திருவருள்புரியும் தரணி பீட நாயகி


திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள குற்றாலத்தில் குழல்வாய்மொழி, பராசக்தி என இரு திருவடிவங்களில் குற்றாலநாதருடன் தேவி அருள்கிறாள். தல தீர்த்தங்களாக சிவமதுகங்கை, வட அருவி, சித்ரா நதி ஆகியவையும், தலவிருட்சமாக குறும் பலாவும் உள்ளன.

இந்தப் பலாவில் உள்ள சுளைகள், ‘லிங்க’ வடிவில் இருப்பது கலியுக அதிசயம். அகத்தியர் இங்கு திருமால் தலத்தை, சிவத்தலமாக மாற்றியபோது சுவாமிக்கு வலப்புறம் இருந்த ஸ்ரீதேவியை, குழல்வாய் மொழிநாயகியாகவும், பூதேவியை, பராசக்தியாகவும் மாற்றினாராம். பராசக்தி, இங்கு ஸ்ரீசக்கர அமைப்பிலுள்ள பீடத்தின் வடிவில் காட்சி தருகிறாள்.

பூமாதேவியாக இருந்து மாறிய அம்பிகை என்பதால் இதற்கு, ‘தரணி பீடம்’ (தரணி பூமி) என்று பெயர். ஒன்பது அம்பிகையரின் அம்சமாக இந்த பீடம் இருப்பதாக ஐதீகம். எனவே, பவுர்ணமியன்று இரவில் ‘நவசக்தி’ பூஜை செய்கின்றனர். பவுர்ணமி, நவராத்திரி மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தரணி பீடத்திற்கு, பன்னீர் கலந்த குங்கும அர்ச்சனை செய்து, விசேஷ பூஜை செய்து வழிபட்டால் பிரார்த்தனைகள் நிறைவேறும். சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.



Leave a Comment