உலகின் மிகப்பெரிய ஆலயம் - பாகம் 11
அங்கோர் வாட் பேராலயம், ஒரு பெரிய சதுரத்துக்குள் சின்னச் சின்னச் சதுரங்களை அடுக்கி வைத்தது போன்ற தோற்றத்தைத் தரும், மேலிருந்து பார்த்தால்... முகப்பிலுள்ள மதில் போன்ற பெரிய சுற்றுச் சுவரைக் கடந்து உள்ளே வந்தால், மூன்று அடுக்குகளாக உள்ளது ஆலய வளாகம். முதல் இரண்டு அடுக்குகளும், மிக நீண்ட தாழ்வாரங்களால் இணைக்கப்பட்டுள்ளன. மூன்றாவது அடுக்கு உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அதில்தான் ஐந்து மேருக்களும் அமைக்கப்பட்டுள்ளன.
ஒவ்வோர் அடுக்கும் ஒன்றைவிட உயரத்தில் இருக்கிறது. பொதுவாகவே இந்த ஆலயப் படிகள் மிக உயரமானவை. அவற்றை எளிதில் ஏறிக் கடக்க முடியாது. ஆகவே, படிகள் உள்ள எல்லா இடத்திலுமே இரும்புத் தாங்கிகள் கொண்ட மரப்படிகளைச் செய்து பொருத்தியுள்ளனர். விஷ்ணு சிலை இருந்த இடத்திற்கு இருமருங்கிலும் தாழ்வாரம் நீண்டு கிடந்தது. இரண்டு கண்ணாடிகளை எதிரெதிர் வைத்தால் எண்ணற்ற பிரதிபலிப்புகள் வருமே ! அதுபோலிருந்தது அந்த முடிவற்ற நிலைகளும் தாழ்வாரமும்.
அதைக் கடந்து கீழே இறங்கிச் சற்றுத் தொலைவு நடந்தால்தான் முதல் சுற்று வரும். போகும் வழியில் நடைபாதையின் இரண்டு பக்கங்களிலும் இரண்டு பாழடைந்த கட்டடங்கள். அவை நூலகங்கள் என்று அதிகாலையில் வந்தபோது தெரிந்து கொண்டோம். இப்போது அதனுள்ளே போய்ப் பார்த்தோம். ஒன்றுமில்லை. தொலைவிலிருந்து பார்த்தால், அந்தக் காலத் தஞ்சாவூர்க் கிராம நாட்டு ஓடு வேய்ந்த பெரிய வீடு போலிருந்தது.
உள்ளே பெரிய கற்களை வாகாகச் செதுக்கி ஒன்றுக்கொன்று முட்டுக்கொடுத்து ஒன்றையொன்று தாங்கிக் கொள்வது போல் கூரை அமைக்கப்பட்டிருந்தது. அங்கோர் வாட் முழுமைக்குமே உள்ளே அடியில் இருப்பது லேட்டரைட் எனப்படும் கடினமான கல். அது சின்னச்சின்னப் பொத்தல்களோடு சொரசொரப்பாக உள்ள கல். அதன்மேல் சிற்பங்களைச் செதுக்க முடியாது. எனவே, உறுதித்தன்மைக்கு அந்தக் கல்லை உள்ளே வைத்துக் கட்டிவிட்டு மேலே மணற்கல்லை வைத்து மூடியிருக்கிறார்கள். அதில்தான் எல்லாப் புடைப்புச் சிற்பங்களும் செதுக்கப்பட்டுள்ளன.
நம் தமிழ்நாட்டு ஆலயங்களைப் போல முப்பரிமாணச் சிற்பங்கள் அங்கோர் வாட்டில் கிட்டத்தட்ட இல்லை என்றே சொல்லலாம். அல்லது எங்கள் கண்ணில்படவில்லை. எல்லாமே புடைப்புச் சிற்பங்கள்தான். அதுவும் சுவரில் இருந்து வெகுவாக வெளியில் வராதவை. அங்கிங்கெனாதபடி எங்கும் நீக்கமற நிறைந்திருந்த அப்சரஸ் நடனமணிகளின் மார்பகங்கள்தான் புடைப்புச் சிற்பங்களில் ஆக அதிகம் வெளிவந்த பகுதிகளாக இருக்க வேண்டும். மற்ற எல்லாமே சில மில்லிமீட்டர்தான் புடைத்திருக்கும்.
அங்கோர் வாட் ஆலய நூலகத்தின் உட்பக்கம், கிணற்றடித் துவைகல் மாதிரி குளிர்ச்சியாக இருந்தது. உள்ளே மழையின் வாசம் நிறைந்திருந்தது. சில இடங்களில் வளைவான கூரைக் கற்கள் பெயர்ந்து வானம் தெரிந்தது. அதனூடாக மழை நீர் இறங்கி வழிந்த தடம் தெரிந்தது. இரண்டு பக்கங்களில் இருந்த நூலகக் கட்டடங்களுமே ஒரே மாதிரியான வடிவமைப்பு. உள்ளே என்னென்ன நூல்கள் இருந்திருக்குமோ ?
பனையோலைச் சுவடிகளா, களிமண் பலகையா அல்லது செம்பு, தாமிரம் போன்ற உலோகத் தகடுகளில் எழுத்துப் பொறிக்கப்பட்ட தொகுப்பா? என்ன இருந்திருக்கும் என்ற தகவல் தெரியவில்லை. கெமர் பேரரசின் அறிவுப் பொக்கிஷங்கள் இங்கு ஒருகாலத்தில் இருந்தன என்ற உணர்வே என்னைக் கிளர்ச்சியடைய வைத்தது. இந்தக் கல் சுவர்களுக்கும் கூரைக்கும் பேசத் தெரிந்தால் விரிவாகச் சொல்லக் கூடும். இலங்கையில் எரிக்கப்பட்ட யாழ்ப்பாண நூலகம் பற்றிப் பதின்ம வயதில் படித்திருக்கிறேன். அதை நேரில் பார்ப்பேன் என்று கனவிலும் கருதியதில்லை.
அலுவல் ரீதியாக எங்கள் அமைச்சரோடு இலங்கை செல்லும்போது யாழ் நூலகத்திற்குச் செல்லும் வாய்ப்புக் கிட்டியது. அங்குள்ள சிறார் பிரிவை மேம்படுத்தி, தேவையான புத்தகங்களை சிங்கப்பூர் வழங்கியிருந்தது. அதன் அறிமுக விழாவுக்காகப் போனபோது நான் மிகுந்த உணர்ச்சிவசப்பட்டிருந்தேன். அங்கிருந்த ஒவ்வொரு நொடியும் மதிப்புமிக்க நேரம். இதுதானா? இங்குதானா? இதைத்தானா? என்று ஒவ்வோர் இடத்தையும் பார்த்துப் பார்த்துக் கண்ணில் தேக்கிக் கொண்டேன்.
நூலகத்தை எரிக்கவும் ஒருவருக்கு மனம் வருமா? யாழ் நூலக முகப்பிலேயே அது எரிப்பதற்கு முன்னும் பின்னும் இருந்த படங்கள் மாட்டப்பட்டுள்ளன. நெடுநேரம் அதை என்னால் பார்க்க முடியவில்லை. கண்களைத் திருப்பிக் கொண்டேன். அங்கோர் வாட் ஆலய வளாகத்திலுள்ள நூலகத்தை விட்டு வெளியே வரவே மனமில்லை. வழிகாட்டி என்னவோ சொல்லிக் கொண்டிருந்தார். என் கவனம் அவரிடம் குவியவில்லை. எனக்குள் மூழ்கியிருந்தேன்.
நூலகத்தை விட்டு வெளியே வந்தபோது வெயில் பளீரென அடிக்கத் தொடங்கியிருந்தது. காற்றில் ஈரப்பதம் அதிகம் இருந்ததால், வியர்வை காயவில்லை. சொதசொதவென சட்டையெல்லாம் நனையத் தொடங்கியது.
முதல் சுற்றுக்குள் ஏறிச் சுற்றிப் பார்க்கத் தொடங்குமுன் கழிப்பறைக்குச் சென்று மீண்டோம். சுத்தமான கழிப்பறைகள். ஆலய வளாகம் என்பதற்காகக் கழிப்பறை கட்டாமல், வருவோரைக் கஷ்டப்படுத்தவில்லை. சிங்கப்பூரிலும் எல்லா ஆலயங்களிலும் உள்ளேயே ஓரமாகக் கழிப்பறைகள் கட்டப்பட்டிருக்கும். கழிப்பறைக்கு வெளியில், வருகையாளர்கள் அணிந்து கொள்ள ரப்பர் காலணிகள் கிடக்கும்.
அங்கோர் வாட்டில் சற்றுத் தள்ளிக் கட்டியிருந்தனர் கழிப்பறையை. தண்ணீர் வாங்கி அருந்திவிட்டு முகத்தில் தெளித்துக் கொண்டு புத்துணர்ச்சியோடு திருச்சுற்றுக்குள் நுழைந்தோம். உயரமான படிகளை ஏறிக் கடந்து, தென்மேற்கு மூலையில் தொடங்கினோம். முதலில், தெற்குப்புறத்திலுள்ள புடைப்புச் சிற்பங்களைப் பார்க்கத் தொடங்கினோம். மிக நீண்ட தாழ்வாரம். சுமார் ஏழு அடி உயரத்தில் சிற்பங்கள் நீண்டு கொண்டே போகின்றன. தாழ்வாரம் 10, 15 அடி அகலம் இருக்கும். வெளிப்புறத்தில் இரண்டு வரிசையாகத் தூண்கள். பெருமழை பெய்தாலும் சாரல் உள்ளே வந்து சிற்பங்களில் படமுடியாத அளவுக்கு உட்புறச் சுவர் தள்ளியே இருந்தது.
தூண்களில் சிற்ப வேலைப்பாடு ஏதுமில்லை. உட்புறச் சுவரில் மட்டும்தான். பெரும்பாலும் இராமாயண, மகாபாரத இதிகாசக் காட்சிகள். அத்தோடு போர்க்களக் காட்சிகள். புடைப்புச் சிற்பங்களின் மீது சில இடங்களில் வண்ணப் பூச்சு தெரிகிறது. சில சிற்பங்களுக்குத் தங்க முலாம் பூசப்பட்டிருந்த தடயமும் இருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால், நாங்கள் பார்க்கவில்லை. எகிப்திய சிற்பங்களைப் போல் சிற்பத்தின் உருவம், ஒருவரின் அரசியல் முக்கியத்துவத்திற்கு ஏற்ப மாறுபடுகிறது. அரசன் என்றால் ஆகப்பெரிய உருவம். சாமானிய வீரன் ஆகச் சின்ன உருவம்.
மேலும் கம்போடியப் பாரம்பரியப்படி, பதவி உயர உயர, அவரைச் சுற்றியுள்ள அலங்காரக் குடைகளின் எண்ணிக்கை கூடிக் கொண்டே போகிறது. இரண்டாவது சூரியவர்மனின் போர்க்களக் காட்சியொன்றில் பதினைந்து குடைகள் வரை சித்திரிக்கப்பட்டிருந்ததைப் பார்த்தோம். யானைகள் மீள மீள வந்துகொண்டே இருக்கின்றன. சூரியவர்மன் பெரும்பாலான காட்சிகளில் யானை மீதே அம்பாரி கட்டி அமர்ந்திருக்கிறார். இல்லையென்றால் குதிரை வண்டி. அம்பாரியும் யானையும் பேரழகு. யானையின் உடல்மொழி அபாரமாக வந்திருக்கிறது சிற்பத்தில். குதிரை வண்டி நவீன கால வில்வண்டி போல இருக்கிறது.
யானை மேல் கட்டியுள்ள அம்பாரிகளை மட்டுமே பார்க்க ஒரு நாள் வேண்டும். அத்தனை அழகான வேலைப்பாடு. ஒரு சின்ன அரியாசனத்தையே சிற்பி மன்னருக்குச் செதுக்கிக் கொடுத்துள்ளான். சிற்பி இந்த இடத்தில் பொற்கொல்லராக மாறிவிட்டிருக்கிறான். அத்தனை நுணுக்கமான வேலைப்பாடு அம்பாரிகளில். யானையின் முதுகில், இரண்டு பக்கங்களிலும் பொருந்தியுள்ள அம்பாரியின் கால் பகுதி நுனிகள் சுருண்டு அவற்றில் கயிறு கட்டி அது யானையின் உடலோடு பிணைக்கப்பட்டுள்ளது.
மன்னன் அம்பாரியின் மேல் இடக்காலும், யானையின் உடல்மேல் வலக்காலும் ஊன்றி அம்பு தொடுக்க ஆயத்தமாக நிற்கிறான். நடுப்பகுதியில் மன்னன் இருந்தால் மேலே அப்சரஸ்கள் அபிநயித்தவாறு உள்ளனர். கீழே படை வீரர்கள் நடந்து செல்லும் தோற்றம் உள்ளது. அவர்கள் விரைந்து செல்வது இரண்டு கால்களுக்கும் இடையே இடைவெளி அதிகம் இருப்பதன் மூலம் உணர்த்தப்படுகிறது. நிழல்விழ அதிக இடமில்லாததால், புடைப்புச் சிற்பங்களைத் தெளிவாகப் படம் பிடிப்பது பெரிய சவால்.
விலை உயர்ந்த டிஜிட்டல் கேமராவில் எடுத்துப் பார்த்தபோது கூடப் படங்களைத் தெளிவாகக் காணமுடியவில்லை. ஆனால், ஐ ஃபோனில் எடுத்துப் பார்த்தால் ஓரளவு தெளிவாக இருந்தது. வண்ண வேறுபாடு, ஒளி வேறுபாடு இல்லாததால் மசமசவென்றுதான் இருந்தன படங்கள். கிழக்கு, மேற்குப் புறத் தாழ்வாரங்களில் அந்தி, சந்தியில் இளஞ் சூரிய ஒளி படும்போது மேம்பட்ட படங்கள் கிடைக்கக் கூடும். இணையத்தில் தேடியபோது அப்படிப்பட்ட படங்கள் இருப்பதைக் காண முடிந்தது.
ஓரிடத்தில் பத்துத் தலை இராவணன் இருபது கைகளோடு சித்திரிக்கப்பட்டிருந்தான். இன்னோரிடத்தில் அசுரர்களும் தேவர்களும் பாற்கடலைக் கடையும் மாபெரும் சிற்பம் இருக்கிறது. இது இங்குள்ள சிற்பங்களில் மிகப் புகழ் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. கீழே ஆமை தெரிகிறது. அதன் மேல் மந்தர மலையை அச்சாகக் கொண்டு வாசுகிப் பாம்பைக் கயிறாகக் கட்டி இடப்பக்கம் அசுரர்களும் வலப்பக்கம் தேவர்களும் பாற்கடலைக் கடைகின்றனர். நடுவே விஷ்ணு மந்தர மலையோடு சேர்த்துக் காட்டப்பட்டிருக்கிறார். மேலே இந்திரன் நிற்கிறான். இது கிழக்குப்புறத் தாழ்வாரத்திலுள்ள சிற்பம்.
இடப்பக்கத்திலுள்ள 92 அசுரர்கள் முட்டை விழிகளோடு கிரீடங்களோடு காட்டப்பட்டுள்ளனர். வலப்பக்கமுள்ள 88 தேவர்கள் சற்றுக் குறைவான அணிகலன்களோடு காட்டப்பட்டுள்ளனர். அசுரர்கள், ஐந்து தலையுள்ள வாசுகிப் பாம்பின் தலைப்பக்கத்தைப் பிடித்துள்ளனர். தேவர்கள் வால்பக்கத்தைப் பிடித்துள்ளனர். தேவர்கள் வரிசையின் கடைசியில் அனுமன் காட்டப்பட்டிருக்கிறார். வாசுகியின் வாயிலிருந்து வெளிப்படும் நஞ்சு தேவர்களை பாதிக்கக் கூடாது என்றுதான் பெருமாள், முன்கூட்டியே தேவர்களை வாசுகியின் வால்பக்கம் பிடித்துக் கொள்ளச் செய்தார் என்று சொல்வதுண்டு.
வாசுகியின் தலைக்குக் கீழே உள்ள அசுரன் இராவணனைப் போல் பத்து தலையுள்ளவனாக இருக்கிறான். இது நமக்குப் புதிது. பாற்கடலைக் கடையும்போது இராவணன் இருந்ததாக நான் படித்ததில்லை. பாற்கடலை அசுரர்களும் தேவர்களும் ஆயிரம் ஆண்டுகள் கடைந்ததாக வழிகாட்டி சொன்னார்.
பாற்கடலைக் கடையும்போது எத்தனையோ பொருட்கள் பாற்கடலில் இருந்து மேலே வரும். கடைசியில்தான் அமிர்தம் வரும். மகாலட்சுமியும் பாற்கடலுக்கு உள்ளிருந்து வருவாள். பெருமாள் அவளை எடுத்து நெஞ்சில் வைத்துக் கொள்வார். அப்புறம் ஆலம் (நஞ்சு) வரும். அதே சமயத்தில், உடலை இழுத்த வேதனையில் வாசுகிப் பாம்பும் தன்னுடைய வாயிலிருந்து நஞ்சைக் கக்கும். இந்த இரண்டும் சேர்ந்துதான் ஆலாலம் என்று பெயர் வந்தது. (ஆலம்+ஆலம்= ஆலாலம்.... ஆலகாலம் அல்ல)
அது பரவினால் உலகம் அழிந்துவிடும் என்றுதான் சிவபெருமான் அதை எடுத்து அருந்திவிட, அம்மை அஞ்சி அப்பனின் கழுத்தைப் பிடிக்க, ஆலாலம் சிவனின் கண்டத்தில் தங்கி நீலகண்டனாவது.. ஆலால கண்டன் என்ற பெயர் காரணப் பெயர்.. இது பலரும் அறிந்த கதை.
இந்தச் சிற்பம் பேரழகோடு உள்ளது. நாங்கள் இதைப் பார்க்க அதிக நேரத்தைச் செலவிட்டோம். அசுரர்களின் உடல்மொழி அபாரம். அனைவருக்கும் ஒரேவிதமான அணிகலன். கிரீடம். தெறித்து விழுவதுபோன்ற முட்டைக் கண்கள். அசுரர்களோடு ஒப்பிடும்போது தேவர்கள் சோனியாக உள்ளனர். முகத்தில் அதிக பாவமில்லை. அசுரர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் போல மிடுக்காகவும், தேவர்கள், அரசாங்க அலுவலக குமாஸ்தாக்கள் போல சுவாரசியமின்றியும் உள்ளனர். எப்படியும் ஜெயிக்கத்தானே போகிறோம் என்ற கெத்தோ என்னவோ?
பாற்கடல் கடையும் சிற்பத்தை விட்டு நகர எங்களுக்கு மனமில்லை. வழிகாட்டிதான் “இன்னும் இதுமாதிரி நிறைய இருக்கு. நமக்கு நேரம் பத்தாது” என்று எங்களைப் பத்திக் கொண்டு போனார். ஒரு கட்டத்தில், கண்கள் சோர்வடைந்து விட்டன. எல்லாமே புடைப்புச் சிற்பம் என்பதால் எனக்கு ஒருவித ஆயாசம் வந்துவிட்டது. முப்பரிமாணச் சிற்பத்தைப் பார்க்கும்போது இன்னும் இன்னும் என்று கண்கள் விழுங்கிக் கொண்டே இருக்கும். இந்தச் சிற்பங்களை ஒருவகையில், கல் ஓவியங்கள் என்பேன். வண்ணமில்லை என்பதால் எல்லாம் ஒரே மாதிரியாகத் தோற்றமளிக்கின்றன.
கைகள் பட்டோ என்னவோ ஆள் உயரத்திலுள்ள சில சிற்பங்கள் பளபளவென்று இருக்கின்றன. அதில், சிற்பியின் கைவண்ணம் மிகத் தெளிவாகத் தெரிகிறது. கம்போடியர்கள் உடுத்தியுள்ள துணி முதற்கொண்டு சில இடங்களில் தெளிவாகத் தெரிகிறது. அதில் பலவிதமான வடிவங்களில் பூக்கள், புள்ளிகள், கோலங்கள். ஒரே ஓரிடத்தில் மட்டும் கம்போடிய எழுத்துகளைப் பார்த்தோம். மேலும் கீழுமாக இழுக்கப்பட்ட எழுத்துகள். வேறு எங்கும் எழுத்துகளைப் பார்க்க முடியவில்லை. என்ன காரணமோ கல்வெட்டுகள் இங்கு இல்லை. இன்னும் அதிக நேரம் செலவிட்டு நுணுக்கமாகப் பார்த்தால் எங்காவது தென்படக் கூடும். இவ்வளவு பெரிய பேராலயத்தில் கல்வெட்டுகள் இல்லாமல் இருக்க வாய்ப்புகள் குறைவு.
மாமன்னன் இராசராசன் “நாம் கொடுத்தனவும், நம் அக்கன் கொடுத்தனவும் நம் பெண்டுகள் கொடுத்தனவும் கொடுப்பார் கொடுத்தனவும் ஸ்ரீ விமானத்தில்க் கல்லிலெ வெட்டுக எனத் திருவாய் மொழிஞ்சருள வெட்டிந” என்று வெட்டச் சொன்னதுபோல், இரண்டாம் சூரியவர்மனும் வெட்டச் சொல்லியிருப்பான்தானே ?..
அடுத்தமுறை வரும்போது ஒரு வார அனுமதிச் சீட்டு வாங்கிக் கொண்டு அங்கோர்வாட்டை அணுஅணுவாக ரசிக்க வேண்டுமெனப் பேசிக் கொண்டோம். வெயில் ஏறத் தொடங்கியிருந்தது. கையில் கொண்டு வந்திருந்த தண்ணீர் காலியானது. முதல் சுற்றில், தெற்கிலும் கிழக்கிலும் உள்ள சிற்பங்களைத்தான் இதுவரை பார்த்திருக்கிறோம். இதுபோல் இன்னும் வடக்கு, கிழக்குப் பக்கச் சுவர்கள் உள்ளன. அதன் பிறகு இரண்டாம் சுற்றிலுள்ள நான்கு பக்க சுவர்ச் சிற்பங்கள் உள்ளன. இரண்டு சுற்றுகளையும் இணைக்கும் வழி சிலுவை வடிவில் இருந்தது. பக்கவாட்டில் தாழ்வாரங்கள் பிரிந்து செல்கின்றன. அவற்றின் மாடங்கள் மிக அழகாக அமைக்கப்பட்டிருந்தன. மிக உயரத்தில் இருந்த வளைந்த கற்கூரைகளைப் பார்க்கப் பார்க்க ஆலயத்தின் பழமையைத் துல்லியமாக உணர முடிந்தது.
தாழ்வாரங்களில் நாங்கள் நடக்க நடக்க, எங்களோடு யானைகளும் குதிரைகளும் மன்னர்களும் படைவீரர்களும் ராஜதானிகளும் தெய்வங்களும் அசுரர்களும் கூடவே வந்தனர். எல்லா இடங்களுமே மிகச் சுத்தமாகப் பராமரிக்கப்படுவதைப் பார்த்தோம். வௌவால் புழுக்கை நாற்றம் எங்குமே இல்லை. புறா எச்சமும் இல்லை. உலகப் புகழ்பெற்ற உன்னதமான ஆலய வளாகம் என்ற பெயருக்கு ஏற்ப இருந்தது அங்கோர்வாட்.
கிழக்குப்புறத் தாழ்வாரத்தில், சுவாரசியமான வெள்ளைக்காரப் பெண்மணி ஒருவரைச் சந்தித்தோம்..
- பொன். மகாலிங்கம்
பொன். மகாலிங்கம் - சிங்கப்பூர் தொலைக்காட்சியில் பணியாற்றும் மூத்த இதழியலாளர். சென்னையின் முன்னணி ஊடகத்தில் முக்கியப் பொறுப்பில் இருந்தவர். சகமனிதர்கள் மீது அளவற்ற அன்பும், பாசமும் கொண்ட பண்பாளர். தமிழ் மீதும், பயணங்களின் மீதும் உள்ள அலாதியான ஆர்வம் காரணமாக அடிக்கடி எங்காவது புராதன இடங்களை தேடிச் சென்று அவற்றை தமது அழகு தமிழால் கட்டுரைகளாக்கி, வரும் தலைமுறைக்கு தகவல் பொக்கிஷங்களை சேர்ப்பதில் நாட்டம் கொண்டவர். அவரை தொடர்புகொள்ள - ponmaha2000@yahoo.com
Leave a Comment