சமயபுரம் அம்பாளின் பச்சைப் பட்டினி விரதம்


சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பச்சசைப் பட்டினி விரதம் தொடங்கி உள்ளது. பூச்சொரிதல் தொடங்கியவுடன் அம்பாள் உலக நன்மைக்காக பச்சைப் பட்டினி விரதத்தை தொடங்குவதாக ஐதீகம். அதன்படி அம்மன் விரதத்தைத் தொடங்கினார். இந்த விரதம் 28 நாட்கள் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நாட்களில் வழக்கமான நைவேத்தியத்திற்குப் பதிலாக உப்பில்லாத தயிர்சாதம், வெள்ளரிப் பிஞ்சு, தூள் மாவு, பழங்கள், ஊற வைத்த பாசி பருப்பு போன்றவை படைக்கப்படுகின்றன. அம்மனின் பக்தர்களும் அம்மனைப் போல பச்சை பட்டினி விரதத்தைத் தொடங்கினர். விரத நாட்களில் பக்தர்கள் மஞ்சளாடை உடுத்தி, விரத உணவை உண்பர். இந்த விரதம் பங்குனி மாத கடைசி வார ஞாயிற்றுக்கிழமை வரை உள்ள 28 நாட்கள் கடைப்பிடிக்கப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்ற தேவஸ்தான புஷ்பாபிஷேகத்தைத் தொடர்ந்து பக்தர்கள் கொண்டுவந்த பூக்களால் அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது.
தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் பாத யாத்திரையாகவும், பல்வேறு வாகனங்களிலும் வந்து கூடை கூடையாக பூ கொண்டு வந்து அம்மனுக்கு புஷ்பாபிஷேகம் செய்தனர். ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் சி. குமரதுரை, கோயில் பணியாளர்கள் செய்தனர். அடுத்தடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமைகளில் 2-ஆவது வார, 3-ஆவது வார, 4-ஆவது வார பூச்சொரிதல் விழாக்கள் நடைபெற உள்ளன. சித்திரை மாதம் முதல் வார செவ்வாய்க்கிழமை தேரோட்டம் நடைபெறுகிறது.



Leave a Comment