சமயபுரம் மாரியம்மன் கோயிலில் 18ம் தேதி தேரோட்டம்....
சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரை தேர்த் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. ஏப்ரல் 18ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சித்திரை தேர்த் திருவிழாவை முன்னிட்டு, மாசி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமை முதல் பங்குனி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமை வரை 28 நாட்கள் அம்மன் மேற்கொள்ளும் பச்சை பட்டினிவிரதம் கடந்த மாதம் 12ம் தேதி துவங்கியது. இதையொட்டி பக்தர்கள் கடந்த 4 வாரமாக அம்மனுக்கு பூக்களை சாற்றினர்.
பச்சைப்பட்டினி விரதம் நேற்றுடன் நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து நேற்று காலை 6.30 மணிக்கு மேல் 8 மணிக்குள் சித்திரை தேர்த் திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. இரவு 7 மணிக்கு அம்மன் கேடயத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.தொடர்ந்து நடைபெறும் திருவிழா நாட்களில் தினமும் சிம்ம வாகனம், பூத வாகனம், அன்ன வாகனம், ரிஷப வாகனம், சேஷ வாகனம், யானை வாகனம், மரக்குதிரை வாகனம், வெள்ளிக்குதிரை வாகனம் ஆகிய வாகனங்களில் அம்பாள் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.விழாவின் 10ம் திருநாளான வரும் 18ம் தேதி சித்திரை தேரோட்டம் நடைபெறுகிறது. அன்று காலை 10.31 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் தேர் வடம் பிடிக்கும் வைபவம் நடைபெறுகிறது. 13ம் திருநாளான 21ம் தேதி தெப்ப உற்சவம் நடைபெறுகிறது.விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் தென்னரசு மற்றும் கோயில் பணியாளர்கள் செய்துள்ளனர்.
Leave a Comment