கடவுளின் பெயரால்... 2


பிரார்த்தனை

பிரார்த்தனை இல்லை என்றால் கடவுள் இல்லை. இன்னும் சொல்லப் போனால் பிரார்த்தனைக்காகத்தான் கடவுளே தோற்றுவிக்கப்பட்டிருக்கிறார்

முதலில் எஜமான் உருவாகி பின்னர் அவரிடம் கேட்பது என்றில்லை. கேட்பதற் காகவே படைக்கப்பட்ட எஜமான்தான் கடவுள்.

மனிதன் தனது தேவைகளைப் பூர்த்தி செய்ய, ஆற்றாமையைக் கொட்ட, துன்பங்களைப் பகிர்ந்து கொள்ள அவனுக்கு ஒரு ரகசியமான - அதே சமயத்தில் எல்லாவற்றையும் தீர்த்து வைக்கும் ஆற்றல் கொண்ட - நண்பன் தேவை. அப்படிப்பட்ட நண்பன்தான் கடவுள்.

ஒரு சில நண்பர்கள் பகிர்ந்து கொள்ள மட்டும் உதவுவார்கள். ஒரு சில நண்பர்கள் பகிர்ந்து கொள்வதோடு கோரிக்கைகளையும் நிறைவேற்றி வைப்பார்கள். கடவுள் இதில் இரண்டாவது வகை.

அப்படிப் பகிர்ந்து கொள்வதும் கோரிக்கை வைப்பதும்தான் பிரார்த்தனை. பிரார்த்தனையின் அடிப்படை இதுதான்.

பிரார்த்தனை என்பது துன்பச் சுமையை இறக்கி வைப்பது

பிரார்த்தனை என்பது வேண்டுவதைக் கேட்டுப் பெறுவது

யாரிடமும் சொல்ல முடியாத துயரத்தை எங்கே போய்ச் சொல்வது? சுற்றியிருக்கும் நண்பர்கள் உறவினர்களிடம் சொன்னால், அதை அவர்களால் தீர்த்து வைக்க முடியாது என்பது மட்டுமல்ல. நம்மை ஏளனமாக வேறு பார்ப்பார்கள் என்ற அச்சம் தோன்றும் போது, நமது துயரத்தை எங்கே போய்ச் சொல்வது?

இங்கேதான் கடவுள் வருகிறார். இங்கேதான் பிரார்த்தனை வருகிறது.

சரி துயரத்தைச் சொல்லியாயிற்று. அதற்குத் தீர்வு?

அவர்தான் எல்லாம் வல்லவராயிற்றே. தீர்த்து வைப்பார்.

இங்கே நம்பிக்கை மிகவும் முக்கியம். எல்லா மதங்களும் கடவுளிடம் சந்தேகப்படக் கூடாது என்றே போதிக்கின்றன. பாஞ்சாலியைத் துச்சாதனன் துயிலுரிக்கும் போது, மார்பின் குறுக்கே கைகளைக் கட்டிக் கொண்டு கண்ணனை உதவிக்கு அழைத்த போது அவன் வரவில்லை. அவன் வருவான் என்ற நம்பிக்கையில் கைகளை உயரத் தூக்கி வணங்கிய போது மட்டுமே வந்தான் கண்ணன்.

நம்பிக்கை வேண்டும். ஒரு சிறு சந்தேகம் கூட இல்லாத நம்பிக்கை.

இந்தக் கதையின் மூலம் சொல்லப்படும் உண்மை இதுதான்.

பிரார்த்தனை என்பது வேண்டுவதைக் கேட்டுப் பெறுவதுதான். ஆனால் வேண்டும் போது விசுவாசத்தோடு வேண்டிக் கேட்க வேண்டும் என்கிறது கிறிஸ்துவம்

தன் மீதும், பிறர் மீதும், உலகின் மீதும், நம்பிக்கை இல்லாத போது, அல்லது நம்பிக்கை அற்றுப் போகும் போது, கடவுள் நம்பிக்கை மனித மனத்திற்கு தேவைப்படுகிறது

நடக்குமா? நடக்காதா? என்ற அச்சத்தில் ஒரு காரியத்தைத் தொடங்கும் மனிதனால் அதை முழுமையாக சரியாக முடிக்க முடியாது. நடக்கும் என்ற நம்பிக்கையில் கிடைக்கும் ஆசுவாசம், அவனது மனதைச் சமநிலைப்படுத்தும். பதற்றம் தணியும். அமைதி நிலவும். அந்த நேரத்தில் பதறாமல் செய்யும் அவனது காரியம் சிதறாது.

வருவது வரட்டும். சமாளிப்போம் என்று நினைக்கும் துணிவு எல்லோருக்கும் வாய்த்து விடுவதில்லை. பெரும்பாலானவர்கள் அப்படி இருப்பதில்லை. அவர்களுக்கு கடவுளைத் தவிர வேறு கதி இல்லை.

எனவே நடக்குமா நடக்காதா என்ற அச்சமில்லாமல், நடக்கும் என்ற நம்பிக்கையுடன் காரியத்தைத் தொடங்க அவர்களுக்கு கடவுள் தேவைப்படுகிறார்.

கடவுள் நடத்தி வைப்பார் என்ற நம்பிக்கை அவர்களுக்கு ஆசுவாசத்தைக் கொடுக்கிறது. பதற்றத்தைத் தணிக்கிறது. காரியத்தில் வெற்றி சித்திக்கிறது. ஒருவேளை அது நடக்காமல் போனாலும் இப்போது கடவுளுக்குச் சித்தமில்லை போல என்று ஆற்றுப்படுத்தவும் கடவுள் உதவுகிறது.   

ஆக அடிப்படையில் பிரார்த்தனை என்பது கேட்டுப் பெறுவதுதான்.

அதுமட்டுமல்லாமல் எல்லாம் வல்ல இறைவனை எல்லா வகையிலும் போற்றிப் புகழ்வதும் கூட. பிரார்த்தனைதான்.

யாரிடமாவது ஒரு காரியம் ஆக வேண்டுமனால் நாம் என்ன செய்வோம்? அவரைப் புகழ்வது இயல்புதானே. இந்த இயல்புதான். கடவுளிடம் நடக்கும் பிரார்த்தனையிலும் வெளிப்படுகிறது.

அப்படிப் புகழும் போது தன்னைத்தானே தாழ்த்திக் கொள்வதும் உண்டு.

நாயேனை நானும் நல்லவனாக்க

ஓயாமல் ஒழியாமல் உன்னருள் தந்தாய்

என்ற பிரார்த்தனை அத்தகைய வகைதான்.

புகழ்ச்சி மட்டுமல்ல. எதையேனும் உனக்கு நான் தருகிறேன் அதற்குப் பதில் நீ எனக்கு இதைத் தா என்று கேட்பதும் பிரார்த்தனைதான்.

பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை

நாலும் கலந்து உனக்கு நான் தருவேன்

கோலம் செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே

நீ எனக்கு சங்கத் தமிழ் மூன்றும் தா என்று கேட்பது அந்த வகையைச் சேர்ந்தது.

புகழ்தல், தருதல், வேண்டுதல் என்பது மட்டுமல்ல. இவை எதையுமே செய்யாமல் எல்லாம் நீயே என்னை ஆட்டுவிப்பவன் நீயே. எனக்கென்று கேட்பதற்கு எதுவுமில்லை. எல்லாவற்றையும் நீயே பார்த்துக் கொள்வாய் என்று முழுமையான சரணாகதி அடைவதும் பிரார்த்தனையே.

அது பற்றி அடுத்துப் பார்ப்போம்.

கடவுளின் பெயரால்…

தொடரும்...



Leave a Comment