நாக தோஷம் நீக்கும் திருமுருகன்பூண்டி!
திருமுருகன்பூண்டி முருகநாதேசுவரர், கொங்கு நாட்டில் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். சுந்தரர் பாடல் பெற்ற இத்தலம் திருப்பூரில் இருந்து அவினாசி வழியாக கோவை செல்லும் வழியில், திருமுருகன்பூண்டியில் அமைந்துள்ளது. இத்தலத்திற்கு துர்வாசர் கற்பக உலகிலிருந்து மாதவி மரத்தைக் கொண்டு வந்தார் என்பது நம்பிக்கை. முருகக்கடவுளின் பெயரிலேயே அமைந்த திருத்தலம் திருமுருகன்பூண்டி. இந்தத் தலம், முருகப்பெருமான் விரும்பி வந்து சிவ வழிபாடு செய்த பெருமைக்கு உரியது. மங்களாம்பிகையுடன் மாதவனேஸ்வரர் கோயில் கொண்டிருக்கும் இத்தலத்துக்கு, இன்னும் பல புராணப் பெருமைகள் உண்டு.
இத்தலத்தில் முருகநாத சுவாமி சுயம்பு மூர்த்தியாக உள்ளார். நுழைவு வாசலில் பதினாறுகால் மண்டபம் உள்ளது. சுவாமி, அம்மன் சந்நதிகள் மேற்கு நோக்கி அமைந்துள்ளன. கோயிலின் நடுவில் சண்முகதீர்த்தம். இடப்புறத்தில் ஞானதீர்த்தம். வலப்புறத்தில் பிரம்ம தீர்த்தம் என மூன்று தீர்த்தங்கள் உள்ளன. முருகன் வழிபட்டதற்கு அடையாளமாக முருகன் சந்நதியின் கருவறையில் மேற்கு நோக்கியவாறு லிங்கம் உள்ளது. இங்குள்ள முருகனிடம் வேலும் மயிலும் இல்லை.
அவற்றைக் கோயிலுக்கு வெளியே விட்டுவிட்டு வந்து சிவனை முருகன் வழிபட்டதாக ஐதீகம்.முருகனால் வழிபடப்பட்டதால் இத்தலத்தில் எழுந்தருளியுள்ள முதன்மைக் கடவுளான சிவன் முருகநாதேசுவரர் எனப் பெயர்பெற்றார் என்ற மரபு வரலாறும் வழக்கத்தில் உள்ளது. அகத்தியர், மார்க்கண்டேயர், துர்வாசர் ஆகியோர் வழிபட்ட தலம். இதற்கு மாதவிவனம் என்றும் பெயர்.
துர்வாசர் கற்பக உலகிலிருந்து மாதவிமரத்தை இங்கு கொண்டு வந்ததாகவும், அவ்வழியே சுந்தரர் செல்லும்போது, இறைவன் தன் பூதகணங்களை வேடர் வடிவில் ஏவிச் சுந்தரரின் செல்வங்களைப் பறித்துக் கொண்டதாக கூறப்படுகிறது.கோயில் நுழைவு வாயிலில் பதினாறுகால் மண்டபத்தில் விநாயகர் சந்நதி உள்ளது. இதைத் தாண்டி உள்ளே சென்றால் வலப்புறம் வேடுவர் உருவமும் சுந்தரர் உருவங்கள் இரண்டு (ஒன்று பறிகொடுத்து முகம் வாடிய நிலையிலும் மற்றொன்று மீண்டும் பெற்ற மகிழ்ச்சி நிலையிலும்) உள்ளன.
கோயில் பிராகாரத்தில் பைரவர் சந்நதியும் நவக்கிரகங்களும் உள்ளன. இங்குள்ள சண்முகநாதர் சந்நதி சிறப்பானது. ேகாயிலின் ஸ்தலமரம் வில்வம். இத்தலம் பிரம்மகத்தி தோஷம் நீங்கிய தலம். சித்தப்பிரமை, பைத்தியம், பில்லி, சூன்யம் இவை நீங்க வேண்டுவோர் இங்குவந்து நீராடி வழிபடுவதையும், பல நாட்கள் இங்கேயே தங்கியிருப்பதையும் இன்றும் காணலாம். இங்குள்ள பிரம்மதாண்டவ நடராஜர் சந்நதி விசேஷமானது. இக்கோயிலுக்குப் பக்கத்தில் சற்றுத் தொலைவில் மாலாதரன் எனும் வேட மன்னன் வழிபட்ட பைரவர் சந்நதி அமைந்துள்ளது. எங்கும் இல்லாத புதுமையாக இங்கு, கோயிலின் மண்டபத்தின் மேலே பெரிய நந்தி, ஆலயத்தைப் பார்த்தவாறு சுதையால் அமைக்கப்பட்டுள்ளது.
சிவனாரின் பிரம்மதாண்டவம் அரங்கேறிய தலமாகவும் இது கருதப்படுகிறது. வெகுநாட்களாக குழந்தை பாக்கியம் கிடைக்காது வருந்திய பாண்டிய மன்னன் ஒருவன், இங்கு வந்து வழிபட்டு குழந்தை வரம் பெற்றான். இதுகுறித்த சிற்பக் காட்சிகளை இங்கு தரிசிக்கலாம். இத்தலத்தைப் புதுப்பித்து வணங்கிய வேடன் ஒருவருக்கும் இங்கு சிலை உள்ளது. லிங்கோத்பவர், சண்டிகேஸ்வரர், துர்க்கை, தட்சிணாமூர்த்தி, சூரிய-சந்திரர், பைரவர், நவக்கிரகங்கள் ஆகிய தெய்வங்களையும் இங்கு தரிசிக்கலாம்.
கொங்கு மண்டலத்தில் சிறந்த கேது பரிகாரத் தலமாகவும் இது விளங்குகிறது. முனிவர் ஒருவரின் சாபத்துக்கு உள்ளான கேது பகவான், இந்தத் தலத்துக்கு வந்து துர்வாச தீர்த்தத்தில் நீராடி ஸ்ரீ மாதவனேஸ்வரரை வழிபட்டு சாபம் நீங்கப்பெற்றதாக தலபுராணம் விவரிக்கிறது. எனவே, இங்கு வந்து வழிபடும் பக்தர்களுக்கு கேது தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை.
Leave a Comment