கடவுளின் பெயரால் - 3
கடவுளைப் புகழ்ந்து பெறுவது
யாரிடமாவது எதையாவது கேட்க வேண்டும் என்று நினைத்தால் அவரது அருமை பெருமைகளைப் போற்றிப் புகழ்வோம். நம்மை நாமே தாழ்த்திக் கொண்டு, மிகுந்த பணிவோடு வேண்டியதைக் கேட்போம். இதைத்தான் கடவுளின் விஷயத்திலும் நாம் செய்கிறோம்.
அவர் புகழ்ச்சிக்கு மயங்குபவரா? என்பதைப் பற்றி நமக்குத் தெரியாது. ஆனாலும் புகழ்ந்தால்தானே ஏதாவது கிடைக்கும் என்ற நமது பொதுப் புத்தியானது கடவுளையும் விட்டு வைக்கவில்லை.
விநாயகர் அகவல் எனும் அவ்வையின் பாடலில்,
“பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்
வேழமுகமும் விளங்கு சிந்தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சில் குடிகொண்ட நீலமேனியும்…….”
என்று விநாயகரின் தோற்றத்தை வர்ணிக்கிறார்.
அதன்பிறகு
“தாயாய் எனக்குத் தான் எழுந்து அருளி
மாயாப் பிறவி மயக்கம் அறுத்தே…….“
“………வாடா வகைதான் மகிழ்ந்து எனக்கு அருளிக்
கோடாயுதத்தால் கொடுவினை களைந்தே….”
என்று தனது விண்ணப்பங்களை அடுக்குகிறார்.
உண்மையில் கடவுள் புகழ்ச்சி மற்றும் இகழ்ச்சிக்கெல்லாம் அப்பாற்பட்டவர் என்ற கருத்தும் உண்டு.
“வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்தல்” என்கிறார் வள்ளுவர்.
அதாவது வள்ளுவரின் பார்வையில் விருப்பு வெறுப்பு அற்றவன் கடவுள்.
படையலையும் நெய்வேத்தியத்தையும் புகழ்ச்சிப் பாடலையும், நேர்த்திக் கடன்களையும் அவர் உண்மையில் விரும்புகிறாரா? அப்படிச் செய்தால்தான் அவர் நாம் வேண்டுவதைக் கொடுப்பாரா? என்றால் மனிதனுக்கும் அவருக்கும் என்ன வேறுபாடு? அவர் அனைத்தும் அறிந்த கடவுள் அல்லவா? நாம் கேட்டால்தான் நமக்கு வேண்டியது என்ன என்று அவருக்குத் தெரியுமா? என்றெல்லாம் கேள்விகள் எழுகின்றன. எதையும் கேட்காத பற்றற்ற துறவிகளின் ஆன்மீகம் இதுதான்.
இன்னொரு குறளில்,
“பற்றற்றான் பற்றினைப் பற்றுக” என்கிறார் வள்ளுவர்.
“அதாவது ஆசை இல்லாதவன் மீது ஆசை கொள்க.”
அடுத்த வரி,
“பற்றுக அப்பற்றை பற்று விடற்கு”
அதாவது “அந்த ஆசையும் ஆசையை விடுவதற்காகத்தான்.”
உண்மையில் விருப்பு வெறுப்பற்ற நிலைக்கு ஒருவன் சென்று விட்டால், அவன் கடவுளின் தன்மையை அடைந்து விட்டான் என்று பொருள். பிறகு அவனுக்குப் பிரார்த்தனை தேவை இல்லை.
விருப்பு வெறுப்பற்ற மனநிலை என்பது ஒன்றுமற்ற நிலை.
ஒன்றுமற்ற நிலைதான் கடவுள் நிலை என்று ஏராளமான ஆன்மீகவாதிகள் சொல்லி வைத்திருக்கிறார்கள்.
இசைஞானி இளையராஜா மேஸ்ட்ரோ பட்டம் பெற்ற போது, அவருக்கு ஒரு பாராட்டு விழாவை பெரியார் திடலில் திராவிடர் கழகம் சார்பில் ஏற்பாடு செய்திருந்தார்கள். அந்த நிகழ்ச்சில் இளையராஜா இப்படிப் பேசினார்:
"தமிழ் மொழியில் உள்ள கடவுள் என்ற வார்த்தை கடவுளின் தன்மையை அப்படியே பிரதிபலிக்கிறது. கட உள் என்றால் உள்ளுக்குள் உள்ளத்துக்குள் கடந்து செல் என்று அர்த்தம். அப்படிக் கடந்து சென்று கொண்டே இருந்தால், அங்கே கடைசியாக ஒன்றுமற்ற நிலை வரும். இதைத்தான் ஒருவேளை பெரியார் பார்த்து விட்டு கடவுள் இல்லை என்று சொல்லி விட்டாரோ"
ஒரு கவிஞர் எழுதி இருந்தார்:
“கடவுளைக் கண்டேன்
எதுவுமே கேட்கத் தோன்றவில்லை.”
இத்தகைய பரவச நிலையை அடைபவன், கடவுளிடம் எதுவுமே கேட்கத் தேவை இல்லை. அவரைப் பிரார்த்தனை செய்யத் தேவை இல்லை. அவரைத் துதிக்கத் தேவை இல்லை. அவர் விரும்பினால் நமக்குத் தேவையானதைக் கொடுக்கப் போகிறார். இல்லையெனில் இல்லை என்ற பக்குவம் அவனுக்கு இருக்கும்.
ஆனால் லௌகீக வாழ்க்கையில் உள்ள யாரும் கடவுளை இப்படிப் பார்ப்பதில்லை. தனக்கு விருப்பமானதைக் கொடுப்பவர் என்றே நினைக்கிறார்கள். கேட்டால் கிடைக்கும் என்று நம்புகிறார்கள்.
இங்கே நம்பிக்கைதான் மிகவும் முக்கியம். தன்னம்பிக்கை இல்லாதவர்கள்தான் கடவுளை நம்புவார்கள் என்பது பொதுவான கருத்து. “கடவுள் நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ தன்னம்பிக்கை அவசியம்” என்கிறார் விவேகாநந்தர். “தன்னம்பிக்கை இல்லாதவன் எத்தனைதான் கடவுள் நம்பிக்கை உள்ளவனாக இருந்தாலும் பயனில்லை” என்கிறார் அவர்.
ஆனால் கடவுள் நம்பிக்கை என்பது சில நேரங்களில் தன்னம்பிக்கையை வளர்க்க உதவவும் செய்கிறது.
இதை விரிவாகப் பார்க்கலாம்.....
கடவுளின் பெயரால்….
தொடரும்….
Leave a Comment