திருமண வரம் தரும் மாங்காடு காமாட்சியம்மன்


சென்னை பூந்தமல்லிக்கு அருகே கரையான்சாவடியை அடுத்துள்ளது மாங்காடு. புராணங்களில் சூதவனம் என வழங்கப்பட்ட தலம்தான் இப்போதைய மாங்காடு. இக்கோயிலின் தல விருட்சம் மாமரம். இது 3000 வருடங்கள் பழமையானதாம்.
விளையாட்டாக ஈசனின் கண்களை மூடியதால் ஈசனால் சாபம் பெற்ற உமையன்னை தவம் செய்த இடம் இது. தவத்தின் முடிவில் ஈசனின் ஆணையால் காமாட்சி காஞ்சிபுரம் சென்றுவிட அன்னை வளர்த்த அக்னியால் இப்பகுதியே தகிக்க, அதைத் தணிக்க, ஆதிசங்கரர் இங்கே அர்த்தமேருவை பிரதிஷ்டை செய்தார். அஷ்டகந்தங்களால் ஆன அர்த்தமேருவிற்கு அர்ச்சனையும் காமாட்சிக்கு அபிஷேகங்களும் நடைபெறுவது இக்கோயிலின் சிறப்பு. அர்த்த மேருவிற்கு சந்தனம், புனுகு சாத்தி குங்குமம் இடப்படுகிறது. விஜயதசமியன்று எட்டுவித மூலிகைகளால் ஆன அஷ்டகந்தமும், அதன்மேல் தங்கக் கவசமும் சாத்தப்படுகின்றன. இங்குள்ள அர்த்தமேரு பிரமாண்டமானது. கூர்ம உருவத்தை அடித்தளமாக்கி அதன் மேல் படிக்கட்டுகள் கட்டி 16 இதழ் தாமரையுடன் விளங்குகிறது.
தவம் செய்யும் நிலையில் இங்கிருந்து காஞ்சி சென்ற தபஸ்காமாட்சியை இன்றும் காஞ்சி காமாட்சியின் கருவறையில் தரிசிக்கலாம். கருவறையில் பேரழகுப் பெட்டகமாய் காமாட்சி தேவி கையில் கிளி ஏந்தி, தலையில் சந்திர கலையோடு தரிசனமளிக்கிறாள். அர்த்த மண்டபத்தில் பஞ்சாக்னியில் நின்று ஒற்றைக்காலில் தவம் புரியும் நிலையில் காமாட்சியை தரிசிக்கலாம். ஆறு வாரங்கள் இந்த அன்னையைப் பாடி வழிபட, ஒரு வாரத்துக்கு ஒன்று வீதம் ஆறு பாடல்கள் உண்டு. வாரத்தில் ஏதேனும் ஒரு நாள் ஒரு எலுமிச்சம்பழத்துடன் வந்து காமாட்சியை தரிசித்து அடுத்து ஆறு வாரங்களில் அதே நாளில் தொடர்ந்து வழிபட, நினைத்தது நிறைவேறுகிறது. முதல் வாரம் ஆலயத்திலிருந்து பெற்ற எலுமிச்சம் கனியை, இரண்டாவது வாரம் அன்னையிடம் சமர்ப்பித்து புது எலுமிச்சம் பழத்தை வீட்டிற்கு எடுத்துச் சென்று பூஜிக்க வேண்டும் என்பது இங்கே வழிபாட்டு மரபு.
திருமணமாகாத காளையரும், கன்னியரும் இத்தல மரத்தில் மஞ்சள் கயிற்றைக் கட்டி நேர்ந்து கொண்டால் அவர்களுக்கு உடனே திருமண வரம் கிட்டுகிறது.
கருவறை காமாட்சி, ஸ்ரீசக்ரம், தபஸ் காமாட்சி தவிர கருவறையில் உள்ள காமாட்சி விளக்கும் இத்தலத்தில் காமாட்சியாகவே வழிபடப்படுவதால், இத்தலத்தில் நான்கு காமாட்சிகளை தரிசிக்கும் நிறைவு உண்டு. பிரார்த்தனை நிறைவேறியவர்கள் தேவியின் முன் உள்ள அர்த்தமேருவிற்கு புடவை சார்த்தியும், எலுமிச்சம்பழ மாலை அணிவித்தும் நேர்த்திக் கடனை நிறைவேற்றுகின்றனர். காமாட்சியின் திருமணத்திற்கு சீராக, கணையாழியைக் கொண்டு வந்த வைகுண்ட பெருமாளும் இந்த ஆலயத்தின் அருகில் கோயில் கொண்டிருக்கிறார். வாமன மூர்த்தியால் கண்ணை இழந்த சுக்கிரனுக்கு அருள்புரிந்த வெள்ளீஸ்வரரும் இத்தலத்தின் அருகே அருள்கிறார். காமாட்சி ஆலயப் பணி எதற்காவது குறிப்பிட்ட தொகை அல்லது பொருள் தேவையானால், அது அப்படியே அந்த வார உண்டியலில் வந்து சேர்ந்துவிடுவது காமாட்சியின் அற்புதம்தான்.



Leave a Comment