சின்ன திருப்பதியில் பங்குனித் தேரோட்டம்....


கல்லங்குறிச்சி, கலியுகவரதராஜ பெருமாள் கோயிலில் பங்குனித் திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
தமிழகத்தின் சின்ன திருப்பதி என்று அழைக்கப்படுவது, கல்லங்குறிச்சி கலியுக வரதராஜ பெருமாள் திருக்கோயில். இந்த திருக்கோயிலில் பங்குனிப் பெருந்திருவிழா கடந்த மார்ச் 25-ம் தேதி துவஜாரோகணம் மற்றும் கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாள்களில் வரதராஜ பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பல்வேறு அலங்காரங்களில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வரும் நிகழ்ச்சி நடைபெற்று வந்தது.
7-ம் நாள் விழாவில் திருக்கல்யாணமும், அதை தொடர்ந்து வெண்ணெய்த்தாழி உற்சவமும் மாலையில் வெள்ளிக்குதிரை வாகன வீதி உலா நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான 9-ம் திருவிழாவில் காலை தேரோட்டம் நடைபெற்றது. தேரில் வரதராஜ பெருமாள் ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் தேரில் எழுந்தருளினார். முன்னதாகச் சிறிய தேரில் ஆஞ்சநேயர் சுவாமி எழுந்தருளி மேளதாளங்கள் முழங்க வாணவேடிக்கையுடன் முக்கிய வீதிகளின் வழியாகச் சென்று நிலையத்தை வந்தடைந்தது. இதில் 50,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.



Leave a Comment