தினந்தோறும் திருமணம் செய்த பெருமாள்..


வீட்டை கட்டிப் பார், கல்யாணத்தை பண்ணிப் பார் என்பார்கள். இந்த இரண்டு விஷயங்களும் அவ்வளவு கடினமான வேலைகள் என்பதுதான் இதற்கு அர்த்தம். வாழ்க்கையில் ஒரு கல்யாணம் நடத்தவே நாமெல்லாம் படாதபாடு பட்டுக் கொண்டிருக்கும்போது, தினம் தினம் ஒருவர் திருமணம் செய்து கொண்டே இருந்தார் என்று கேள்விப்பட்டால் எப்படி இருக்கும்? அவரை நேரில் பார்த்து எப்படிப்பா உன்னால மட்டும் இதெல்லாம் முடியுது என்று கேட்கத் தோன்றும் இல்லையா? அப்படி தோன்றினால் நீங்கள் நேரில் சென்று அவரிடம் கேட்கலாம். அவர் நம்ம சென்னைக்கு அருகில் தான் இருக்கிறார். அவர் தான் திருவிடந்தையில் வீற்றிருக்கும் நித்ய கல்யாணப் பெருமாள்.

சென்னையில் இருந்து சுமார் 40 கி.மீ. தொலைவில் கடற்கரைச் சாலையை ஒட்டியே இருக்கிறது திருவிடந்தை. இங்குள்ள அற்புதமான பெருமாள் கோவில், 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. கல்யாண வரம் தரும் தலமாகப் போற்றப்படுகிறது, திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட இந்த திருவிடந்தை நித்யகல்யாணப் பெருமாள் ஆலயம்.

அசுர வம்சத்தில் பிறந்த பலி என்ற மன்னன் மிகுந்த நீதிமான். சிறப்பான முறையில் அரசாட்சி புரிந்து வந்தான். இவன், மாலி, மால்யவன், சுமாலி ஆகிய மூன்று அசுரர்களுக்காக தேவர்களுடன் போரிட்டு வென்றான். ஆனாலும் அசுரர்களைக் கொன்ற பாவம் நீங்குவதற்காகவும் தோஷம் களைவதற்காகவும் இத்தலத்துக்கு வந்து, வராக தீர்த்தக்கரையில் தவமிருந்து, ஆதிவராக மூர்த்தியின் தரிசனமும் திருவருளும் கிடைக்கப் பெற்றான் என்கிறது ஸ்தல புராணம்.

அதேபோல, இங்கு வந்து தவமியற்றிய காலவ மகரிஷியின் பிரார்த்தனையை ஏற்று, பெருமாளே பிரம்மச்சாரியாக வந்து அவருடைய 360 புதல்வியரையும் தினம் ஒருத்தி எனும் விகிதத்தில் திருமணம் புரிந்து அருளினாராம்! கடைசி நாளன்று அவர்கள் அனைவரையும் ஒரே பெண்ணாக்கி தன் இடப்பக்கத் தொடையில் அமர்த்தி, தம் தேவி மூலமாக இந்த உலகுக்கு எம்பெருமான் சரம ஸ்லோகத்தை அருளினார் எனத் தெரிவிக்கிறது ஸ்தல புராணம். 

இப்படி தினம் ஒரு திருமணம் என பெருமாள் நிகழ்த்திய திருத்தலம் என்பதால் பெருமாளுக்கு (உற்ஸவர்) நித்ய கல்யாணப் பெருமாள் எனும் திருநாமம் அமைந்தது. அவரின் இடப் பக்கத்தில் அருளும் நாச்சியாருக்கு ஸ்ரீஅகிலவல்லித் தாயார் எனும் திருநாமம் அமைந்தது. 

திருமணத் தடையால் வருந்துவோர், இந்தத் தலத்துக்கு வந்து கல்யாண தீர்த்தத்தில் குளித்துவிட்டு, தேங்காய், பழம், கஸ்தூரி மாலைகள் இரண்டு மற்றும் வெற்றிலைப் பாக்குடன் கோயிலுக்குச் சென்று பெருமாளைத் தரிசித்து அர்ச்சனை செய்ய வேண்டும். 
பின்னர், சந்நிதியில் பிரசாதமாகத் தரப்படும் மாலையை கழுத்தில் அணிந்துகொண்டு பிராகாரத்தை ஒன்பது முறை வலம் வர வேண்டும். அதையடுத்து, கொடிமரம் அருகில் வடக்கு நோக்கி நமஸ்கரித்துவிட்டு, மாலையை வீட்டுக்கு எடுத்துச் சென்று பத்திரமாக வைக்க வேண்டும். 

பிறகு, திருமாலின் திருவருளால், விரைவில் திருமண கைகூடும். திருமணம் நடைபெற்ற பிறகு, தம்பதி சமேதராக பழைய மாலையுடன் மீண்டும் கோயிலுக்கு வந்து அர்ச்சனை செய்து வழிபடுகின்றார்கள் பக்தர்கள். 

பெருமாளுக்கு உரிய நாளில், வணங்குவது இன்னும் சிறப்பு சேர்க்கும் என்பதால் சனிக்கிழமைகளில், ஏராளமான பக்தர்கள் வந்து ஸ்ரீநித்யகல்யாணப் பெருமாளை தரிசித்து, வேண்டிக் கொள்கின்றனர்.     



Leave a Comment