும் தலைமுறைக்கு தகவல் பொக்கிஷங்களை சேர்ப்பதில் நாட்டம் கொண்டவர். அவரை தொடர்புகொள்ள - ponmaha2000@yahoo.com
Leave a Comment