செவ்வாய் தோஷம்: பாதிப்புகள் விலக பரிகாரங்கள்!


பூர்வஜென்ம குற்றம் - குறைகளுக்கு, நிவர்த்தி தேடினால் தோஷங்களின் பாதிப்பு குறையும். அவ்வகையில், வாழ்வில் பலரும் சந்திக்கும் தோஷங்கள், பாதிப்புகள், அவற்றுக்குக் காரணமான கிரக நிலைகள், எளிய பரிகாரங்கள் இங்கே... 

தோஷங்களில் அதிக பயத்துக்கும் பாதிப்புக்கும் ஆளாக்குவது, செவ்வாய் தோஷம்தான். பிறக்கும்போது லக்னத்தில் இருந்து 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் ஏதேனும் ஒரு நிலையில் செவ்வாய் கிரகம் அமைந்திருக்கும். அப்படி அமைந்திருந்தால் செவ்வாய் தோஷம் ஆகும்.

சில தருணங்களில் இந்த தோஷம் வலு குன்றியதாகவும் திகழும். செவ்வாய் ஆட்சி அல்லது உச்சம் பெற்றிருந்தாலோ, குருவோடு சேர்ந்து நீச கதியில் நின்றாலோ, வர்க்கோத்தமம் பெற்றிருந்தாலோ (உங்கள் ஜாதக ராசி கட்டத்திலும் நவாம்சத்திலும் ஒரே ராசியில் இருப்பது) செவ்வாய் தோஷத்தின் பாதிப்பு குறையும்.

செவ்வாய் தோஷத்துக்கு செவ்வாய் தோஷத்தைச் சேர்ப்பதுதான் நல்லது என்பதே எனது கருத்து. ஏனெனில், உணர்ச்சிக்குரியதே செவ்வாய் கிரகம். உடல் மற்றும் மன உணர்வுகளைச் சமமாக இருவரும் வெளிப்படுத்தும்போது, கணவன்-மனைவிக்குள் வீண் பிரச்னைகள் எழாது.

பரிகாரங்கள் என்னென்ன?

செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் புளி சாதம், புளிச்ச கீரையை உணவில் குறைவாகச் சேர்ப்பது நல்லது. அன்றாடம் நாம் எதிர்கொள்ளும் செவ்வாய் ஆதிக்கமுள்ள நிலம், சகோதரர்கள் முதலான விஷயங்களில் நேர்மறையான அணுகுமுறையை வைத்துக்கொண்டால், செவ்வாய் தோஷத்தின் வீரியம் குறையும்.

பூர்வீகச் சொத்துப் பிரிவினையில் சகோதர- சகோதரிகள், பெற்றோரின் மனத் தாங்கலுக்கு ஆளாகிவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். முதன் முதலாக வாங்கும் சொத்தை நிலமாக வாங்காமல், கட்டப்பட்ட கட்டடமாக வாங்குவது சிறப்பு. ஊர் எல்லையில் கோயில்கொண்டிருக்கும் காவல் தெய்வங்களுக்குச் செம்பருத்திமற்றும் விருட்சிப்பூ சாற்றி வணங்குங்கள். வீட்டில் வில்வம், வன்னி மரக்கன்றுகள் நட்டுப் பராமரியுங்கள்.

தொடர்ந்து 6 செவ்வாய்க் கிழமைகள் வீட்டில் ஷட்கோணம் வரைந்து, அதில் ஆறெழுத்து மந்திரத்தை எழுதிவைத்து, 6 நெய் தீபங்கள் ஏற்றிவைத்து குமார ஸ்தவம், சண்முகக் கவசம் படித்து வழிபடலாம். அப்போது வெல்லம் கலந்த தினைமாவு நைவேத்தியம் செய்து, முல்லைமலர், செவ்வரளி அல்லது செம்பருத்தி சமர்ப்பித்து முருகனை வணங்கிட, செவ்வாய் தோஷ பாதிப்புகள் விலகும்.

- கே.என். கோபால சாஸ்திரி
 



Leave a Comment