உலகின் மிகப்பெரிய ஆலயம் - 4


     புத்தர் கோயிலைப் பார்க்கப் படிகளை ஏறிக் கடந்தோம். படியேறும் வழியில் சிறு விற்பனையாளர்கள் சிலரைக் காண முடிந்தது. நம்ம ஊர் என்றால் மலைக் கோயில் வாசல்களில் மலைவாழ் மக்கள் சுத்தமான தேன் என்று கூறி பாட்டில்களில் விற்பார்கள். இங்கு விற்கப்பட்ட பல பொருட்களை எங்களுக்கு அடையாளந் தெரியவில்லை. உள்ளூர்க்காரர்களுக்குத் தெரிந்திருக்கும். சில விலங்குகளின் உடல் பாகங்களை ஒருவர் காதலியோடு விற்றுக் கொண்டிருந்தார்.

     காதலியோடு சரசமாடிக் கொண்டு சற்றுத் தொலைவில் தடுப்புச் சுவரில் உட்கார்ந்திருந்தார். எலும்பு, நகம், தோல் என வகை வகையான உடல் பாகங்கள். ஏதோ ஒருவகைக் குரங்கின் உடல் பாகங்கள்போல் தெரிந்தது. இது சட்டபூர்வமா இல்லையா தெரியவில்லை. அவற்றிலிருந்து ஒருவித வாடை வந்து கொண்டிருந்தது. மாணவர் கூட்டம் ஒன்று பேசிச் சிரித்துக் கொண்டு மேலிருந்து கீழே இறங்கி வந்தது. நவீன் அவர்களோடு படம் எடுத்துக் கொண்டார்.

     ஆண்களும் பெண்களும் பழகுவதில் இங்கு பெரிதாகத் தடை இருப்பதுபோல் தெரியவில்லை. சகஜமாக இருந்தனர். எல்லாருமே பதின்ம வயது மாணவர்கள்தான். அந்த இளமைக்கே உரிய துள்ளலும் குறும்பும். செல்லும் வழியில் சிமெண்ட்டால் செய்யப்பட்ட சில உருவங்கள் இருந்தன. ஒன்றும் மனத்தைக் கவரவில்லை. மேலே பெரிய புத்தர் கிடந்த கோலத்தில் இருந்தார். அவர் ஒருத்தர்தான் கொஞ்சம் பார்க்கும்படி இருந்தார். அதுவும் கல் சிற்பமல்ல. கான்கிரீட் புத்தர்தான்.

     பேங்காக்கில் பார்த்த மிகப் பெரிய புத்தரைப் போன்றதே இதுவும். ஆனால் அதிலாவது ஓரளவு கலைநயம் இருந்தது. இதில் மெச்சும்படி ஏதுமில்லை. கான்கிரீட்டில், சிமெண்ட்டில் செய்யப்பட்ட சிலை என்றாலே எனக்கு ஏதோ ஒவ்வாமை. நம்ம ஊர்க் கோயில் விமானம், கோபுரங்களில் உள்ள சுதை வேலைப்பாடு, கோபுர பொம்மைகள் தனி. அவை சில இடங்களில் கலையழகுடன் மிளிரப் பார்த்திருக்கிறேன்.

     இந்த புத்தருக்கு மஞ்சளாக வர்ணமடித்து மேலே மஞ்சள் துணியில் விதானம் அமைத்திருந்தனர். புத்தரைச் சுற்றிவர இடம் விட்டிருந்தனர். அந்த புத்தருக்கு அருகே வெவ்வேறு சிலைகள். பெரிய புத்தருக்குக் கீழே அவர் உடலைச் சுற்றிவர சின்னச் சின்ன புத்தர் சிலைகள். அருகிலேயே ராஜ அலங்காரத்தில் மரகத புத்தர் சிலை. கண்கள் திறந்த நிலையில் இருந்தது. பேங்காக் அரண்மனை வளாகத்தில் இருக்கும் ராஜ புத்தரின் நகல் வடிவம். அதுவும் காமா சோமாவென்றிருந்தது.

     அந்த வளாகத்துக்குள்ளேயே பௌத்த பிக்குகள் தங்குவதற்கு ஒரு சின்ன மடாலயம். மனத்தில் எதுவுமே ஒட்டவில்லை. நல்ல வெக்கை வேறு. இவ்வளவு உயரம் வந்து இந்த வெக்கை வித்தியாசமாக இருந்தது. வரும் வழியில் கூடக் குளிர் காற்று இருந்தது. நல்லவேளை வெயில் கடுமையாக இல்லை. இலக்கின்றி வெறித்துப் பார்த்துவிட்டு ஏமாற்றத்துடன் கீழே இறங்கினோம்.

வரும் வழியில் வடிவாக இருந்த ஒரு பெரிய சிவலிங்கம் சின்ன ஆறுதல். மொழு மொழுவெனக் கருங்கல்லில் செய்யப்பட்ட சிவலிங்கம். வெட்டவெளியில் சிவனே என்று உட்கார்ந்திருந்தது. சதுரமான ஆவுடையார். மேலே பாணலிங்கம் மாதிரி லிங்கம். கீழே இறங்கியதும் இடப்பக்கமாக நடத்தி அழைத்துச் சென்றார் ஓட்டுநர் ரா. ஆயிரம் லிங்கங்கள் செதுக்கப்பட்ட ஆற்றைப் பார்க்க..

     இந்த ஆற்றிலிருந்துதான் தண்ணீர் கீழே போகிறது. இதனுடன் மேலும் சில கிளை நதிகள் சேர்ந்து கொண்டுதான் அங்கோர் ஆலயத்தைச் சுற்றியுள்ள வட்டாரத்தை வளப்படுத்துகின்றன என நினைக்கிறேன். கெமர் பேரரசு என்பது ஒன்பதாம் நூற்றாண்டு முதல் பன்னிரண்டாம் நூற்றாண்டு வரை நீடித்த சாம்ராஜ்யம். அதன் ஒரு பகுதியான இந்த லிங்கங்கள் எப்போது வடிக்கப்பட்டன என்பது பற்றித் தெளிவான தகவல் இல்லை.

     ஆற்றுப் படுகையெங்கும் வட்டமாகவும் சதுரமாகவும் ஆவுடையார் விளிம்பு வைத்து உள்ளே வட்ட வட்டக் கல் இட்டலிகள் போல் உள்ளன பெரும்பாலான லிங்கங்கள். சிறுவயதில் நாம் களிமண்ணைப் பிசைந்து கரைத்து ஊற்றி விளையாடிய வட்டங்கள் போலிருந்தன. நாங்கள் போயிருந்த நேரம் தண்ணீர் அதிகம் இல்லை. ஆகவே தெளிவாக லிங்கங்களைக் காண முடிந்தது.

     லிங்கத்தோடு பெரிய விஷ்ணு உருவம் ஒன்றும் நதிப் படுகையில் இருந்தது. உற்றுப் பார்த்தால்தான் தெரியும். விஷ்ணுவையும் லிங்கங்கள் பலவற்றையும் இப்படித் தண்ணீருக்குள் பார்ப்பது ஒரு புது அனுபவம். லிங்க வடிவங்களால் ஆசிர்வதிக்கப்பட்டுப் புனிதமடையும் தண்ணீர் கீழே உள்ள வயல்களில் பாய்ந்து நல்ல விளைச்சலைக் கொடுக்கும் என்பது கம்போடியர்களின் நம்பிக்கை.

     நாங்கள் நின்ற இடத்திலிருந்து மேலே போனால், சின்னச் சின்ன அருவிகளும் அவற்றின் ஓரங்களில் மேலும் பல இந்துக் கடவுளரின் உருவச் செதுக்குகளும் இருப்பதாக ஓட்டுநர் சொன்னார். மேலே போக நேரமில்லை. எங்கள் கண்ணுக்கு எதிரிலேயே உள்ளூர்க் குழந்தைகள் லிங்கத்தின் மீது கால்படாமல் ஆற்றைக் கடந்து எதிர்த்திசைக்குப் போயினர்.      

            சலசலவென ஓடும் நதியும் நிழல்தரு மரங்களும் ஏகாந்த உணர்வைத் தந்தன. நம் பாட்டன் முப்பாட்டன் வந்து நின்ற இடம். இதைச் செதுக்கிய சிற்பி பிறவியிலேயே இந்துவாகப் பிறந்திருப்பானா? இங்கு இந்து சமயம் பரவியது எப்படி? அதற்குமுன் இந்த மக்கள் எந்த சமயத்தைப் பின்பற்றினார்கள்? ஏன் இந்து மதத்திற்கு மாறினார்கள்? இந்துப் புராண இதிகாசங்கள் இவ்வளவு தூரம் இவர்களுக்குள் ஊறியது எப்படி? எனப் பலவிதமாக நினைத்துக் கொண்டேன்.

- பொன். மகாலிங்கம்

----------

 பொன். மகாலிங்கம் - சிங்கப்பூர் தொலைக்காட்சியில் பணியாற்றும் மூத்த இதழியலாளர். சென்னையின் முன்னணி ஊடகத்தில் முக்கியப் பொறுப்பில் இருந்தவர். சகமனிதர்கள் மீது அளவற்ற அன்பும், பாசமும் கொண்ட பண்பாளர். தமிழ் மீதும், பயணங்களின் மீதும் உள்ள அலாதியான ஆர்வம் காரணமாக அடிக்கடி எங்காவது புராதன இடங்களை தேடிச் சென்று அவற்றை தமது அழகு தமிழால் கட்டுரைகளாக்கி, வரும் தலைமுறைக்கு தகவல் பொக்கிஷங்களை சேர்ப்பதில் நாட்டம் கொண்டவர். அவரை தொடர்புகொள்ள - ponmaha2000@yahoo.com



Leave a Comment