உலகின் மிகப்பெரிய ஆலயம் - 7


அருவியைப் போல் நாங்களும் மலையிலிருந்து சடாரெனக் கீழே இறங்கினோம். மலைப் பாதை முக்கியச் சாலையில் இணையுமிடத்தில் ஒரு பெரிய உணவு விடுதி இருந்தது. உள்ளே ஆளரவமில்லை. ஆனால், மிகப் பெரிய உணவு விடுதி. கைகளைக் கழுவப் போன இடத்தில் பார்த்தால் அது ஒரு மிகப் பெரிய அறைகலன் கடையும்கூட என்று தெரிந்தது. மிகப் பெரிய கட்டில்கள், உணவு மேசை, அதற்கேற்ற நாற்காலி, என விதவிதமான மரச் சாமான்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

எல்லாவற்றின் விலையும் அமெரிக்க டாலரில் குறிக்கப்பட்டுத் தொங்க விடப்பட்டிருந்தது. அதிக விலை என்று சொல்ல முடியாது. ஆனால் வாங்கினால் அதைக் கப்பலில் எடுத்துச் செல்லும் செலவு மிக அதிகமாக இருக்கும். நல்ல வேலைப்பாடமைந்த மாபெரும் கட்டில்கள். நாற்காலிகள் பார்த்துப் பார்த்து அலங்கரிக்கப்பட்டிருந்தன. இலேசாக சீன பாணி தெரிந்தது. ஒரு நாற்காலியில் என்னைப் போன்ற இருவர் தாராளமாக அருகருகே உட்கார்ந்து கொள்ளலாம். அவ்வளவு அகலம் ! இதையெல்லாம் வாங்குவோர் வீடு மாறினால் எப்படித் தூக்கிப் போவார்களோ ! அம்புட்டு கனம் !

  

காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது போன்ற ஒரு பரந்த மேசையைச் சுற்றி உட்கார்ந்தோம். ஒரு பக்கத்துக்கு இருவர் வீதம் எட்டுப் பேர் தாராளமாக அமரலாம். தாகத்துக்கு இளநீர் குடித்தோம். அது உள்ளூர்க்காரர்கள் உணவருந்த வரும் கடை மாதிரித் தெரியவில்லை. வெளிநாட்டுப் பயணிகளை மட்டுமே இலக்காகக் கொண்டு இயங்கும் கடை போலத் தெரிந்தது. எல்லாவற்றின் விலையும் அமெரிக்க டாலரில்தான்.

பயணிகளுக்குப் பொதுவாகவே கம்போடியா முழுவதும் புழக்கத்தில் இருப்பது அமெரிக்க டாலர்தான். அந்த நாட்டு ரியல் நாணயத்துக்கு அவ்வளவு மதிப்பில்லை. எனவே, பயணிகள் அனைவரும் டாலரில்தான் பணத்தை மாற்றி வைத்துக் கொண்டு செலவழிக்க வேண்டும். ஆனால் உள்ளூர்வாசிகள் சொந்த நாணயத்தைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். நமக்கு அதை டாலருக்கு மாற்றி மாற்றித் தலைசுற்றிப் போகிறது.     ஒரு நிலையில் அதைக் கைவிட்டு டாலரில் மட்டும் யோசிக்கத் தொடங்கிவிட்டோம்.

நல்ல பசி இருந்ததால், இளநீர் போய் விழுந்த இடம் தெரியவில்லை. அசைவம் இருந்தது. ஆனால் அவர்கள் சமைத்த விதம் எப்படி இருக்குமோ என்ற அச்சம் காரணமாக சைவ உணவையே தெரிவு செய்தேன். அசைவம் உண்ணும் பழக்கம் இருந்தாலும் பொதுவாக வெளியூர் சென்றால் எனக்குச் சைவம் சிறந்தது. வயிற்றுக்குப் பெரிதாக ஏதும் தொந்தரவு வராது. ஒவ்வாமை ஏற்பட்டு உடல்நலம் பாதிக்கப்படும் ஆபத்தும் கம்மி. வழக்கம்போல வேகவைத்த காய்கறிகள், பசை போன்ற வெள்ளைச் சோறு, முட்டை ஆம்லெட் என்று சுவையாகவே அமைந்தது உணவு. சுத்தமான சூழல், ஆரோக்கியமான உணவு, நியாயமான விலை.

அங்கிருந்து தென்கிழக்காசியாவின் ஆகப் பெரிய நன்னீர் ஏரியாகிய டோன்லே சாப் ஏரியைப் பார்க்கப் புறப்பட்டோம். ஒன்றரை மணி நேரப் பயணம். சாலை மிகத் தரமானதாக இருந்தது. செல்லும் வழியில் ஓடை போன்ற கால்வாய் எங்கள் கூடவே வந்தது. இரண்டு பக்கமும் நெல் வயல்கள். புல் முளைத்துக் கிடந்த தரிசு நிலங்கள். சிறு குட்டைகள். அதில் மேயும் வாத்துகள். மோட்டார் சைக்கிளில் அவ்வப்போது போவோர் வருவோர் தவிரப் பெரிய வாகனங்கள் கிட்டத்தட்ட அந்தச் சாலையில் இல்லை. 

அந்தக் குளுமை, பசுமை, வயல்வெளியைப் பார்த்ததும் பரணிக்குள் உறங்கிக் கொண்டிருந்த விவசாயி மெல்லக் கண்விழித்தான். ஆங்காங்கே வண்டியை நிறுத்தி அந்த ஏகாந்தத்தை அனுபவித்தோம். பழங்காலத் தஞ்சை மாவட்டம் போலிருந்தது. ஆங்காங்கே நல்ல உறுதியான வீடுகள். எல்லாமே கான்கிரீட் தூண்களுக்கு மேல் கட்டப்பட்டிருந்தன. மழைக் காலத்தில் வெள்ளம் பாயும் பகுதிகள் போலும். அந்த வட்டாரத்திலிருந்த பெரும்பாலான வீடுகள் ஒரு ஆள் உயரத்தில்தான் இருந்தன. மரப்படிகளால் வீடு தரையோடு இணைக்கப்பட்டிருந்தது. மரச் சுவர்கள், மரத்தால் ஆன சரிவான கூரை. பார்ப்பதற்கே ரம்மியமாக இருந்தது.

கம்போடியா, வியட்நாம் போன்ற நாடுகளின் விளைநிலத்தைக் குத்தகைக்கு எடுத்து அதில் பயிர் செய்து தானியங்களை இறக்குமதி செய்வது குறித்து சிங்கப்பூர் போன்ற வளர்ந்த நாடுகள் ஆலோசித்து வருகின்றன. அதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் முன்னரே தொடங்கிவிட்டன. வருங்காலச் சந்ததிகளுக்குத் தேவையான உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வது அதன் நோக்கம். பயிர் செய்யத் தேவையான மூலதனம், தொழில்நுட்பம், உரம் உள்ளிட்ட இடுபொருட்கள் எல்லாவற்றையும் குத்தகைக்கு எடுத்த நாடுகள் தரும். பயிர் விளைந்ததும் அறுவடை செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்படும். இரண்டு தரப்பினருக்கும் லாபம்.

நாங்கள் பயணம் செய்த விளை நிலங்களைப் பார்த்தபோது அப்போதுதான் நாற்று நட்டுப் பாவி இருந்தார்கள். பரணிக்கு உண்மையிலேயே நிலைகொள்ளவில்லை. எனக்கு ரெண்டு ஏக்கர் இங்க குடுத்தா அப்படியே விவசாயம் பண்ணிக்கிட்டு இங்கேயே பொழுதை ஓட்டிருவேன் என்று புலம்பிக் கொண்டே வந்தார்.

நீர்வளம் நிறைந்த செழிப்பான பூமியைப் பார்த்ததும் எந்தவொரு விவசாயிக்கும் வரக்கூடிய இயல்பான உணர்வுதான் அது.

தமது இளமைக் காலத்தில் செய்த விவசாய வேலைகளைப் பற்றிப் பேசத் தொடங்கிவிட்டார் பரணி. ராஜுவும் விவசாயக் குடும்பம்தான். அவருக்கும் ஃபிளாஷ்பேக் வந்துவிட்டது. டார்டாய்ஸ் கொசுவர்த்திச் சுருளைச் சுற்றாத குறைதான். எல்லாருமே 20, 30 ஆண்டுகள் பின்னால் போய்விட்டோம். நான் வறண்ட ராமநாதபுரம் ஜில்லாக்காரன். டிப்ளமோ படிக்கத் தஞ்சை மாவட்டம் சீர்காழிக்கு அருகிலுள்ள புத்தூருக்கு வந்தபோது அந்தப் பலதுறைத் தொழிற்கல்லூரியைச் சுற்றி இருந்த பசுமை எனக்குப் புதிது.

    

கல்லூரி விடுதிக்குப் பின்னால் குமட்டிப் பழம் பயிரிடுவார்கள். அது நல்ல மணற்பாங்கான இடம். அதில் நெல் விளையாதுபோலும். கல்லூரிக்கு எதிரே பச்சைப் பசேலென நெல் வயல்கள். அவற்றின் பின்னால் ரயில் தண்டவாளம். அவ்வப்போது அதில் ரயில் போகும் காட்சியை மழைக் காலத்தில் பார்த்தால் ஏதோ பெரிய ஐரோப்பிய ஓவியர் வரைந்த தைல ஓவியம்போல இருக்கும்.

மழைக் காலத்தில் தஞ்சை மாவட்டத்தினூடாகச் சோழன் போக்குவரத்துக் கழகப் பேருந்திலும் தனியார் பேருந்திலும் பயணம் செய்யும் சுகத்தைச் சொல்லில் வடிக்க முடியாது. இரண்டு பக்கமும் வயல்வெளிகள். ஆங்காங்கே சின்னச் சின்ன அய்யனார் கோயில்கள். ஆலமரம், அதன்கீழே உள்ள சதுரத் திண்ணைகள், வெள்ளைப் பள்ளிவாசல்கள், ஆற்றோரம் இடிந்துபோன பழைய மண்டபங்கள் என வரலாற்றுக் காலம் நம்மோடு கூடவே ஓடிவரும். பேருந்தில் ஓடும் இனிய பாடல்கள்தான் இது நவீன காலம் என்ற உணர்வை நமக்குத் தரும்.

அதிலும் கும்பகோணத்திலிருந்து தஞ்சாவூர் போகும் வழியில் பசுபதி கோயிலில் இருந்து பள்ளியக்ரஹாரம் வரையுள்ள 10 கிலோமீட்டர் தொலைவு இருக்கிறதே.. யம்மாடீ ! அப்படி ஒரு பசுமை.                

தொலைவில் சித்திரம் போலத் தஞ்சைப் பெரிய கோயில் விமானமும், அரண்மனைக் காவல் மாடமும் தெரியும். மாலை மயங்கும் நேரத்தில் அந்தப் பாதையில் அப்போது வெளியான முதல் மரியாதை, இதயக் கோயில், தென்றலே என்னைத் தொடு, கீதாஞ்சலி படப் பாடல்களைக் கேட்டுக் கொண்டே போகும் சுகம் இருக்கிறதே..        அடடா.. அடடா.. எந்த ஒரு ஹோம் தியேட்டர் சிஸ்டமும் தர இயலாத இன்பம் அது. இந்தப் பயணம் இப்படியே நீண்டுகொண்டே இருக்காதா என்ற ஏக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும் பயணம் அது.

அதே அளவுக்கு உல்லாசமான பயணமாக இருந்தது ஏரியை நோக்கிச் சென்ற எங்கள் பயணமும். படகில் ஒரு மணி நேரத்துக்கும் மேல் சென்று ஆறு ஏரியோடு சங்கமிக்கும் இடம் வரை சென்று திரும்புவது எங்கள் திட்டம். ஆங்காங்கே வயல்களைப் பார்த்ததும் இறங்கிப் படம் எடுத்துக் கொண்டே போனோம். சீக்கிரம் போகணும் இருட்டி விட்டால் எதையும் ரசிக்க முடியாது என்று ஓட்டுநர் ரா விரட்டவில்லையென்றால் வயலுக்குள்ளேயே அன்றைய இரவுப் பொழுதைக் கழித்திருப்போம்.

வழியில் ஒரு பெரிய கிராமம் வந்தது. அதற்குள் வண்டி வளைந்து வளைந்து போனபோது எல்லாரும் எங்களையே பார்த்தார்கள். பயணிகள் அவ்வளவாக வந்து போகாத பாதை போலும் இது. நல்ல மழை பெய்து வெறித்திருந்தது. மண்ணில் நீர் ஊறி இலேசாக ஆவி எழுந்து கொண்டிருந்தது. 

பெரிய பாதையிலிருந்து விலகி இப்போது ஒற்றையடிப் பாதையை விடக் கொஞ்சம் பெரிய பாதைக்கு வந்திருந்தோம். சற்று நேரத்தில் இறங்கவேண்டிய இடம் வந்தது. எதிரிலேயே கால்வாய் ஓடிக் கொண்டிருந்தது. அது இயற்கையான ஓடையா அல்லது தஞ்சாவூர்ப் புதுவாய்க்கால் போலச் செயற்கையாகப் பாசனத்துக்காக வெட்டப்பட்ட கால்வாயா எனத் தெரியவில்லை. அதிலிருந்து ஏராளமான கால்வாய்கள் வயல்களுக்குள் பிரிந்து செல்வதைக் கண்டோம்.

ஒரு நீளமான விசைப் படகில் ஏறிக் கொண்டோம். மணி நாலரை இருக்கக்கூடும். நல்ல தெளிவான வானம். மெதுவாக ஊரத் தொடங்கிப் பின்னர் சற்று வேகமெடுத்தது படகு. இரண்டு பக்கமும் வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்தோம். கொஞ்ச தூரம் போனதும் கால்வாய் அகலமானது. அந்தப் பகுதியில் ஒரு ஊரே கால்வாய்க்குள் இருந்தது. நாலு, ஐந்து ஆள் உயரத்தில் கம்புகள் நடப்பட்டு அவற்றின் மேல் மரத் தரை, சுவர் அமைத்து வரிசையாக வீடுகள்.

 

போகும் வழியில் நிறைய கான்கிரீட் தூண் கொண்ட வீடுகள் கட்டப்பட்டுக் கொண்டிருந்ததைப் பார்த்தோம். எல்லாமே உயரமானவை. அந்தப் பகுதியில் மழைக் காலத்தில் வெள்ளம் பெருகும்போலும். நாங்கள் பார்க்கப் போகும் ஏரியின் சிறப்பே அதுதான்.                          

டோன்லே சாப் ஏரி அளவில் மிகப் பெரியது. டோன்லே சாப் நதி, அந்த ஏரியை, மாபெரும் மீகோங் நதியோடு இணைக்கிறது. அந்த நதி 100 கிலோமீட்டருக்கும் மேல் நீளமுள்ளது. ஏரியை மேலிருந்து பார்த்தால், ஒரு பெரிய மீன் மாதிரி இருக்கும். அங்கோர் நாகரிகத்தின் செழிப்புக்கு இந்த நதியும் ஏரியும்தான் முக்கியக் காரணம்.           

கோடைக்காலத்தின் முடிவில், இந்த நன்னீர் ஏரி 120 கிலோமீட்டர் நீளமுள்ளதாக இருக்குமாம். அகலம் 20 கிலோமீட்டருக்கு மேல் இருக்கும். அப்போது இதன் சராசரிப் பரப்பளவு சுமார் 2500 சதுர கிலோமீட்டர். மூன்று சிங்கப்பூரை மொத்தமாக உள்ளே அமுக்கி வைத்துவிடலாம். அதே ஏரி மழைக்காலத்தில் தண்ணீரால் ஊதிப் பெருத்துவிடுமாம். 250 கிலோமீட்டர் நீளமும் ஆக அகலமான இடத்தில் 100 கிலோமீட்டர் அகலமும் கொண்டு ராட்சத ஏரியாகிவிடும். இது செப்டம்பர், அக்டோபர் மாதங்களில். இந்த நேரம்தான் புனோம் பென்னிலிருந்து சியாம் ரீப்புக்கு படகில் செல்ல முடியும் காலம்.  

மழைக் காலத்தில் ஏரியின் பரப்பளவு 16,000 சதுர கிலோமீட்டர் அளவுக்குப் பெருகிவிடும். மழைக்காலத்தில் உள்ளே வரும் வெள்ளம், மீகோங் நதியில் நீர்வரத்து குறையும்போது ஏரியிலிருந்து மீண்டும் மீகோங்கிற்குள் புகுந்து வற்றிவிடும். இது இந்த ஏரியின் தனித்தன்மை. இதன் காரணமாகவே இதன் பல்லுயிரிப் பெருக்கம் தனிச்சிறப்பு வாய்ந்ததாக இருக்கிறது. பழங்கால மனிதர்கள் அளவுக்கு இக்காலச் சந்ததியினர் இந்த ஏரியை ஆக்ககரமாகப் பயன்படுத்துகிறார்களா என்றால் இல்லை என்றுதான் பதில் சொல்ல வேண்டியிருக்கும்.

கடுமையான சூழியல் பிரச்சினைகளால் இன்று இந்த ஏரி கடுமையான நெருக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறதாம். நாங்கள் பார்த்தவரை அதில் கழிவுகள் ஏதும் கலக்கவில்லை. நாங்கள் படகில் சென்ற கால்வாயிலிருந்து எவ்வித துர்-நாற்றமும் எழவில்லை. கால்வாயும் ஏரியும் இணையும் இடத்திற்கு அருகே ஏராளமான மரங்கள் தண்ணீருக்குள் நிற்கின்றன. பிச்சாவரத்தை நினைவுபடுத்துவதுபோல்.. ஆனால், பிச்சாவரத்திலுள்ள சுரபுன்னை மரங்கள் குட்டையானவை. இங்கிருந்த மரங்கள் பெரியவை.

என்ன மரம் என்று என்னால் இனங்காண முடியவில்லை. வழியில் படகிலேயே பலர் குடும்பம் நடத்துவதைக் காணமுடிந்தது. படகிலேயே சமைக்கிறார்கள். சிறுவர்கள் சர்வசாதாரணமாகத் தண்ணீரில் குதித்து நீந்திப் பக்கத்து வீட்டுக்குப் (படகுக்கு ?) போகிறார்கள். இவர்களுக்குச் சளிப் பிடிக்காதா ? ராத்திரி நேரத்தில் இயற்கை உபாதையைக் கழிக்க எங்கே செல்வார்கள் ? வழியில் ஒரே ஒரு சிறிய மருத்துவமனை கண்ணில்பட்டது. அது இவர்களின் அவசரத் தேவைகளுக்குப் போதும்போலும்.

சிறுவர்களின் பற்கள் வெண்மையாக இல்லை. பழுப்பாக இருந்தன அவை. அவர்கள் சிரிக்கும்போது தெரிந்தது. ஆக இவர்களுக்குச் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் இல்லை. நிலத்தடி நீர்தான் குடிநீர் ஆதாரம்போலும். புயல் மழைக் காலத்தில் இந்த வீடுகளுக்கு என்ன பாதுகாப்பு இருக்க முடியும் ? எப்படி இவர்கள் தைரியமாக இங்கேயே படுத்துத் தூங்கி, உண்டு வாழ்ந்து முடிக்கிறார்கள் ? நினைத்தால் வியப்பாக இருந்தது. அவர்களுக்குப் பழகி இருக்க வேண்டும். யாரும் அதைப் பொருட்படுத்துவதுபோல் தெரியவில்லை. சந்தோஷமாகத்தான் இருக்கிறார்கள்.

கால்வாயிலிருந்து எங்கள் படகை ஏரிக்குள் செலுத்த வேண்டுமா என்று படகோட்டி கேட்டார். ஏன் போகலாம்தானே என்று கேட்டோம். அலைகள் வேகமாக வந்து மோதிப் படகு ஆடும் பரவாயில்லையா என்றார். எதிரே ஒரு பெரிய கடல்போல் கிடந்தது ஏரி. காற்று காதை உரசிச் சென்றது. பரவாயில்லை உள்ளே போங்கள் என்றதும் தண்ணீரைக் கிழித்துப் புகுந்தது படகு.

கடலில் வருவது போன்ற பெரிய அலைகள் இல்லை. ஆனால் அலை இருந்தது. சளப் சளப் எனப் படகில் மோதியதால் படகு மொத்துண்டு ஆடியது. கொஞ்சதூரம் போனதும் நான்கு பக்கமும் கலங்கலான ஏரி நீர் மட்டுமே இருந்தது.

காரைக்குடியில் நான் படித்த முனிசிபல் உயர்நிலைப் பள்ளிக்கு அருகே பருப்பூரணி என்று ஒரு ஊருணி இருக்கும். அதன் தண்ணீர் இப்படித்தான் இருக்கும். குடிப்பதற்குப் படு ருசியாக இருக்கும். ஆறாம் வகுப்புப் படிக்கும்போது மதிய உணவை அங்கே எடுத்துச் சென்று சாப்பிட்டு, பருப்பூரணித் தண்ணீரைக் குடித்திருக்கிறேன். 25 ஆண்டுகள் கழித்துப் போய்ப் பார்த்தபோது பருப்பூரணி வற்றிக் காய்ந்து சுற்றிலும் கழிவுகளோடு வானம் பார்க்கக் கிடந்தது. கால்வாய்கள் தூர்ந்து நீர்வரத்து நின்று போயிருக்க வேண்டும்.

என் மனத்தில் இருந்த ஊருணி எப்போதோ செத்துப் போய்விட்டதுபோலும். மனம் வலித்தது அதைப் பார்த்தபோது. எவ்வளவு இலட்சோப லட்சம் நீர்நிலைகளை நம் தலைமுறையில் சின்னாபின்னப்படுத்தி இழந்திருக்கிறோம் ? நம் பிள்ளைகளும் பேரப் பிள்ளைகளும் நம்மைக் காலம் பூராவும் சபிக்கப் போவது உறுதி.

டோன்லே சாப் ஏரியின் பிரம்மாண்டம் அச்சுறுத்தியது. லேசாக பயம் எட்டிப் பார்த்தது. ஏரியின் ஆழம் குறைவுதான். மூன்று அல்லது நான்கு அடிதான் இருக்குமாம். இருந்தாலும், ஏரியின் அளவை நினைத்துப் பார்த்தால் பிரமிப்பாக இருந்தது. போதும் திரும்புகள் என்று சொல்லிவிட்டோம். வந்த பாதையிலேயே படகில் திரும்பினோம்.

இடப் பக்கமாக சூரியன் மேற்குவாயில் விழத் தொடங்கியிருந்தான். மேகங்களுக்கு இடையே வெளிச்சம் கசிந்து வண்ணக் களறியாக இருந்தது வானம். போகும்போதும் வரும்போதும் படகின் முனையில் போய் நின்று கொண்டும் படுத்துக் கொண்டும் தண்ணீரை ரசித்தோம். கைகளை அகலமாக விரித்துப் பொருளற்ற ஓசையெழக் கத்தினோம். படகோட்டிக்கு இதெல்லாம் பழக்கமாகி விட்டது போலும். பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. ஓட்டுநர் ரா அமைதியாகத் தனது கைத் தொலைபேசியை நோண்டிக் கொண்டே வந்தார்.

எங்களுக்கு இந்த நிலக் காட்சி புதிது. மனம் கட்டவிழ்ந்து கிடந்தது. இன்றைய நாளில் கிடைத்த அனுபவங்கள் எல்லாமே இனியவை. படகுப் பயணம் முடித்து இரவு உணவுடன் கூடிய அப்சரஸ் நடனம் காணச் செல்வதாக ஏற்பாடு.. அங்கிருந்து சுமார் ஒன்றரை, இரண்டு மணி நேரத்தில் சியாம் ரீப் சென்று சேர்ந்தோம். அவ்வளவு நேரமும் வயல், பசுமை, அருவி, தண்ணீர், ஏரி, கால்வாய் எனப் பார்த்துவிட்டுத் திடீரென நகர்ப் பகுதிக்குள் நுழைந்தபோது வாகனப் புகையும் சந்தடியும் முகத்தில் அறைந்தன. உணவு விடுதிக்குமுன் எங்களை இறக்கி விட்டபின் சற்று நேரம் கழித்து வந்து அழைத்துச் செல்வதாகக் கூறி அகன்றார் ரா.

நாங்கள் ஐந்து பேரும் அந்தப் பெரிய உணவகத்துக்குள் நுழைந்தோம்.

- பொன். மகாலிங்கம்

 

சிங்கப்பூர் தொலைக்காட்சியில் பணியாற்றும் மூத்த இதழியலாளர். சென்னையின் முன்னணி ஊடகத்தில் முக்கியப் பொறுப்பில் இருந்தவர். சகமனிதர்கள் மீது அளவற்ற அன்பும், பாசமும் கொண்ட பண்பாளர். தமிழ் மீதும், பயணங்களின் மீதும் உள்ள அலாதியான ஆர்வம் காரணமாக அடிக்கடி எங்காவது புராதன இடங்களை தேடிச் சென்று அவற்றை தமது அழகு தமிழால் கட்டுரைகளாக்கி, வரும் தலைமுறைக்கு தகவல் பொக்கிஷங்களை சேர்ப்பதில் நாட்டம் கொண்டவர். அவரை தொடர்புகொள்ள - ponmaha2000@yahoo.com



Leave a Comment