மங்களங்கள் அருளும் மரகதாம்பிகை
மரகதாம்பிகை, லலிதா எனும் திருப்பெயர்களோடு ஈங்கோய்நாதர் எனும் மரகதாசலேஸ்வரரோடு அம்பிகை அருளாட்சி புரியும் தலம், திருச்சி மாவட்டத்தில் உள்ள திருஈங்கோய்மலை. அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது சாயா சக்தி பீடம் ஆகும். யோகினிகளால் பூஜைகள் நடத்தப்பெறும் திருத்தலம் இது. இங்கு அவர்களே நான்கு வேதங்களை தினமும் ஓதி சண்டி யாகம் போன்றவற்றையும் செய்து வருகிறார்கள். ஆதிசேஷனுக்கும், வாயுவுக்கும் தங்களுள் யார் பெரியவர் என போட்டி வந்தது. வாயுபகவான் தன் பலத்தை நிரூபிக்க பலமாக காற்றை வீசினார். ஆதிசேஷன் மந்தார மலையை இறுகப் பற்றிக்கொண்டார். அப்போது அம்மலையின் சிறு, சிறு பாகங்கள் பூமியில் தெறித்து விழுந்தன. அவ்வாறு விழுந்த ஒரு பகுதிதான் இம்மலை என்கிறார்கள். சிவபெருமான், அவர்களைச் சமாதானம் செய்து, மலையிலேயே மரகதலிங்கமாக எழுந்தருளினார். மரகத அசலத்தில் (மலையில்) எழுந்தருளியவர் என்பதால், ‘மரகதாசலேஸ்வரர்’ என்று பெயர் பெற்றார். இவருக்கு “திரணத்ஜோதீஸ்வரர்’’ என்ற பெயரும் உண்டு.
Leave a Comment