கடன் தோஷம் நீங்க எளிய பரிகாரங்கள்... வழிபாடுகள்!
பொதுவாக, கடன் ஒருவரது வாழ்க்கையில் வருவதும் போவதுமாக இருக்கும் என்றாலும், சிலர் ஆயுசு முழுக்கக் கடனாளியாகவே இருப்பார்கள். அவர்களின் ஜாதகம் நஷ்ட ஜாதகமாக இருப்பதே அதற்குக் காரணம். அவர்கள் எந்தவித முயற்சியில் இறங்கினாலும் பொருள் நஷ்டத்தால் சிரமப்படுவார்கள்.
ஒருவரது ஜாதகத்தில் 2 ஆம் வீட்டுக்குரிய தன ஸ்தானாதிபதி மறைந்திருந்தாலோ, 4 ஆம் வீட்டு சுகாதிபதி மற்றும் பாக்கியாதிபதி பலவீனமாகவோ, நீச கதியிலோ, வக்ரகதியிலோ மறைந்திருந்தாலோ அல்லது பாவ கிரகத்துடன் சேர்ந்து பலமிழந்து இருந்தாலோ, இந்த ஜாதக அமைப்புடன் பிறந்த எவர் ஒருவரின் ஜாதகமும் நஷ்ட ஜாதகம்தான்.
அதேபோல், லக்னாதிபதியும் ராசிநாதனும் வலுவிழந்து, ஆனால் 6-க்கு உரியவன் வலுவாக இருந்தால், சம்பந்தப்பட்ட ஜாதகர் கடைசி வரைக்கும் கடனாளியாகவே இருப்பார்.
இங்ஙனம் கடன் தோஷ ஜாதக அமைப்பு கொண்ட அன்பர்களுக்கு, பாதிப்புகள் விலகிட தானம்தான் மிகச் சிறந்த பரிகாரம். அது, உணவாகவோ, ஆடையாகவோ அல்லது எது வேண்டுமானாலும் இருக்கலாம்.
ஆசிரியராக இருப்பவர்கள், மற்றவர்களுக்குக் கல்வியை இலவசமாகவோ அல்லது மிகக் குறைந்த கட்டணத்திலோ தருவது சிறந்த பரிகாரமாகும். நம்மால் முடியும்போதெல்லாம் பசுவுக்கு உணவாக பீட்ரூட், முட்டைகோஸ், கேரட், தண்ணீரில் ஊறவைத்த பச்சரிசி ஆகியவற்றைத் தரலாம்
வழிபாடுகள்
பரிகாரக் கோயில் என்று எடுத்துக்கொண்டால், சம்ஹார தலங்களுக்குச் சென்று வழிபடலாம். குறிப்பாக, சஷ்டி தினங்களில்... திருச்செந்தூருக்குச் சென்று முருகப்பெருமானை வணங்கி வழிபடுவது நல்லது. முடிந்தால், வருடத்துக்கு ஒருமுறை திருச்செந்தூர் சென்று, கந்தனை வழிபடுவதை வழக்கமாக்கிக் கொள்ளலாம்.
லட்சுமி கடாட்சம் பெருக...
கனகதாரா ஸ்தோத்திரம் மகாலட்சுமியின் பெருமையையும் புகழையும் போற்றிச் சொல்லக் கூடிய மகத்துவம் வாய்ந்த ஸ்துதி. ஆதிசங்கரர் அருளிய இந்த ஸ்தோத்திரத்தை வீட்டிலுள்ள பெண் கள் தினமும் அதிகாலை அல்லது அந்திப்பொழுதில் படித்தாலோ, கேட்டாலோ அந்த வீட்டில் செல்வநிலை பெருகும்.
வெள்ளிக்கிழமை இரவு 8 மணி அளவில் சுக்கிர ஹோரை ஆரம்பிக்கும் நேரத்தில் 1, 9, 12, 108 என்ற எண்ணிக்கையில் வீட்டில் நெய்தீபம் ஏற்றுவது, தீபப் போற்றிப் பாடல்களைப் பாடி வழிபடலாம். இதனால் தனவரவு பெருகும்.
Leave a Comment