அட்சய திருதியை சிறப்பு என்ன?
அட்சய திருதியை பற்றி பல புராணக் கதைகள் உள்ளன. அவற்றில் பொதுவாக அனைவருக்கும் தெரிந்த ஒன்று. கிருஷ்ணரும், குசேலரும் தமது குருகுலவாசத்தில் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். கிருஷ்ணர் கோகுலத்தை விட்டு நீங்கி துவாரகாபுரியின் மன்னரானார். ஆனால், குசேலரோ பரம ஏழையாக இருந்தார். அவருக்குத் திருமணமாகி 27 குழந்தைகள் இருந்தனர். தனது குழந்தைகளுக்கு அனுதினமும் உணவு அளிக்கவே அவர் பெரிதும் அவதிப்பட்டார். அவர் கொண்டு வரும் சிறு பொருளையும் சிக்கனமாக இருந்து குடும்பத்தை கவனித்தாள் அவரது மனைவி சுசீலை.
இந்த சூழ்நிலையில் ஒருநாள் குசேலர் வாழ்ந்துவந்த கிராமத்தில் கிருஷ்ணர் தன்னிடம் உதவி வேண்டி வருவோர்க்கு அள்ளி அள்ளிக் கொடுப்பதாகக் கேள்விப்பட்டாள் சுசீலை. தங்களுடைய இந்த வறுமை நிலையைப் போக்க எண்ணிய அவள், குசேலரிடம் விபரத்தைக் கூறி, பால்ய நண்பரான கிருஷ்ணரை சந்தித்து உதவி கேட்குமாறு கூறினாள்.
முதலில் அதை ஏற்றுக் கொள்ளாத குசேலர், பிறகு மனைவியின் வற்புறுத்தலின் பேரில் கிருஷ்ணரை சந்திக்கச் சென்றார். கிருஷ்ணருக்குப் பிடித்த அவலை ஒரு துணியில் சிறு மூட்டையாகக் கட்டிஎடுத்துச் சென்றார். குசேலர் வருவதை கேள்விப்பட்ட கிருஷ்ணர் அரண்மனை வாசலுக்கே ஓடி வந்து அவரை வரவேற்றார். சிறப்பான உபசரிப்பு வழங்கினார். கிருஷ்ணரின் செல்வவளத்தைக் கண்ட குசேலர் மிக்க மகிழ்ச்சிகொண்டார். ஆனால், இவ்வளவு பெரிய அரண்மனையில் உயரிய விருந்துண்ணும் கிருஷ்ணருக்கு, தான் கொண்டுவந்த அவலை எப்படி கொடுப்பது என தயங்கினார். அதை அறிந்த கிருஷ்ணர் குசேலர் வைத்திருந்த அவலை நட்பு உரிமையுடன் வாங்கி ஒவ்வொரு பிடியாக எடுத்து உண்டார். முதல் பிடி அவலை எடுத்து தன் வாயில் போட்டுக் கொண்டதும் அட்சயம் என்றார் கிருஷ்ணர்.
அடுத்த நொடியே, கிராமத்தில் இருந்த குசேலரின் வீடு பெரிய மாட மாளிகையாக மாறியது. இரண்டாம் பிடி அவலை எடுத்ததும் அவ்வாறே கூற குசேலரின் மாளிகையில் அத்தனை விலை உயர்ந்த பொருட்களும் தோன்றின. குசேலர் குபேரரானார். குசேலருக்கு கிருஷ்ணர் அருள்புரிந்தது ஒரு அட்சய திருதியை நன்நாளில்தான். அமாவாசைக்கு பிறகு வரும் 3ம் நாள் திருதியை. சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு பின் வரும் 3ம் நாள் அட்சய திருதியை என அழைக்கப்படுகிறது. எப்படி அட்சயப்பாத்திரத்திற்கு பெருமை உள்ளதோ அதுபோல் தான் அட்சய திருதியைக்கும் உண்டு. இந்த நாளில் செய்யும் எந்த நல்ல காரியமும் நற்பலனை தரும்.
* இந்த நாளில் வாங்கப்படும் எந்த பொருளும் குறையாமல் நிறைந்து இருக்கும். அட்சய திருதியையன்று மகாலட்சுமியை வணங்கினால் செல்வம் பெருகும் என்பது ஐதீகம். அந்நாளில் ஏழைகளுக்கு ஏதாவது ஒரு பொருளை தானம் செய்து நாம் வாங்கும் எந்த பொருளும் நீண்ட காலத்திற்கு நிலைத்திருக்கும்.
* அட்சய திருதியை நாளில் லட்சுமி குபேர பூஜை நடத்துவது அதிக பலன்களை தரும்.
* அட்சய திருதியை நாளில் விரதம் இருப்பது, பூஜைகள் செய்வது, புதிய பொருட்கள் வாங்குவது என எல்லாவற்றையும் தாண்டி 4 ஏழைகளுக்கு தானம் வழங்குவது அதிக சிறப்பு.
* அட்சய திருதியை புனித ஸ்தலங்களில் நீராடி இறைவனை வணங்கினால் பாவங்கள் விலகிவிடும் என்பது ஐதீகம்.
* அட்சய திருதியை நாளில் ஏழைகளுக்கு தானம் வழங்குவது மட்டுமின்றி கால்நடைகளுக்கும் உணவு வழங்கலாம். அதுவும் பசு மாட்டுக்கு வாழைப்பழம் வழங்கி வணங்கினால் நல்லது. பசுமாட்டில் அனைத்து தெய்வங்களும் இருப்பதாக நம்புவதால், வாழைப்பழம் வழங்குவது அனைத்து இறைவனுக்கு படைப்பதற்கு சமம்.
* அட்சய திருதியை நாளில் தங்கம் மட்டுமின்றி. ஒருபடி உப்பு வாங்கி வீட்டில் வைத்தாலும் பலன் கிடைக்கும்.
* ஜைன மதத்திலும் அட்சய திருதியைக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. ஜைனர்கள் அட்சய திஜ் என்று அழைக்கின்றனர். இதை மிக புனிதமான நாளாகவே கருதுகின்றனர். தானம் செய்வதற்கு ஜைனர்கள் இந்த நாளையே அதிகமாக பயன்படுத்துகின்றனர்.
* அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்குவது மட்டுமின்றி வீடு கட்டுதல், வியாபார நிறுவனங்களை தொடங்குதல், புனித சுற்றுலா செல்வது போன்றவற்றையும் செய்யலாம்.
* பீகார், உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் அதிகம் வசிக்கும் யாதவர்கள், இந்நாளை விளைபொருட்கள் விதைப்புக்கு உகந்த நாளாக கருதுகின்றனர்.
Leave a Comment