கடவுளின் பெயரால்...
மனிதனின் கண்டுபிடிப்புகளிலேயே ஆகச் சிறந்த கண்டுபிடிப்பு கடவுள்தான். அனைத்தையும் படைக்கும் கடவுள். அத்தனைக்கும் மேலான கடவுள். அவனால், அவளால் அல்லது அதுவால் முடியாதது எதுவுமே இல்லை. கடவுள் அவனா அவளா அதுவா?
எப்படி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். கடவுள் அவருடைய சாயலில் மனிதனைப் படைத்தார் என்கிறது பைபிள். உண்மையில் மனிதன்தான் அவனது சாயலில் கடவுளைப் படைத்திருக்கிறான். அவனவன் அவனவன் வாழ்க்கைத் தரத்திற்கு ஏற்ப வாழும் சூழலுக்கு ஏற்ப கடவுளைப் படைத்திருக்கிறான்.
சைவ உணவு உண்பவர்கள் சைவக் கடவுளையும் அசைவ உணவு உண்பவர்கள் ஆடு கோழி பலி கேட்கும் கடவுளையும் படைத்திருக்கிறார்கள். இரு மனைவி கட்டிய கடவுள், கட்டிய மனைவியைத் தவிர வேறு எந்தப் பெண்ணையும் ஏறெடுத்துப் பார்க்காத கடவுள் என்று ஆண் கடவுள்கள் இப்படிப் பெண்களின் துணையோடு வாழ, பெண் கடவுள்கள் தனித்து நிற்கின்றன. பிரம்மச்சாரிக் கடவுள்களும் உண்டு ஐயப்பனைப் போல.
பெண்ணுக்கு கற்பு அவசியம் என்று கற்பிதம் செய்துள்ள ஆண்கள் இங்கே படைத்து வைத்திருக்கும் பெண் கடவுள்களும் கற்பரசிகளாகவே இருக்கின்றனர். ஆண் கடவுள்களுக்கு இருப்பதைப் போல ஒன்றுக்கு மேற்பட்ட இணையர்களோடு பெண் கடவுள்கள் இருப்பதில்லை.
இந்து மதம் இப்படிப் பற்பல கடவுள்களைப் படைத்து வைத்திருக்க, இஸ்லாம் ஒரே கடவுள் என்கிறது. அல்லா ஒருவனைத் தவிர வேறு கடவுள் இல்லை என்கிறது. அவரும் உருவமற்றவர் என்கிறது.
கிறிஸ்தவ மதமும் ஒரு கடவுளைத்தான் சொல்கிறது. அவரும் உருவமற்றவராகத்தான் இருக்க வேண்டும். ஏனெனில் யேசு கிறிஸ்து பிரார்த்தனை அல்லது ஜெபம் செய்வது குறித்துச் சொல்கையில், அறையின் கதவுகளையும் ஜன்னல்களையும் சாத்தி வைத்து விட்டு அந்தரத்தில் உள்ள பிதாவை ஜெபிக்குமாறுதான் கூறுகிறார். அந்தரத்தில் உள்ள பிதா என்பவர் உருவமற்றவர்தானே.
பிறகு யேசுவே கடவுளாகவும், அவரது அன்னை மேரியும் கடவுளாகவும் உருவங்கள் வந்தன.
மனிதர்களின் உள்ளத்துக்குள்தான் கடவுள் இருக்கிறார் என்கிறார்கள் சிலர். உடலே கோவில் உள்ளமே தெய்வம் என்கிறார்கள்.
சித்தர்கள் அப்படித்தான் சொல்கிறார்கள்.
நட்ட கல்லை தெய்வமென்று
நாலு புஷ்பம் சார்த்தியே
சுற்றி வந்து மொணமொணன்று
சொல்லும் மந்திரம் ஏதடா?
நட்ட கல்லும் பேசுமோ
நாதன் உள்ளிருக்கையில்..
என்ற சித்தர் பாடலில் அவர் சொல்ல வருவது இதுதான். கடவுள் உள்ளத்துக்குள் இருக்கையில், கற்சிலையாக இருக்கும் கடவுள் எப்படிப் பேசும்? என்று கேட்கிறார்.
இப்படிக் கடவுள்கள் குறித்து ஆளுக்கொரு விதமாய் பகுதிக்கொரு விதமாய் பேசி வருவதைப் பார்த்தால் எதுதான் கடவுள்? என்று அலுப்பு மேலிடுகிறது.
கடவுள் ஒரே இடத்தில் ஒரே மாதிரிப் பிறக்கவில்லை. அங்கங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் நிறைந்திருப்பவர் கடவுள். நேற்றும் இன்றும் என்றும் மாறாதிருப்பவர் கடவுள் என்று பல்வேறு விதமாக வரையறைப் படுத்தப்படும் கடவுள்கள் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமாகக் கற்பிதம் செய்யப்படுகின்றனர்.
கடவுள் எப்படி இருப்பார் என்பதில் குழப்பம் இருந்தாலும், அவர் எப்போது பிறந்திருப்பார் என்று நம்மால் அனுமானிக்க முடிகிறது. காட்டுமிராண்டியாக மனிதன் வாழ்ந்த காலத்தில், திடீரென்று வந்த காட்டாற்று வெள்ளமும், பற்றிப் படர்ந்த காட்டுத் தீயும் அவனை அச்சப்படுத்தியிருக்கும். பெய்த மழை அவனை ஆச்சரியப்படுத்தி இருக்கும். வீசிய காற்று அவனை அதிசயப்பட வைத்திருக்கும். நம்மை மீறி ஒரு சக்தி இருக்கிறது என்று அவனால் கண்டு கொள்ள முடிந்திருக்கும். அந்தச் சக்திக்கு அவன் கடவுள் என்று பெயர் வைத்திருக்கக் கூடும்.
அப்போதிருந்து சர்வ வல்லமை படைத்தவர் கடவுள் என்ற கருத்தாக்கம் விடாப்பிடியாக மனித சமூகத்துடன் வந்து கொண்டே இருக்கிறது. அதில் விதவிதமான வியாக்கியானங்கள் சொல்லப்பட்டாலும், அதன் மூலப் பொருள் ஒன்றுதான்.
"சர்வ வல்லமை படைத்தது கடவுள்"
"அனைத்தையும் படைத்தது அவரே"
கடவுள்தான் அனைத்தையும் படைத்தார் என்று நமது சிந்தனை முடிந்து போய் விட்டால், விஞ்ஞானம் வளருமா? கடவுள் விஞ்ஞான வளர்ச்சிக்குத் தடையாக இருக்க மாட்டாரா?
இரவைப் படைத்தது அவர்தான் என்ற முடிவுக்கு மனிதன் வந்திருந்தால், அந்த இரவை வெளிச்சமாக்கும் விளக்கை மனிதன் கண்டுபிடித்திருப்பானா?
மழை பொழிவது அவன் செயல். அதை மறிப்பது பாவம் என்று மனிதன் நினைத்திருந்தால் குடை வந்திருக்குமா?
புயலும் பூகம்பமும் நம்மை அழித்துப் போட கடவுள் செய்து வைத்த விதி என்று மனிதன் முடிவு செய்திருந்தால், அவற்றை முன்கூட்டியே அறியும் கருவிகளைக் கண்டுபிடித்திருப்பானா?
பறவைக்குப் பறக்கும் சக்தியைக் கொடுத்த கடவுள், மனிதனுக்கு அதைக் கொடுக்காமல் விட்டது ஏதோ ஒரு காரணத்திற்காகத்தான். அதை மீறி நாம் பறக்க ஆசைப்படுவது பாவம் என்று மனிதன் நினைத்திருந்தால் விமானமும் ராக்கெட்டும் வந்திருக்குமா?
எங்கோ ஒருவர் பேசுவதை ஆடுவதை பாடுவதை பேசுவதை வேறு ஒரு இடத்திலிருந்து பார்க்க கடவுளின் அருள் பெற்ற ஞான திருஷ்டி படைத்த ஒருவனால்தான் முடியும் என்பதை மனித குலம் நம்பிக் கொண்டிருந்திருந்திருந்தால், இன்றைய தொலைக்காட்சிகளும் தொலைபேசிகளும் கண்டுபிடிக்கப்பட்டிருக்குமா?
உடல் உறுப்பு பழுதடைந்தால், அது கடவுளின் கட்டளை என்று மனிதன் நம்பி இருந்தால், உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை விஞ்ஞானம் வளர்ந்திருக்குமா?
இதுதான் இயற்கை விதி இதை மாற்ற முடியாது என்பதைத் தாண்டி, எப்படிப்பட்ட விதியானாலும் அதை மனிதனின் வசதிக்காக மாற்றிக் கொள்ள முடியும் எனும் அளவுக்கு விஞ்ஞானம் வளர்ந்து விட்டது.
இத்தனை விஞ்ஞானம் வளர்ந்ததற்குப் பிறகும் கடவுள் அவசியமா?
அது அவசியமா இல்லையா என்பது இருக்கட்டும். இன்னும் நீடிக்கிறதே ஏன்?
மனிதனுக்கு கடவுள் என்னதான் செய்கிறார்?
கடவுளைப் பற்றி வெவ்வேறு விதவிதமான வியாக்யானங்கள் சொல்லப்படுகிறதே.
உண்மையில் எதுதான் கடவுள்?
எப்படி இருந்தால் கடவுள்?
கடவுளிடம் நாம் வைக்கும் கோரிக்கைகளை நிறைவேற்றுவது மட்டும்தான் அவரது வேலையா?
மனிதனின் மனத்தில் கடவுள் விளைவிக்கும் அற்புதங்கள் என்ன?
இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடை காண முயற்சிப்பதுதான் இந்தத் தொடரின் நோக்கம்.
கடவுளின் பெயரால்... தொடரும்....
Leave a Comment