புற்றில் இருந்து வந்த புன்னைநல்லூர் மாரியம்மன்


ஒரு முறை தஞ்சையை ஆண்டுவந்த துளஜா என்னும் மராத்திய மன்னன் தன் குதிரையிலேறி தன் சிறு பெண் குழந்தையுடன் இராமேஸ்வரம் சென்று திரும்பினார். ஊர் திரும்பிய பின் அந்தப் பெண் குழந்தையின் கண்களிலிருந்து இரத்தம் கசியத் தொடங்கியது. அரண்மனையில் சித்த வைத்தியம், யுனானி வைத்தியம், ஆயுர்வேதம் ஆகியவைகள் இருந்தும் எந்த வைத்தியராலும் எதுவும் செய்ய முடியவில்லை.

 

 

மன்னன் சமயபுரம் மாரியம்மனின் பக்தன். உடனே அந்த மாரியம்மனிடம் வேண்டிக் கொண்டான், தன் மகளின் கண் உபாதையை அம்மா சரிசெய்ய வேண்டுமென்றும், தங்கத்தால் ஒரு கண் செய்து அம்மனுக்குக் காணிக்கை அளிப்பதாகவும் அம்மனிடம் வேண்டிக் கொண்டான். அப்போது அவன் கனவில் சமயபுரம் மாரியம்மன் தோன்றி, “ உன் அருகிலேயே புன்னைமரக் காட்டில் நான் இருக்க சமயபுரம் தேடி போவானேன்”, என்றாள். கண் விழித்துப் பார்த்த மன்னனுக்கு மர்மம் புரியவில்லை. தன் ராஜ்யத்திலேயே புன்னைமரக் காட்டில் இருப்பதாகச் சொன்னாளே, அது எங்கிருக்கிறது. அங்கு அன்னை மாரியம்மா எங்கிருக்கிறாள் என்பதை அறியாமல் போனேனே என்று வருந்தி, அந்த இடத்தைக் கண்டுபிடிக்கத் தன் புரவியில் ஏறி புன்னைமரக் காடு இருக்கும் திசை நோக்கிச் சென்றான்.

தஞ்சை நகரத்திலிருந்து சில கல் தொலைவிலேயே இருந்த ஒரு பகுதி புன்னை மரக்காடாக இருந்து வந்தது. அந்த காட்டிற்குள் அன்னை சொன்ன இடம் எது என்றறிய மன்னன் தேடிப் போனான். அப்போது வழியில் ஒரு சிறு பெண் நின்று கொண்டிருக்க, அந்தப் பெண் அந்தக் காட்டிற்குள் எப்படி வந்தாள் என்று வியந்து மன்னன் அந்தப் பெண்ணை விசாரிக்க, அவள் “என்னுடைய இருப்பிடம் இங்குதான்” என்று ஓரிடத்தைக் காண்பித்து ஓடிவிட்டாள். அந்த இடத்தில் ஒரு புற்று வளர்ந்திருந்தது. அதனருகில் ஒரு மரத்தினடியில் அவதூதராக ஒரு ஞானி ஆழ்ந்த தியானத்தில் இருப்பதைக் கண்டான். அவரைக் கண்டதுமே அவர் ஒரு மகான் என்பதை உணர்ந்த மன்னன் அவரை வணங்கி தொழுது நின்றான். கண்விழித்துப் பார்த்த அவரை மீண்டும் மன்னன் வணங்கி அவர் ஆசி வேண்டி நின்றான். தன்னுடைய கனவில் சமயபுரம் மாரியம்மன் தோன்றி சொன்ன செய்தியையும் சொல்லி, பின்னர் தன்னை அங்கு ஒரு சிறு பெண் அழைத்து வந்து தன் இருப்பிடம் இதுதான் என்று அந்த புற்றைக் காட்டிவிட்டு மறைந்து போனாள் எனும் செய்தியைச் சொன்னான்.

அந்த மகான் எழுந்து அந்த புற்றை அஷ்ட கந்தங்கள் எனும் எட்டு வாசனை திரவியங்களான சாம்பிராணி, புனுகு, ஜவ்வாது, கஸ்தூரி, கோரோஜனை, அகில், சந்தனம், குங்குமப்பூ, பச்சை கற்பூரம் ஆகியவைகளைக் கொண்டு அந்த புற்று மண்ணோடு கலந்து புற்றை மாரியம்மன் உருவம் சமைத்தார். உடனே சர்வ சக்தி படைத்த ஜன ஆகர்ஷண சக்கரம் ஒன்றை தயார் செய்து அம்மன் முன்பாக வைத்து அதனைத் தொடர்ந்து பூஜை செய்து வருவோர்க்கு மனக்குறை தீரும் என்று சொன்னார். சமயபுரம் மாரியம்மனே இங்கும் வந்து கொலுவீற்றிருப்பதையும், மருந்துகளாலும், ஆகர்ஷண சக்கரத்தாலும் சக்தி படைத்த அந்த புற்று மாரியம்மன் வேண்டிய வரம் தருவாள் என்பதை மன்னன் உணர்ந்தான். அப்படி புற்றை அம்மனாக மாற்றியவர்தான் மஹான் ஸ்ரீசதாசிவ பிரம்மேந்திரர். அந்த மஹான் சொன்னபடி அந்த மாரியம்மனைப் பணிந்து வேண்டி வந்த மன்னனுக்கு அவன் மன சஞ்சலம் விலகும்படி அவன் பெண் குழந்தையின் கண் பார்வை சரியானது. மாரியம்மனின் சக்தியையும், ஸ்ரீசதாசிவ பிரம்மேந்திரரின் திருவிளையாடலையும் எண்ணி மன்னன் மனம் மகிழ்ந்தான்.

அந்த இடத்தில் ஒரு ஆலயத்தை எழுப்பச் செய்தான் மன்னன். அங்கு முறையாக பூஜைகள் நடைபெற கட்டளை பிறப்பித்தான். மன்னன் குடும்பத்தாருக்குக் குல தெய்வமாக இருந்து புன்னைநல்லூர் மாரியம்மன் காத்து வந்தாள். இந்த அம்மனுக்கு ஐந்தாண்டுகளுக்கொரு முறை தைலாபிஷேகம் எனும் புனுகுச் சட்டம் அணிவிப்பது நடைபெறுகிறது.

இங்கு வந்து வேண்டிக் கொண்டவர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறுவதைக் கேள்விப்பட்டு மக்கள் வெள்ளம் போல இங்கு வந்து தரிசித்துச் செல்கிறார்கள். ஸ்ரீசதாசிவ பிரம்மேந்திரரின் அருள் விளையாட்டுக்களில் இந்த புன்னைநல்லூர் மாரியம்மன் உருவமும் ஒன்று என்பதை இன்றும் மக்கள் வியந்து போற்றி வணங்கி வருகிறார்கள்



Leave a Comment