உலகின் மிகப்பெரிய ஆலயம் - 8
உலகமே இருந்தது அந்த உணவகத்துக்குள். வெள்ளைக்கார முகங்கள் அதிகம் தென்பட்டன. இந்திய முகங்களைக் கிட்டத்தட்டக் காண முடியவில்லை எங்களைத் தவிர. வட இந்தியர் போன்ற தோற்றமுள்ள ஒரு சிலரைப் பார்த்தோம். ஆனால் அவர்கள் வட இந்தியர்கள்தானா என்பதை உறுதியாகச் சொல்ல முடியவில்லை. பார்த்த அனைவருமே ஏறத்தாழத் துணையுடன்தான் இருந்தனர். யாரும் தனியாக இல்லை. உணவும் அப்சரஸ் நடனமும் சேர்த்து 20 டாலர் கட்டணம்.
பெரிய அரங்கம். அரங்கத்தின் வலக்கைப் பக்கம் விதவிதமான சைவ, அசைவ உணவு வகைகள். வேண்டியதை எடுத்துச் சாப்பிடலாம். எது என்ன என்று ஆங்கிலத்தில் தெளிவாக எழுதி வைத்திருந்ததால், அச்சமின்றி எடுத்துத் தட்டில் வைக்க முடிந்தது. உட்கார்ந்து உணவுண்ண நீளமான பெஞ்சுகளும் சற்றே அகலமான மேசைகளும் போடப்பட்டிருந்தன. குளிரூட்டப்பட்ட அரங்கு என்பதாலோ என்னவோ உள்ளே புகைபிடிக்க அனுமதியில்லை. அப்பாடா நிம்மதி..
உணவைச் சாப்பிட்டுக் கொண்டே நடனத்தை ரசிக்கலாம். எப்போதுமே எனக்கு இதில் உடன்பாடில்லை. கல்யாண வீட்டு நாயனக்காரர் கானடாவும் ஆபேரியுமாகப் பொழிகையில், அதுபற்றிய எந்த ஸ்மரணையுமின்றி நம்மாட்கள் அரட்டையடித்துக் கொண்டு இருப்பார்கள். என் நண்பர் திலகராஜ் திருமணத்தில் நாகசுரம் வாசித்தவர் பிரமாதமான வாத்தியக்காரர். 1990 என்று நினைவு. மாயவரத்தில், காவேரிக்கரை ஓரமாக இருந்த பழைய திருமண மண்டபம். அந்தக் காலத்து எட்டுக்கட்டு வீடு. திண்ணையுள்ள பெரிய வீட்டைக் கல்யாண மண்டபமாக்கி விட்டார்கள்.
முற்றமுள்ள நடுக்கூடத்தில் திருமணம். வாசலுக்கு இடப்பக்கம் இரட்டை நாயனமும் மேளமும். ஆச்சா மரக் குழலில் இருந்து எழுந்து கல்யாண வீட்டை நிறைத்துக் கொண்டிருந்தது இசை. சம்மணம் கொட்டி அமர்ந்து அமுதத்தை இசையாக்கி வழியவிட்டபடி இருந்தனர் வித்வான்கள். மிகப் பிரபலமான வித்வான்களெல்லாம் இல்லை. மாயவரத்துக்குப் பக்கத்திலுள்ள ஏதோ ஒரு ஊர் வித்வான்கள். தொடர்ந்து இசை கேட்டுப் பாடல்களை இனங்காணத் தொடங்கிவிட்ட வயது எனக்கு.
ஒவ்வொரு பாடலாக அவர்கள் வாசிக்க வாசிக்க எனக்கு இருப்புக் கொள்ளவில்லை. கூடவே கள்ளத்தொண்டையில் பாடலைப் பாடிக் கொண்டு பின்தொடர்ந்தேன். தாளமெல்லாம் போடத் தெரியாது. ராகத்தையும் அடையாளங்காணத் தெரியாது. ஆனால் பாட்டு மட்டும் தெரியும். போதாதா என்ன? நான் இசையை ரசிக்கிறேன் என்பதை எப்படியோ உணர்ந்துவிட்ட நாயனக்காரர் அவ்வப்போது என்னைப் பார்த்துக் கொண்டே வாசித்தார். என்னைத் தவிர அன்று அந்த இசையை வேறு எவரும் ஒருபொருட்டாகவே எண்ணவில்லை.
அன்று அவர்கள் வாசித்த அலைபாயுதே கண்ணா, ஆயிரங்கண் போதாது வண்ணக்கிளியே, வெஸ்டர்ன் நோட், கதனகுதூகலத் தில்லானா எல்லாமே உலகத்தரம். அன்று அவர்கள் ஒவ்வொருவருக்கும் 500 ரூபாய் சம்பாவனை கொடுக்கப்பட்டிருந்தால் எதேஷ்டம். எனக்குச் சாப்பிடப் போகக்கூட அன்று மனமில்லை. கடைசியில் வித்வான்களிடம் போய் பாடல்களைச் சொல்லி நான் மிகவும் அனுபவித்துக் கேட்டதாகச் சொன்னபோது உண்மையான பாராட்டைக் கேட்ட பூரிப்பு அவர்கள் நால்வரின் முகத்திலும் படர்ந்தது. இன்றளவும் அந்த அனுபவம் எனக்கு நினைக்கும்போதெல்லாம் இனிமை தரும்.
நாகசுர இசைக்கு ருசி சேர அது வாசிக்கப்படும் இடம் பிரதானமானது என்பது என் அனுபவம். கோயில் பிரகாரங்களில் யார் வாசித்தாலும் அது காருகுறிச்சி போல இனிமையாகத்தான் இருக்கும். கோயில்களில் உள்ள கட்டட அமைப்பு அப்படி. நீண்ட பிரகாரங்களில் எதிரொலித்து வரும் ஓசை நம்மை மயக்கிவிடும். மிகச் சிறிய மூடிய அறைக்குள் நாகசுரம் கேட்டால் காது கிழிந்துவிடும். வெளிப்புற ஓசையற்ற திறந்தவெளி அரங்குகள் கச்சேரிக்குப் பொருத்தம்தான். நல்ல ஒலிபெருக்கி அமைந்தால்!
இசையால் என்னை நெகிழ வைத்த இடங்களில் சிதம்பரம் சபாநாயகர் ஆலய நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி மேடை முக்கியமானது. 1992 அல்லது 93. திருவிழா ஜெய்சங்கரும் ஹரித்வாரமங்கலம் பழனிவேலும் இணைந்து நாதமும் நாட்டியமும் என்ற பெயரில் ஒரு பெண்ணின் நடனத்திற்கு வாசித்தனர். அன்று அது ஒரு பெரிய பேச்சாக இருந்தது. அன்றுதான் நாட்டியாஞ்சலி தொடங்கிய முதல்நாள் என்று நினைக்கிறேன். சிவராத்திரியன்று தொடங்கி ஐந்து நாட்களுக்கு நடக்கும் நாட்டியாஞ்சலி.
தொடக்கத்தில் மூன்று நாட்களாக இருந்தது பின்னர் எல்லாருக்கும் வாய்ப்புத் தர வேண்டுமென்ற நோக்கில் ஐந்து நாட்களாக விரிவுபடுத்தப்பட்டது. நிகழ்ச்சி முடிந்து சீவாளியைத் துடைத்து பாரி நாயனத்தைப் பைக்குள் போடப் போய்விட்டார் ஜெய்சங்கர். பின்னிரவு 2 மணியிருக்கும். நடனத்திலும் இசையிலும் உண்மையான அக்கறையுள்ள கூட்டம் மட்டும் எஞ்சியிருந்தது. பிப்ரவரி என்ற போதும் இலேசான பனி இருந்தது. தலைக்குக் கைக்குட்டையைக் கட்டிக் கொண்டு நடனம் பார்த்துக் கொண்டிருந்தோம்.
மேடைக்குச் சற்றுத் தொலைவில் இருந்து ஒரு பெரியவர் எழுந்தார். ஜெய்சங்கர் ! நடராஜாவுக்கு ஒரு மல்லாரி வாசிங்கோ ! என்றார் இரண்டு கையைத் தூக்கி.. வெற்றிலை போடும் பழக்கமுள்ளவராக இருக்க வேண்டும். வெற்றிலையை வாயில் அதக்கிக் கொண்டு வேண்டுகோள் விடுத்தது போல் தோன்றியது எனக்கு. பின்னிரவு நேரமென்பதால் அவர் சொன்னது மேடைக்குத் தெளிவாகக் கேட்டிருக்க வேண்டும். சிரித்துக் கொண்டே ஹரித்வாரமங்கலம் பழனிவேலைப் பார்த்தார் ஜெய்சங்கர். அவர் உற்சாகமாகத் தலையை ஆட்டித் தவிலில் கழியால் ரெண்டு போடு போட்டார். அவ்வளவுதான்..
மீண்டும் சீவாளியைப் பொருத்தி பீ பீ என்று ஊதிப் பார்த்துவிட்டு ஆரம்பித்து விட்டார் ஜெய்சங்கர். அடுத்த சுமார் ஒரு மணி நேரத்திற்கு நான் கேட்ட மல்லாரி என் வாழ்நாளில் மறக்காது. அந்த ஆலயச் சூழல், கலைஞர்களின் அற்புத ஈடுபாடு, பக்தி, மெய்மறந்த ரசிகர்கள். பின்னிரவுக்கே உரிய குளுமை, அமைதி இன்னும் என்னென்னவோ சேர்ந்து அந்த இரவை மறக்க முடியாத இரவாக்கி விட்டன. மல்லாரியைக் கேட்டு ஜிங்கு ஜிங்கென்று நடராஜர் சித்சபையை விட்டு அம்மையுடன் எழுந்தோடி வந்துவிடப் போகிறார் என்றுதான் நினைத்தேன் அன்று. மோட்சம்தான் அன்று அதைக் கேட்டவர்களுக்கு.
அப்போதிலிருந்து எங்கே மல்லாரி கேட்டாலும் இந்தச் சம்பவம் நினைவுக்கு வந்துவிடும். தஞ்சாவூர் மாவட்டத் திருவிழாக்களில் சுவாமி வீதியுலா வரும்போது தவில்காரர்கள் போட்டி போட்டுக் கொண்டு வாசிப்பார்கள் என்று என்னுடைய நண்பர் குணசீலனின் அப்பா சொல்லக் கேட்டிருக்கிறேன். திருவாளப்புத்தூர், இஞ்சிக்குடி, வலங்கைமான் இந்த ஊர் நாயனக் குழுக்கள் மிகப் பிரபலமாக இருந்த காலமாம்.
மிகச் சிறப்பாக வாசிக்கும் தவில் வித்வானிடம் எதிராளி தவில் வாசிக்கும் கழியைக் கொடுத்துத் தன்னுடைய தோல்வியை ஒப்புக்கொண்டு விடுவாராம். “கழியைக் கொடுத்துட்டான் அவன்” என்று அதை நினைவுகூரும்போதே அந்த இடத்துக்கும் நாளுக்கும் சென்று விடுவார் குணா அப்பா. இது நான் பார்த்ததில்லை. குணா அப்பா பலமுறை சொல்லக் கேட்ட தகவல். அந்தத் தலைமுறை எங்களை விடக் கொடுத்து வைத்தது. எந்தவிதக் கலப்படமும் இல்லாமல் நேரடியான இசையைக் கேட்டு வளர்ந்த பாக்கியவான்கள்.
இன்றளவும் நாகசுரமும் வீணையும் என் மனங்கவர்ந்த வாத்தியங்கள். தஞ்சாவூர் சிவகங்கைப் பூங்காவுக்கு வெளியில்தான் வாழ்க்கையில் முதன்முதலாகப் பலாமரத்தில் வீணைக்குடம் செய்வதைப் பார்த்தேன். அப்புறம் என் பலதுறைத் தொழிற்கல்லூரியில் படித்த இளைய மாணவனின் அப்பா வீணை செய்பவர் எனக் கேள்விப்பட்டுத் தஞ்சாவூரில் அவர்கள் வீட்டுக்குப் போய் குடம், பிருகடை என ஒவ்வொன்றாக வீணை உருவாகும் அழகைப் பக்கத்தில் இருந்து ரசித்திருக்கிறேன். பழங்காலத்தில், நிஜமான யானைத் தந்தத்தை வீணையின் மேல்புறத்தில் பதித்து அழகுபடுத்துவார்களாம். இப்போது தந்தம் பதிப்பதில்லையாம்.
அதேபோல், உலகிலேயே நாகசுரம் உற்பத்தி செய்யப்படுவது மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள நரசிங்கன்பேட்டையில் மட்டும்தான் என்பது எனக்கு ஆச்சர்யமான தகவல். இலங்கையிலும் நாகசுரம் செய்வதுண்டு என்று ஒருவர் கூறியிருந்தார். பத்து ஆண்டுகளுக்கு முன்னால், வானொலி நேர்காணலுக்காக அந்த ஊருக்குப் போய் நாகசுரம் தயாரிப்பவர்களைச் சந்தித்திருக்கிறேன். “அட ஏன் சார் ? நாகசுரம் ஆச்சா மரத்துலதான் செய்ய முடியும். இப்ப எங்க கிடைக்குது ஆச்சா மரம் ? எல்லா மரத்தையும் வெட்டிட்டாங்க. எங்கயாவது பழைய வீடு பிரிக்கிறதாத் தகவல் கிடைச்சா அங்க போயித் தேடுவோம். பழைய வீட்டு உத்தரம் பெரும்பாலும் ஆச்சா மரத்தில செஞ்சு போட்ருப்பாங்க. அதை விலை கொடுத்து வாங்கிட்டு வந்து அதுல இருந்துதான் இப்ப நாகசுரம் தயாரிச்சிட்டு இருக்கோம். வருங்காலத்துல அதுவும் கிடைக்குமோ என்னமோ தெரியலை. என்ன செய்யப் போறோம்னு புரியலை !” என்றபோது நான் அதிர்ந்து போனேன்.
அப்படியென்றால் நாகசுரத்தின் எதிர்காலம் ? நாகசுரத்தில் மூன்று வகை என்று ஷேக் சின்ன மௌலானா ஒருமுறை விளக்கியிருந்தார். பாரி, திமிறி, முகவீணை. நாம் பொதுவாகப் பார்ப்பது பாரி நாயனம். அதாவது பெரிய நாயனம். திமிறி அதில் பாதி. முகவீணை சின்னது. முற்றமுழுக்க யானைத் தந்தத்தில் செய்யப்பட்ட முகவீணை கூடப் புழக்கத்தில் இருந்ததாகப் படித்திருக்கிறேன்.
சரி. எங்கோ ஆரம்பித்தது எங்கோ இழுத்துக் கொண்டு போய்விட்டது. மொச்சு மொச்சென்று கண்டதைச் சாப்பிட்டுக் கொண்டு நடனமோ இசையோ என்னால் ரசிக்க முடியாது சாமி. நாட்டியம் தொடங்குவதற்குள் சாப்பிட்டு முடித்து விடுவோம் என்று கிடைத்ததை அள்ளித் தட்டில் வைத்துக் கொண்டு ஐவரும் சேர்ந்து அமர்ந்தோம். எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். கட்டுப்பாடு ஏதுமில்லை.
ஆனாலும் பெரிதாகச் சாப்பிடுமளவுக்கு அங்கிருந்த பண்டங்கள் எங்களைக் கவரவில்லை. காய்கறி சூப்பும், நறுக்கிய பழங்களும் வேண்டிய அளவு சாப்பிட்டோம். கடைசிச் சுற்றில் இருந்தபோது கிய்யா முய்யா என்று இலேசாக முனகும் சத்தம் கேட்டது மேடையிலிருந்து. மூக்காலேயே ஒரு பெண்குரல் ஆலாபனை செய்யத் தொடங்கியது.
எல்லாரது கவனமும் மேடையில் குவிந்தது. மெதுவாக நடந்து ஒரு நடனமணி முன்னால் வந்தார். ஒயிலாக என்று ஒரு வார்த்தை சொல்வோமே. அந்த வார்த்தைக்கு அர்த்தம்போல மேடையில் வழுக்கியவாறு வந்தார். நம்ம ஊர் ஜலதரங்கம் போன்ற ஓசை வரும் வாத்தியமொன்று மேடையில் இருந்தது. குமிழோடு கூடிய பத்துப் பதினைந்து வெண்கலச் செம்புகளைக் கவிழ்த்துப் போட்டு அதன்மேல் மரச் சுத்தியலால் அடிப்பது போன்ற தோற்றம். பக்கத்தில் துந்தனா மாதிரி ஒரு நரம்பு வாத்தியக் கருவி. கம்போடியப் பாரம்பரிய உடையில் பாடகி.
மெதுவாக ஆரம்பித்துப் பாடத் தொடங்கினார். சத்தியமாக ஒரு வார்த்தை புரியவில்லை. கெமர் பாரம்பரிய செவ்வியல் நடனத்திற்கு அப்சரஸ் நடனம் என்று பெயர். அதாவது தேவலோக மங்கையர் நடனம். சும்மா சொல்லக் கூடாது அந்தப் பெண்களும் அப்படித்தான் இருந்தார்கள். அங்கோர் ஆலயங்களில் செதுக்கப்பட்டுள்ள புடைப்புச் சிற்பங்களில் உள்ளது மாதிரியே ஆடை அணிகலன்கள். தலை அலங்காரம் எல்லாம் அச்சு அசல் சிலையைப் போலவே. காதுகளின் ஓரங்களில் எருக்கம்பூவைக் குப்பறப் போட்டுக் கோத்துத் தொங்கவிட்டிருந்தார்கள்.
எல்லாம் பிளாஸ்டிக் மாலைகள்தான். எதுவும் மணமுள்ள உண்மையான மலர்கள் இல்லை. தலையை விரித்துப் போட்டு ஆங்காங்கே சந்தனமுல்லை மலர்கள் போன்ற கவ்விகளால் கட்டியிருந்தனர். கிரீடம் மாதிரி தலையில் அணிந்திருந்த அலங்காரம் அழகின் உச்சமெனலாம். இந்திய மண்ணில் இதுவரை கண்டிராத புதுவகை அலங்காரம். பார்த்ததும் பிரமிப்புதான் வந்தது. எப்போதுமே முன்னோக்கி வளைந்தது போல உடலை வைத்துக் கொண்டு கை விரல்களையும் பின்னால் வளைத்தே வைத்துக் கொண்டு ஆடுகிறார்கள்.
ஹ்ம்ம்ம.. ஆடுகிறார்கள் என்றால் அது சரியாக இருக்காது. அசைகிறார்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம். பரதம், ஒடிசி அளவுக்கு ஆண்டாண்டு காலப் பயிற்சி தேவைப்படுவது போலத் தெரியவில்லை. சில மாதப் பயிற்சியால் உடம்பில் நளினமுள்ள யாரும் ஆடிவிடக் கூடியதாகவே என் கண்ணுக்கு அப்ரசஸ் நடனம் தென்பட்டது.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தி, கெமர் சாம்ராஜ்யத்தில் உருவாகிச் செம்மைப்பட்ட நடனம் காலப்போக்கில் பல்வேறு காரணங்களால் அழிந்து மறைந்து போய்விட்டதாம். இப்போது ஆடப்படும் இந்த செவ்வியல் நடனம், 1940-களில் அப்போதைய கம்போடிய ராணியும் அவரது மகளும் உருவாக்கி வகுத்த நடனமாம். நம்மைப் போலவே ஆலயங்களிலும் அரண்மனைகளிலும் மட்டும் ஆடப்பட்ட அப்சரஸ் நடனத்தை அவர்தான் பொது அரங்குக்குக் கொண்டு வந்திருக்கிறார்.
முகபாவங்கள் அதிகமில்லை. எல்லாமே பெரும்பாலும் நாட்டிய நாடகங்கள்தான் என்கின்றனர். இராமாயணக் கதைகளை நடிப்பார்கள் என்றும் சொன்னார்கள். நம் பரதத்தைப் போல் சிக்கலான அடவுகள், முத்திரைகள் எதுவும் இல்லை. எளிமையான உடற்பயிற்சியொன்றை எல்லாரும் சேர்ந்து ஒயிலாக ஒத்திசைந்து செய்வதுபோல் பட்டது எனக்கு. முதலில் ஒரு நடனமணி வந்த சற்று நேரத்தில் மேடையின் இரண்டு பக்கங்களில் இருந்தும் கிட்டத்தட்ட பத்துப் பேர் வந்து இணைந்து கொண்டனர்.
மணிக்கட்டுக்கு மேல் கையை வளைத்து வளைத்து ஒரே மாதிரி சாய்ந்து, அமர்ந்து, ஒசிந்து, திரும்பி, அசைந்து ஆடினர். கூட்டம் கிறுகிறுத்துப் போய்க் கிடந்தது. படக் கருவிகளின் மின்னொளி மின்னிக் கொண்டே இருந்தது.
நாங்கள் உணவு மேசையை விட்டு எழுந்து வந்து மேடைக்கு அருகே நின்று கொண்டோம். மிக அருகில் பார்க்கும்போது முற்றிலும் வேறு அனுபவமாக இருந்தது நடனம். பரதம், கதகளி, மோகினியாட்டம், ஒடிசி, கூச்சுப்படி போன்ற இந்திய நடன வகைகளை யார் வேண்டுமானாலும் பார்க்கலாம். ஆனால் ஆழ்ந்து ரசிக்க வேண்டுமானால் அதுபற்றிய குறைந்தபட்ச ஞானம் இருப்பது நல்லது.
ஆனால் அப்சரஸ் நடனம் யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் எந்த அறிமுகமும் இன்றி ரசிக்கத்தக்கதாக வடிவமைக்கப்பட்டுள்ளது இக்காலத்தில். அதை வெள்ளைக்காரர்களிடம் என்னால் கண்கூடாகக் காண முடிந்தது. பரதநாட்டியத்தைப் பார்த்து எந்த வெள்ளைக்காரனும் இவ்வளவு ஆஹாஹாரம் எழுப்பி நான் பார்த்ததில்லை. நடனமணிகள் கையில் பூங்கொத்து போன்ற ஒன்றை வைத்திருந்தனர். பின்னர் புஷ்பாஞ்சலி மாதிரியொன்றைச் செய்து காட்டினார்கள்.
இதுக்கே இப்படின்னா நம்ம ஊர் அலர்மேல் வள்ளி, ரேவதி ராமச்சந்திரன், பத்மா, சுதாராணி ரகுபதி, சித்ரா விஸ்வேஸ்வரன், ருக்மணி விஜயகுமார் போன்ற நிஜமான கலைஞர்கள் ஆடிப் பார்த்தால் இவர்களெல்லாம் எப்படி எதிர்வினையாற்றுவார்கள் ? “இப்ப என்ன ஆடிட்டாங்கன்னு வெள்ளைக்காரனுவோ இப்படிக் கத்துறானுவோ?” என்று எனக்குள் அசரீரி கேட்டது.
ஆனால், என்னமோ செய்தது அப்சரஸ் நடனம். என்னால் நடனத்தில் ஒன்ற முடியவில்லை. ஏனென்று இன்றுவரை தெரியவில்லை. படம் எடுப்பதில்தான் என் கவனம் இருந்தது. நிழற்பட நிபுணர்களுக்குச் சரியான தீனி.
மேடையின் பின்புலம் கம்போடிய ஆலயமொன்றைப் பிளந்து மரமொன்றின் வேர்கள் இறங்கும் பின்னணியில் அமைக்கப்பட்டிருந்தது. பாயோன் கோயிலின் அடையாள முகம் நடுநாயகமாக அமைந்திருந்தது. அதன் தடித்த உதடுகள் உணர்வின்றி உறைந்திருந்தன. அந்த நடனத்திற்கு இந்த மேடை அமைப்பு மிக முக்கியமான ஆதாரம். சிறந்த ஒலி, ஒளி அமைப்பும் அந்த அனுபவத்தை இனிமையாக்கியது.
மொத்தமே அரை மணி நேரத்திற்குள் ஆட்டம் முடிந்து விட்டது. வந்திருந்த பெரும்பாலோர் மேடயேறி நடனமணிகளோடு படம் எடுத்துக் கொண்டனர். நாங்களும் எடுத்துக் கொண்டோம். அந்தப் பெண்கள் அதிகம் கூச்சப்படவில்லை. இந்தக் கூட்டமும் படமும் அவர்களுக்குத் தினமும் பழகி விட்டிருந்தது.
ஆட்டம் முடிந்து வெளியே வரும்போது நவீனுக்கு அறிமுகமான ஒருவரை நாங்கள் சந்தித்தோம். அவர் ஓர் அமெரிக்கர். வயது 60களில் இருக்கும். அவர் கூடவே ஓர் இளம்பெண். கம்போடியப் பெண். அவருக்கு வயது 30 இருந்தால் அதிகம். அமெரிக்கரின் கம்போடிய மனைவி. இவ்வளவு வயது வித்தியாசமா என்று யோசித்துக் கொண்டே இருந்தேன். பிறகுதான் ஒரு கதை தெரியவந்தது. அது என்ன என்பதைத் தெரிந்து கொள்ள ஒரு வாரம் காத்திருக்கலாமா ?
- பொன். மகாலிங்கம்
சிங்கப்பூர் தொலைக்காட்சியில் பணியாற்றும் மூத்த இதழியலாளர். சென்னையின் முன்னணி ஊடகத்தில் முக்கியப் பொறுப்பில் இருந்தவர். சகமனிதர்கள் மீது அளவற்ற அன்பும், பாசமும் கொண்ட பண்பாளர். தமிழ் மீதும், பயணங்களின் மீதும் உள்ள அலாதியான ஆர்வம் காரணமாக அடிக்கடி எங்காவது புராதன இடங்களை தேடிச் சென்று அவற்றை தமது அழகு தமிழால் கட்டுரைகளாக்கி, வரும் தலைமுறைக்கு தகவல் பொக்கிஷங்களை சேர்ப்பதில் நாட்டம் கொண்டவர். அவரை தொடர்புகொள்ள - ponmaha2000@yahoo.com
Leave a Comment